முள்பாதை 40

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மறுநாள் காலையில் ஒரு பக்கம் விடியும் போதே நான்கைந்து வண்டிகள் நிறைய உறவினர்கள் வந்து இறங்கினாளர்கள். அவர்கள் வந்து இறங்கிய சந்தடி கேட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டேன். என் பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்தவர்களில் யாரையுமே காணவில்லை. எல்லோரும் ஏற்கனவே எழுந்து கொண்டு விட்டார்கள் போலும். ராஜேஸ்வரியைக் கூட காணவில்லை.
“என்ன சித்தீ!”
“என்ன அண்ணீ!”
“அத்தை! சௌக்கியம்தானே?”
பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.
“டீ கமலா! எல்லோரும் ஒரே சமயத்தில் வந்து விட்டோம் பார்த்தாயா?” யாரோ சொன்னார்கள்.
“என்ன அத்தை! மாப்பிள்ளை வீட்டார் போல் முதல்நாள் வருவதாவது? நாலைந்து நாட்கள் முன்னாடியே வரச்சொல்லி எழுதியிருந்தேனே?” பதிலுக்கு அத்தை நிஷ்டூரமாக சொன்னது காதில் விழுந்தது.
வந்தவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. அதில் சிலர் ராகம் போட்டு அழத் தொடங்கி விட்டார்கள். ஒரு கல்யாணத்திற்கு இவ்வளவு கூட்டமா? கல்யாணச் செலவை விட இவர்களை உபசரிக்கும் செலவே அதிகமாகிவிடும் போல் இருக்கிறது.
எழுந்து கொல்லைப்புறம் வந்தேன்.
ராஜேஸ்வரி எங்கேயிருந்தாளோ கண்ணில் படவில்லை. திருவிழாவில் தவறிவிட்ட சிறு குழந்தையைப் போல் ஒரு பக்கமாக நின்று கொண்டிருந்தேன். சுந்தரி அருகில் வந்து “பல்லை தேய்த்துவிட்டு வாங்க” என்றாள் மரியாதை கலந்த குரலில். பேஸ்டும் பிரஷ்ஷ¤மாக நான் வந்ததும் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். என்னை உபசரிக்கும் பொறுப்பு தன்மீது இருப்பது போல் கையோட காபி கொண்டு வந்தாள். காபி டம்ளரை நீட்டிக் கொண்டே “இரவு நன்றாக தூக்கம் வந்ததா?” என்று கேட்டாள்.
“ஊம்” என்றேன். அப்படிக் கேட்பதில் அவளுடைய உத்தேசம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.
அடுப்பை அணைத்தார்களோ இல்லையோ என்பதுபோல் தகதகவென்று எரிந்து கொண்டிருந்தது. ஒரு பக்கம் குளியல் நடந்து கொண்டிருந்தது. காபிகடை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. பெண்டுகள் சிலர் கும்பலாக உட்கார்ந்து தலைவாரி பின்னிக் கொண்டிருந்தார்கள்.
சின்னதாத்தா குளித்துவிட்டு நெற்றியில் வீபூதி பட்டையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அத்தை அவருக்குக் காபி கொண்டு போய் கொடுத்தாள்.
“கமலா! ஒன்பதே முக்காலுக்கு நல்ல முகூர்த்தம். ராஜியை மணையில் உட்கார் வைத்து சடங்குகளை தொடங்கி விடணும்” என்றார் சின்ன தாத்தா.
“அப்படியே செய்வோம்” என்றாள் அத்தை.
இந்தக் கும்பலில் கிருஷ்ணன் என் கண்ணில் படவே இல்லை. சுந்தரியை ராஜியும் மற்ற குழந்தைகளும்அண்ணீ என்று அழைத்து தங்களுக்கு வேண்டியதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஏனோ என்னுடைய உரிமை பறிபோய்விட்டாற் போல் இருந்தது. ஒரு தடவை ராஜி “அண்ணீ!” என்று அழைத்தபோது நானும் குரல் கொடுத்தேன். சுந்தரியும் குரல் கொடுத்தாள்.
ராஜி சிரித்துவிட்டாள். “நல்ல வேடிக்கைதான்” என்றாள்.
அதற்குப் பிறகு அண்ணி என்ற அழைப்பிற்கு பதில் குரல் கொடுப்பதை விட்டு விட்டேன். சந்தரியைப் போல் எனக்கு கை நிறைய வேலை இருக்கவில்லை. சும்மா வெறுமே இருப்பது ரொம்ப இடைஞ்சலாக இருந்தது. அத்தையிடம் சென்று “எனக்கும் ஏதாவது வேலை சொல்லுங்கள் அத்தை! செய்கிறேன்” என்றேன்.
“நீயா? நீ எதற்காக வேலை செய்யணும்? நீ வந்ததே எனக்குப் போதும்.” அத்தை என் கையைப் பிடித்து அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள். என்னுடைய வருகை அத்தைக்கு எவ்வளவு சந்தோஷத்தை அளித்ததோ என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் இந்த வீட்டிற்கு ஒரு விருந்தாளிதானே ஒழிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய நெருங்கிய உறவுக்காரி இல்லை என்றும் புரிந்தது.
குளிப்பதற்காக மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறை பக்கம் போகும் போது பெண்கள் உட்கார்ந்திருக்கும் பகுதியிலிருந்து பேச்சுக்குரல் கேட்டது.
“அந்தப் பெண் கமலத்தின் அண்ணன் மகள்தானே?” யாரோ கேட்டார்கள்.
“ஆமாம். மறுபடியும் வரப் போகத் தொடங்கிவிட்டார்களா என்ன? இரு குடும்பங்களுக்கு நடுவில் பழிச்சண்டை இருந்ததே?”
“நமக்கு எதுக்கு வீண் வம்பு? அந்தப் பெண்ணின் காதில் விழுந்து வைக்கப் போகிறது.” யாரோ மெல்லிய குரலில் அதட்டுவது கேட்டது.
என் மனதில் சுருக்கென்று தைத்தது. அவர்கள் சொன்னதும் உண்மைதானே. இத்தனை நாட்களாக எங்க இரு குடும்பங்களுக்கு நடுவில் எந்த விதமான ஒட்டோ உறவோ இல்லையென்று எல்லோருக்கும் தெரிந்ததுதான். இப்போ நான் வந்தது எல்லோருக்கும் வியப்பாக, வேடிக்கையாக இருந்தது.
ராஜியை அலங்கரிக்கும் பொறுப்பை நானே முன் வந்து ஏற்றுக் கொண்டேன். நான் இங்கே வரும் முன் அப்பா என்னிடம் பட்டுப் புடவையும், அதற்கு ஏற்ற ரெடிமேட் பிளவுஸ¤ம் வாங்கித் தந்து ராஜியை மணமகளாக அலங்கரிக்கும் போது அந்தப் புடவையைத் தரச் சொன்னார். தாய் மாமா வாங்கிக் கொடுக்கும் புடவையைத்தான் மணப்பெண் முதல் முதலில் உடுத்துவது நம்முடைய சம்பிரதாயம் என்று அப்பா சொல்லியிருந்தார். அத்தையிடம் நான் அந்த விஷயத்தை நினைவுப் படுத்தியபோது சட்டென்று தலையை அசைத்தாள். அத்தையின் கண்களில் நீர் தளும்பியது என் பார்வையிலிருந்த தப்பவில்லை.
ராஜி எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்த பிறகு அவளை உட்காரவைத்து சிடுக்கு எடுத்து தலை பினிவிட்டேன். நெற்றியில் திலகமிட்டு தலை நிறைய பூச்சரத்தைச் சூட்டினேன். கால்களுக்கு மஞ்சள் தடவி நலங்கை இட்டு விட்டேன். கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைப்பதற்காக மைச்சிமிழைத் தேடியபோது கிடைக்கவில்லை.
“ஸ்டோர் ரூமில் இருக்கும் பார்” என்றாள் ராஜி.
நான் ஸ்டோர் ரூம் பக்கம் போனேன். அறை முழுவதும் கால் வைக்க இடமில்லாதபடி திருமணத்திற்காக வாங்கிய மளிகை சாமான்கள், மற்ற பொருட்கள் இருந்தன. அறையின் நடுவில் அரிசி மூட்டையின் மீது அமர்ந்து கொண்டு முழங்கால் மீது கணக்குப் புத்தகத்தை வைத்தபடி கிருஷ்ணன் ஏதோ எழுதிக்கொண்ருந்தான். நான் உள்ளே வந்ததை அவன் கவனிக்கவில்லை.
“வணக்கம் மிஸ்டர் கிருஷ்ணன்!” என்றேன்.
அவன் நிமிர்ந்து முறுவலுடன் என்னைப் பார்த்தான். “என்ன வேண்டும்?”
“நீதான் வேண்டும்” என்றேன்.
என்னைப் பார்த்ததும் அவன் கண்களில் ஒரு விதமான மின்னல் பளிச்சென்று தோன்றும். இதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். ஒருக்கால் அந்த விஷயம் அவனுக்கே தெரியாதோ என்னவோ.
கிருஷ்ணன் சிரித்துவிட்டு தலைகுனிந்தபடி மறுபடியும் எழுதிக்கொண்டிருந்தான்.
நான் மைச்சிமிழுக்காக தேடினேன். ராஜி சொன்ன இடத்தில் அது இருந்தது. எடுத்துக் கொண்டு போகப் போனவள் பின்னால் திரும்பி அவன் அருகில் போனேன். “இவ்வளவு சீரியஸாக என்ன எழுதகிறாய்? கல்யாணச் செலவு கணக்கா?” என்றேன்.
“ஊஹ¤ம். எத்தனை வாங்கி வந்தாலும் இன்னும் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் பாக்கி இருந்து கொண்டே இருக்கிறது. அம்மாவுக்கு திடீரென்று நினைவுக்கு வரும் போது சொல்லுவாள். லிஸ்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றான். அவன் குரலில் சலிப்பு வெளிப்பட்டது.
“இரவு எழுதிக் கொண்டிருந்தாயே? வரவு செலவு கணக்கா?”
“வரவு எங்கே? எல்லாம் செலவுதான்.” நிமிர்ந்து பார்க்காமல் மளமளவென்று எழுதிக் கொண்டிருந்தான்.
“இப்படி எழுதுவதால் என்ன பிரயோஜனம்?”
“எதற்கு எவ்வளவு செலவழித்தோம் என்று தெரியும். நான் பணம் கொடுக்க வேண்டியவர்கள் விஷயத்தில் கணக்குப் பிசகாது.”
எவ்வளவு கச்சிதமாக இருக்கிறான் என்று தோன்றியது. அம்மாவுக்கும், இவனுக்கும் சுபாவத்தில் நிறைய ஒற்றுமைகள் இருப்பது புலப்படத் தொடங்கியது. பக்கவாட்டில் மழுமழுவென்று தென்பட்ட அவன் கன்னத்தைப் பார்த்தபோது என் மனதில் குறும்புத்தனம் கொப்பளித்தது. கையிலிருந்த சிமிழிலிருந்து ஆள்காட்டி விரலில் மையை எடுத்துக் கொண்டு மூடிவிட்டேன். இரண்டு கைகளையும் பின் பக்கம் வைத்துக்கொண்டு மேலும் ஒரு அடி நெருங்கினேன். அவன் தோள் வழியாக குனிந்து பார்த்துக் கொண்டே “எங்கே? உன் கையெழுத்தை நான் பார்த்ததே இல்லை. அட! உன் கையெழுத்து முத்துச்சரம் போல் ரொம்ப அழகாக இருக்கு” என்று சொல்லிக்கொண்டே சட்டென்று கையை நீட்டி அவன் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்துவிட்டேன்.
“ஏய்! என்ன இது?” கிருஷ்ணன் சட்டென்று என் கையை அழுத்தமாக பற்றிக்கொண்டான்.
“மணமகனை அலங்காரம் செய்ய வேண்டாமா? உன் கல்யா¡ணத்திற்கு எப்படியும் நான் இருக்கப் போவதில்லை. இப்பொழுதே உன்னை மணக்கோலத்தில் பார்த்து விடுகிறேன்.”
அவன் நிமிர்ந்து என் பக்கம் பார்த்தான். அவன் கண்களில் தென்பட்ட தீவிரத்திலிருந்து, என் கையை அவன் பற்றியிருந்த விதத்திலிருந்து என்னை தன் முன்னால் இழுத்து நிற்க வைக்கப் போகிறான் என்றே நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
என் கையை விட்டுவிட்டு, கன்னத்தில் இருந்த மையை அழிக்கப் போனான்.
ஆள்காட்டி விரலை உயர்த்தி மிரட்டிக் கொண்டே “ஜாக்கிரதை! நல்ல காரியம் நடக்கட்டும் என்று கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்தால் அழிக்கப் பார்க்கிறாய். அபசகுனம் போல் உன் கல்யாணம் நின்றுவிடப் போகிறது. சுந்தரி உனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன் தோட்டமும் உன் கையை விட்டுப் போய்விடப் போகிறது” என்றேன்.
கடைசி வார்த்தையைக் கேட்டதும் மென்மையான இடத்தில் அடிப்பட்டு விட்டதுபோல் அவன் கண்களில் வேதனை பிரதிபலித்தது. ஒரு வினாடி சும்மா இருந்தான். பிறகு என் புடவைத் தலைப்பை இழுத்து அதால் கன்னத்தில் அழுத்தமாக துடைத்துவிட்டு “உன் புடவையால் அழித்தால் அபசகுனம் எதுவும் நேராது” என்றான்.
“மையின் கறை அழியவில்லை. கன்னத்தில் கோடாக ஈஷிக்கொண்டிருக்கிறது” என்றேன் கிண்டலாக.
கிருஷ்ணன் இன்னொரு தடவை அழுத்தமாக துடைத்தான்.
“அய்யோ! என் புடவை… வெண்பட்டுப் புடவை!” என்றேன் தவிப்புடன்.
“பரவாயில்லை. இதைவிட நல்ல புடவை வேறு ஒன்று வாங்கித் தருகிறேன்.” புடவைத் தலைப்பைப் பிடித்து மேலும் அருகில் இழுத்துக் கொண்டான் கிருஷ்ணன்.
என் கன்னத்தில் சூடாக ரத்தம் பாய்ந்தது. அவன் புடவையை இழுப்பதை விட அந்த சாக்கில் என்னை அருகில் இழுத்துக் கொள்வது போல் தோன்றியது.
“அட! புடவையை விடு… விடுன்னு சொன்னால்!” அவன் கையிலிருந்து புடவைத் தலைப்பை இழுத்துக்கொள்ள முயன்றேன்.
சரியாக அதே நேரத்தில் சுந்தரி உள்ளே வந்தாள். நான் இன்னும் சிரித்துக் கொண்டிருந்தேன்.
கிருஷ்ணன் சட்டென்று புடவைத் தலைப்பை விட்டுவிட்டான். அதுவரையில் இழுத்துப் பிடித்திருந்தவன் ஒரேதிரியாக விட்டுவிட்டதும் பின்னால் விழப்போனேன். எப்படியோ சமாளித்துக்கொண்டு விட்டேன்.
கிருஷ்ணன் கையிலிருந்த பேப்பர்களை சட்டைப் பையில் வைத்துக்கொண்டு எழுந்து அங்கிருந்து போய்விட்டான். அவன் முகம் சிவந்து கன்றிவிட்டதை நான் கவனித்து விட்டேன்.
“முந்திரி பருப்பு இங்கேதான் இருக்கணும்.” சுந்தரி முந்திரிபருப்புக்காக வந்தவள்போல் அங்கே இருந்த பொட்டலங்களில் தேடத் தொடங்கினாள். நான் சிரிப்பை மறைத்துக் கொண்டு, வேண்டுமென்றே முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு “உன் வருங்காலக் கணவன் செய்த அட்டூழியத்தைப் பார்த்தாயா? என் புடவையில் மையை ஈஷிவிட்டான்” என்று புடவைத் தலைப்பைக் காண்பித்தேன்.
“நன்றாகத்தான் இருக்கு. நீங்க அவருடைய கன்னத்தில் மையை வைத்தால் அவர் உங்க புடவையில் மையை ஈஷிவிட்டார். கணக்கு சரியாகிவிட்டது. ஆண்கள் சும்மா இருப்பார்களா என்ன?” என்றாள். வலிய வரைவழைத்துக் கொண்ட சிரிப்புடன் சுந்தரி சொன்னாலும் பொறாமையினால் அவள் முகம் சிறுத்துப் போனது எனக்குத் தெளிவாக புரிந்து விட்டது.
ஒன்று மட்டும் நிச்சயம். சுந்தரி போன்ற பெண்கள் வேற்று மனுஷியின் நிழல்கூட கணவன் மீது விழ சம்மதிக்க மாட்டார்கள். தங்களுக்குச் சொந்தமானது எதுவாக இருந்தாலும் ஆயிரம் கண்களுடன் காபந்து செய்வார்கள். அது அவர்களுடைய பிறவிகுணம்.
மைச்சிமிழை எடுத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டேன்.
சின்னதாத்தா சொன்ன நல்ல நேரத்தில் ராஜியை மணையில் உட்கார வைத்தார்கள். சடங்குள் முடிந்த பிறகு இரண்டு சுமங்கலிகள் ராஜிக்கு ஆரத்தி எடுத்தார்கள். ஒரு நிமிடம் ராஜேஸ்வரியின் இடத்தில் நான் இருப்பதாக கற்பனை செய்து பார்த்தேன்.
அத்தை சொன்னதன் பெயரில் மணியை, காமேஸ்வரியை துணைக்கு அழைத்துக் கொண்டு தெரிந்தவர்கள் எல்லோரையும் கூப்பிடப் போனேன். “மாலையில் ராஜிக்கு வளையல் அணிவிக்கும் விழா நடைபெற இருக்கிறது. மஞ்சள் குங்குமம் வாங்கிக் கொள்ள வாங்க” என்று அழைத்துவிட்டு வந்தேன்.
கர்ணம் மாமாவின் மனைவி என்னைப் பார்த்து சந்தோஷப்பட்டாள். “கல்யாணத்திற்கு உங்க அம்மா அப்பா வருவாங்களா?” என்று மங்கம்மா துப்பு துலக்க முயன்றாள். ஆளுக்கொரு விதமாக, கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தோன்றிய ரீதியில் பதில் சொன்னேன்.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்