முற்றுப் பெறாதவையாய்

This entry is part [part not set] of 31 in the series 20100319_Issue

-நடராஜா முரளிதரன்-


எழுந்து நடக்கும் என்னிருப்பைத்
தக்க வைத்தது என் மொழி என்பாய்
அந்த மொழியின் கழுத்தைத் திருகி
மூச்சுக்குழல் வாய் இறங்கி
அகத்தைப் புறத்தே
உருக்கி வார்ப்பதற்காய்
எழுதுவேன் ஒரு கவிதை

தொன்மங்களின் சுகானுபவம்
வாதைகளாய் மாற்றம் பெறும்
நவீனத்துவ முகம்
உன்னுடையதென்பாய்

மரபுகள் வழியாக
உன் முன்னோர்
வஞ்சிக்கப்பட்டதாய்
சரிதங்கள் விரிக்கின்றாய்

பழமையைக் கொழுத்தும்
நெருப்பின் நதிமூலத்தைத்
தேடியலைவதாக
சீற்றம் கொள்கிறாய்

பாறையின் ஆழத்திலிருந்து
மயிர்துளைக்குழாய்
வழியே எழுகின்றது
ஒரு துளி நீர்
வெப்பக் காட்டின் உக்கிரம்
அதைத் துடைத்தழிக்கின்றது

அழித்தலிலும் முற்றுப் பெறாதவையாய்
அவை இயக்கமாய் இயங்குதலாய்
இன்னோர் வடிவம் நோக்கி

எனவேதான் இரத்தம் சிந்தாத
போர்களங்களை நோக்கி
என் மனம் அவாவுகின்றது
ஆனாலும் மனிதர்கள்
இரத்தம் சிந்தும்
போர்களங்களையே விரும்புகிறார்கள்

Series Navigation

author

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)

Similar Posts