முதல் மனிதனும் கடைசி மனிதனும்

This entry is part [part not set] of 30 in the series 20010819_Issue

முனைவர் செண்பகம் ராமசுவாமி


சூரிய ஒளியில் குளித்துச் சுழலும் உலகத்தின் அனைத்து உயிர்களினும் மேலானவராகத் தம்மைக் கருதிக் கொண்டு திரிந்த மனித இனத்தின் கடைசிப்புள்ளியான அந்த மனிதன், ஒளி மங்கிய தன் விழிகளால் மீண்டும் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான்.

‘உயிர்களின் மூலபலம் அழிந்துவிட்டது. இனி உலகில் உயிர்ப்பென்பதே இல்லை. உலகம் சுழலும் ‘ கடலலைகள் என்றும் போல் மேட்டுத்தரை தொட்டுத் திரும்பும் ‘ மழை பொழியும் ‘ சிறிதும் பெரிதுமாய் காற்று விருப்பம்போல் திரியும். தீதான் பெரும்பாலும் அடங்கிப் போகும் ‘ அதை உசுப்பிவிடும் உராய்வுக்கு இனி வழியில்லை. உலகம் வெற்று உலகமாய், ஒரு சூன்யக் கோளமாய் மாறிப் போனது. ‘

செடிகள் நிறம் மாறிக் கிடந்தன. மரங்களின் சாவு வறட்சி தெளிவாகத் தெரிந்தது. எத்தனை ஆண்டுகள் ‘ உழைப்பின் கடுமை ‘ அறிவுலகின் அனைத்துக் கண்டுபிடிப்புக்களையும் கற்றறிந்த அனுபவங்கள் ‘ அனைத்தும் ஒருவழியாக வெற்றியையே தேடித் தந்துவிட்டன.

கடைசி மனிதன் மெல்ல நடந்தான்.

‘ஆயிரமாயிரம் ஆண்டுகளாக, இந்த மண்ணில் போராடி, வாழ்க்கை வசதிகளைச் சிறிதளவு கூட்டிக் கொண்டதைத்தவிர, வேறு எதையுமே சாதித்துவிடாத மனித இனம் அழிந்துவிட்டது. ஆறாவது அறிவால் அது ஆடிய ஆட்டங்களின் விளைவால் ஏனைய உயிர்களையும் காவு வாங்கிவிட்டது.

ஆனாலும் மனிதன் பாவம்தான் ‘ அவனைக் குறை கூற முடியுமா ? நோயால் வாடும் கன்றுக்குட்டிதான் அவன். அவனே உருவாக்கி, அவனையே சுற்றிக் கொண்டிருக்கும் வலைகளிலிருந்து முழுமையாக விடுபடத் தெரியாதவன். ஆக்கபூர்வமான பண்புகளோடு அழிவு பூர்வமான பண்புகளும் அவனுக்குள்ளே விதைக்கப்பட்டிருக்கின்ற போது, அவனின் இனம் இந்தப் பண்புக் கலவையில் பல்வேறு வகைமாதிரிகளாக உருவெடுத்து, அன்பு செய்வதும் அழிப்பதுமாய், உருவாக்குவதும் சிதைப்பதுமாய், அமைதி காப்பதும் கோரதாண்டவமாடுவதுமாய்க் காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன ?

போர் விமானக் கூச்சலில் சின்னஞ்சிறார்கள் உயிரொடுங்குவதும், பாலுணர்வுத் தீயில் தன்னின் சரிபாதி பொசுங்குவதும், பழியுணர்வுப் புயலில் உயிர்மலர்கள் சிதறுவதும், பொருளாசை வெறியில் ஏழ்மைத்துயர் பரவுவதும், அதிகார உயர்வில் அடிமைகள் தலைதாழ்த்தி நிலைப்பதும் எந்தக் காலத்தில் இல்லாது போயின ? வரலாறே இல்லை ‘

துன்புறுவதோ துன்புறுத்தலோ அறிவுக்கு உடன்பாடில்லை, அரிபூச்சுக்குத் தீ வைப்பது போல் ‘

உயிர்க்கொலைகள் ? உணர்வுக் கொள்கைகள் ? இவை சாத்தியமிழந்தால் உலகம் பூரண அமைதியைச் சந்தித்து விட்டது. புதிய, ஆயின் கடைசி வரலாறு ‘

அறிவின் முடிவான சூன்யமே இனி ஆட்சி செய்யும் ‘ சூன்யம் ‘ சூன்யம் ‘ நிகழ்ந்தது சரியா ?

ஒரு நாள் ஒரேயடியாக அழிந்துபோவோம் என்பது இந்த மனித மந்தைக்குத் தெரியாமலா இருந்தது ? நிலையாமை உண்மையை உள்வாங்காமல், நிலைத்திருப்போம் என்ற பொய்மையிலேயே மூழ்கிக் கொண்டு அல்லாடிப்போன அற்ப உயிர்கள் ‘ இவற்றால் லட்சம் லட்சமான ஆண்டுகளாக உருவாகி வந்த சங்கிலித் தொடரின் கடைசிக் கண்ணி நான்தான் ‘

விஷக் காற்றின் கடுமை நன்றாகவே குறைந்து விட்டிருந்தது. சின்னஞ்சிறு மனிதக்கைகளால் உருவான பிரமாண்ட கட்டிடங்கள், நெடிதுயர்ந்து நின்றன. மனிதன் தான் மேலே போனான் ‘ கூடவே தன் மனத்தை இழுத்துச் செல்ல முடியவில்லை.

உலகெங்கும் எல்லா வகைகளிலான உயிரினங்களின் சடலங்கள். அவன் நடந்து கொண்டே இருந்தான்.

கடைகளில், வீடுகளில், தெருக்களில், தொழிற்சாலைகளில், பள்ளிகளில்… என்னென்ன வேலைகளில் ஈடுபட்டிருந்தார்களோ, என்னென்ன பாவனைகள் மேற்கொண்டிருந்தார்களோ.. அதே நிலையில் ‘ இருளாகிக் கொண்டிருக்கும் உலகில் மறுபகுதியில் உறங்கியபடி.. கச்சிதமான சாவு ‘ வலியற்ற சாவு ‘ சாவை இப்படி எதிர்பார்த்த மனித ஆசை நிறைவேறிக் கிடக்கும் அற்புதமான காட்சி ‘ கடைசி மனிதனின் உள்ளத்தில் ஒரு முழுமை நிறைவு ஓடிப்பரந்து அகன்றது.

ஒரு வீட்டு வாசலில் ஒரு தாயும் அவள் அணைப்பில் கிடந்த குழந்தையும் ‘ அவன் மெல்ல நடந்து அந்த வாசலில் நின்றான். ‘அம்மா ‘ என்னை மன்னித்துவிடு ‘ மனித குலத்தின் துயர் துடைக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை ‘ ‘ அவன் மெல்ல முனகியபடி குனிந்து அக்குழந்தையின் சின்னஞ்சிறு கால்களை முத்தமிட்டான் ‘ மெல்ல ஒரு சங்கடம் எழுந்தது. அந்தக் கால்கள் முன்போல் அசைய வேண்டும் என்று அவன் விரும்பினான் ‘ நுண்ணுயிர்களும் அழிந்ததால் சடலங்கள் அப்படியே இருந்தன ‘ சீச்சி ‘ அவன் தன்னையே ஒருமுறை உலுக்கிக் கொண்டான் ‘ இந்த மாதிரிச் சடலங்களின், ஆசைகளின் விளைவுதானே நீண்ட அமைதியற்ற மனித இனச் சங்கிலித் தொடர் ‘ ‘ அவன் பார்வை தொலைதூரம் சென்று திரும்பியது.

‘நானா உங்களை அழித்தேன் ? இல்லை ‘ நான் தான் உங்களைக் காப்பாற்றினேன் ‘ இந்த அழிவு இல்லையென்றாலும் நீங்கள் அழிந்துதான் போயிருப்பீர்கள் ‘ இன்னும் கொஞ்சம் மூப்படைந்து… இன்னும் கொஞ்சம் நோய்வாய்ப்பட்டு.. இன்னும் கொஞ்சம் போராடி… ‘

அவன் உரக்கக் கூவினான். உலகம் முழுவதும் சுடுகாடாகி விட்ட பொழுதில் ஒரே ஒரு ஜீவனின் குரலாக, ஒற்றைக் குரலாக அது ஒலித்தது ‘

முதல் மனிதனின் குரலும் உலகமொத்தத்திற்கும் ஒரே குரலாகத்தானே ஒலித்திருக்கும் ? அவன் எவ்வாறு இருந்திருப்பான் ?

‘பூத்துக் குலுங்கும் மரங்கள் ‘ மரங்களிலும் மண்ணிலும் பழக்குவியல்கள் ‘ காட்டாற்று வெள்ளம் ‘ சிற்றோடைகளின் சலசலப்பு ‘ விலங்குகளும் பறவைகளும் தன்னிச்சையாகத் திரியும் ஆரவாரம் ‘ ஒவ்வொரு வகை உயிரினமும் காதல் செய்யும் களியாட்டம் ‘ உயிர்ப் போராட்டத்தில் அச்சுறுத்துவனவும்,அஞ்சுவனவுமாக ஓடித் திரியும் பரபரப்பு ‘ சலனம் ‘ சலனம் ‘ ‘ எங்கும் சலனம் ‘ ‘ ‘ ‘

பாறைகளுக்குப் பின்னே பதுங்கித் திரிந்து கொண்டிருந்தான் அந்த முதல் மனிதன். அவன் கண்களில் ஒளி ‘ சின்னக் குழந்தையின் விழிகளிலுள்ள தூய்மையான ஒளி ‘ காட்டு விலங்குகளைக் கண்டபொழுது மருட்சி ‘ குழப்பம் ‘ ஒளிந்து கொள்ளத் தெரியும் கொஞ்சம் அறிவு ‘ காயையோ, கனியையோ, எலும்புத்துண்டையோ கடிக்கும்பொழுது ஒரு நிறைவு ‘ இவைதவிர அவனிடம் என்ன உணர்வுகள் ? வேறு ஒன்றுமேயில்லை ‘ நாகரிக விஷம் பரவாத சுத்தமான ஆனந்தமும், அச்சத்தின் குழப்பமும் கலந்து வாழ்ந்த மண்ணில், மனித இனத்தின் எத்தனையோ பிரச்சனைகளுக்குக் காரணமாயிருந்தவன் அவன்.

‘மொழியறியாத.. வாழ்வு விவரம் அறியாத அந்த அப்பாவி மனிதன் அறிவின் சூன்யமாகயிருந்தவன். பெண்ணோடு பழகும் வேளை வந்த பொழுதும் குழந்தையைப் பற்றி அறியாதவன் ‘ ‘

கடைசிமனிதனுக்குச் சினம் பொங்கியது ‘

‘ஆதிமனிதனே ‘ நீ அறியாமையின் எல்லையில் வாழ்ந்தவன். அதனால்தான் வாழ்வை இப்படித் தாறுமாறாக வளர்த்து விட்டிருக்கிறாய். என்னைப்பார். நான் அறிவின் எல்லையில் வாழ்பவன். அதனால்தான் வாழ்வுக்கே எல்லை வகுத்தேன். ‘ முதல் மனிதன் தன்முன் நிற்பது போல அவன் கத்தினான்.

‘என்ன மோசம் போனது ? எத்தனையோ கிரகங்கள் உயிர்களற்று வானத்தில் சுற்றிக் கொண்டிருக்கவில்லையா ? இந்த உலகமும் அப்படியே சுற்றட்டும் ‘ ‘ அவன் குரல் தணிந்தது. ‘நான் யாருக்குச் சொல்கிறேன் இந்தச் சமாதானம் ? எந்த உயிர் இருக்கிறது என் குரல் கேட்க ? என்னைத் தவிர ?…என்னைத் தவிர ?…. ‘அவனுக்கு இலேசான சிரிப்பு வந்தது.

‘ஓகோ ? என் மனமேதான் என்னைக் குறை சொல்கிறதா ? மனமே ? தனி ஒருவனை இரண்டாக்கி விடுவாயே ‘ இயற்கையின் இந்த இரட்டைத் தன்மையை நான் வெல்வேன். இனி ஒரே சிந்தனைதான் ‘ ஒரே முடிவுதான் ‘ நான் செய்ததுதான் சரி ‘ மனித இனத்தின் துயர் களைய எத்தனையோ முயற்சிகள் ‘ எதற்கும் வெற்றியில்லை ‘ ‘

சமயம், வரலாறு, அரசு, தத்துவம் இவையெல்லாம் மனித உருக்கொண்டதுபோல் அவன் சிந்தனையில் சிறிது உலவிப் பின்னர் தலைகுனிந்து மறைந்தன. அவன் விரைவாகத் தன் சோதனைச் சாலை நோக்கி நடந்தான்.

‘ஏவு கருவிகளில் அணுகுண்டுகளை அனுப்பி, மனிதகுலத்தை அலங்கோலமாகச் சிதைக்க நினைத்த பாவிகளை விடவும், ஏவுகணைகளின் அமைதியான மரணத்தை உலகெங்கும் அனுப்பிய நான் உயர்ந்தவனில்லையா ? ‘

இப்பொழுது மனிதவாழ்வின் சில உன்னதங்கள் நினைவில் தோன்றிய முகம்மலர்ந்தன ‘ மெல்லிதான மனச்சுமை உருவாக, அவன் மாடிப் படிகளில் ஏறினான். ‘குப்பிக்குள் உறைந்திருக்கும் நச்சுக் காற்றை நான் முகரவேண்டும் ‘… மீண்டுமொருமுறை தொலை நோக்கிக் கருவிகளால் உலகத்தின் பல்வேறு பாகங்களையும் வந்து நோக்கினான். எங்கும் உயிரில்லை ‘ இரண்டு நாட்களாகத் தன்னையே பூட்டிக் கொண்டிருந்த அந்தச் சிறிய அறையைத் திறந்து அலமாரியில் வைக்கப் பட்டிருந்த சின்னஞ்சிறு குப்பியைக் கையில் எடுத்தான். மூடியைத் திறக்க முடியாது. துளைதான் போடவேண்டும் ‘…. குப்பியை அதே இடத்தில் வைத்துவிட்டு, துளைபோடும் கருவியைக் கையில் எடுத்தான்.

மளார் ‘ படார் ‘…உஷ்ஷ்…வகை வகையான பயங்கர ஒலிகள் ‘ காதைப் பிளக்கும் ஓசைகள்.

என்ன இது ? குழப்பம் மிக, ஓடிச்சென்று மாடி வராந்தாவின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான் ‘ வெளியே வீசத் தொடங்கியிருந்த புயல் சீற்றத்துடன் உள்ளே பாய்ந்தது.

ஒரே வினாடிதான் ‘ அவன் நிலை தடுமாறி.. மாடிப்படிகளில் உருண்டு….உருண்டு..கீழே விழுந்தான் ‘ பின் தலையின் சிறுபகுதி சிவப்பாகியது.

அவன் உணர்வு பெற்றபொழுது புயல் அடங்கியிருந்தது. மழை தொடங்கியிருந்தது. சுற்றிலும் அலங்கோலம் ‘ வறண்ட மரங்களும் செடிகளும் வேரோடு சாய்ந்திருந்தன ‘ ஆனால் அவனுக்குத் தன் நிலை தெரியவில்லை ‘

மனம் போன போக்கில் அவன் எழுந்து ஓடினான் ‘ ஆடைகளைக் கிழித்தெறிந்தான் ‘ பிணங்களின் மேல் தடுக்கி விழுந்தான் ‘ அவைகளைக் கொஞ்சினான் ‘ கோபித்தான் ‘ அந்த முதல் மனிதனைப் போல் அவனும் அறியாமையின் ஆனந்தமும் அச்சத்தின் குழப்பமும் கலந்து திரிந்தான் ‘ நிர்வாணக் கோலத்தில் நிமிர்ந்து திரிந்தான் ‘ குழந்தைக் கண்களுடன் புரிந்தும் புரியாமலும் பார்த்தபடி தன்னந் தனியனாய்த் திரிந்தான், மழையில் நனைந்தபடி ‘ கணக்கற்ற உயிரனுக்களைச் சுமந்தபடி ‘.

Series Navigation