மீண்டும் அணுசக்தி பற்றிக் கல்பாக்கம் ஞாநியின் தவறான கருத்துகள்!

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா


‘எரிசக்தி இல்லாமை போன்ற விலை மிகுந்த எரிசக்தி எதுவும் இருக்க முடியாது ‘ [No Energy is so costly as No Energy].

அணுவியல் விஞ்ஞான மேதை, டாக்டர் ஹோமி பாபா (1909-1966)

முன்னுரை: 50 ஆண்டு நிறைவுப் பொன்விழாவைக் கொண்டாடும் [2003-2004] பாரத அணுசக்தித் துறையகம் இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மின்சார உற்பத்தியை 2620 MWe மின்னாற்றலிலிருந்து 6800 MWe மின்னாற்றல் மிகுதி நிலைக்கு உயர்த்தப் போவதாக அணுசக்திப் பேரவையின் அதிபதி, டாக்டர் அனில் ககோட்கர் [Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission] வியன்னா, அகில நாட்டு அணுசக்திப் பேரவையில் [International Atomic Energy Agency, Vienna] 2003 செப்டம்பர் 17 ஆம் தேதி பெருமிதத்துடன் பறைசாற்றி யிருக்கிறார். மேலும் [2002-2003] ஆண்டில் இந்திய அணுமின் நிலையங்கள் செவ்விய முறையில் இயங்கி 19,358 மில்லியன் யூனிட் (KWh) மின்சாரத்தை, 90% திறமைத்தகுதியில் [Capacity Factor: 90%] பரிமாறியுள்ளன என்றும் கூறி யிருக்கிறார். அவற்றின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தாக்கள்: அணுமின் உலைகளை ஆழ்ந்து டிசைன் செய்து அமைத்தவர்கள், இராப் பகலாக இயக்கிக் கண்காணித்து வரும் எஞ்சியர்கள், விஞ்ஞானிகள், பணியாளிகள் ஆகியோரே.

இந்தியாவைப் போல் மற்றும் 30 உலக நாடுகள் 438 அணுமின் உலைகளை இயக்கி [2001 அறிக்கை] 351,327 MWe மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன! அடுத்து 31 அணு உலைகள் கட்டப்பட்டு இன்னும் 27,756 MWe அதிக மின்னாற்றல் உலகெங்கும் பெருகப் போகிறது! 2000 ஆண்டில் மட்டும் உலக நாடுகளில் 2,447,530 பில்லியன் யூனிட் [MWh] மின்சாரம் உற்பத்தியாகி யுள்ளது! மேலும் அமெரிக்கா, கனடா நாடுகளில் வயதாகி முன்பு மூடப்பட்ட பழைய அணு உலைகள், பல புதுப்பிக்கப்பட்டு மின்சாரம் பற்றாக் குறைப் பிரச்சனையை நிவர்த்தி செய்யத் தயாராக்கப் படுகின்றன.

கல்பக்கம் ஞாநியின் அணுசக்தி பற்றித் தவறான கருத்துகள்

மீண்டும் மதிப்புக்குரிய நண்பர் ‘கல்பாக்கம் ஞாநி ‘ சென்ற வாரக் கட்டுரையில் [செப் 18, 2003] தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அணுமின் நிலையங்கள் மீது கனலற்ற தீப்பொறிகளைக் கக்கி இருக்கிறார்! ‘இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை ‘ என்று தவறான கருத்தைப் பரப்பி வருகிறார். பெரும்பான்மையான இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் சீரும் சிறப்பாக இயங்கி மின்சக்தி பரிமாறி வருகின்றன என்று மெய்யான செய்திகளை முழுமையாக அறியாது, கண்களை மூடிக் கொண்டு புளுகுத் தகவலைத் தமிழ் நாட்டிலும், அகிலவலை மூலம் தமிழ் உலகிலும் ஒரு பத்திரிகை ஆசிரியர் பரப்பி வருவது வியப்பாக இருக்கிறது!

சென்ற வாரக் கட்டுரையில் நான்கு தனிப்பட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் சில பிழையானவை.

1. மின்சார உற்பத்திக்கு அணுசக்தி சரியான வழியல்ல. இந்தியாவில் அணுசக்தித் துறை என்பதே மின்சாரத்துக்கானது அல்ல. அணுமின்சாரம் இதுவரை எந்த மூலையிலும் மின்சாரப் பற்றாக் குறையைத் தீர்க்கவில்லை. [இவை பிழையான கருத்துக்கள்]. பல தலைமுறைகளுக்கு ஆபத்தான கழிவுகளைத்தான் உற்பத்தி செய்யும். [இது மெய்யானது]

2. வல்லரசு வேடங்கட்டி ஆடுவதற்காக அணு ஆயுதத்துக்கான புளுடோனியத்தை எடுத்து, அணுகுண்டு தயாரிப்பவர்கள்தான் உண்மையான பயங்கரவாதிகள். [இது மெய்யானது]

3. கல்பாக்கம் அணு உலைகள் நிரந்தர ஆபத்தாக இருந்து அங்குள்ள ஊழியர்களுக்கு உடல்நல விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. [இது தவறானது. அவர் குறிப்பிடும் விபத்து எரிக்கோல் மீள்சுத்திகரிப்புத் தொழிற்கூடத்தில் நிகழ்ந்தது. கல்பாக்க அணு உலைகளில் நிரந்தர ஆபத்துக்கள் இல்லை]

4. கல்பாக்கம் அணு உலகளைக் கட்டி முடிக்கவே 15 ஆண்டுகள் ஆகின. இயங்கத் தொடங்கிய முதல் ஐந்து ஆண்டுகளில் 200 முறை பிரச்சினைகளினால் நிறுத்தப் பட்டன. [அதாவது ஆண்டுக்கு 40 தடவை நிறுத்தம், மாதம் ஒன்றுக்கு 3-4 நிறுத்தம்]. [முன்னோடி அணுமின் உலைகளில் இத்தனை நிறுத்தங்கள் ஒன்றும் பெரிதல்ல!]

இந்தியச் சாதனங்கள் 70%, அன்னியச் சாதனங்கள் 30% கொண்டு கல்பாக்கத்தில் தயாரியான முன்னோடி அணு உலைகள் இவை. இந்தியா தன் காலில் நின்று முதன் முதலில் அணுமின் நிலையச் சாதனங்களைத் தயாரித்துச் சுயதேவைப் பூர்த்திக்குக் கட்டி இயக்கும் போது, 15 ஆண்டுகள் நீடித்ததில் ஒன்றும் தவறில்லை. ஆரம்ப காலத்தில் விஞ்ஞானிகளும், எஞ்சியர்களும் புது அணு உலையை இயக்கும் போது மாதம் ஒன்றில் 3-4 நிறுத்தம் ஏற்பட்டதும் ஒப்புக் கொள்ள வேண்டியதே.

இந்திய அணுமின் நிலையங்களின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்திக் கார்பொரேஷன் [Nuclear Power Corporation of India Ltd (NPCIL)] தனது அகிலவைப் பின்னலில் [www.npcil.org] 1995 முதல் 2002 ஆண்டுவரை அணுசக்தி பரிமாறி வந்த மொத்த யூனிட்களையும் [Generation Units], நிலையங்கள் இயங்கிய திறத்தகுதிகளையும் [Capacity Factors] விளக்கமாகத் தந்துள்ளது. அவை யாவும் மெய்யான எண்ணிக்கைகள்! புளுகு எண்ணிக்கைகள் அல்ல! அதே எண்ணிக்கைகளை அணுசக்தி கார்பொரேஷன் வியன்னாவில் உள்ள அகிலநாட்டு அணுசக்திப் பேரவைக்கும் [International Atomic Energy Agency (IAEA)] இதுவரை அனுப்பி வந்துள்ளது.

அணுசக்தித் துறையின் புதிய 2003 ஆம் ஆண்டு அறிக்கையில் (ஏப்ரல் 2002-மார்ச் 2003) தற்போதைய நிதியாண்டில் பரிமாறிய மின்சாரம் 19200 மில்லியன் யூனிட் [1 Unit=1 KWh (Kilo Watt Hour)] என்றும், பெற்ற இலாபம் ரூ.1438 கோடி என்றும் அறியப்படுகிறது. அடுத்து ஏப்ரல்-ஜுன் 2003 மூன்று மாதத்தில் மட்டும் அடைந்த இலாபம் ரூ 545 கோடி! ஏழாண்டுகளில் (1995-2002) இந்திய அணுமின் நிலையங்கள் சராசரி 13590 மில்லியன் யூனிட் மின்சாரத்தை, சராசரி 74% திறமைத்தகுதியில் [Capacity Factor: 74%] பரிமாறி வந்துள்ளன.

கல்பாக்கம் முன்னோடி அணுமின் உலைகள் கடந்த நான்கு வருடங்கள் [1998-2002] சராசரி 82% திறமைத்தகுதியில் சராசரி 1183 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரித்துள்ளன. அதே சமயம் வட இந்தியாவில் ஓடும் புதிய அணுமின் நிலையங்கள் 2002 ஆம் ஆண்டில் புரிந்த மகத்தான மின்சார உற்பத்திகள் பாராட்டுக்குரியவை.

கக்ரபார் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 92% … பரிமாற்றம்: 1735 மில்லியன் KWh

கெய்கா அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1500 மில்லியன் KWh

நரோரா அணுமின் நிலையங்கள்: திறமைத்தகுதி: 88% … பரிமாற்றம்: 1664 மில்லியன் KWh

ராஜஸ்தான் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 80% … பரிமாற்றம்: 1525 மில்லியன் KWh

கல்பாக்கம் அணுமின் நிலையம்: திறமைத்தகுதி: 78% … பரிமாற்றம்: 1122 மில்லியன் KWh

இந்திய அணுமின் நிலையங்கள் எவ்விதம் திட்டமிடப்பட்டன ?

முதல் இரண்டு இந்திய அணுமின் உலைகள் அமெரிக்கா, கனடா, ஆகிய நாடுகளின் உதவியால் உருவாயின. தற்போது ரஷ்யாவின் உதவியால் 1100 MWe இரட்டை அணுமின் நிலையங்கள் [1100 MWe VVER] கூடங்குளத்தில் கட்டப்பட்டு வருகின்றன. கனடா முன்னோடி அணுமின் உலைகளைப் பிரதி எடுத்து, மேலும் புதிய உறுப்புகளைப் புகுத்தி, புது அணுமின் நிலையங்கள் பின்னால் தோன்றின. அவை யாவும் யுரேனியத்தைப் பயன்படுத்தும் முதற்கட்டத் திட்ட அமைப்புகள். தற்போது இயங்கி வரும் பத்து 220 MWe அணுமின் நிலையங்கள், இந்தியப் பொறியியல், விஞ்ஞானிகளால் டிசைன் செய்யப்பட்டு, அவற்றின் 80% சாதனங்கள் இந்தியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டவை. இப்போது புதிய அணுமின் உலைகள், முன்னோடிகளை விடச் சிறந்த நிலையில் இயங்கி, மின்சாரம் பரிமாறி வருகின்றன. கல்பாக்கம் ஞாநி வலியுறுத்துவது போல் அணுமின் நிலையங்களை மூடிவிட்டால், பல மாநிலங்களில் இருட்டடிப்புகள் நீடிக்கும். தொழிற்சாலைகள் அநேகம் நிறுத்தமாகி, மாநிலங்களில் ஆயிரம் ஆயிரம் நபர்கள் வேலை இழந்து, வயிற்றுச் சோறுக்குத் திண்டாட்டம் உண்டாகிவிடும்!

இரண்டாம் கட்டத் திட்டத்தில் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப்பெருக்கி அணுமின் நிலையங்கள் [Fast Breeder Reactors] அமைப்பு. இந்தியாவில் இயங்கி வரும் அல்லது கட்டப்பட்டு இனிமேல் இயங்கும் அணுமின் நிலையங்கள் ஏராளமான யூனிட் மின்சாரம் பரிமாறி வருவதுடன், பல இந்தியத் தொழிற்சாலைகளின் பணியாளிகளுக்கு வேலை வாய்ப்பும் அளிக்கின்றன. இந்தியா அணுமின் நிலையங்களின் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, எரிக்கோல் சுத்தீகரிப்பு, கழிவுகள் புதைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் உலக முன்னணியில் நிற்கிறது. அவற்றில் சிக்கல், பிரச்சனைகள் எழுந்தாலும், அவற்றைத் தீர்க்க நிபுணர்கள் அருகே இருக்கிறார்கள்.

பாரதத்தில் மின்சாரப் பற்றாக் குறையை நிவர்த்தி செய்வது எப்படி ?

நூறு கோடி ஜனத்தொகையை மிஞ்சி விட்ட இந்தியாவுக்குப் பற்றாக்குறை மின்சாரம் மட்டுமா ? உணவு, நீர், உடை, இல்லம், கல்வி, வேலை, போக்குவரத்து, குடிவசதி, சுகாதாரம் போன்ற முக்கியமான துறைகளிலும் பற்றாக்குறைகள் உள்ளன! இந்தியாவில் பற்றாக்குறை மின்சார உற்பத்திக்கு வேண்டிய நிலக்கரி கிடைப்பதில்லை! ஈரான், ஈராக்கிலிருந்து எரிஆயில், எரிவாயு ஆகியவற்றை வாங்கிப் பாரதத்தில் மின்சாரம் தயாரித்துப் பெருத்த செலவில் நமது தொழிற்சாலைகளைத் தொடர்ந்து ஓட்ட முடியாது! கோடான கோடி இல்லங்களுக்கும் விளக்கேற்ற இயலாது! நீர்வீழ்ச்சி மின்நிலையங்களை மேலும் பெருக்க நீர்வளச் செழிப்பும் கிடையாது! காற்றிலிருந்தும், கடல் அலைகளிலிருந்தும், மாட்டு சாணத்திலிருந்தும், பரிதியின் வெப்பத்திலிருந்தும், நமக்குத் தேவைப்படும் மாபெரும் 200 MWe, 500 MWe, 1100 MWe மின்சார நிலையங்களைக் கட்ட முடியாது! ஆனால் பாரதத்தில் மிகுந்து கிடக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்தி முதற் கட்டத்தில் 50,380,000 மெகாவாட் அணு மின்னாற்றலும், தோரியத்தைப் பயன்படுத்தி இரண்டாம் கட்டத்தில் 200,000,000 மெகாவாட் அணு மின்னாற்றலும் தயாரிக்க நம்மிடம் மனிதத் திறமையும், மூல உலோகங்களும், யந்திர சாதனங்களும் நிரம்ப உள்ளன. அணுவியல் துறையகத்தின் முதல் அதிபதி, டாக்டர் ஹோமி பாபா திட்டமிட்டது போல், பாரதத்தில் கிடைக்கும் ஏராளமான யுரேனியம், தோரியம் மூலகங்களைப் பயன்படுத்தி, இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியாவில் அணு மின்சக்தி உற்பத்தி செய்வதைத் தவிர, வேறு வழியே இல்லை!

அணு உலைகளில் ஏற்படும் அபாய நிகழ்ச்சிகள், விபத்துகள்.

உலக நாடுகளில் இயங்கும் அணுமின் நிலையங்களில் விபத்துகள் நிகழ்ந்ததுபோல், இந்திய அணு உலைகளிலும், அணுஎருச் சுத்தீகரிப்புத் தொழிற் கூடங்களிலும் சில அபாயங்கள் நேர்ந்துள்ளன! மனிதர் கவனமின்மை, மனிதத் தவறுகள், பாதுகாப்புப் பணிநெறிகளைப் பின்பற்றாமை, சீரான மேற்பார்வை இன்மை, கண்காணிப்பு இன்மை ஆகிய ஒழுங்கீனங்களால் தொழிற்சாலைகளில் விபத்துகள் உண்டாகும். அவற்றைத் தவிர்ப்பது, தடுப்பது அல்லது குறைப்பது இயக்குநரின் முக்கிய கடமையாக இருத்தல் அவசியம். அணு உலைகளில் பெரும்பான்மையான விபத்துகள் மனிதத் தவறுகளால் ஏற்படுகின்றன. மனிதத் தவறுகள், கண்காணிப்பட்டு குறைக்கப்பட வேண்டும். குறைந்து குறைந்து மனிதத் தவறுகள் பூஜியமாக்கப்பட வேண்டும். விபத்துகளின் மூல காரணங்கள் ஆழ்ந்து உளவப்பட்டு, மீண்டும் அவை ஏற்படாதிருக்க தடுப்பு முறைகள், பாதுகாப்பு நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அணு உலைகளின் பிரச்சனைகளைக் கண்டு மிரளாமல், அவற்றைத் தீர்க்க வழிகள் வகுக்கப்பட வேண்டும். அணு உலைகளே நாட்டின் மின்சாரப் பற்றாக்குறையை நீக்கும் என்று ஆணித்தரமாக நம்பி, மக்கள் அறியும்படி அவர்களுக்குக் கல்விப் பயிற்சிகள் அளித்து, அணுத்துறைக் கண்காட்சி சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

தற்போதைய தொழில்யுகம் [Industrial Age] தோற்றுவித்த யந்திர, இராசயனத் தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் [இரயில் தொடர், கார், கப்பல், ஜெட் விமானம், ராக்கெட் விண்கப்பல்], மின்சார நிலையங்கள், ஆய்வுக்கூடங்கள் அனைத்திலும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் ஒளிந்துள்ளன! எப்போதாவது விமானம் ஒன்று விழுந்து நூற்றுக் கணக்கான பேர் மடிகிறார்! ஆனால் விமானப் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. இரயில் வண்டி தடம் பெயர்ந்து உருண்டு அநேக நபர் உயிரிழக்கிறார்; பலர் காயமடைகிறார்! ஆனால் இரயில் பயணங்கள் நிறுத்தப் படுகின்றனவா ? இல்லை. காரணம் பாதிக்கப் பட்டாலும் மக்கள், அவற்றின் அபாயங்களை எதிர்பார்த்து அவ்விபத்துகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் கடந்த 50 ஆண்டு அனுபவத்தில் இந்திய அணு உலைகளில் இதுவரை யாரும் கதிரடியால் மரணம் அடைய வில்லை! பாதுகாப்புக்கு மீறிய அளவுக் கதிரடி சிலர் வாங்கி யிருந்தாலும் மருத்துவச் சிகிட்சையில் அவர்களைக் குணப்படுத்த முடியும்! கல்பாக்கம் ஞாநி அணுவியல் துறைகளில் ஏற்பட்ட விபத்துகளை மட்டும் பெரிது படுத்திக் கொண்டு, அவற்றை மூடவிட வேண்டும் என்று கூச்சலிடுவது ஆதரமற்ற, நியாயமற்ற கூப்பாடு!

இந்திய அணுமின் உலைகளைப் பற்றித் தவறான தகவல்கள்!

அணுசக்தி, இப்போது மின்சாரப் பற்றாக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் நிலையங்களையும் நிரந்தரமாக ஞாநி விரும்புவது போல் நிறுத்தி விட்டால், இந்தியா வெங்கும் இருட்டடிப்பும் [Blackouts], பழுப்படிப்பும் [Brownouts] தாண்டவமாடும்! பிறகு அவரது பத்திரிகைகள் கூட அச்சடிக்கப் படாமல் ஆபீஸுக்குள்ளேயே தூங்கிக் கொண்டிருக்கும்! 2003 இல் இந்தியாவின் பதிமூன்று அணுமின் நிலையங்கள் 2620 MWe மின்சாரம் பரிமாறி வருகின்றன. 2012 இல் மூன்று மடங்கு [8100 MWe] அதிகரிக்கத் திட்டங்கள் உருவாகி, இப்போது புது அணுமின் உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. அணுசக்தி மூலம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றலை பாரதத்தில் உண்டாக்க மாபெரும் திட்டங்கள் கைவசம் உள்ளன.

கல்பாக்கம் ஞாநி அணு உலைகள் செர்நோபிள் போல் வெடிக்கும் என்றும், அப்படி வெடித்தால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்றும் அணுவியல் கல்வி புரியாமல் தன் நுனிப்புல் அறிவில் 2003 ஏப்ரலில் எழுதி, தமிழர் அனைவருக்கும் அச்சத்தையும், பீதியையும் கிளப்பினார்! அதே கட்டுரையில் கல்பாக்க அணு உலைகளில் பணியாற்றுவோரும், அவற்றின் அருகில் வாழ்வோரும் புற்று நோயால் தாக்கப்படுகிறார் என்ற புரளியையும் உண்டாக்கினார்! அவற்றைத் தவறென்று காட்டித் திண்ணையில் எழுதிய கட்டுரைக்குப் பதில் தராமலே ஒளிந்து கொண்டார், கல்பாக்கம் ஞாநி! இந்திய அணு உலைகளை நேரில் கண்டு, அணு உலை எதிர்ப்பாளிகள் தம் அறிவைச் செழுமைப்படுத்த வேண்டும் என்று கூறிய ஆலோசனைக்கும் அவர் பதிலே அளிக்கவில்லை!

பத்திரிக்காசிரியர் என்று வேடங்கட்டி, கல்பாக்கம் ஞாநி அணுசக்தி பற்றி பூரணப் பயிற்சி இல்லாமல், வெறும் அரைகுறை ஞானத்துடன், அணுசக்தியைப் பற்றி அறியாத மாந்தர்களுக்கு எழுத்து மூலம் அச்ச மூட்டியும், அதிர்ச்சி கொடுத்தும் வருவது எழுத்து நெறியற்ற அநாகரீகச் செயல்!

இந்திய அணுசக்தித் துறைகளின் தகவல்கள்:

1. Atomic Power Plants Performance Reports www.npcil.org [Updated Sep 22, 2003]

2. Kalpakkam Nuclear Site www.igcar.ernet.in [Updated Sep 1, 2003]

3. Bhabha Atomic Research Centre, Bombay www.barc.ernet.in [Updated Sep 19, 2003]

4. Atomic Energy Regulatory Board [AERB] Regulations www.aerb.gov.in [Updated Sep 17, 2003]

4. R. Chidambaram, Former Indian Atomic Energy Commission Report [Sep 20, 2000] http://pib.nic.in/feature/feyr98/fe0798/PIBF2207982.html

5. Dr. Anil Kakodkar, Present Chairman Indian Atomic Energy Commission, IAEA Repot [Sep 17, 2003] http://www.dae.gov.in/gc/gc2003.htm

6. Indian Radiation Safety Division Reports http://www.aerb.gov.in/T/Divisions/RSD/RSD.html

7. Atomic Energy Regulatory Board, Bombay Annual Report [2001-2002] http://www.aerb.gov.in/T/annrpt/annr2k2/annrpt.pdf

*******************

jayabar@bmts.com

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா