மின்னணுக் கல்வி அறிவு (மி.கல்வி அறிவு)/(e-literacy)

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி


“அறிவுடையார் எல்லாம் உடையார்” எனும் வள்ளுவத்தின் உண்மைப் பொருள் வேறு எப்போதையும்விட, இப்போதுதான் மிகுதியாக உணரப்பட்டு வருகிறது. இன்றைக்கு மிகப் பெரிய சொத்தாகக் கருதப்படுவது மண்ணோ, பொன்னோ, வீடோ அல்ல; அறிவுதான் இன்றைய மாபெரும் சொத்து. மனிதனின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்று பெரிதும் உறுதுணையாக விளங்குவது அறிவு மட்டுமே. வளர்ந்து வரும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அறிவைப் பெருக்கிக் கொள்ளுகின்ற சமுதாயங்களும், நாடுகளும் அவற்றைப் பயன்படுத்தாத அல்லது அவற்றிற்கு முக்கியத்துவம் தராத நாடுகளைவிடப் பன்மடங்கு வளர்ச்சியுற்றிருப்பதைக் கண்கூடாக நாம் காண்கிறோம்.

இன்று தகவல் வலையத்தை பயன்படுத்துவோர், உலக மக்கள் தொகையில் 2% மட்டுமே. அவருள் 88% மக்கள் தொழில்துறையில் முன்னேறிய நாடுகளில் வசிக்கின்றனர். எடுத்துக்காட்டாக உலக மக்கள் தொகையில் 5% மட்டுமே வாழ்கின்ற வட அமெரிக்காவில்தான் 50% இணையப் பயனர்கள் உள்ளனர்; மக்கள் தொகையில் 20% வாழும் தெற்கு ஆசியாவில் உள்ள இணையப் பயனர்கள் வெறும் 1% மட்டுமே. இந்நாடுகளின் அரசுகள் முயன்றால் மட்டுமே இந்நிலை மாறும்; முதலாவதாக, சரியான தகவல் சூழ்நிலையை அரசுகள் உருவாக்க வேண்டும். அரசியல், சமூக சிக்கல்கள் குறுக்கிடும் நிலை ஏற்படலாம். குடிமக்களின் தகவல் சுதந்திரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்படாத வகையில் இச்சிக்கல்களைத் தீர்த்திட வேண்டும். ஆனால் பெரும்பாலான நாடுகள் கடந்த 25 ஆண்டுகளில் குடிமக்களின் கருத்துச் சுதந்திரதிற்கும், தகவல் அறியும் உரிமைக்கும் மதிப்பளித்துச் சட்டங்கள் இயற்றியிருப்பது நம்பிக்கை ஊட்டுவதாய் அமைகிறது. அதே நேரத்தில் அரசு இரகசியங்களூக்கும், பாதுகாப்பிற்கும் எவ்வித ஊறும் நேராவண்ணம் கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.

இணையப் பயன்பாட்டின் காரணமாக, வளர்ந்த நாடுகளின் ஆளும் முறையிலேயே மாற்றம் ஏற்படத் துவங்கி உள்ளது. அரசு அலுவலர்களின் அறிக்கையை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அரசு மேற்கொள்ளும் தீர்மானங்களில் தாங்களும் முழுமையாக பங்கேற்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கடந்த ஆண்டு சீட்டல் (Seattle) நகரத்தில் நடைபெற்ற உலக வாணிபக் கழக மாநாட்டில், இணையத்தின் வழி மக்கள் மேற்கொண்ட போராட்டம் இம்மாற்றத்திற்கு முன்னோடியாக அமைந்தது எனலாம். இந்நிலையில் அரசுகள் மக்களைத் தன் பக்கம் அணைத்துச் செல்லவேண்டிய பொறுப்புக்கு ஆளாவதுடன் அதற்கான வழிமுறைகளைக் கைக்கொள்ளவேண்டிய நிலைக்கும் உட்படுகின்றன; இந்நிலையினை மி – மக்களாட்சி முறை எனலாம் (e-democracy). மக்கள் விரும்பும் அனைத்துத் தகவல்களும் அவர்களுக்குத் தரப்படவேண்டியுள்ளது. வேட்பாளர் பட்டியல், நிலப்பதிவு ஆவணங்கள், வீடு மற்றும் வீட்டுமனை மதிப்பீடுகள், பங்குச் சந்தை நிலவரங்கள் இவை போன்ற இன்னும் பலவும் இவற்றுள் அடக்கம். இம்முறையினால் குடிமக்கள் அரசு எந்திரத்தின் பங்காளிகளாக மாற விரும்புகின்றனர் என்பது புரிகிறது. எடுத்துக்காட்டாக, மெக்சிகோ நாட்டு உழவர்கள், அரசின் கிராமப்புற கடன்வழங்கு திட்டத்தில், கணினி வழி நேரடியாகப் பங்கேற்று அத்திட்டம் தங்களுக்கு இலாபமாகவும், பயனுள்ளதாகவும் அமையுமாறு பார்த்துக் கொள்ளுகின்றனர்.

ஒரு நாட்டில் சரியான தகவல் தொழில்நுட்பச் சூழலை உருவாக்க, அரசு தகுந்த தேசியத் தகவல் கொள்கையை வகுக்க வேண்டும். கல்வி, அறிவியல், பண்பாடு, தேவையான கணினி மென்/வன்பொருள் வசதிகள், பிற தகவல் தொழில் நுட்பங்கள், சட்டம், ஒழுங்கு, ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாக அக்கொள்கை அமைய வேண்டும். கணினி அறிவு, கணினியை இயக்கும் திறன்/ பயிற்சி மற்றும் கணினியின் மீது நம்பிக்கை ஆகியவற்றை மின்னணுக் கல்வி அறிவு அல்லது மி-கல்வி அறிவு (e-literacy) எனக் கூறலாம். ஒரு சமுதாயம் வளர்ச்சியுறவும், மக்கள் வாழ்க்கை மேம்படவும் இன்று இக்கல்வி அறிவு இன்றியமையாததாகிறது. மி-கல்வியறிவு மக்கள் அனைவரையும் சென்றடைய, தகுந்த கல்வித் திட்டத்தை உருவாக்கிச் செயற்படுத்துவது அரசின் பொறுப்பு. பல்வேறு நாடுகள் இம்முயற்சியை இன்று மேற்கொண்டுள்ளன. கனடா நாட்டில் சமூக அணுகுமுறைத் திட்டத்தின் வாயிலாக (Community Access Programme – CAP), கிராமப் புறங்களில் சுமார் 10,000 இணையச் சேவையகங்கள் நிறுவப்பட்டு கிராம மக்களுக்கு தகவல் மையங்களாகப் பணிபுரிகின்றன. உகாண்டா, மாலி, மொஸாம்பிக், தான்சானியா நாட்டு அரசுகள் யுனெஸ்கோ போன்ற நிறுவனங்களின் உதவியுடன் பன்முக சமுகத் தொலைத்தொடர்பு மையங்களை நிறுவி, தனித்து வாழும் குக்கிராம மக்களையும் உலகின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இம்மையங்களில் கணினி, தொலைபேசி , தொலை நகலி, நகல் எடுக்கும் எந்திரங்கள், இணையம் ஆகிய வசதிகள் அனைத்தும் தரப்பட்டு, மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றம் விளைந்துள்ளது.

ஆனால் இவற்றிற்கு ஆகும் செலவுக்கு என்ன வ்ழி ? குறைந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு நிறைந்த பலனைப் பெறக் கூடிய பல வாய்ப்புகள் உள்ளன. கம்பியில்லாத் தொழில்நுட்ப முறையின் (Wireless technology) மூலம் பெருமளவு செலவைக் குறைக்கலாம். மரபு வழிப்பட்ட ஒப்புமை (Analog) முறையிலிருந்து விலகி இலக்க முறை (Digital) வலை அமைப்பைக் (Net work) கைகொள்ளுவதன் வாயிலாகவும் சிறந்த சேவையைக் குறைந்த செலவில் பெறலாம். அருகில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆகும் செலவையும் தொழில்நுட்ப அறிவையும் பகிர்ந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தென் பசிஃபிக் தீவுகள் ஒருங்கிணைந்து துணைக்கோள் சேவையைப் பெற்று, தமது தகவல் தொழில்நுட்பத் தேவையை நிறைவு செய்து கொள்ளுகின்றன. தொலைத்தொடர்புச் சேவையில் தாராளமயமாக்கல் கொள்கயைப் பின்பற்றுதல், அதனைத் தனியார் மயமாக்கல் வாயிலாகவும் குறைந்த செலவில் பலரும் நிறைந்த பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படும். எடுத்துக்காட்டாக, இலங்கையில் பல செல்லுலார் தொலைபேசி நிறுவனங்கள் இருப்பதால், உலகிலேயே மிகக் குறைந்த செலவில் மக்களுக்கு செல்லுலார் தொலைபேசி வசதியை அளிக்கும் நாடுகளுள் ஒன்றாக அது விளங்குகிறது.. எனவே ஒரு அரசு விரும்பினால் தன் மக்களுக்குத் தேவையான தகவல் அறிவைப் பெறும் வாய்ப்பை உறுதியாக அளிக்க இயலும். நமது நாடும் இத்திசையை நோக்கி முன்னேறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

*****

கணினி முன்னேற்றம் பற்றிய சில துணுக்குச் செய்திகள்

இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார். அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘அகஸ்டா அடா கிங் ‘ என்பவர். அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.

1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.

1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.

1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக ‘டைம்ஸ் ‘ இதழ் தேர்ந்தெடுத்தது.

பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).

தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.

****

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி

மொழிக் கல்வித் துறை (தமிழ்)

வட்டாரக் கல்வியியல் நிறுவனம்

மைசூர் 570006

Dr R Vijayaraghavan

BTech MIE MA MEd PhD

Dept. of Language Education (Tamil)

Regional Institute of Education

Mysore 570006

Series Navigation