மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

துகாராம் கோபால் ராவ்


மானுடவியல் ஆராய்வில் இரண்டு வகையான கருத்துக்களை பார்க்கலாம்.

உதாரணமாக ஒரு மானுடவியல் ஆராய்வாளர் ஒரு பழங்குடி கிராமத்துக்கு சென்று அங்கு இருக்கும் மக்கள் ஒரு விஷயத்தை ஒதுக்கி வைப்பதை பார்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதனை ஆங்கிலத்தில் டாபூ என்று அழைக்கிறார்கள். உதாரணமாக பசுக்களை இந்துக்கள் சாப்பிடுவது தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் பன்றிகளை சாப்பிடுவது தடுக்கப்பட்டுள்ளது. அல்லது நெருங்கிய சொந்தமுள்ளவர்களை திருமணம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற பலவித தடுக்கப்பட்டுள்ளவைகளை காணலாம்.

மானுடவியல் ஆய்வாளர் பசு சாப்பிடும் சமூகத்திலிருந்து வருகிறபோதுதான், பசு சாப்பிடாதவர்கள் வினோதமாக தெரிவார்கள். இல்லையா?

அவர் இரண்டு வழிமுறைகளை கையாளலாம். ஒன்று நீங்கள் ஏன் பசுவைச் சாப்பிடுவதில்லை என்று அந்த மக்களிடமே கேட்கலாம். அவர்கள் கூறுவதை அப்படியே எடுத்துக்கொள்ளலாம்

இரண்டாவது, அவர்கள் கூறும் காரணத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு, அவ்வாறு அவர்கள் பசுவை ஏன் சாப்பிடுவதிலலை, பசுவை அவர்கள் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை அவர்களது சூழ்நிலையை புரிந்துகொண்டு ஒரு கற்பனை பரிசோதனையை செய்து பார்க்கலாம். அப்போது பொருளாதார ரீதியில் அம்மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை புரிந்து கொள்ளலாம்.

இரண்டாவது முறையை பின்பற்றுபவர் மார்வின் ஹாரிஸ். இவர் ஒரு மார்க்ஸியர். அதனால், கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளுக்கு பின்னால் பொருளாதார காரணிகள் இருக்கின்றன என்பதை வலிமையாக நிறுவுகிறார்.

பசுக்கள் இந்தியாவில் புனிதமானவையாக ஆனதற்கு எவருடைய சதிவேலையும் காரணமல்ல. அது ஒரு மூட நம்பிக்கை இல்லை. பசுக்களை சாப்பிடக்கூடிய சமூகமாக இந்திய சமூகம் ஆனால், அது கடுமையான பொருளாதார விளைவுகளை இந்தியாவில் தோற்றுவிக்கும் என்பதனை ஆதாரப் பூர்வமாக இந்த புத்தகத்தில் நிறுவுகிறார்.

அதுவே அவரது தொடக்கப்புள்ளி. பசுவை ஆராய கிளம்பியவர் சென்னைக்கு வந்து பல காலம் இருந்திருக்கிறார். பசு கொடுத்த ஞானமே அவரை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி அவரை பல்வேறு கலாச்சார வினோதங்களை ஆராயவும் அடித்தளம் அமைத்துக்கொடுத்திருக்கிறது.

அதன் மூலமே அவர் கல்ச்சுரல் மெட்டீரியலிஸம் என்ற கலாச்சார பொருள்முதல் வாதத்தை முன்வைக்கிறார். கலாச்சார பொருள்முதல் வாதம், எல்லா கலாச்சார வெளிப்பாடுகளுக்கும் பின்னால், பொருளாதார காரணிகள் இருக்கின்றன என்பதை அடித்தளமாக கொண்டது.

இதன் நீட்சியாக பல்வேறு சிந்தனைகள், ஆராய்ச்சிகள் பல்வேறு தளங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஹவாயில் இருக்கும் ஜாதிமுறையை ஆராய்ந்த ஜாரட் டைமண்ட், “கன்ஸ் ஜெர்ம்ஸ் ஸ்டீல்” என்ற தன்னுடைய மிக முக்கியமான புத்தகத்தில், ஜாதிமுறை எப்படி ஒரு சமூகத்தின் வளர்ச்சிப்போக்கில் சாதாரண நிகழ்வாக நடக்கிறது என்பதை கூறுகிறார். காட்டில் வேட்டையாடி உண்ணும் சமூகம் நிலத்தில் கால் ஊன்ற ஆரம்பிக்கும்போது தானாக ஜாதிமுறை உருவாகிறது என்பதினை விளக்குகிறார். ஒரே சமூகத்தின் கிளைகளாக உருவான இரண்டு பசிபிக் தீவுக சமூகங்களில், ஒன்று வேட்டையாடி பொறுக்கி தின்னும் சமூகமாக மிகச்சிறிய உறுப்பினர்களை கொண்டு தேங்கி நிற்பதற்கும், மற்றொரு சமூகம் பல ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்டதாக வளர்ந்து ஜாதிமுறையை கொண்டு, பெரும் சமூகமாகவும் போர் சமூகமாகவும் உருவாவதற்கும் அவர்கள் எந்த தீவுகளுக்குச் சென்றார்கள். அந்த தீவுகள் எப்படிப்பட்ட நிலவளம் நீர்வளம் கொண்டவையாக இருந்ததே காரணம் என்பதனையும் விளக்குகிறார்.

இப்படிப்பட்ட ஆய்வுகள் நம் சமூகத்தை நாம் பார்ப்பதற்கான ஒரு அடித்தளத்தை உருவாக்கித் தருகின்றன.

நம்மால் ஜாதிமுறையை ஆராய முடியாது. அவற்றில் சதியையும், ஒரு சாராரை குற்றம் சொல்லும் அரசியலையும்தான் நம்மால் செய்ய முடியும்.

ஜாதிமுறை அற்ற ஒரு தற்போதைய சமூகத்தின் பின்னணி கொண்ட ஜாரட் டைமண்டால் அதன் தோற்றத்தை வளர்ச்சியை அதன் அழிவை பார்க்கமுடிகிறது. ஜாரட் டைமண்டின் முன்னோர்கள் ஜாதிமுறையற்று வாழ்ந்தார்கள் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம். ஜாரட் டைமண்ட் தற்போது வாழும் சமூகத்தில் ஜாதிமுறை இல்லை என்பதுதான் பொருள். அதன் நீட்சியாகவே ஏன் ஜாதிமுறையின் பொருளாதார காரணிகளையும் ஜாதிமுறை தேவையில்லாத பொருளாதார சமூக அமைப்பு தோன்றும் நகரமயமாதலின் விளைவாக ஜாதி முறை அழிகிறது என்பதனையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த புரிதல் மிகவும் முக்கியமான புரிதல்,

மார்வின் ஹாரிஸ் எல்லாவற்றையும் இப்படி விளக்குவதில்லை. இந்த புத்தகம் உலகத்தின் அத்தனை வினோதங்களையும் விளக்க இயலாது. ஆனால், மீன்பிடிக்க சொல்லித்தருவது போல இது ஒரு அடித்தளத்தினை அமைத்து தருகிறது.

மெஸையாக்கள் என்று புத்துலகத்தினை படைத்துத்தருவேன் என்று வரும் தலைவர்களும் அவர்கள் பின்னால் தொடர தயாராக இருக்கும் மக்களும் ஏன் தோன்றுகிறார்கள் என்பதை இது ஆராய்கிறது. நாஸிகள் யூதர்களை கொன்றதையும், கிறிஸ்துவர்கள் சூனியக்காரிகளை கொன்றதையும் நம்மை புரிந்துகொள்ளச் சொல்வது மட்டுமல்ல, அப்படிப்பட்ட ஒரு அழிவு நம் முன்னால் எப்போதுமே சாத்தியமானதாக இருப்பதை தொடர்ந்து காட்டிக்கொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட பேரழிவுகளிடமிருந்து நம்மை நாமே காத்துக்கொள்வது அறிவியற்பூர்வமாக நம் பார்வையை திருப்புவதனாலும், தொடர்ந்து அறிவியற்பூர்வமாக சமூக நிகழ்வுகளை அணுகுவதாலுமே முடியும் என்று இறுதிக்கட்டுரையில் கூறுகிறது.

இந்த புத்தகத்தினை படித்து என்னிடம் பரிந்துரை செய்த கோ ராஜாராமுக்கும், இந்த புத்தகத்தை மொழியாக்கம் செய்ய அனுமதி அளித்த மறைந்த மார்வின் ஹாரிஸ் அவர்களுக்கும், இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பை செம்மைப்படுத்தி, இதற்கு முன்னுரையும் வழங்கி கௌரவித்த பிரக்ஞை ரவிசங்கருக்கும், இந்த புத்தகத்திற்கு அருமையான விமர்சனத்தை நல்கிய ராமச்சந்திரனுக்கும், பக்தவச்தசல் பாரதிக்கும், வெளியிட்ட எனி இந்தியன் பதிப்பகத்தும், இந்த புத்தகத்தினை பாராட்டி அறிமுகம் செய்துவைக்கும் ஜெயமோகன் அவர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.


(எனி இந்தியன் பதிப்பகம் சார்பில் நிகழ்ந்த புத்தகக் கருத்தரங்கில் படிக்கப் பட்ட ஏற்புரை)

Series Navigation

துகாராம் கோபால் ராவ்

துகாராம் கோபால் ராவ்