8$

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

பனசை நடராஜன், சிங்கப்பூர்



ஞாயிறு தவிர ஆறு நாட்களும்
சட்டைப்பை ‘படி தாண்டாமல்’
கட்டுப்பாடாய் இருக்கிறது
எட்டு டாலர்..

“இரண்டு மணி நேரம்,
மூன்று மணி நேரம்
வெளிநாட்டுக்குப் பேசலாம்”..
போதைத் தூண்டில்களோடு
போன்கார்டுகள் பாதையெங்கும்..

உறவுகளோடு சண்டையிட்டு,
சமாதானமும் செய்ய
இவ்வளவு நேரம் போதுமென்று
எட்டிப் பார்க்கிறது சபலத்தோடு…

பத்து நிமிடம் பேசி வைத்தால்
பதினெட்டு நிமிடம் குறையும்
மாயாஜாலக் கார்டுகளென்று
பாவம் அதற்குத் தெரிவதில்லை..

கலர் டிவி, கடிகாரம், இன்னும் பல
அதிர்ஷ்டக் குலுக்கலில் இலவசமென்று
அடுத்து வீசும் கவர்ச்சி வலையில்
தடுக்கி விழுகிறது
அரைநாள் கூலியான
கப்பல் பட்டறை,
கட்டுமானத் தொழிலாளர்களின்
எட்டு டாலர்கள்…!!!

பனசை நடராஜன், சிங்கப்பூர்
(feenix75@yahoo.co.in)

Series Navigation