மா..மு..லி

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

டாக்டர் என் சுவாமிநாதன்


====

சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்த அந்த வீட்டின் சின்ன

அறையில் பத்து பேர் கூடியிருந்தார்கள். சபாபதி ‘ தமிழ் இலக்கியத்தில்

குறுநிலமன்னர்கள் ‘ என்ற தலைப்பில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

‘சில இலக்கியப் பாடல்களிலும் சரித்திரக்குறிப்பிலுமே இருக்கும்

சிற்றரசர்கள் நன்கு ஆயப்பட வேண்டும். இன்றைக்கு இருக்கும்

சூழ்நிலையில் கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் அரசுக்

காப்பகங்களில் தூங்குகின்றன. முறையான பராமரிப்பு இல்லாமல்

வீணாகின்றன. அவற்றைப் பார்த்து பிரதி எடுத்து ஆய்வுகள் செய்ய

அரசின் ஆணைகள் தடை செய்வதோடு, காப்பக அதிகாரிகளும்

ஒத்துழைப்பதில்லை. எங்கே இவை பிரதி எடுக்கப்பட்டு ஆயப்

பட்டால் இவற்றைக் காக்கும் வேலை போய்விடும் என்று அஞ்சுகிறார்கள்

போலும். இன்று இங்கு வருகை தந்துள்ள

வெளிநாட்டில் வசிக்கும் தமிழரான முனைவர் மகாலிங்கம் ஸ்கேனர்

எனப்படும் மின்வருடியால் சுவடிகள் கற்வெட்டுகளை சிதைக்காமல்

பிரதியெடுக்கும் முறையைப் பயன் படுத்தி தமிழ் ஆய்வுக்கு உதவ முன்

வந்திருக்கிறார். மகாலிங்கம் இப்படி முன்னே வாருங்கள் ‘.

அவையினரின் கைதட்டல் ஒலி எழ சற்றுக் கூச்சத்தோடு

மகாலிங்கம் எழுந்து குனிந்து அவைக்கு வணக்கம் சொன்னார்.

அடுத்துபேச வந்த இலக்குவனார், ‘மாத்துறை முத்துவர்மன் என்ற குறுநில

மன்னன் மயிலாடுதுறை அருகே உள்ள கிராமத்தில் போரில் இறந்திருக்கிறான்.

அவனை நாற்புறமும் சோழர் படை சூழ, உதவிக்கு படை கேட்டு அருகிலுள்ள

ஒரு நிலக்கிழாருக்கு லிகிதம் அனுப்பியபோது, விற்படையால் கொல்லப்பட்டு

உயிர்நீத்த செய்தியை

‘நாற்புறமும் வேற்படை சூழ்ந்து நெருக்க

மேற்படை வேண்டி யோலை கேட்டகாலை

விற்படை வீழ்த்தி விழுப்புண் வாங்கி

நல்லாற் றங்குடிக்கண் பொல்லாப் படைந்த

மாத்துறை முத்தன்… ‘ என்ற பழம் பாடலால் தெரிகிறது.

மாத்துறை முத்தன் எழுதிய லிகிதம் பற்றி பலாவூர் தோலிருக்கச்

சுளைமுழுங்கியார் என்ற புலவர்,

‘ ஆளும் வாளும் வில்லும்

வேலும் விரையும் புரவியும்

விரைவில் தருக தருக

சோத்து நாடன் படையும்

சூனியமாக்கவே ‘

என்று அந்த லிகிதத்தில் குறிப்பிட்டிருந்ததை உறுதிப்படுத்துகிறார். ‘சோழ நாடு

சோறுடைத்து ‘ என்பது அறிவோம். ‘சோத்து நாடன் ‘ என்பது சோழ அரசனைக்

குறிக்கும் இகழ்ச்சிக் குறிப்பு. மாத்துறை முத்தன் பற்றிய கல்வெட்டு ஆதாரங்கள்

கிடைக்காதது நம் துரதிருஷ்டமே. இதைப்பற்றி, புலவரும் சரித்திர ஆய்வாளருமான

குமணனின் கருத்தை அறிய விரும்புகிறேன் ‘ என்று சொல்லி அமர்ந்தார்.

புலவர் குமணன் ‘ மாத்துறை பிற்காலத்தில் மயிலாடுதுறையாக மாறியிருக்கலாம்.

பிறகு அது மாயூரம், மாயவரம் என்று மருவி தற்போது மீண்டும் மயிலாடுதுறையாகிவிட்டது.

மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி என்று வழங்கும் கிராமம் இன்றும் உள்ளது.

நல்லது அற்ற குடி, நல்லா ஆத்திக் குடி என்று கிராமக்கள் கேலி பேசினாலும்.

அதுவே முற்காலத்தில் ‘நல்லாறு அருகே அமைந்த குடி ‘, அல்லது ‘நல்லான் என்பாருக்கு

வழங்கப்பட்ட குடி ‘ என்ற பொருளில் நல்லாற்றங்குடியாக இருந்திருக்கலாம் என்று

தமிழ் அறிஞர் நா.சா. கணேசன் சொல்லியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். டாக்டர்

மகாலிங்கம் அவர்கள் தன் நண்பரைப் பார்க்க மயிலாடுதுறைக்கு

போகப் போவதாய்ச் சொன்னார். அப்படிப் போகும்போது அவருக்குக் கிடைக்கிற

கல்வெட்டுகளில் மாத்துறை முத்தன் பற்றி கல்வெட்டு ஏதேனும் இருந்தால்

தொடர்ந்து ஆய்வுகள் செய்ய உதவும் ‘ என்றார்.

அடுத்து பேசிய முனைவர் மகாலிங்கம், ‘நான் மூன்று வார விடுமுறையில் வெளிநாட்டிலிருந்து

இங்கு வந்திருக்கிறேன். முடிந்த வரை கல்வெட்டுகளையும், சுவடிகளையும் ஸ்கேன் செய்ய

உள்ளேன். என்னுடைய நண்பருக்கு நான் மயிலாடுதுறை வருவது பற்றி எழுதியிருக்கிறேன்.

அங்கு போகும்போது, முத்தன் பற்றி விசாரித்து என்னால் இயன்றதைச்

செய்வேன் ‘ என்று வாக்களித்தார்.

மகாலிங்கம் தனக்கு உதவியாக வந்த சண்முகம் என்ற நண்பருடன் அடுத்த வாரம் மயிலாடுதுறைக்குப்

பயணமானார். அவர் சந்திப்பதாக இருந்த நண்பர் சிவநேசன் அங்கே இல்லை. அவசர வேலையாக

வெளியூர் போகவேண்டி இருப்பதால், நல்லத்துக்குடி கிராம மணியக் காரரை சந்தித்து தகவல் பெற்றுக்

கொள்ளுமாறு ஒரு கடிதத்தை எழுதி வைத்திருந்தார். மணியக்காரர் வீட்டை விசாரித்துக்

கொண்டு போனார் மகாலிங்கம்.

மணியக்காரர் வீட்டில் இல்லை. அவரது வேலையாள் ஒருவர்,

‘மணியக்காரரு அவசரமா சந்தைக்கு உழவு மாடு வாங்கப் போயிட்டாரு. நீங்க வரதா சிவநேசனுக்கு

எழுதியிருந்தீங்களாம். நீங்க வந்தா ஊர்ல உள்ள பெரிச எல்லாம் அழச்சு வந்து அவர்கிட்ட

பேச விடு ‘ன்னாரு. எல்லாம் உங்களுக்கு காத்துக்கிட்டு இருக்காங்க, வாங்க ‘ என்று சொல்லி,

அங்கே நின்ற ஒரு பெரியவரிடம் ‘அய்யா வெளிநாட்டிலேருந்து வாராக. மீட்டிங் பேசப்

போறாங்களாம். மணியக்காரர் சொன்னார். ‘ என்றார்.

‘வாங்கய்யா வாங்க, தகவலு கெடச்சிது மைக் செட்டு கிடக்கில. இன்னிக்கி கல்யாண முகூர்த்தம்

பாருங்க..அள்ளிக்கிட்டு போயிட்டானுக ‘

‘பரவாயில்ல. ஒலிவாங்கி, ஒலிபெருக்கி ஒண்னும் எனக்கு வேணாம். இதெல்லாம் இல்லாமலே நான் உரக்க பேசுவேன் ‘ என்றார் மகாலிங்கம்.

மணியக்காரர் வீட்டு வாசலில் போட்டிருத்த கோடைப்பந்தலில் கிராம மக்கள் குழுமியிருந்த

ஒரு சிறு கூட்டம் இருந்தது.

மகாலிங்கத்துக்கு இந்தக் கூட்டத்தைப் பார்த்ததும் அதிக நம்பிக்கை வரவில்லை. இருந்தாலும்

சமாளித்து, ‘உங்கள் சொந்த வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு இங்கே கடல் போல திரண்டிருக்கும் அன்புள்ள பெரியோர்களே, சான்றோர்களே. நான் இக்கிராமத்துக்கு வந்த காரணம் மாத்துறை முத்தன் பற்றிய தகவல் சேகரிக்கவே ‘ என்று சொல்லி ஓலைகள், கல்வெட்டுகள், அதில் காணும் செய்திகள்,

அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம், அதை மின்வருடியால் பதிவு செய்வதன் பலன் எல்லா

வற்றையும் விளக்கினார். ‘இப்பொழுது இந்த மின்வருடியின் இயக்கத்தை உங்களுக்குக்

காண்பிக்கிறேன் ‘ என்று சொல்லி மின்னிணைப்பு கொடுத்து பையிலிருந்து ஓலைச்சுவடியை

எடுத்து ஒரு ஓலையை பிரதி எடுத்தார். அந்த ஓலையையும் அதன் மின்பிரதியையும் கையில்

எடுத்துக் காட்டினார். ‘இங்கே பாருங்கள். இந்த மூல ஓலையில் எழுத்துகள் மங்கலாய் படிக்க

இயலாமல் உள்ளது. ஆனால் இந்தப் பிரதியில் எழுத்துகள் தெளிவாக உள்ளன. இதை

இன்னும் பெரிய அளவு எழுத்தாகவும் மாற்ற இயலும் ‘

கூட்டம் உணர்ச்சி இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நவீன வசதியின் பயன்

அவர்களுக்குச் சிறிதும் புலப்படவில்லை.

ஒரு ஆள் எழுந்து ‘மிசின் இதைப்படிக்குமா ? ‘ என்று வினவினான். அவன் கையில் ஒரு கசங்கிய

தாள் இருந்தது. மகாலிங்கம் அதை வாங்கி அதன் கசங்கலை ஓரளவு நீக்கி இயந்திரத்தில்

போட்டு பொத்தானை அமுக்க, ஒரு பேப்பர் வெளியே வந்தது. அதில் ‘மணம் குணம் நிறைந்த

மைதீன் புகையிலை ‘ என்ற எழுத்துகள் புலப்பட்டன.

‘பாருய்யா…மெசின் படிச்சிடுத்து ‘

கூட்டத்தில் பெரும் வியப்பு ஏற்பட்டது.

தலைக்கு தலை எழுந்து தங்கள் வசம் இருந்த பாக்கு பொட்டலம், பீடிக்கட்டு மேல்

மீது சுற்றியிருந்த தாள்களை மெசினில் போட்டு சோதிக்க முன்வந்தார்கள்.

அப்பொழுது மின் வெட்டு வர, இயந்திரம் அணைந்தது. மகாலிங்கம் நிம்மதியுடன்

இணைப்புகளைக் கழட்டி மெசினைப் பெட்டியில் வைத்தார்.

‘உங்களுக்கு ஏதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமா, கேளுங்கள் ‘ என்று

சம்பிராயதமாக சொன்னார்.

‘மாட்டு லோன் வாங்க உங்ககிட்ட மனு கொடுக்கலாங்களா ? ‘

‘அய்யா இது சினிமா கூடக் காட்டுங்களா ? வாத்யாரு படம் போட்டுக் காட்டுவீங்களா ? ‘

மகாலிங்கம் இந்தக் கேள்விகளால் நொந்து நூலானார். இருப்பினும் தன் ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல்,

‘ ‘மாத்துறை முத்தன் பற்றி உங்களில் யாருக்கேனும் தகவல் தெரியுமா ‘ என்று வினவினார்.

கூடத்தில் கசமுசவென பேச்சு எழுந்தது.

‘அய்யா முத்தய்யா உடையாருன்னு ஒருத்தர் இருக்காரு,

முத்து படையாச்சின்னும் ஒரு ஆள் இருக்கு.. நீங்க யாரைத் தேடறீங்க ‘

‘நான் சொல்கிற மாத்துறை முத்தன் ஒரு குறுநில மன்னன். பல நூற்றாண்டுகள்முன் இந்தப்

பகுதியில் போரில் உயிர்நீத்தவன். அவனைப்பற்றிய பழய ஓலை ஏதேனும் உங்கள்

வீடுகளில் உள்ளதோ ? இருந்தால் மின்வருடியால் வருடிப் பிரதி எடுத்துவிட்டுத் தருகிறேன் என்றார்.

‘பழய்யா ஓலையா ? மூணுமாசம் மின்னால பறிச்சதுங்க. தென்னம் ஓலை இருக்கு. பந்தல் போட்டா

குளுகுளுன்னு இருக்கும் ‘

‘சே..அவரு தென்னம் ஓலயக் கெக்கில..பனம் ஓலை… ‘

‘அப்ப பனம் நுங்கு விக்கற பாப்பம்மாகிட்டதான் கேட்கணும் ‘

மகாலிங்கம் பரிதாபமாக, ‘கல்வெட்டு ஏதாச்சும் இருக்கா இங்க ? ‘ என்றார்.

அவர்கள் இல்லை யென்று தலையாட்டினார்கள்.

‘சரி. அப்ப நாங்க கெளம்பி கும்பகோணம் போகணும். கெளம்பலாமா சண்முகம் ‘

என்று தன் உதவியாளரிடம் கேட்டார்.

கூட்டம் சலசலப்புடன் கலைந்தது.

அப்பொழுது கலியன் மகாலிங்கத்திடம் வந்து தயங்கி நின்றான். அவனுக்கு பத்து

வயசிருக்கும். அவன் ஏதோ சொல்ல வருவது தெரிந்தது.

‘என்னா தம்பி ஒனக்கு என்ன வேணும் ‘ என்றார் மகாலிங்கம்.

‘கல்வெட்டுன்னீங்களே.. ‘என்றான் கலியன்.

‘ஆமா. கல்லில எழுதியிருக்கும். நீ பாத்திரிக்கியா ‘

‘இருக்கு…நா காட்றேன் வாங்க.. ‘ என்றபடி குளத்தை நோக்கி நகர்ந்தான். மகாலிங்கம் ஆவலுடன்

அவனைப் பின் தொடர்ந்தார். குளத்தில் பாதி முழுகிக் கிடந்த ஒரு தோய்க்கும் பாறைக்கல்லைக்

காட்டினான் கலியன். அதில் மூலையில் ‘ பாபு + பானு = ? ‘ என்று ஆணியால் கீறியிருப்பது புலப்பட்டது.

இந்த சமன்பாட்டின் விடையை அறிந்து கொள்ள அவர் மனம் குறுகுறுத்தாலும் இதை

தீர விசாரித்தறிய அவருக்கு நேரமும் பொறுமையும் இல்லை.

‘இதில்லப்பா. பாறையில உளிவெச்சு எழுத்து செதுக்கிருக்கும் ‘

கலியன் குளத்தங்கரை அரசமரத்தடியில் இரு நாகங்கள் பிணைந்தவாறு செதுக்கப்பட்ட

நாகர் சிலையைக் காட்டினான். ‘இது போலவா ? ‘

‘இல்லப்பா. இதில்லை. இது சிற்பம். கோயில் சுவருல, தரையில கூட சில சமயம்

கல்வெட்டு இருக்கும் பாத்திருக்கல்ல. கல்லில வரி வரியா எழுத்துகள் செதுக்கி இருக்கும் ‘

கலியன் சற்று யோசித்து தலையாட்டினான். ‘கோயிலா ? சரி வாங்க. காசு தருவீங்கதானே ‘

என்று தன் சந்தேகத்தையும் தெரிவித்தான்.

‘ம்..ம்..தரேன் ‘ என்றார் மகாலிங்கம்.

திரும்பவும் மணியக்காரர் வீடருகே இருந்த பிள்ளையார் கோயில் பக்கம் அழைத்துப் போய்,

வேலிப்பக்கமாய் வளர்ந்திருந்த கோரைப்புற்களிடையே ஏதோ தேடினான்.

பிறகு ‘இங்க பாருங்க ‘ என்றான்.

மகாலிங்கம் அந்த கோரைப்புற்களை விலக்கிப் பார்த்தார்.

அவர் விழிகளில் மகிழ்ச்சி பொங்கியது. ‘ அட இதை நான் எதிர்பார்க்கவே இல்ல.

சண்முகம். இங்க வாங்க, வந்து பாருங்க என்னானு ‘ என்றார்.

தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாததது போல தள்ளி நின்று கொண்டிருந்த சண்முகம்,

வந்து எட்டிப் பார்த்தார். திகைப்புடன் ‘கல்வெட்டுங்க ‘ என்றார்.

மகாலிங்கம் ‘இதைக் கல்வெட்டுனு சொல்லறதை விட நடுகல்னு சொல்லணும்.

தெக்குவாசல் திக்குவாயினார் வெண்பா நெனவு இருக்குல்ல..

வடக்கிருந்து செத்த அரசர்க்கும் வாளால்

மடங்கி விழுப்புண் தழும்படை வீரர்க்கும்

தடங்காட்டி நிற்கும் நடுகல்லாம் வீழ்ந்த

விடத்து விளங்கிடும் புள்ளி.

இறந்து போன அரசர்க்கும் வீரர்க்கும் அவங்களைப் புதைத்த இடத்து

மேல வைக்கிற நடுகல். கேள்விப்பட்டிருக்கீங்களா ?

கிட்ட வாங்க….அதுல என்னா எழுதியிருக்குப் பாருங்க ‘ என்றார் மகாலிங்கம்.

வெறித்து பார்த்த சம்முகம், ‘மா..மு..லி..ன்னு மூணு எழுத்து மட்டும் போட்டிருக்கு,

இது பெரிய விசயமா ? ‘ என்றார்.

‘ இதோட முக்கியத்துவம் உங்களுக்குப் புரியல சம்முகம். கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரிம்பாங்க.. மாத்துறை முத்தன் லிகிதம்னு கேள்விப்பட்டிருக்கிங்களா ? அவன் போரிட்டு, மேலும் படை கேட்டு

லிகிதம் எழுதி, பகைவரால கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடம் இதுவாத்தான் இருக்கணும். அந்தக் கால வழக்கப்படி ஒரு நடுகல் வெச்சுருக்காங்க. காலப்போக்குல

இது புதர்ல மறைஞ்சிபோச்சு. இது முக்கியமான கண்டுபிடிப்பு. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

உடனே இதை போட்டோ எடுக்கணும். தம்பீ, இந்தக் கல்லைச்சுத்தி இருக்கிற புல்லை

பிடுங்கிடு. உனக்குப் பணம் தாரேன் ‘.

ஆய்வாளர்கள் பல காலமாய்த் தேடிய விசயம் யதேச்சையாக விடுமுறையில் வந்த தன் கையில் கிடைத்தது அவரைக் குதூகலப்படுத்தியது.

கலியன் சரசரவென உற்சாகத்துடன் புல்லை நீக்கினான். தரையிலிருந்து ஓரடி உயரம் துருத்திக்

கொண்டிருந்த அந்த நடுகல்லை மகாலிங்கம் காமிராவில் பதிவு செய்து கொண்டார்.

‘இந்தப் போட்டோவை தமிழ் வாரப்பத்திரிக்கைக்கு அனுப்பிடலாமா ‘ என்றார் சம்முகம்.

‘வேற வினையே வாண்டாம். தலைக்கு தலை நாந்தான் கண்டிபிடிச்சேன்னு உரிமை கொண்டாடுவாங்க. கழுகார், வம்பானந்தா, ஊர்க்குருவி, பூனையார், புலியார்னு எல்லாரும்

இதுக்கு போட்டி போடுவாங்க. நான் இந்திய சரித்திர ஆய்வு இதழ்ல, ‘ நல்லத்துக்குடி

நடுகல்லும் மாத்துறை முத்தன் உயிர் நீத்த இடமும் ‘னு ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதிடப் போறேன்.

அது பிரசுரமாகிற வரை இதை நாம் வெளிய சொல்லிக்க வேண்டாம் ‘

அவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவ மாடியது.

தான் பங்கு கொள்ள இருக்கும் லண்டன் பிபிசி நேர்காணல் ஒலிபரப்பில் இதைப்பற்றி

சொல்ல மனம் குறுகுறுத்தது.

கலியன் கையில் ஒரு பத்து ரூவாய்த் தாளைத் திணித்தார். கலியன் வாயெல்லாம் பல்லாய்

நன்றி சொன்னான்.

சம்முகமும் மகாலிங்கமும் காரில் ஏறிக் கும்பகோணம் போனார்கள்.

அவர்கள் போய் ஒரு மணி கழித்து மணியக்காரர் சந்தையில் வாங்கிய உழவு மாடுகளுடன்

வந்தார். கலியனை அழைத்து, ‘கலியா..இந்த மாட்டைக் கொளத்துல குளுப்பாட்டி வா.

ஆமா என்னைத்தேடி இங்க யாராச்சும் வந்தாங்களா மெற்றாசிலேருந்து ‘

‘ஆமாய்யா..ரெண்டு பேரு வந்தாங்க. மீட்டிங் பேசி, மிசின் காட்டினாங்க. கல்லை

போட்டொ பிடுச்சிக்கிட்டு போனாங்க ‘

‘ என்னடா சொல்ற….கல்லைப் போட்டொ புடிச்சாங்களா..எந்தக் கல்லைடா ? ‘

‘அத்தொ இருக்கே…அதைத்தான் ‘ என்று காட்டியவாறு கலியன் தெருவின்

எதிர்ப்புறம் போய் அக்கல்லின் அருகே போய் நின்று கொண்டான்.

மணியக்காரர் அருகில் வந்து அந்தக் கல்லைப் பார்வையிட்டார்.

‘முக்கியமான கல்வெட்டுனு பேசிட்டாங்க. அதுல என்ன எழுதி இருக்குங்க ‘

‘மா..மு..லி…ன்னு எழுதியிருக்குடா ‘

‘அப்படின்னா என்னாங்க ‘

‘மாயவரம் முனிசிபல் லிமிட்…மாயவரம் டவுன் இங்க முடியுது..அதுக்கு அப்பால

நல்லத்துக்குடி கிராமம் தொடங்குது. பத்து வருசம் முன்னால மாயவரம் முனிசிபாலிட்டி

வெச்ச எல்லைக் கல்லு..யாரும் இதை நகர்த்தக் கூடாது. இது முனிசிபாலிட்டி சொத்து… ‘.

====

nswaminathan@socal.rr.com

Series Navigation