மாத்தா- ஹரி அத்தியாயம் -45

This entry is part [part not set] of 41 in the series 20080117_Issue

நாகரத்தினம் கிருஷ்ணாஎதிர்பார்ப்பினை வளர்த்துக்கொள்வதும் உறவுகள் மீதான நம்பிக்கையும் இழப்பில்தான் முடிகின்றன, எதையோ தேடி எங்கெங்கோ அலைந்து, கண்விழித்து காத்திருந்தால், காலம் களைத்து வருகிறது, அலுப்புடன் இறக்கிவைக்கிறது, ஆவலுடன் எழுந்துபோய் பார்த்தால், அத்தனையும் தேளும், பூரானும், குளவியுமாய்; பாழும் மிருகம் கொத்தினால் உயிரைக்குடிக்கிற ஒரு பாம்பை வைத்திருக்கலாம், நமக்குத்தான் அதற்கும் கொடுப்பினை இல்லையே; சபிக்கப்பட்டவர்கள், தினம் தினம் வேதனைகளிலும் வலியிலும் துடிக்கவேண்டுமே, விதியாம் விதி. பொய்யும், வேஷமும், குற்றமும் அநீதியும் அலங்காரமாய் தேரில் பவனிவர, வடமிழுக்கும் கூட்டத்திற்கும் பஞ்சமா என்ன? உண்மையும் அன்பும், பரிவும், பாசமும் பாடையேறகூட நாதியின்றி பரிதவிச்சாகணும், பாதங்களைப்போற்றத்தெரிந்த உலகிற்கு, தினம் தினம் மிதிபட்டுச் சாகும் எறும்பைக் பற்றிய கவலைகள் எதற்கு, நம் குற்றமா என்ன? அதற்கென்றுதான் செருப்புகளை கண்டுபிடித்திருக்கிறோமே.

மனதை இலேசாக்கிக்கொள்ள உரையாடல் உதவக்கூடுமென ஹரிணி நினைத்திருக்கவேண்டும், மௌனத்துக்கொண்டு பேசினாள்.

– 10-2-1992 அன்று அதாவது சம்பவம் நடப்பதற்கு முன்பாக உங்களிடத்தில் அம்மா இதுபற்றி போன்ல பேசியிருக்காங்க, இல்லையா? அந்த சமயம் பிலிப் எங்க வீட்டிலேதானிருந்தானா?

– இல்லைண்ணுதான் நினைக்கிறேன்.

– அதற்கான அறிகுறிகள்ணு…

– இல்லை. அன்றைக்குப் பேசினதெல்லாம் உங்க அம்மாதான், போனை எடுத்ததும், கடகடவென்று பேசிக்கொண்டுபோனா. குடித்திருப்பதுபோல பேச்சில் ஏகத்திற்கும் உளறல்கள். தேவா- பவானி திருமணத்துக்கு நானுங்கூட ஒருவகையில் பொறுப்பென்று நினைத்து அவ்வளவையும் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

– க்ரோவுக்கு இந்தத் தகவலெல்லாம் தெரிந்திருக்குமா? வாய்ப்பிருக்கா. என்ன நினைக்கறீங்க?

– திட்டவட்டமா எதையும் சொல்றதுக்கில்லை. தேவசகாயத்திடம், பவானி எனக்குப் போன் பண்ணின விவகாரத்தை சொன்னேன். பிலிப் பர்தோ வீட்டுக்கு வந்ததோ, க்ரோவை பத்தின தகவலை பவானியிடம் சொன்னதோ ஏதாவது தெரியுமாண்ணூ கேட்டேன், தெரியாதென்றான். நான் சொல்லித்தான் என்ன நடந்ததென்று அவர்களுக்குத் தெரியவந்திருக்கணும். சொல்லப்போனா, போலீஸ¤க்குக்கூட பிலிப் வந்துபோனது தெரியாது.

– பவானி அம்மா குடிச்சிருந்தமாதிரி சொல்றீங்க.

– ஆமாம். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையும் அதைத்தான் சொல்லுது. போலீஸ¤ம் தீக்குளிக்கிறபோது ஏற்படுகிற வேதனைகளை மறைக்க அவ குடிச்சிருக்கலாம்னு சொன்னாங்க. அவர்களுக்கு சந்தேகமென்று அழைத்துபோய், தேவசகாயத்தை மட்டும் விசாரிச்சிருக்காங்க. சம்பவ நடந்தநேரத்தில் தேவா, குளோது வீட்டிலே இருந்திருக்கான்

– பார்க்கப்போனா பவானி அம்மா செய்துக்கொண்டது தற்கொலைங்கிற மாதிரிதான், எல்லாமிருக்கு, ஆனாலும் அடிமனசுலே இன்னமும் எனக்குச் சந்தேகமிருக்குது. அதற்குச் சாட்சியங்கள் எங்கிட்டே இல்லைண்ணாலும், மாத்தா ஹரிக்கு நேர்ந்த முடிவு, அதற்கு ஆதரவா இருப்பதுபோல யூகம்.

– என்றைக்குமில்லாமல் திடீரென்று அருந்திய மது, எல்லோருமாகச் சேர்ந்துகொண்டு தன்னை ஏமாற்றிவிட்டார்களென்கிற வேதனை, தனித்துப் போன வாழ்க்கை என்று பலதும் ஒருத்தரை தற்கொலைக்குத் தூண்டியிருக்கலாம், வேறொருத்தருக்கு அவைகளெல்லாம் போதுமான காரணங்கள், அல்லது அதுலே ஒண்ணுகூட போதும், இல்லைண்ணு சொல்லலை, ஆனால் பவானி அம்மா என்கிறபோது யோசிக்கவேண்டியிருக்கிறது. கோழைபோல தன் வாழ்வை தற்கொலையில் முடித்துக்கொள்கிறவங்களா அவங்க. என்னுடைய நிலைமையும் அதுதான், அதற்காக தற்கொலையைத் தேடிப்போகமாட்டேன். பவானி அம்மா தற்கொலை செஞ்சிகிட்டிருப்பாங்களா, நீங்க நம்பறீங்களா? ஷர்மிளா ஆண்ட்டி உங்களிடமுந்தான் கேட்கிறேன். தேவசகாயம் உங்களுக்கு உறவு என்பதையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கிக்கிட்டுப் பதில் சொல்லுங்க.

– எனக்கு இன்னா கண்ணு தெரியும், உங்களைமாதிரில்லாம் எனக்குப் பேசவராது. பத்மாவையே கேள், என்னைவிட பவானியைப் பத்தி அவளுக்குத்தான் நல்லாதெரியும்.

– நான் மட்டும் என்ன சொல்லப்போறேன், வாழ்க்கையிலே நெருக்கடிண்ணு வந்தபோதெல்லாம் மூழ்கிடாமல் பவானி கரையேறி இருக்கிறா, நான் பக்கத்துலே இருந்து பார்த்திருக்கேன் அவள் தற்கொலையை நம்பத்தான் முடியலை. நீயும் உன் பங்குக்கு என்னென்னவோ சொல்லி பயமுறுத்தற., உன்னை சமாதானப்படுத்தக்கூட எனக்குப் போதாது. நீ அநாதை இல்லை. பவானியின் பெண்ணாத்தான் உன்னைப் பார்க்கிறேன், க்ரோவின் பெண்ணாக இல்லை. உண்மையை சொல்லணும்னா க்ரோவை புதுச்சேரியிலே நான் பார்த்திருக்கேன். அவள், தேவசகாயம், அவனுடைய பிரெஞ்சு சிநேகிதங்கண்ணு பலரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோகூட என்கிட்டே இருக்கு. புதுச்சேரியில் இருக்கிறவரை தேவசகாயத்திற்கும், க்ரோவுக்குமிடையில் இப்படியொண்ணு நடந்திருக்குமென்று சத்தியமா தெரியாது.

– பவானி அம்மா, க்ரோவைப் புதுச்சேரியில பார்த்ததுண்டா?

– இல்லை எனக்குத் தெரிஞ்சு சந்திச்சுகிட்டதில்லை.

– திடீர்ணு தெரியவந்த இந்த உண்மை எனக்குள்ள பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்திடாதுண்ணுதான் எனக்கும் தோணுது. கொஞ்ச நாட்களாகவே இப்படியொரு உண்மைக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டுதான் வந்திருக்கேன். அநாதைகள் என்ற சொல்லிக்கொள்கிறபோதே சொந்தங்கள் இல்லைண்ணுதானே அர்த்தம்.. பிலிப் அம்மாவிடம் இந்த உண்மையைத் தெரிவித்தது இருக்கட்டும், அதை அம்மா நம்பியதாகவே இருக்கட்டும், ஆனால் இதை உண்மையென்று ஏற்பதும், பொய்யென்று நிராகரிப்பதற்குமான தகுதியுள்ள இருவரில் க்ரோ முக்கியமானவள், அடுத்து தேவசகாயம், இவர்கள் எதிர்வினை எப்படி. தேவசகாயம், அது உண்மையென உன்னிடத்தில் ஒப்புக்கொண்டிருப்பாரா.

– சம்மந்தப்பட்ட இரண்டுபேர்கிட்டேயும் இதைப்பற்றி நான்பேசலை. பவானியை அடக்கம்பண்ண அன்றைக்கு க்ரோவைப் பார்த்தேன், அதற்குப்பிறகு, போனவருடக் கடைசியில் பார்த்தது. உன்னைப் பார்க்கணும்னு கேட்டா, எனக்கு முகவரி தெரியாதுண்ணேன், ஆனால் பிப்ரவரி மாசத்துலே, பத்தாம் தேதி காலையிலே கல்லறைபக்கம் போனா பவானி மகளைச் சந்திக்கலாமென்று நான்தான் சொன்னேன், எனக்கெப்படி தெரியுமென்று நினைக்கிற அப்படித்தானே. நம்ம ஊர்க்காரரொருத்தர் ஒருமுறை கல்லறையிலே உன்னைப் பார்த்திருக்கார், பவானி கல்லறையையும் பார்த்திருக்கார், அவள் பொண்ணுண்ணு புரிஞ்சுட்டுது. அங்க வேலை செய்யறவங்க வாயைக்கிளறி மற்றதகவல்களையும் வாங்கிருக்கிறார்; அத்தனையையும், ஷர்மிளாகிட்ட சொல்லியிருக்கிறார். தேவசகாயத்தைப் பார்க்கவென்று ஸ்ட்ராஸ்பூர் வந்திருந்தப்ப அவள் எங்கிட்டே சொன்னாள். ஆக க்ரோ உன்னை தேடிவர நான்தான் காரணம். ஆனா ஜெயிலிலிருக்கும் தேவாவுக்கு க்ரோவை பத்தின பேச்சே இல்லை. பவானி பத்தின நினைப்புதான், பவானியை என்னவோ அவந்தான் கொண்ணுட்டதுபோல புலம்பிக்கொண்டிருக்கிறான். என்ன செய்யறது பவானி இறந்ததுக்கப்புறம் அதிகமாகவே போதைமருந்துக்குக் அடிமையாகிட்டான். ஆரம்பத்துல ஒரு வருஷம் இரண்டு வருஷமென்று உள்ளே இருப்பான். கடைசியா ஏதோ பள்ளிக்கூடத்துல அதுவும் மைனர் பிள்ளைகளுக்கு வித்திருக்கான், போலீஸ் பிடிச்சிட்டாங்க; இதோன்னாலும் ஏழுவருஷம் ஆகப்போகுது. இனிமேலாவது ஒழுங்கா இருக்கணும். நீ மனசுவச்சா அவனைத் திருத்தலாம், உன்னுடைய ஏக்கமுமிருக்கு, வெளியிலே சொல்லமாட்டேங்கிறான். நீ அவசியம் போய்ப் பார்க்கணும்.

– ஆண்ட்டி, நீங்க க்ரோண்ணு சொல்லும்போதெல்லாம் உங்க விலாவுல ஷர்மிளா ஆண்ட்டி,இடிக்கிறாங்களே என்ன விஷயம். க்ரோ எனக்கு அம்மாண்ணு தெரியவந்ததால தப்பா எதுவும் சொல்லிடாதேண்ணு எச்சரிக்கிறாங்களா. அவளெல்லாம் எனக்கு அம்மாவா ஆக முடியாது. அவளும் வெளிப்படையா அதை ஏற்றுக்கொள்வாளென்று நினைக்கலை. பிரான்சுலே என்னைப்போல ஆயிரக்கணக்கில பிள்ளைகள் இருக்காங்க. அதனால பெற்ற வயிற்றுக்குத்தான் குழந்தை சொந்தங்கிற வாதத்திலே எனக்கு உடன்பாடில்லை, அப்படீண்ணா எதிர்காலத்திலே சோதனைகுழாய்களைத்தான் அம்மாண்ணு கூப்பிட வேண்டியிருக்கும்.. இனிமே க்ரோவை பார்க்கிறதில்லைண்ணு தீர்மானிச்சுட்டேன். புதுச்சேரியிலே கும்பலா எடுத்துகிட்ட போட்டோ இருக்குண்ணு சொன்னீங்களே.

– நீ அவசியம் பார்க்கணும், அரவிந்தன் இங்கே வந்திருந்தப்போ அதிலிருந்த ஒரு ஆளை ஸ்ட்ராஸ்பூர்ல பார்த்தேண்ணு சொன்னான். நீ அந்தப்போட்டோவை அவசியம் பார்க்கணும். ஷர்மிளா, உள்ளே என்னுடைய அறையிலே மேசைமேலேயே வச்சிருக்கேன், கொஞ்சம் எடுத்துவாயேன்.

ஷர்மிளா, பத்மாவின் கட்டளையை நிறைவேற்ற புறப்பட்டுச் சென்றாள். வரவேற்பறை, அலங்காரமேசைமீது நடை பழகிக்கொண்டிருந்த பூனை சட்டென்று எஜமானி அம்மாவின் பாய்ந்தது. மடியில் வாங்கிக்கொண்ட பத்மா, அதனுடைய முன்கால்களிரண்டையும் தூக்கிப்பிடித்து, மிருதுவான அதன் முகத்தை, தன்முகத்தோடு ஒத்தியெடுத்தாள், ஒன்றிரண்டு ரோமங்கள் உதட்டு ஈரத்தில் ஒட்டிக்கொள்ள, தலையைச் சிலுப்பினாள். அழைப்பு மணி ஒலித்தது, கதவைத் திறந்தாள். இளைஞன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான், கையில் இரண்டு பெட்டிகள். .

– வா டேவிட்.. உள்ளே வா.

– அக்கா நீங்க சொன்னமாதிரி அரவிந்தன் அறையை காலிபண்ணிட்டு, எல்லாத்தையும் எடுத்துவந்துட்டோம். காருலே இரண்டு பெட்டி இருக்கு, எங்க வைக்கணும்னு சொன்னீங்கண்ணா வச்சிடுவோம்.

– இங்கேயே கொண்டு வந்து வச்சிடு, பிறகு பார்த்துக்கறோம்.

ஷர்மிளா நிழற்படத்துடன் திரும்பி வந்தததைப் பார்த்ததும், பத்மா கையிலிருந்த பூனையை தரையில் விட்டாள், ஓடி மறைந்தது. ஷர்மிளாவிடமிருந்து படத்தை வாங்கி ஹரிணியிடம் கொடுத்தாள்.

– அரவிந்தன் சொன்னது உண்மை, இந்த ஆளை ஸ்ட்ராஸ்பூர்ல பார்த்திருக்கேன், மங்கோலியர் முகம், ஷர்மிளா ஆண்ட்டிசொன்ன அருணாசலம் இந்த ஆளாகத்தான் இருக்கணும், அடுத்து அப்பா, அவர்பக்கத்திலே நிக்கறது யாருண்ணு தெரியலை.

– அவன்தான் குளோது அத்ரியன். பல் துலக்கவே மாட்டானாம். தேவசகாயம் சொல்லிசொல்லி சிரிப்பான். தேவா, அருணாசலம், குளோது அத்ரியன் மூன்றுபேரையும் அப்பல்லாம் புதுச்சேரியிலே ஓண்ணாப் பார்க்கலாம். தேவாவைக் குட்டிச் சுவராக்கினது இவனுங்க ரெண்டுபேருந்தான்.

– குளோதைக்கூட பார்க்கணுமென்று நினைச்சேன், அடுத்து நாகரத்தினம் கிருஷ்ணாவை பார்க்கணும்.

– அது யாரு?

– அம்மாவுக்குத் தெரிஞ்சவர், கதையெல்லாங்கூட எழுதுவார்போல.

– அப்படி யாரையும் தெரிஞ்சமாதிரி பவானி எங்கிட்டே சொன்னதில்லே, நம்ம ஊர்தானா?

– பக்கத்துலே ஏதோ கிராமமாம். ஆனா புதுச்சேரியிலேதான்சிருந்திருக்கார். அம்மாவுக்கு சொந்தங்கூட. அப்பாவுக்கு வலப்புறம் க்ரோவுக்குப் பக்கத்திலே நிற்கிற ஆள் யாருண்ணு தெரியுதா?

– அவன் பேரு ஞாபகமில்லே, ஒன்றிரண்டுமுறை பார்த்திருக்கேன். ஒருவேளை கடைசியா அம்மாவை வந்து பார்த்ததாகச் சொல்லப்படுகிற, பிலிப் பர்தோ இந்த ஆள்தானோ?

– ஆமாம் ஆண்ட்டி. சரியாச் சொன்னீங்க. இப்போ இந்த ஆள் கொல்மார்ல இருக்கிறான். அருணாசலத்துக்கும் இந்த ஆளுக்கும் கொஞ்சம் நெருக்கம் அதிகமாகவே இருக்கு. என்னண்ணு விசாரிக்கணும்.

– அக்கா.. நீங்க சொன்னமாதிரி நான்கு பெட்டிகளையும் கொண்டுவந்துட்டோம். நாங்க புறப்படறோம் – இளைஞன்

– இருப்பா, உங்க பிரண்டுகளை உள்ளே கூப்பிடு, ஏதாவது குடிச்சிட்டுப் போகலாம்.

– இல்லைக்கா நாங்க கிளம்பறோம்.

ஹரிணியின் கைத் தொலைபேசி ஒலித்தது.

– உய்..

– என் குரல் அடையாளம் தெரியுதாப் பாரு. செகெண்ட் லை·ப்ல, பிரியோலே என்ற பேருலே வந்தேன். மாத்தா ஹரி வலை தளைத்திலே சந்திச்சிருக்கோம்.

– அடடா நீங்களா மிசியே, உங்கக்கிட்டேயிருந்து போன் வருமென்றுதான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். நான் இப்போ பாரீஸில் இருக்கேன்.

– உன்னை பார்க்கணுமே

– நாளைக்குக் காலையிலே புறப்படறேன். பத்துமணிக்கெல்லாம் உங்க ஆபீஸ்ல இருப்பேன். அட்ரஸ எஸ்.எம்.எஸ்ல அனுப்பி வையுங்க.

– பத்மா ஆண்ட்டி, நாளைக்கு நான் புறப்படணும்.

– நாளைக்கேவா?

– ஆமாம் ஆண்ட்டி, இப்பவே எனக்கு நம்பிக்கை இல்லை. வேலையிலே எதுவென்றாலும், பிரச்சினைகள் வரலாம், இருக்கிற லீவையெல்லாம் எடுத்துட்டேன். தவிர நாளைக்கு நான் அவசியம் ஸ்ட்ராஸ்பூர்ல இருக்கணும், ஒருவகையிலே அம்மா அம்மா சம்பந்தப்பட்டதுண்ணு வச்சிக்குங்களேன், காவல்துறை அதிகாரி ஒருத்தர்தான் என்னை பார்க்கணும்னு சொன்னார்.

– அப்படீண்ணா நானும் உன் கூட வந்துடறேனே

– என்ன ஷர்மிளா திடீர்னு நீயும் புறப்படறேன் சொல்ற, உன்கிட்டே பேசவேண்டியதெல்லாம் நிறைய இருக்கு.

– அதற்கென்ன நாளைக்குள்ள நிறைய பேசலாம், ஹரிணிகிட்ட ஏன் மறைக்கணும்?

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா