மாத்தா-ஹரி – அத்தியாயம் 21

This entry is part [part not set] of 33 in the series 20070802_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


-தேவா உங்களை முத்தமிடலாமா?

கடல் அலைகளில் கால் நனைத்து மகிழ்ச்சியில் துள்ளும் சிறுவர்களிடம் கவனம் வைத்திருந்த தேவா, தனது சிறிய கண்களை முடிந்த மட்டும் அகல விரித்து, திகைத்தபடி சில நொடிகள் பதிலின்றி இருந்தான்.

– என்ன அப்படிப் பார்க்கறீங்க? நான் தப்பா கேட்கலையே. முத்தமிடலாமாண்ணுதானே கேட்டேன். எதற்காக உங்க முகம் இத்தனைகோணலாப் போகணும்.

– என்ன செய்யறது. இது கடற்கரை. நம்மைச் சுற்றிலும் மனிதர்கள். திடீரென்று முத்தமிடலாமாண்ணு, அதுவும் பவானி கேட்டதால அதிர்ச்சி.

– தேவா! – கலகலவென்று சிரிக்கிறாள். இடைவிடாமல் சிரிக்கிறாள். முதலில் தேவா அதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டான். ஆனால் அவள் தொடர்ந்து சிரிக்கிறாள். பக்கத்தில் அமர்ந்தவர்கள் இவர்களைப் பார்க்கிறார்கள்.

– பவானி கொஞ்சம் அமைதியா இருங்க.. என்ன ஆச்சு உங்களுக்கு. சுற்றி இருக்கிறவர்கள் நம்மையே பார்க்கிறாங்க பாருங்க.

– என்னுடைய சந்தோஷத்திலே குறுக்கிட அவர்கள் யார். கடந்த சில நாட்களாக எனக்கிருந்த துக்கமும், வேதனைகளும் ஒருவருக்கும் இடையூறாக இல்லையே, அப்படியிருக்க எனது மகிழ்ச்சி அவர்களைச் சங்கடபடுத்துமா என்ன? திரும்பத் திரும்பக் கரையில் மோதிய அலைகளால் கடற்கரைமணலுக்கு நேர்ந்தகதிதான் என் மனதுக்கும் நேர்ந்திருக்கிறது, கரைவதும், கரைக்குத் திரும்புவதுமாகச் சங்கடங்கள். ஈரப்படத் தெரிந்த நான் எப்போது வேண்டுமானாலும் உலர்ந்து போகலாம் என்கிற பயம். இப்படியொரு தருணம் மறுபடியும் எனக்கு வாய்க்குமா, என்ற அய்யத்தின்பேரில் எழுந்த தேவை.

– உங்களை எ·காலான கோட்டையென்று, பத்மா சொல்வாள். இத்தனைச் சுலபமாக இளகிவிடுவீர்கள் என்று நினைக்கவில்லை.

– எல்லா உலோகங்களும் உருகக்கூடியவைதான், என்ன..அததற்கும் வெப்பநிலை இருக்கிறது. பாட்டியின் இழப்பு ஏற்படுத்திய வெப்பம் எனக்குக் காரணமென்று நினைக்கிறேன். ‘சமுதாயம்,’ ‘கட்டுப்பாடு’, ‘ஒழுக்கம்’ போன்ற சொற்களில் எனக்கென்று சில புரிதல்கள் இருக்கின்றன. அவற்றைப் பிறருக்கு விளக்கியாகவேண்டுமென்ற அவசியமுமில்லை. அன்றிரவு உணர்ச்சி என்னை ஜெயித்துவிட்டது. எனது மனமாற்றத்திற்கு, நமக்குள் ஏற்பட்ட உடலுறவோ அல்லது இந்திய சினிமாக்களில் வருவதுபோல ஒரே உறவில் நான் கர்ப்பமுற்றுவிடுவேன் என்கிற அச்சமோ காரணமில்லை. நீங்கள் போன பிறகு பலமுறை யோசித்தேன். எனக்கொரு ஆண்துணை இயற்கை நியதிப்படி தேவை, அதற்கு தேவா இப்போதைய சூழ்நிலையில் சரியாய்ப் பொருந்துவார் என்று மனம் சொன்னது அவ்வளவுதான்.

– பவானி உங்களைப்பற்றிய நிறைய அபிப்ராயங்கள் வைத்திருந்தேன்?

– மன்னிக்கணும். உங்கள் எதிர்பார்ப்புக்கும் – நீங்களாக கற்பனைசெய்துள்ள பவானி என்கிற பிம்பத்திற்கும் முடிச்சு போடுகிறீர்கள். நான் சற்றுமுன்னர் குறிப்பிட்ட சமூதாயம், கட்டுப்பாடு, ஒழுக்கம் போன்ற சொற்களின் மீது எனக்குள்ள மரியாதையைப் பொறுத்து, என்னை அளவீடு செய்வது இருக்கட்டும், எந்தப் பெண்ணையும் ஏன் எந்த ஆணையுங்கூட அப்படி எடைபோடாதீர்கள். முதலில் நமக்கு நாமே நேர்மையாக நடந்துகொள்வோம், உண்மையாக இருப்போம். பிறகு அந்த உண்மையையும், நேர்மையையும் நம்மிருவருக்கும் பொதுவில் வைப்போம். பிறர் என்ற மூன்றாம் மனிதரின் தேவையை மனதிற்கொண்டு, நமது ஒழுக்கம் மற்றும் நேர்மைக்கான வெளிகளை உருவாக்குதல் வேண்டாமே. மரத்துக்கு வேர்போலத் தனிமனிதர் ஒழுக்கமும் நேர்மையும். அவை சரியாக இருந்தால் தோப்போ அல்லது காடோ செழிப்பாகவே இருக்கும். ஆண்பெண் பந்தம் என்பது தோழமைப் பண்பாடோடு இருக்கட்டும். கணவன்- மனைவி என்ற சொற்கள் அடிப்படையில் வேண்டாம். ‘பவானிக்கு’ மனைவி வேடத்தினைக் கொடுத்து அபத்தமான கதை காட்சி அமைப்பு என்றிருந்தாலும் பரவாயில்லை, ரசிகர்மன்ற சமூதாயத்தின் கைத்தட்டலுக்காக நடித்து வெள்ளிவிழா கொண்டாடினாற் போதுமென்கிற கணவனாக நீங்கள் இருக்கமாட்டீர்கள் இல்லையா?

– பத்மா சொன்னது சரிதான், பேண்ட் ஷர்ட்டும் போட்டுக்கொண்டு, ஆண்களை ஒரு வழி பண்ணிடறோம்ண்ணு பெண்ணியம் பேசற கூட்டத்துலே நீங்களும் ஒருவரா?

– உங்களுக்குப் பெண்கள் பேண்ட்ஷர்ட் போடறது பிரச்சினையா? ஆண்களை ஒரு வழி பண்ணிடறோம்ணு சொல்கிற பெண்கள் பிரச்சினையா?

– பவானி உங்களுக்குத்தான் தெரியுமே, பேண்ட் ஷர்ட் போடற பெண்களை நான் தப்பா நினக்கிறதில்லை.

– அதுதானே பார்த்தேன். அப்போ ஆண்களை ஒரு வழி பண்ணிடறோம்னு சொல்கிற பெண்களை உங்களுக்கு ஆகாது. சந்தோஷம். நான் கூட அதுபோன்ற பெண்களை விரும்புவதில்லை. ஆனால், பெண்களை ஒரு வழி பண்ணிடறோமென்கிற ஆண்களையும் நாங்கள் விரும்புவதில்லை. நீங்கள் எப்படி?

– இந்த நேரத்தில் இப்படியொரு விவாதம் தேவையா பவானி. இயற்கைகூட ஆணைத்தான் பலம் பொருந்தியவனாப் படைச்சிருக்கு. பெண் என்பவள் ஆண்சார்ந்து இயங்கினாத்தான் அழகு.

– உடற் பலந்தான் முக்கியமென்றால் உலக நாடுகள் ஒவ்வொன்றையும், குத்து சண்டை, குங்பூ, கராத்தே இப்படி ஏதோவொன்றை அறிந்த வீரர்கள் மட்டுமே ஆளவேண்டும், அப்படியா நடக்கிறது? ஆக ஆளுமைக்கு உடற்பலம் அவசியமல்ல, மூளைதான் முக்கியம் என்றாகிறது. அதில் ஆணென்ன? பெண்ணென்ன?

– மூளையின் எடை, பெண்ணைக்காட்டிலும் ஆணுக்கு அதிகம் தெரியுமா?

– தேவா..நீங்கள் சொல்வது, ஏதோவொரு தமிழ்த் திரைப்படத்திற் கேட்டதுபோல இருக்கிறது. ஆணுக்கு மூளையின் எடை அதிகமாகவே இருக்கட்டுமே, அதனாலென்ன? பெண்ணைக்காட்டிலும் ஆணுக்கு அறிவு அதிகம் என்கிறீர்களா? இன்றைய மனிதனைவிட நியாண்டர்தால் மனிதனுக்கு மூளையின் எடை அதிகம், அதனால நம்மைவிட நியாண்டர்தால் மனிதர்களுக்கு அறிவு அதிகமென்று சொல்ல முடியுமா என்ன? இன்றைய தேதியில் உலகமுழுக்க எந்தத் தேர்வாக இருந்தாலும் அதிக எண்ணிக்கையில் மாத்திரமல்ல அதிக மதிப்பெண்களோடு வெற்றி பெறுவது பெண்கள்தான். மூளையின் எடைக்கும் அறிவுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை, என்பது அறிவியல் தரும் உண்மை. ஆணோ பெண்ணோ இருவரும் சமம் என்கிற மனப்பாங்கினை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதாவது நீங்கள் துணைவனென்றால், நான் துணவியாக இருக்கத் தயார். நீங்கள் தலைவன் என்று நினைத்தீர்களெனில் நான் தலைவி, அவ்வளவுதான்.

– நல்லது அப்படியே இருப்போம்.. அதற்கு முன்னாலே அம்மணியை இனி ‘வா போ’ ண்ணு ஒருமையில் அழைக்கலாமா?

– அய்யாவை நானும் ‘வா போ’ வென்று ஒருமையில் அழைக்கமுடியுமென்றால் எனக்குப் பூரண சம்மதம்.

– அடேங்கப்பா! நீங்கள் கொஞ்சம் சீரியஸான பெண்ணியல்வாதிண்ணு சொல்லுங்க..

– வேண்டாம் தேவா.. நிறையபேசிட்டோம். விடியுமெனக் கரைகிறபோதெல்லாம் இருள் பிரியாமலேயே இருக்கிறது. கூவுவது பெட்டைக்கோழியாயிற்றே? இன்றைக்கு இவ்வளவுபோதும். நம்ம வாழ்க்கைபூரா ஏராளமாப் பேசலாம். அப்படியான சந்தர்ப்பங்கள் நிறைய வரும். வேண்டுமானா இனி அல்வா.. மல்லிகைப்பூ.. ஈவினிங் ஷோ அப்படீண்ணு பேசுங்களேன், எனக்கும் கேட்க ஆசையாயிருக்கு- உண்மையில் காதல் வயப்பட்ட பெண்ணுக்குறிய வேட்கை அந்தக் கடைசி வாக்கியத்தில் இருந்தது.

– ஒரு கவிதை சொல்லட்டுமா? -தேவா.

– ம்..

– நேரம் கடந்து கொண்டுதானிருக்கிறது
தன்னிச்சைப்படி
சேர்ந்திருந்த காலங்களின்
நினைவினை வாரி இறைத்தபடி

எதனாலும் தடுக்க இயலவில்லை
எப்படியோ நிகழ்ந்துவிட்ட
கடைசிக் காட்சியின் வெம்மையை

அள்ளி அள்ளி எடுத்து தீர்த்தாலும்
குறையவேயில்லை
நினைவின் நீட்சி
அள்ளக் குறையாது நீ அளித்த
உன் அன்பைப்போல்

– யார் எழுதினது? நல்லா இருக்கே..

– உங்களினந்தான், கவிஞர் மதுமிதா கவிதையோட தலைப்பென்ன தெரியுமா ‘உன்னுடனான பொழுது’. இப்பல்லாம் பெண்கள் நல்லாவே எழுதறாங்க. கவிதையைக் ஒழுங்கா காதிலே வாங்கினீங்களா, ஏதாச்சும் ஞாபகத்தில இருக்கா?..

புரிந்ததும், சட்டென்று முகம் சிவந்தாள். உப்பங்காற்றில் உலர்ந்த உதடுகளை நாவினால் ஒருமுறை தடவிக்கொடுக்கிறாள். முடியட்டுமென காத்திருந்ததுபோல, கீழ் உதடு சற்றேமடங்க மேல்வரிசையின் முன்பற்கள் இயல்பாய் இறங்கிக் கவ்விக்கொள்கின்றன. கொத்தாக முடிக்கற்றையொன்று முன் நெற்றியில் விழுந்து காற்றில் ஒவ்வொன்றாய் இழைபிரிகிறது, தோளூடாக முன்புறம் தொங்க விட்டிருந்த சடை நுணியில், கைவளைகள் சிணுங்க ரப்பர் வளையத்தை அவிழ்ப்பதும், விரல்களால் இலகுவாக வாங்கி மீண்டும் இறுக்குவதுமாக இருந்தவள், சட்டென்று புடவைத் தலைப்பை கையில் பிடித்தபடி, அவன் தலைதிருப்பக் காத்திருந்தவள்போல முகம் உயர்த்தவும், தேவசகாயம் தன்னை மறந்தான், அவளுடைய கரங்களை எடுத்து தன் விரல்களுக்குள் சிறைபிடித்து மனம் சிலிர்த்துக் கேட்டான்.

– அப்போ எனது கனவு நிறைவேறப்போகுது?

அவள் வாய்திறந்து பதில் பேசவில்லை. ‘ஆம்’ என்பதன் அடையாளமாக தலை மெல்லச் சிணுங்கியது, விழிமடல்கள் சேர்ந்தாற்போல படபடத்தன. அதை அவன் ரசித்துக்கொண்டிருக்க, எதிர்பாராதநேரத்தில், குனிந்து அவன் கன்னத்தில் முத்தமிட்டு நிமிர்ந்தாள். உரிமையுடன் அவளது இடையில் அவனது கை ஊர்ந்தது, அதன் தேடலில் சிலிர்த்து, கண்மூடினாள். பின்னர் சராசரிப் பெண்ணாக வெட்கமுற்று விலகினாள்.

(தொடரும்)


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா