மாத்தா-ஹரி – அத்தியாயம் 11

This entry is part [part not set] of 31 in the series 20070524_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


.உங்களுக்கு பேய் பிசாசுகளைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறதா?

நான் புதுச்சேரிக்கு அருகில் தமிழ்நாட்டு எல்லையைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்தவன். எங்கள் பக்கத்தில் எமன் உரியகாலத்தில் எடுத்துபோகிற உயிர்களைத் தவிர்த்து, மற்ற உயிர்களை மும்முரமாக விவசாயம் நடக்கிற மாதங்களில் பூச்சிக்கொல்லியும், எல்லா நாட்களிலும் அரளி விதையும், எப்போதாவது வீட்டு உத்திரம் அல்லது புளிய மரத்தின் துணையுடன் நான்கு முழகயிறோ, அதற்கும் பஞ்சமென்றால் பாழுங்கிணறோ, அற்ப ஆயுசிலே முடிச்சுடும். பிறகு பேய்களாகவோ, பிசாசுகளாகவோ அவரவர் வசதிக்கேற்ப பனைமரத்திலோ, வேப்பமரத்திலோ, அல்லது அப்படியான மரங்களுக்கு நெருக்கடிகள் நேருகிறபோது அரசமரத்திலோ, ஆலமரத்திலோ, அமர்ந்தபடி உச்சி வெயில், நடு நிசியென பிரத்தியேகமாக தங்களுக்கு நேரத்தை ஒதுக்கிக்கொண்டு காத்திருப்பார்களெனக் கேள்விப்பட்டிருக்கிறேன். குறிப்பாக அகாலமரணம் அடைந்த இளம் பெண்களுக்கு, வாலிபப் பையன்களென்றால் கொள்ளைப் பிரியமாம். ‘சலக் சலக்’கென கொலுசு சத்தத்துடன், தன்னைத் தேடிவந்து ‘பீடி இருக்கிறதா?’ எனக்கேட்ட மோகினிப் பிசாசுபற்றி, வெங்கிட்டு என்பவர் கூறிய கதை நினைவில் இருக்கிறது. திருமணம் ஆன பெண்களிடமும் பிசாசுகளுக்கு மோகம் இருக்கவேண்டும். எங்கள் தெரு ஆசாமி ஒருவர் இரவானால் குடித்துவிட்டு வந்து, தனது மனைவியைத் துவைத்து எடுப்பார், அதை அவர் வண்ணான் துறையில் மட்டும் செய்திருந்தால் பிரச்சினைகளில்லை. கிராமத்தில் பலரும் தடுத்துப் பார்த்தார்கள். தொடர்ந்து நடந்தது. பெண்கள் உச்சுக்கொட்டிவிட்டு அவள் ‘தலை எழுத்தை யார் மாற்றமுடியும்’,. என்றார்கள். இதை எங்கள் சித்தேரிக்கரை வேப்பமரப் பிசாசு கேட்டிருந்திருக்கிறது. அதற்குக் கிராமத்துப் பெண்களின் தலை எழுத்து தீர்ப்பில் உடன்பாடு இல்லை என நினைக்கிறேன். மறுநாள் இரவு, குடிகார ஆசாமி கோவணத்தோடு வீதியில் ஓட, அவருக்குப் பின்னால் ஓடியது யாரென்று நினைக்கிறீர்கள், சாட்சாத் அவரது மனைவிதான். வேப்பமரத்திலிருந்த செங்கமலம் என்ற பெண்பேய் அவளைப் பிடித்திருந்ததாக சொன்னார்கள். வயதான மனிதர்களைப் பேய்களுக்குப் பிடிக்காது போலிருக்கிறது, சீக்கிரமே போய்ச் சேரப்போகிறார்கள் என்பது காரணமாக இருக்கலாம். பேய்களை விலங்குகள்போல நாம நடத்தினாலும், எனக்கு அவைகளிடம் ஒரு வித மரியாதை இருந்தது. பேய்களில் முதலியார், படையாட்சி மாதிரியான சாதிப்பாகுபாடோ, மத துவேஷமோ இல்லை. இது தவிர ஆறறிவு மனிதர்களான நாமே, சாதிச் சண்டை மதத்சண்டையென முடிந்தவர்கள் ஆயுதங்களையும், முடியாதவர்கள் எழுதியும் தங்கள் அரிப்பினை தீர்த்துக்கொள்கிறபோது, பேய்ப் பிசாகளிடத்திலும் அது உண்டென்றால் வேறு வினையே வேண்டாம். தவிர பேய், பிசாசு, முனி, சில நேரங்களில் காட்டேரி என்றெல்லாம் காதில் விழுகிற சொற்களுக்குண்டான பேதங்களும் எனக்குப் பிடிபடுவதில்லை. இதை வகைபடுத்தி யாராவது எழுதி இருக்கிறார்களாவென்று தெரிந்துகொள்ள ஆசை. ஒருநாள் மனைவியிடம் வேடிக்கையாகச் சொல்லிவிட்டேன். அவள் எனக்குந்தான் அதை தெரிந்துகொள்ள ஆசை என்றாள். நடு நிசியில் விழித்துக்கொண்டு எழுத உட்கார்ந்தால், வீட்டில் எப்படி எடுத்துக்கொள்வார்களென்று உங்களுக்குத் தெரியும்.

இரண்டு மாதங்களுக்கு முன்பென்று நினைக்கிறேன். எதற்கும் ஒரு கால வரையறையை வைத்துக்கொண்டு சொல்வதில் சுவாரஸ்யம் இருக்குமென்பதால் இந்த இரண்டுமாதம். வழக்கம்போலத் தீடீரென்று விழிப்பு வந்து எழுந்துகொண்டேன். கட்டில் அருகே முப்பது முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய பெண் நிற்கிறாள். எனதருகில் போர்வைக்குவியலுக்கு மேலே கையைவைத்து, கட்டிலில் படுத்திருப்பவள் என் மனைவியென உறுதிபடுத்திக்கொண்டதும், மறுபடியும் கட்டில் அருகே நின்றிருக்கிற பெண்ணைப் பார்க்கிறேன், உடலில் நடுக்கம், தொடர்ந்து சிவ்வென்று குளிர் பரவி ஓய்ந்தது. கண்களைக் கசக்கிக்கொண்டேன். அவள் இன்னமும் அசையாமல் நிற்கிறாள், சட்டென்று மாத்தா ஹரியின் ஞாபகம். ‘அற்ப ஆயுசுல போன கழுதை.. ஆயுசு முடியவரைக்கும் சுத்துவா’, என எங்க கிராமத்துல தனபாக்கியம் கிழவி சொன்னதும் ஞாபகத்தில் சேர்ந்துகொள்ள நாக்கு உலர்ந்தது. சமீபத்தில்தான் அவளைப் பற்றிய புத்தகமொன்றை படிக்க நேர்ந்தது. ஆனால் இந்த மாத்தாஹரிக்கு நானா கிடைச்சேன்.. ச்சே. ஒருவேளை பிரமையோ. இருளுக்கிடையில், பிரகாசமாய் வெள்ளை வெளேரென்ற நிர்வாண உடல். முழு நிலவில் எழுதப்பட்ட முகத்தில், உறைந்த விழிகள், இறுகிய உதடுகள், அந்தரங்கத்தை மறைக்கும் எண்ணத்துடன் முன்புறம் இறக்கிய கருங்கூந்தல், கழுத்துக்கீழே, கூந்தல் இழைகளுக்கிடையே முகம்பதித்துச் சிணுங்கும் மார்பு காம்புகள், படுத்திருந்த கட்டில் என்னைவிட்டு நழுவி மேலே மேலே செல்கிறது, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாதவளாக, ஆழ்ந்த தூக்கத்தில் மனைவி., அவளைக் கூப்பிடலாமென்று வாயைத் திறக்க, நின்றிருந்த பெண்மணியின் நீண்டகை, அரவம்போல என்னைச் சுற்றிக்கொள்கிறது, சட்டென்று வாரி எடுத்து இறுக்குகிறது. இரு உடல்களின் திசுக்களுக்கிடையில் தகவல் பரிமாற்றங்கள், சில உயிர்க்கின்றன, சில மரணிக்கின்றன, அட்டவனைபடுத்திக்கொண்டு, காரியம் ஆற்றுவதுபோல, ஒன்றன் பின் ஒன்றாக ஏதேதோ நடக்கிறது. இறுதியில் அவளது அதரங்கள் இரண்டும்,எனது அதரங்களைக் கவ்வ… அவளிடத்திலிருந்து விடுவித்துக்கொண்டு, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கணினியை நோக்கி நடக்கிறேன். எனது முதுகுப் பரப்பில் அவளுடைய உஷ்ண மூச்சு. திரும்பிப்பார்க்கிறேன் வியப்பு, எப்போதும்போல எனது மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறாள். நின்றிருந்த பெண்மணியைக் காணவில்லை. மெல்ல நடந்து, கணினி எதிரே போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து, மேசை விளக்கைத்தட்டினேன், சூழ்ந்திருந்த இருள் சட்டென விலகிக்கொண்டது. கணினியை உயிர்ப்பித்து, வழக்கம்போல முரசு அஞ்சலைத் திறந்து, விரல்கள் தமிழில் உள்ளீடு செய்ய ஆரம்பித்தன. மெல்ல நடந்துவந்து என் பின்னே யாரோ நிற்பதுபோல இருக்கிறது. எனது மனைவியா அல்லது மீண்டும் …

– கிருஷ்ணா..

மனது ‘திக்’ என்கிறது, அதைக் காட்டிக்கொள்ளாமல், ‘யார்?’- என்கிறேன்

– வேறு யார்? நான்தான் வந்திருக்கிறேன்.

– எழுதிக்கொண்டிருக்கிறேன்.

– பொய் சொல்கிறாய் கிருஷ்ணா, நீ எழுதவில்லை. விசைப்பலகையில் தட்டிக்கொண்டிருக்கிறாய்.

– இரண்டும் ஒன்றுதான்.

தட்டிக்கொண்டிருந்ததைப் பாதியில் நிறுத்திவிட்டு, கோபமாய்த் திரும்பினேன். மீண்டும் அவள். நான் திரும்பிய வேகத்தைப் பார்த்ததும் கலகலவென்று சிரிக்கிறாள்.

– நீ.. நீங்க மாத்தாஹரிதானே?

– என்ன கிருஷ்ணா? உனக்கு என்ன ஆச்சு? இதற்குள்ள என்னை மறந்தாச்சா? நான் மாத்தா ஹரி இல்லை. பவானி. அவளது கைவிரல்கள் எனது தலைமயிரை உழுகின்றன, பின்னர் கன்னத்தைத் தொட்டுவிட்டு மெல்ல விலகுகின்றன. எனது நரம்புகள் சுண்டப்பட்டதில் அதிர்ந்துகொண்டிருக்கிறேன்.

– என்ன உங்களுக்கு இப்படி வியர்க்கிறது? என்று கேட்டவளின் கவனம், கணினியில் நான் இதுவரை உள்ளீடு செய்தவற்றில் படிகிறது. அதை நிதானமாக வாசித்து முடித்தாள்.

ஒரு சில நொடிகள் அமைதியில் கழிந்தன.

– இதென்ன பேய் பிசாசென்று எழுதியிருக்கிறீகள், எங்கள் இரண்டுபேரில் யார் பேய் யார் பிசாசு?

உங்கள் இரண்டுபேரில் ஒருத்தி பேய், மற்றொருத்தி பிசாசு என்று சொல்ல நினைத்தேன். தயக்கமாக இருந்தது.

– உன்னை அப்படிச் சொல்ல எனக்கு மனம் வருமா? நீ என்னுள் சுவடா? பிம்பமா? என்ற கேள்விகள் உண்டு. ஆனால் இன்றைக்கு மாத்தா ஹரியைப் பத்திச் சொல்லணும் என்று நினைத்து அத்தியாயத்தைத் தொடங்கினேன்.

– கிருஷ்ணா, என்னோட உதவி இல்லாமல் உன்னால இக் கதையைச் சொல்ல முடியாது.

– மாத்தா ஹரியைப்பத்தி எழுத, போதுமான அளவிற்குப் புத்தகங்கள் இருக்கின்றன.

– புத்தகங்கள் மாத்தா ஹரியைபத்திப் பேசலாம், ஆனா மாத்தா ஹரி பேசுவதுபோல ஆகுமா?

– என்ன சொல்ற?

– மாதா ஹரியை கொஞ்சம் பேசவிடேன்

– குழப்பாம தெளிவா சொல்லு,

– அதை நான் பார்த்துக்கிறேன். இப்போது என்ன மணி, இரவு பன்னிரண்டு. பேய்கள் உலவும் நேரம், போய்ப்படு. என்றவள் நக்கலாகச் சிரிக்கிறாள்.

தயங்கியபடி படுக்கைக்குதிரும்பிய நான், கணினியின் திசைக்காய்ப் பார்க்கிறேன். பவானி புன்னகைக்கிறாள். என்ன? என்மீது நம்பிக்கை இல்லையா என்பது அதற்கான பொருளா? படுத்தபோதும் உறக்கமின்றி புரண்டுகொண்டிருந்தேன். விசைப்பலகையில் விரல்கள் எழுப்பும் ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது, அதனோடு என் இதயத் துடிப்பும் இரத்த ஓட்டமும், ஒத்திசைப்பதுபோல பிரமை…

1893 ம் ஆண்டு, லா ஹே(1). நகரம்., ஹாலந்து…

இரவு நேரம், ஆசிரியர் பயிற்சிப்பள்ளியின் விடுதி, எங்கள் அறை ‘ப’ வடிவ கட்டிடத்தின் மத்தியில் இருந்தது. சன்னலுக்கு வெளியே நிலவொளியில் நனைந்தபடி வலமும் இடமுமாக நூல் பிடித்ததுபோலக் காரை பூசாத செங்கற் கட்டிடங்கள். தூண்களுக்கிடையில் சலவைக் கற்களிட்ட கூடங்களில், முடிந்த இடங்களில் நிலவொளி படித்திருந்தது. எனது வாழ்க்கைப் பயணத்தில் சற்றே இளைப்பாற உதவிய சுமைதாங்கி. கட்டிடத்தின் முன்பகுதியில் செடிகள், கொடிகள், வளர்ந்த மரங்கள். தப்பாய் ஒரு செடியை, ஒழுங்கு தவறிய ஒரு தாவரத்தை, எல்லை கடந்த கிளைகளைப் பார்க்கமுடியாது. விடுதியின் தகுதியை ஒரு வகையில் வெளி உலகத்திற்கு அறிவிக்கும் ஊடகம். அடுத்து ஒழுங்கு செய்யபட்ட பாதைகள். அதில் பரப்பபட்டிருந்த சரளைகற்களிலிருந்து சில்வண்டுகள் எழுப்பும் சத்தம்.

எதிரே மரிவான் ஷ¥ன்பெக், அவள் கண்கள் கலங்கியிருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் ஆகி இருக்கலாம். நாளையிலிருந்து இந்த விடுதிக்கும் எனக்குமான உறவு துண்டிக்கபட இருந்த நிலையில், இருவருக்குமே உறக்கமில்லை. ஓராண்டுக்கு முன்பு ஆசிரியைப் பயிற்சி பள்ளியில் சேருவதற்கென்று வந்தபோது, விடுதி நிர்வாகி, எனது அறைத்தோழியாக, கொடுத்திருந்த பட்டியலில் யாரை தேர்வு செய்திருக்கிறாய் எனக்கேட்டதும், அப்படியான தேர்வுக்கு உடன்பாடில்லை என்று சொன்னதும், வேறொரு பெண் உன்னைத் தேர்வு செய்திருந்தால், அவளுடன் தங்க உடன்படுவாயா என அவர் மீண்டும் கேட்டதும் நினைவுக்கு வந்தன. அன்றையதினம் அப்படி என்னோடு தங்குவதற்கு விருப்பம் தெரிவித்தவள் மரிவான் என தெரிந்துகொண்டபோது முதலில் தயங்கி, பின்னர் சம்மதித்ததும் நினைவுக்கு வந்தது. அடுத்து வந்த நாட்களில் விடுதியிலும் சரி, பயிற்சி பள்ளியிலும் சரி, சேர்ந்தே இருந்தோம். ஒவ்வொரு விடுமுறையின் போதும் ஆம்ஸ்டெர்டாமில் இருந்த அவளது வீட்டிற் சென்று தங்கியதும், அங்கு நடந்த உபசரிப்பும் என் நினைவுக்கு வந்தது. அவளைப் பிரிந்து செல்லும் வேதனையை முதன் முதலால உணர்கிறேன். அவள் கண்களை நேராய்ப் பார்க்க எனக்குப் பலமில்லை. மரிவான் தேம்புகிறாள். எதையோ சொல்ல முற்பட்டு, சொற்கள் அவள் தொண்டைக் குழியிலிருந்து காற்றுக் குமிழ்களாக மேல் நோக்கி நகர்வதும், திறந்தவாய் அதனை ஓசைப்படுத்த வழியின்றி, கண்களைக் கெஞ்ச, பொலபொலவென்று கண்ணீர்.

– அழாதே மரி, எனக்கு இனியும் இங்கே தங்கிப் படிக்க விருப்பமில்லை., என்கிறேன்.

– பள்ளி நிர்வாகிக்காகவா? அந்தக் கிழத்தை இன்னும் சிறிதுகாலம் சமாளிக்க முடியாதா? உனக்கு சொல்லிகொடுக்கவேண்டுமா என்ன? – மரிவான்

– முடியாது மரி. நிலைமை ஆக மோசம். விடுதியைவிட்டு நான் எங்கேயும் போகக்கூடாது என்றக் கட்டுப்பாட்டினை எனக்கு விதித்திருக்கிறான் என்பது உனக்குத் தெரியும். ஏதாவதொரு காரணத்தினை வைத்துக்கொண்டு அடிக்கடி அவனது அலுவக அறைக்கு கூப்பிட்டனுப்புகிறான் என்றும் சொல்லியிருக்கிறேன். இப்போது அது அதிகரித்து விட்டது பல்லை இளித்துக்கொண்டு கண்ணே மூக்கே எனக் கிழம் பேசும் வசனங்களைக் கேட்டு அலுத்துபோச்சு, அது கூட பரவாயில்லை. கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. எதற்காக தலையை குனிந்துகொள்கிறாய். நான் சொல்வதை நம்ப மறுக்கிறாய். அப்படித்தானே?

– அநேக சமயங்களில் எதையும் மிகைப் படுத்திச் சொல்கிறாயோ என்ற சந்தேகம் எனக்குண்டு, மார்கெரீத்.

– நீ கூடவா என்னை சந்தேகப்படுகிறாய். உன்னிடமிருந்து எதை மறைத்திருக்கிறேன். பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பம் மேட்டுக்குடியென்பதும், கோட்டைபோன்ற வீடும், அப்பா தொப்பிக் கடை நடத்தியதும், நோயாளி அம்மாவும், அவள் முடங்கிக் கிடந்த அறையும், முகம்பட்டுத் தேய்ந்த சன்னற்கம்பிகளும், எல்லாம் உண்மை. அடுத்தடுத்துச் சோதனைகள், பதினைந்து வயதில் அம்மாவின் இழப்பு. வரவுக்குமேல் செலவு என்று வாழ்ந்த அப்பா, அதை ஏற்கும் பக்குவம் அவருக்கும் இல்லை, எனக்கும் இல்லை. வாழ்க்கையில் ஜெயிக்கணும் மரி. அதற்கு என்ன விலை என்றாலும் கொடுக்கத் தயார். மாளிகையிலிருந்து தெருவுக்கு வந்தேன் மீண்டும் மாளிகைக்குத் திரும்பவேண்டும். அதற்கான முதலீடு என்ன என்பதையும் அறிந்திருக்கிறேன்.

– என்ன உனது அழகா? சொல்லிவிட்டு என்னைச் சிறிது நேரம் நேராக அவதானிக்கிறாள்.

– ம். உண்மைதான் மார்கரீத், எத்தனை அழகாக இருக்கிறாய், இப்போது கூடப்பாரேன், உயிர்ப்புள்ள கருஞ்சிவப்பு உதடுகளும், எடுப்பான மூக்கும், மொழுமொழுவென்ற கன்னமும், சுருள்கம்பியொத்த அடத்தியான மைவண்ணத் தலைமயிரை பாந்தமாக வாரிச் சுருட்டி, தலைப்பட்டை ஒன்றில் அடக்கியிருந்தும், அவைக் கட்டுக்கடங்காமல் முன்நெற்றியிலும், காதோரங்களிலும், பின்புறக் கழுத்திலும் விழுந்து கிடப்பதைப்பார்க்க, தேவதையைப் பார்ப்பதுபோல இருக்கிறது, அதை நினைக்க அச்சமாகவும் இருக்கிறது. மறுபடியும் உன்னைச் சந்திப்பேனா?

– நிச்சயமாக, அடிக்கடி கடிதம் எழுதுகிறேன். நீயும் தவறாமல் எழுது. உன்னை மறுபடியும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது.- என அவளுடைய கைகளிரண்டையும் எனது கைகளில் வாங்கிக்கொண்டு சொல்கிறேன். அவ்வுறுதிமொழி அர்த்தமற்றதெனவும், அவள் அச்சம் நியாயமானதென்றும் வெகு காலத்திற்குப்பிறகு பாரீஸ் நகரத்தில் ஓர் அதிகாலை நேரத்தில் உணர்ந்தேன்…

– கிருஷ்ணா நான் என்ன சொன்னேன் நீ என்ன செய்கிறாய்?

– பவானி நீ இன்னுமா இங்கே இருக்கிறாய், போகவில்லை?-

– இது நான் கேட்கவேண்டிய கேள்வி. அகால நேரத்தில் இப்படி எழுந்து உட்கார்ந்துகொண்டு…,

– வேண்டுமானால் இன்னொருமுறை படித்துப் பார்க்கறாயா? நீ நினைக்கிறமாதிரிதான் மாத்தா -ஹரியைப் பத்தி சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்.

– வேண்டாம்! நீ எழுந்திரு, உன்னை படுக்கச்சொன்னதாய் ஞாபகம். அவளைப்பத்திச் சொல்ல நானாச்சு.

வலுக்கட்டாயமாக எழுப்பப்பட்டேன். இம்முறை அவளை நிமிர்ந்து பார்க்க பயம், பவானியின் குரல் போல ஒலித்தாலும், அவளல்ல. ஒருவேளை மாத்தா-ஹரிதானோ? எழுந்த கேள்வி, நெஞ்சிலேயே நின்றது. ‘அற்ப ஆயுசுல போன கழுதை.. ஆயுசு முடியவரைக்கும் சுத்துவா’, காதோரம் தனபாக்கியம் கிழவி. திரும்பிப்பார்க்காமல் வேகமாக நடந்ததில் எதிர்பாராமல் கட்டில் காலில் இடித்துக்கொண்டு, ஐயோ… உறக்கமின்றி புரள்கிறேன் விசைப்பலகையில் விரல்கள் எழுப்பும் ஓசை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது…

(தொடரும்)
————————————————————–

1. la Haye


nakrish2003@yahoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா