மாட்டுவால்

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

ராஜா வாயிஸ், மும்பை


எங்க ஊர்ல சூசையாரை தெரியாதவங்களே இருக்க முடியாது.மாட்டு
வால்னுபட்டப்பெயரும் அவருக்குஉண்டு. மாட்டு வால் பேரு எதுக்கு வந்திச்சுனு
யாருக்கும் தெரியது. ஆனா சூசையாரை விட மாட்டு வால்னு சொன்னா
சின்னப்பையனுக்கு கூட டக்குனு அடையாளம் தெரிஞ்சிடும்

சூசையார் அப்பா ஞானப்பிள்ளை அந்த காலத்தில கொழும்பில
இருந்தவரு. அங்க கருவாடு வியாபாரம் செய்த எங்க ஊர்க்காரங்கள்ல அவர் ஒரு
பெரும் புள்ளி. சுதந்திரத்தற்கு முன்னாலே அவர் கல்யாணத்துக்கு தான் எங்க ஊர்ல
முதல்முதலா புதுமாப்பிள்ளையும் பொண்ணையும் கொலுக்கார்ல வைச்சு பட்டணப்பிரவேசம் வந்ததா பெரிசுங்க கடற்கரையில பேசுறத கேட்டிருக்கேள்.

கடைசி காலத்தில அவருக்கு கொழும்பு காத்து பிடிக்கல. இரண்டாவது
பெண்டாட்டியை அங்கேயே விட்டுட்டு ( அந்த அம்மா சிங்களத்துக்காரி) முதல்
மனைவி மற்றும் ஒரு மகனோட ஞானப்பிள்ளை சொந்த ஊருக்கு வந்திட்டாரு.

வந்த புதுசுல மாட்டு வண்டில தான் எங்கேயும் போவாராம்.கையில
இருந்த காசையெல்லாம் கொழும்புனு நெனச்சிக்கிட்டு தண்ணி மாதிரி
செலவழிச்சிருக்காரு. குந்தி இருந்து சாப்பிட்டா கடலும் கரையும் மாதிரி
ஞானப்பிள்ளை சொத்து எல்லாம் கரைஞ்சி போச்சு. கடைசில மனுஷன்கிட்ட ஒரு
பைசாவும் மிஞ்சல்ல.
சொகமில்லாம விழுந்தப்ப ஆஸ்பத்திரிக்கு கூட பணம் இல்லாமல்
கடைசியில நாகர்கோவில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில வைச்சு பாடு பாத்தாங்க.
பத்து நாள்ல முடியாம பொணமா ஊருக்கு கொண்டு வந்தாங்க. அடக்க செலவுக்கு
பைசா இல்லாம மகன் சூசையார் தான் அங்க இங்கணு கடன் வாங்கி அடக்கம்
பண்ணினார்..
கடைசில சாவறதுக்கு முன்ன ஞானபிள்ளை தன் மொவன்கிட்ட நான் செத்தா பிஷப்பை வைச்சு தான் அடக்கம் எடுக்கம்ணு சொன்னாராம்.
அப்பா கடைசி ஆசையை நிறைவேத்த சூசையார் கூடபத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.
ஞானப்பிள்ளை ஊரில் பெரிய மனுஷன் தான். என்றாலும் அவர் பையன் சூசையார் நாலெழுத்து ஒழுங்கா படிக்கல. முதல்ல அப்பா செல்வாக்குல்ல மஞ்சள் சட்டைபோட்டுக்கிட்டு அலைஞ்சாரு. அப்பா செல்வாக்கு சரிய சரிய சூசையாரும் சரிய ஆரம்பித்தார்.
அப்பா போனபிறகு தான் மகனுக்கு பிழைக்கிறதுக்கு வேலைக்கு போகணும்னு தோணிச்சு. ஞானப்பிள்ளை தன் செல்வாக்கை பயன்படுத்தி பையனுக்கு பக்கத்து ஊரில் பணக்கார குடும்பத்தில் பொண் எடுத்தார். அந்தம்மாவும் வெள்ளையும் சுள்ளையுமா மகாராணி மாதிரி இருப்பாங்க.
தான் வசதியான குடும்பத்திலிருந்து வந்தாலும் கணவன் கஷ்டப்பட்டதை நினைத்து எப்பவும் அவங்க அலுத்துக்கொள்ளவே இல்லை. கடைசில நிலைமை படுமோசமகி சூசையாரு கடலுக்கு போக ஆரம்பித்தார்.
உடல் கஷ்டப்பட்டு பழக்கமே இல்லை என்பதால் கடல் தொழிலிலும் அவரால் ஜொலிக்கவே முடியவில்லை. பொரமாலை,அணியத்தில இல்லாம மரத்தின் நடுவில் நிற்கச்சொல்லித்தான் சூசையாரை தொழிலுக்கு கூட்டிப்போனாங்க.. நடுமரத்தில வலிமை இல்லாதவங்களைத்தான் விடுவாங்க. பங்கும் குறைய கிடைக்கும். ஆனா கடலுக்குல்ல தூஷணம் நிறையக்கிடைக்கும். உம்ம அப்பன் கொழும்புல என்ன பாவம் பண்ணினாரோ நீரு இங்க இப்படி அனுபவிக்கிறீர் என குத்தல் பேச்சு வேறு..
கொழும்புல அப்படி இப்படினு இருந்திட்டு இப்ப கேவலப்பட வேண்டி இருக்கேணு சூசையார் கவலைப்படஆரம்பித்தார். கவலையை மறக்க சாராயம் குடிக்க ஆரம்பித்தார். சாராயம் சூசையார் தனது பழைய வாழ்க்கையை எண்ணி பெருமைப்பட உதவியது.
ஆனால் ஒரு விசயத்தில் சூசையார் தெளிவாக இருந்தார்.அது தன் ஒரே மகன் ஞானத்தை எப்படியும் நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பது தான். அவர் அடிக்கடி இதை தன் மகனிடம் சொல்லுவார். ஏல உனக்கு எங்க அப்பா பேரை வைச்சிருக்கேன். நீ அவரு பேர காப்பாத்தணும், இந்த ஊர்ல நீ கலெக்டரா வரணும்லனு சாராயத்த குடிச்சிட்டு வந்துட்டு தினமும் பிரசங்கம் வைத்துக்கொண்டிருப்பார்.
ஞானமும் கடைசில ப்ளஸ் டூ படிச்சு முடிச்சான். இப்பல்லாம் எங்க ஊர்ல எல்லா குழந்தைகளுமே கல்லூரிக்கு போக ஆரம்பிச்சிடுச்சு. ஞானத்த அவங்க அப்பாவுக்கு பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் காலேஜ்ல சேர்த்து விடணும்னு ஆசை, பையன் ப்ளஸ்டூவில் மார்க் பரவாயில்லாம வாங்கிருந்தான்.
காலேஜ்ல இடம் கொடுக்க மாட்டோம்ணு சொல்லிட்டாங்க. கடைசில யார் யாரையோ பிடிச்சு தஞ்சாவூர் பக்கமுள்ள ஒரு காலேஜ்ல பிஎஸ்சி சீட் கிடைச்சது. காலேஜ் பீஸ் கட்ட பணம் இல்லாம 20 வருஷம் போகாத மாமனார் வீட்டுக்கு போய் சூசையார் மச்சினன்மார்கிட்ட இருந்து கூனிக்குறுகி பணம் வாங்கிட்டு வந்தார்.
பெட்டிபடுக்கையோட பையனைக்கொண்டு காலேஜ் ஹாஸ்டல்ல விட பஸ்ல சூசையார் போனார். வண்டி போக போக அப்பா மகன்கிட்ட ஏலே நீ எப்படியும் தாத்தா பேரக்காப்பாத்த நல்லாபடிக்கணும்லனு சொல்லிக்கிட்டே போனாரு.
மகனை காலேஜ்ல விட்டுக்கு ஊருக்கு திரும்பினவர் பெரிய சாதனையே செய்தவர் போல் வானத்தில பறந்தார். ஒரு வாரம் கழித்து சின்ன வலை போறதுக்கு வெளுத்த நேரத்தில கெளம்ப சூசையார் வீட்ட விட்டு வெளியே வந்தா தூரத்தில இருந்து யாரோ பெட்டியோட வர்றமாதிரி தெரியுது.
நம்ம வீட்டை நோக்கித்தானே ஆள் வருது நின்னு பார்ப்போமேணு சூசையார் நின்னா அது அவர் மகன் ஞானம். எலே ஞானம் என்னாச்சுனு கேட்டா,
யப்பா நீங்க கடலுக்கு போய்ட்டு வாங்க, வந்து பேசிக்கலாம்னு சொன்னான். கடல்ல சூசையாருக்கு ஒன்றுமே தோணவில்லை. இன்னைக்கு கடல் ரொம்ப இரைஞ்ச மாதிரி அவருக்கு இருந்தது.
வழக்கத்தை விட அதிகமாகவே அணியத்தில நின்ன பிரகாசத்திடமிருந்து கண்டம் கிடைச்சது. மரம் கரைய வந்தப்ப கறி மீன் கூட எடுக்காம வீட்டை நோக்கி ஒடி வந்தார் சூசையார்.ஏலே என்னாச்சுனு மகன்கிட்டா
கேட்டா அவன் சொன்னான். யப்யா அங்க எதுவுமே பிடிக்கல, அதான் வந்துட்டேங்கிறான்.
அட வாரினி மொவனே காரியத்த கெடுத்தியணு சொன்ன சூசையாருக்கு இனி என்ன செய்யனு புரியவே இல்லை. கடைசில ஞானமே அதுக்கு பதில் சொன்னான். கப்பலுக்கு போப்போறேம்பான்னான். ஏல நீ கலெக்டராவேனு நான் கனவு கண்டேனு அப்பா சொல்ல கப்பல்ல கேப்டன் ஆகலாம்ணு மகன் சொன்னான்.
இனி கப்பல்காரனை நான் எங்க பிடிப்பேணு சொல்லி கீழத்தெருவில கப்பல்ல வேலை செய்ற செபஸ்தியான் மொவன் கிளைட்டனை பாக்க அப்பனும் மொவனும் போனாங்க. அங்க செபஸ்தியான் மொவன் சொன்னதை கேட்டா கப்பல் வேலை குதிரைக்கொம்புமாதிரி இருந்தது.
கடைசியில கப்பலுக்கு போக சிடிசி வேணும், பாம்பே போகணும் அப்படிஇப்படிணு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. திரும்பவும் மச்சினன்மார் வீட்ல போய் நின்னாரு சூசையாரு. அங்க மூத்த மச்சினன் தாட்டுபூட்டுனு குதிச்சிட்டான். அப்பன் சரியா இருந்தா தானே மகன் உருப்படுவான். என் அக்காள உமக்கு தந்தது ஒரு கல்லை கழுத்தில கட்டிகடல்ல தாத்திருக்கலாம்னு ஏசிட்டு ஒரு லட்சம் ரூபாய் தந்தான்.
ஞானம் கடைசியில பம்பாய் வந்தான். இங்க வந்தப்பிறகு தான் தெரிஞ்சது கப்பல் வேலை தேடி இங்க ஒரு ஊரே இருக்குதுனு. போதாக்குறைக்கு
இப்பஎல்லா சாதிக்கார பயலுவலும் கப்பலுக்கு ட்ரை பண்ணுறானுகளாம்.
ஆனா ஞானத்திற்கு இதில அதிஷ்டம் இருந்துச்சுணுதான் சொல்லணும். அவனவன் இரண்டு மூணு வருஷமாக இருந்து வேலைக்கு ட்ரை பண்ணச்சில ஞானத்துக்கு எடுத்த எடுப்பில ஃபாரின் கப்பல்ல 1200 டாலர் சம்பளத்ல வேலை கிடைச்சது.
இப்ப சூசையார கைல பிடிக்க முடியல. மகன் கப்பல் கேப்டன் ஆயிருவானு சாராயத்த போட்டுட்டு கடற்கரையில கதைஉட ஆரம்பிச்சாரு. இப்ப சூசையாரு வீட்ல போன் எடுத்தாச்சு. ஞானம் ஒருநாள் அமெரிக்காவில இருந்து போன் பண்ணினான். ஞானம் இப்ப அமெரிக்காவில இருக்கானு மெனக்கெட்டு மச்சினன் வீட்டுக்கு போய் சொல்லிட்டு வந்தாரு.
ஒரு 40 நாள் கழிச்சி ஞானம் போன் பண்ணினான். யய்யா கப்பல் கொழும்பு வந்திருக்கு. நீங்களும் தாத்தாவும் எங்க இருந்தியேனு கேட்டான். அது எதுக்குல உனக்குன்னு சொன்ன சூசையார் கொச்சி கடையில அந்தோணியார் கோவில் பக்கம்ணு சுருக்கமா சொன்னார்.
இப்பல்லாம் சூசையார் கடலுக்கு போறதுல்ல. மகன் முதல் மாசம் சம்பளம் வந்தாச்சு. இனி எதுக்கு கஷ்டப்படணும்.
அன்னைக்கு ஊர்ல பயங்கர கடலடி யாரும் கடலுக்கு போகல. சூசையார் கடற்கரையில் உட்கார்ந்திருந்தார். அப்ப அங்க வந்த பிரகாசம் என்ன சூசையாரு, குத்துவலை வைக்கப்போறோம் வாறேராணு கேட்டான். நான்தான் இனி கடலுக்குதான் வர மாட்டேமுனு சொல்லிட்டேனேனு சூசையார் பதில் சொன்னார்.
அந்த நேரத்தில போஸ்ட்மேன் அருளப்பன் வந்தார். யோய் மாட்டு வாலு உமக்கு ஒரு கடிதம் வந்திருக்குனு சொன்னான். எனக்கு யாரு கடிதம் போடுவாங்க.என் மகன் தான் இப்ப போன்லயே பேசுவானேணு சொன்ன சூசையார் கடிதத்தை வாங்கி பிரித்தார்.

கடிதம் கொழும்பிலிருப்து வந்திருந்தது.

அன்புள்ள அப்பாவிற்கு,
நான் கொச்சி கடைக்கு போனேன். அங்கே பாட்டியை பார்த்தேன். சிங்களமா இருந்தாலும் தமிழ் நன்றாக பேசுகிறார்களே?. பாட்டியை இங்கு கவனிக்க யாரும் இல்லை. தனியாகத் தான் இருக்கிறார்கள். எனவே அவர்களை கவனிக்க நான் கப்பலிருந்து இறங்கி விட்டேன். என்னை இனி தேட வேண்டாம்.தாத்தா பேரு என்பதால் அவர்களுக்கு என்னிடம் கொள்ளை பிரியம்
சூசையார் கட்டுமரத்தை விட்டு எழுந்தார். ஏ பிரகாசம் குத்து வலை வைக்க நானும் வாறேன்ப்பா. பிரகாசம் சூசையாரை ஏற இறங்க பார்த்தான். சூசையார் கடலை பார்த்தார்.

பின்குறிப்பு:
1.கொலுக்காரு- ஜோடிக்கட்ட கார்
2.பட்டண பிரவேசம்- புதுமணத்தம்பதியரை ஊர்வலம் அழைத்து வருவது
3.பொரமாலை- கட்டுமரத்தின் பின்பகுதி
4.அணியம்- கட்டுமரத்தின் முன்பகுதி
5.பங்கு- கடலிலிருந்து கிடைக்கும் வருமானம்
6. சின்னவலை- அதிகாலை போகும் கடலுக்கு போகும் ஒரு வகை வலை
7.வெளுத்த நேரம்- அதிகாலை
8.கறிமீன்- வீட்டு சாப்பாட்டுக்கு கொண்டு செல்லும் மீன்
9.கடலடி- கடல் கொந்தளிப்பு
10. குத்துவலை- கடலின் ஆழத்தில் செல்லாமல் கரையில் மீன்பிடிக்கும் ஒரு வகை வலை

rajavaiz@gmail.com

Series Navigation