சங்க இலக்கியத்தில் மேலாண்மை – முனைவர் ஆ. மணவழகன் நூல் மதிப்புரை

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

பேராசிரியர் க. ஜெயந்தி


நூல் – சங்க இலக்கியத்தில் மேலாண்மை
ஆசிரியர் – முனைவர் ஆ. மணவழகன்
வெளியீடு – காவ்யா பதிப்பகம், சென்னை. டிசம்பர் 2007 , பக் 181: விலை 90/-

தமிழையும் தமிழரையும் இழிவுபடுத்தும் வகையான கருத்துகள் தமிழரிடையேயும் பரவலாகக் காணப்படும் இன்றைய சூழலில், தமிழ் மொழியின் வளத்தையும்; தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்வை அறிய உதவும் ஆவணங்களாகத் திகழ்வதையும்; தமிழ் இலக்கிய வகைகள் காலமாற்றத்திற்கேற்ப வளர்ந்துவரும் நிலையையும் சான்றுகளோடு வெளிப்படுத்துகிறது ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்நூல். சமகாலச் சிக்கலைக் கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் பதினொரு கட்டுரைகளின் பொருண்மைகளைத் தேர்வு செய்து நூலினை வெளியிட்டுள்ள ஆசிரியரின் முயற்சி முதற்கண் பாராட்டத்தக்கது.

காலத்தின் அடிப்படையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல், தொழில்சார் மேலாண்மை(3), இருபதாம் நூற்றாண்டுப் படைப்புகள் குறித்த ஆய்வுகள்(5), அறிவியல் தமிழ் ஆய்வுகள்(1), இணைய தமிழ்(2) என்று நாளது வரையான தமிழ் இலக்கிய வளர்ச்சிப் படிநிலைகள், தமிழ் ஆய்வின் வளர்ச்சி ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் தலைப்புகள் இடம்பெற்றுள்ளன.

முதல் மூன்று கட்டுரைகள் சங்க இலக்கியங்கள், திருக்குறள், இரட்டைக் காப்பியங்கள் ஆகிய பழந்தமிழ் நூல்களைக் களங்களாகக் கொண்டமைந்துள்ளன. இக்கால கட்டுமானத் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவற்றில் பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பங்களுக்குப் பழந்தமிழர்தம் தொழில்நுட்பங்களே அடிப்படையாக இருக்கின்றன என்பதை இக்கட்டுரைகள் தக்க சான்றுகளோடு உலகிற்கு உணர்த்துகின்றன.

அவ்வகையில் அமைந்துள்ள ‘பழந்தமிழர் கட்டுமான நுட்பங்களும் பயன்பாட்டுப்பொருள்களும்’ என்ற முதல் கட்டுரை, பழந்தமிழர் கட்டுமானத் தொழில்நுட்பம் தொடர்பாகக் கொண்டிருந்த தௌ¤ந்த அறிவை வெளிப்படுத்துகிறது. குடியிருப்பில் பல்வகை நுட்பங்கள், பருவநிலைக்கு ஏற்ற தளங்கள், மாடங்கள், நகர்ப்புறக் கட்டமைப்பு, பெருநகரங்களின் கட்டமைப்பு, சுகாதார வசதிகளின் கட்டமைப்பு, பொது இருப்பிடங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள், பாதுகாப்பு அரண்கள், இஞ்சி, செம்புப் புரிசை, எந்திரம் பொருந்திய அரண்கள், கலங்கரை விளக்கம் ஆகியன பற்றிய பதிவுகள் வழி அக்காலத்தில் காணப்பட்ட சிறந்த கட்டுமானத் தொழில்நுட்பம்; அரைமண், பூச்சு மண் மற்றும் சுண்ணம், இட்டிகை (செங்கல்), ஓடுகள் மற்றும் உலோகத் தகடுகள், கருங்கல், பளிங்குக் கற்கள் ஆகிய கட்டுமானப் பொருட்கள் பயன்பாட்டில் இருந்தமை ஆகிய செய்திகள் இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.

மக்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவுத் தேவையை நிறைவு செய்துவரும் உழவர் நலனில் அரசு கவனம் செலுத்தத் தவறியதால், அவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தளப்படுவது இக்கால வரலாறு. இதற்கு நேர்மாறாக, வேளாண் குடியைக் காத்தல் என்பதைப் பழந்தமிழர் தம் தலையாய கடமையாகக் கொண்டிருந்தனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இரண்டாவது கட்டுரையில் ஆய்வாளர் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும், பழந்தமிழர் இயற்கை வளங்களைக் காத்தல், அவற்றை மேம்படுத்துதல், விளைநிலங்களை விரிவாக்கம் செய்தல், பயிரிடுதலில் பல நுட்பங்களைக் கையாள்தல், (மானாவாரி, ஊடுபயிர், பல்விதைப் பயன்பாடு, எரு இடுதல், களை பறித்தல், பயிர்ப்பாதுகாப்பு); தொழில்சார் தொழில்நுட்பம் (பல விதைக்கருவிகள், எந்திரங்களின் பயன்பாடு) என்று பழந்தமிழர் உணவுத் தேவையில் தன்னிறைவு காணுதற்பொருட்டுத் வேளாண் தொழில்சார் மேலாண்மையைக் கையாண்டுள்ளனர் என்பதை இக்கட்டுரையில் தகுந்த சான்றுகள் வழி எடுத்துக்காட்டியதுடன், இன்றைய நிலையோடு ஒப்பிட்டு, உழவர் நல மேம்பாடு காலத்தின் தேவையாக இருப்பதையும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

மக்கள் நல மேம்பாடு குறித்த சிந்தனைகள் குறைந்து, தன்னலம் மேலோங்கி வரும் இன்றைய சூழலில், நீர் நிலைகளைப் பாதுகாத்தல் குறித்த சிந்தனை மறைந்து வருவதற்கு நமது நாட்டில் காணப்படும் மாசுற்ற / பராமரிக்கப்படாத நீர்நிலைகள் சான்றுகளாக உள்ளன. இவ்வாறன்றி, இயற்கைச் சீற்றங்களிலிருந்தும், எதிரிகள் மற்றும் விலங்குகளிடமிருந்தும் பழந்தமிழர் நீர்நிலைகளைப் பாதுகாத்துள்ளனர் என்பதை ‘சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை’ கட்டுரையில் ‘காப்புடை கயம்’ என்ற புறநானூற்றுச் சான்று வழி வெளிப்படுத்தியுள்ளார். இவைதவிர, பழந்தமிழர் நீர்நிலைகளின் தேவையை உணர்ந்திருந்தமை; நீர்த்தடுப்பு/நீர்ச்சேமிப்பு, பாசனத்திற்கான நீர்நிலைகள் (நீத்தேக்கம், புதவு மற்றும் மடுகு), குடிநீர்த் தேவைக்கான நீர்நிலைகள் (நீருண்துறை, கூவல்) ஆகியன அமைந்திருந்தமை ஆகிய செய்திகளைச் சுட்டிக்காட்டி, இன்று நீர்நிலைகள் பராமரிப்பில் அரசும் மக்களும் கவனமின்றி இருப்பதைச் சிந்திக்கச் செய்கிறார்.

‘செல்வக் கேசவராய முதலியார் படைப்புத்திறன்’ என்ற நான்காவது கட்டுரை, செல்வக்கேசவராய முதலியாரின் தமிழ் இலக்கியப் புலமையையும், தமிழ்மொழி ஈடுபாட்டையும், ஆய்வுப் பார்வையையும் அறிந்துகொள்வதற்குத் துணைசெய்யும் வகையிலான ஆழமான ஆய்வாக உள்ளது. ஆய்வில் ஈடுபடுவோர்க்கு வழிகாட்டுவதாக அமையும் செல்வக் கேசவராயரின் பன்முக ஆய்வுத் திறனை வெளிக்கொணர்ந்து, இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுவதாக அமைந்துள்ளது இக்கட்டுரை.

வாழ்க்கைக்கு ஏற்றம் தரும் வகையான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதலால், வளமான சிந்தனையும், செயல்திறனும் உடைய இளைய சமுதாயம் உருவாகும்; நாடு, வளர்ச்சிப் பாதையில் செல்ல ஏதுவாகும். இவ்வகையில் அமைந்துள்ள ‘பாரதி கல்வியியல் தொலைநோக்கு’ என்ற ஐந்தாவது கட்டுரை, ‘பாரதியின் பல்வேறு சிந்தனைத் தளங்களுக்கிடையே அவரின் கல்வியியல் சிந்தனை ஒரு திட்டமிட்ட வரையறைக்குள் முழுமை பெற்றிருப்பதையும், அவ்வரையறைக்கு இன்றைக்கும் நாளைக்குமான கல்வியியல் தொலைநோக்கு பொதிந்திருப்பதையும்’ (ப.72) வெளிக்கொணர்கிறது. அதேபோல, ‘கவிதைத் தடத்தில் க.நா.சு’, ‘காசி ஆனந்தன் கவிதைகளில் மொழி-இனம்-நாடு’, ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’, ‘இணையத் தமிழ் இலக்கியம்’ ஆகிய கட்டுரைகள் இருபதாம், இருப்பத்தோராம் நூற்றாண்டுக் கவிதை வகைகளை ஆய்வு செய்கின்றன.

மண்ணின் மைந்தர்களின் உணர்வுப் பதிவுகளாக வெளிவந்துகொண்டிருக்கும் ‘மண் சார்ந்த கவிதைகள்’ எனும் புதுக்கவிதை வகையின் தோற்றம், வளர்ச்சி பற்றிய அறிமுகத்துடன், அவ்வகைக் கவிதைகள் குறித்த ஆய்வாகவும் ‘புதுக்கவிதைகளில் மண்ணும் மக்களும்’ கட்டுரை அமைந்துள்ளது. ‘இவ்வகைக் கவிதைகள், கிராமத்தின் இயல்பைச் சுட்டுவதோடு, கிராமம் பற்றிய உயர் மாயையை உடைப்பனவாகவும் அமைகின்றன. இருந்ததைச் சுட்டி, இன்று இருப்பதை ஆதங்கத்தோடு பதிவு செய்கின்றன’ (ப.122) என்ற ஆய்வு முடிவும் இவண் சுட்டத்தக்கது.

அறிவியல் தமிழ்த் துறையில் வெளிவந்துள்ள ஆய்வுகளின் ஆவணமாக ‘அறிவியல் தமிழ் ஆய்வுகள்’ கட்டுரை திகழ்கிறது. உலகத் தமிழரை ஒன்றிணைக்கும் இணையத் தமிழின் வளர்ச்சியை ‘இணையத் தமிழ் இலக்கியம்’, ‘இணையத்தமிழும் எதிர்காலவியலும்’ ஆகிய கட்டுரைகள் இயம்புகின்றன. இணையத்திலும் இணையற்று விளங்கும் தமிழின் ஆட்சியை இணைய தமிழ், தமிழ் இணைய பக்கங்கள், தமிழ் இணைய இதழ்கள், தனியார் பக்கங்கள்/வலைப்பூக்கள், வெளிப்பாட்டு உத்திமுறை, கணினி மொழிநடை ஆகிய தலைப்புகளின் விவரித்துள்ளதோடு, பயன்பாட்டு நிறைவு-நிறைவின்மை, அதில் உள்ள தடைகள் ஆகியவற்றையும் சுட்டி, தீர்வுகள் குறித்த சிந்தனைகளையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்னிணைப்பாக 143 தமிழ் இணைய பக்க முகவரிகளை முயன்று தொகுத்து அளித்துள்ளமையும், பயன்நூல் பட்டியலும் ஆய்வாளரின் கடும் உழைப்பிற்குக் கூடுதல் சான்றுகளாக அமைந்துள்ளன.

கள நூல்களில் உள்ள கருத்துகளோடு, ஒவ்வொரு துறை சார்ந்த செய்திகளையும், முடிவுகளையும் உரிய இடங்களில் மேற்கோள் காட்டி, சிக்கல்களுக்கான தீர்வுகளையும் ஆய்வாளர் இக்கட்டுரைகளில் முன்வைத்துள்ளார். இதனால், கருத்துச் செறிவு, ஆய்வியல் நெறிமுறை ஆகிய இரு வகையிலும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் கட்டுரைகள் விளங்குகின்றன.

மேலாண்மைத் துறையில் தமிழர் பழங்காலந்தொட்டே சிறந்து விளங்குகின்றனர் என்பதைச் சுட்டும் வகையில், இணையம் வரையான செய்திகளை, கருத்துகளை உள்ளடக்கமாக கொண்ட இந்நூலுக்கு ‘சங்க இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற தலைப்பு அளித்துள்ளமை பொருத்தமாக உள்ளது.

உழவர்க்குப் பழந்தமிழர் அளித்திருந்த சிறப்பிடத்தைச் சுட்டும் வகையிலும், இக்காலத்தில் அவர்கள் இழிநிலையில் இருப்பதை உணர்த்தும் வகையிலும் அட்டையில் உழவரை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் நூலாசிரியரின் முதல் நூலான ‘பண்டைத் தமிழரின் தொலைநோக்குப் பார்வை’ என்ற நூலை தொடர்ந்து இந்நூல் வெளிவந்துள்ளது. இவ்வரிசையில் மேலும் பல அரிய துறைகள் சார்ந்த, காலத்திற்கு ஏற்ற ஆய்வுகளை முனைவர் ஆ. மணவழகன் அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; ‘புதிய தளிர்களை இனம் கண்டு, முறைப்படுத்தி, வளப்படுத்தல், அவற்றிற்கு அடிப்படையான மூலங்களைக் கண்டறிந்து, அவற்றை உலகிற்கு வழங்கும் (புகுமுன்…) அவர்தம் முயற்சி மேலும் தொடர வாழ்த்துகள்.


tamilmano77@yahoo.com

Series Navigation

பேராசிரியர் க. ஜெயந்தி

பேராசிரியர் க. ஜெயந்தி