மாசு களையும் இலக்கியங்கள் அல்லது குறள் இலக்கியங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இலக்கிய வகை ஒவ்வொன்றுக்கும் அதன் வடிவம் என்பது இன்றியமையாதது. அதுவே ஒரு படைப்பை வெற்றிபெறச் செய்யும் புறக் கருவியாக அமைகின்றது. மேலும் வாசகன் மனதில் ஒரு படைப்பை நீங்கா இடம் பெறச் செய்வதும் அதுவே ஆகும்.

தொல்காப்பியர் அகப்பாடல்களை கலிப்பா, பரிபாடல் ஆகியவற்றில் பாடலாம் என்ற வரையறையை வகுக்கிறார். அதனடிப்படையில் காதல் இலக்கியங்கள் தோன்றின. காலப்போக்கில் ஆசிரியப்பா அனைத்துப் பொருள்களையும் பாட ஏற்ற ஒரு பாவகையாகப் படைப்பாளர்களால் ஏற்கப்பெற்றது. அதன் எளிமை கருதி அதனைக் காப்பியம் பாடவும் தமிழ்ப் படைப்பாளர்கள் அமைத்துக் கொண்டனர்.

வெண்பா வெள்ளைப்பா என்ற நிலையில் அது உளத் தூய்மை செய்யவும், சமூகத் தூய்மை செய்யவும் உரிய வெளிப்பாட்டு வடிவமாகத் தமிழ் இலக்கிய வரலாற்றி¢ல் கொள்ளப் பட்¢டுள்ளது. எனவே உளத்தூய்மை காக்கும் நீதி நூல்கள் நேரிசை, இன்னிசை வெண்பாக்களால் படைக்கப் பட்டன.

வெண்பாவின் உயர்ச்சி நளவெண்பாவாகும். காப்பியம் பாட புகழேந்திப் புலவர் வெண்பா என்ற வடிவத்தைத் தேர்ந்து எடுக்கிறார். ஏனென்றால் நளவெண்பாவும் தூய்மை கருதிய இலக்கியம் ஆகும். நளனி¢ன் பல ஆண்டு நன்னெறி ஒழுக்கம் ஒருநாள் பாழ்படுகிறது. தாள் கழுவுவதில் ஏற்பட்ட குறைபாடு நளனிடத்தில் சனி புக வழிவகுத்தது.

சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு

புந்தி மகிழப் புகுந்துகலி – சிந்தையெலாம்

தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்

பொன்னசல மார்பற் புகைந்து. (நளவெண்பா 198)

இத்தகைய நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் வெண்பா என்ற இலக்கிய வடிவம் தன் இடத்தில் வேற்றுத் தளை விரவாது தூய்மை காப்பதுபோல மாசு மறு இல்லாமல் வாழ தூய நெறிகளை மனிதர்க்கு வழங்கும் ஒரு வடிவமாக கையாளப் பட்டுள்ளமை தெரியவருகிறது.

அதிலும் குறிப்பாக குறள் வெண்பா என்ற வடிவம் ஒழுக்கச் சட்டங்களை அறிவுறுத்தும் வடிவமாகக் கையாளப் பெற்றி¢ருக்கிறது. இவ்வழியில் தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கியங்களுள் திருக்குறள் முதலாவதாக அமைகிறது. சட்டங்கள் அல்லது வரையறைகள் என்பன குறைந்த சொல்லால் நிறைந்த பயனைப் பெறும் வகையில் அமைக்கப்படுவன ; சுருங்கச் சொல்லி விளங்க வைப்பன. திருக்குறளும் வாழ்க்கை நெறிகளை ஏறக்குறைய சட்டங்களாகவே அமைத்துத் தருகிறது. ”கற்க, உண்ணற்க கள்ளை ” போன்ற கட்டளைகள் திருக்குறளின் சட்டங்களாக எண்ணத் தக்கன.

திருக்குறளின் இத்தகைய போக்கு அதனைத் தொடர்ந்து வந்த குறள் வடிவ இலக்கியங்களாலும் தொடரப் பெற்றுள்ளன. இவ்வகையில் குறள் இலக்கியங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

குறள் இலக்கியங்களின் வகைமை

குறள் இலக்கியங்களைக் குறள் எனப் பெயர் பெற்றவை, பெயர் பெறாதவை என்ற நிலையில் பொதுப் பகுப்பாக்கிக் கொள்ளமுடியும். திருவருட்பயன் என்ற சித்தாந்த சாத்திர நூல் குறள் யாப்பில் அமைந்தபோதும் அது குறள் என்ற பெயர் பெறாமல் விளங்குகின்றது. சம்பந்தர் படைத்த திருவிருக்குறள் முழுக்க முகுக்கக் குறள் வெண்பா யாப்பில் அமையவில்லை என்றாலும் அது குறள் எனப் பெயர் பெற்றுள்ளது. இதுபோன்ற சில முரண்பாடுகள் உண்டு என்றாலும் இவை குறள் இலக்கியங்களே ஆகும்.

அடுத்த நிலையில் நீதிகூறுவன, சமயம் – தத்துவம் சார்ந்தன, கிறித்துவக் கருத்துக்களை அடியொற்றியன, மற்றையன என்றவாறு பிரிக்கலாம். திருக்குறள் நீதி பகர்வதில் தலையாயது. ஞானக்குறள், அட்டாங்க யோகக்குறள், சம்பந்தரின் திருவிருக்குறள், நித்ய கன்ம நெறிக்குறள், பஞ்சாக்கரக்குறள், திருவருட்பயன் முதலியன சமயம்- தத்துவம் சார்ந்தன. இரட்சணியக் குறள், செபத்தியானக் குறள், கிறிஸ்து மொழிக்குறள், அருட்குறள் இருமை நெறிக்குறள் ஆகியன கிறித்துவக் கருத்துகளை எடுத்துரைப்பன. அகப் பொருட்குறள், புதுமைக் குறள், மாணிக்கக் குறள், புதுக்குறள், மானிடக்குறள்¢ ஐநூறு, சித்த மருத்துவக் குறள் ஆகியன மற்றையன என்ற பிரிவில் அடங்கத் தக்கன.

குறள் இலக்கியங்கள் பெருகியமைக்கான காரணங்கள்

திருக்குறளின் மேன்மை, சிற்ப்பு, தனித்தன்மை, அதன் பரவலாக்கம் முதலியவை தமிழ் இலக்கியப் பரப்பில் குறள் இலக்கியங்கள் வழிவழியாகத் தோன்றக் காரணமாக அமைந்தன. தமிழ் படிக்க வருபவர்களுக்கு முதன் முதலாக அறிமுகமாகும் நூல்களுள் முக்கியமானது திருக்குறள். இதன் பெருமை காரணமாக இதனடிப்படையிலேயே மற்றொரு இலக்கியம் படைக்க படித்தவரின் மனதில் அது ஒரு ஈர்ப்பைக் கொண்டுவருகிறது என்பது குறள் இலக்கியங்கள் தொடரந்து எழுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

தி¢ருக்குறளைச் சிறப்பிக்க வந்த திருவள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ள இடைக்காடனா¢, ஒளவையார் ஆகியோர் பாடிய குறள் வெண்பாக்கள் இவ்வகையில் திருக்குறளுக்கு அடுத்ததாக அமைந்த தொடர் முயற்சிகள் ஆகும்.

ஒளவையார் என்ற பெயருக்கும் குறள் வெண்பாவிற்கும் பலமான தொடர்பு ஏற்படத்தப் பட்டுள்ளது. ஒளவையாரின் ஞானக்குறள் என்ற படைப்பு தி¢ருவள்ளுவர் பாடாது விடுத்த வீடுபேற்றைப் பற்றியதாகும். திருவள்ளுவமாலையில் உள்ள ஒளவையாரின் குறள் தொடர்பு இங்குத் தொடர்ந்து அவராலோ அல்லது அவர் பெயராலோ குறள் இலக்கியங்களைச் செய்ய வழிவகுத்தது. மேலும் ஒளவையார் என்ற பெயர் ஆத்திச் சூடி, நல்வழி ஆகிய நீதி இலக்கியங்களைச் செய்து அவை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவராலும் படிக்கப் பெறுவதாலும், பெற்றதாலும் நீதி பற்றிய குறள் இலக்கியங்கள் ஒளவையாரால் செய்யப் பெற்றிருக்கலாம்¢ என்று கருதுவதற்கு இடமளித்தது.

ஞானக்குறள் வீ¢டுபேற்றைச் சொல்வதன் மூலம்¢ தத்துவத்தைச் சொல்லக் கூடிய யாப்பு வடிவமாகவும் குறள்வெண்பா கொள்ளப் பட்டது. இதனைத் தொடர்ந்¢து பல தத்துவக் கருத்துகள் அடங்கிய குறள் இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின. இதன் மணிமுடியாக அமைந்தது திருவருட்பயன் ஆகும். தத்துவங்கள் ஞானாசிரியன் சொல்லித் தந்து மாணவன் கேட்க வேண்டிய அளவிற்கு நுண்பொருள் உடையன. அந்த அடிப்படையில் குறள் யாப்பு நுண்பொருள் உணர்த்தக் கூடியாதாகக் கொள்ளப்பெற்றதன் காரணமாக அது தத்துவங்களைக் கூற ஏற்ற வடிவமாக அமைந்தது.

சைவ சமயக் கருத்துகள் குறள் வெண்பா வடிவில் வெளிவந்த நிலையில் தொடர்ந்து ஏற்பட்ட சமூகக் கால மாற்றங்களால் கிறித்துவக் கருத்துக்களையும் குறள் வெண்பா யாப்பில் படைக்கும் முயற்சிகள் தொடங்கின. இதற்கான காரணம் பைபிள் மொழிகள் குறள் போலவே சிறு சிறு பகுதிகளாக அமைக்கப் பட்டிருப்பதன் ஒப்புமை கருதி இருக்கலாம். அதே நேரத்தில் பின்னர் தோன்றிய இவ்வகை இலக்கியங்கள் போப் அவர்கள் படைத்த திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தாக்கத்தினாலும் அதன் பெருமை கருதி அவ்வகையில் ஏற்பட்ட ஈர்ப்பின் அடிப்படையில் அமைந்ததாகவும் இருக்கலாம்.

சித்த மருத்துவ நூல்கள் போன்றன குறள் இலக்கிய வடிவில் படைக்கப் படுவதற்கு முக்கியக் காரணம் தமிழ் மக்களிடம் அறிமுகமான இலக்கிய வடிவம் அது என்பதுதான். இவ்வாறு குறள் இலக்கியங்கள் தமிழ் இலக்கிய வரலாற்றில் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

மேற்சொன்ன காரணங்கள் தவிர ஒரு இன்றியமையாத காரணமும் உண்டு. தமிழ் யாப்பிலக்கணம் படிக்க வருபவர்களுக்கு வெண்பா பற்றி சொல்லப்படுகிற அறிமுகம் அவ்வளவு எளிமையானதாக இருப்பதில்லை. ஏனெனில் வெண்பா எழுதுவது கடினம் என்ற நிலையிலேயே வெண்பா இலக்கணம் தொன்று தொட்டுக் கற்பிக்கப் பெற்று வருகிறது. ”காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைக்கலாம்” என்ற தொடருள் ஒளிந்திருக்கும் யாப்பு கற்பிப்புக் கடினம் இதனைத் தௌ¤வாகக் காட்டும். இந்¢நிலையில் கற்க வரும் மாணவர்க்கு வெண்பா ஒரு சவாலைத் தருகிறது. எனவே சவாலை ஏற்று அவர்கள் வெண்பா பாட முனைகிறார்கள்.

இவ்வாறு படைப்பின் கருப்பொருள் கருதியும், படைப்பாளரின் சொந்த விருப்பம், சவால் ஆகியன கருதியும் குறள் இலக்கியங்கள் தமி¢ழ் இலக்கியப் பரப்பில் தோற்றம் பெற்று வருகின்றன என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

குறள் இலக்கிய நூல்கள் அறிமுகம்

திருக்குறள்

திருவள்ளுவர் குறள் வெண்பா யாப்பை முதன் முதலாக பயன் படுத்தியவர் ஆவார். இவரது நூல் தனி மனித ஒழுக்கம் பேணுவது . ” மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி அது எவ்வாறு வாழவேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப் பெற்ற நூல் திருக்குறள். இதுபோன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை” [1] என்ற பெருமையது; புராணக் கருத்துக்களுக்குள் சிக்கி விடாமல் அவற்றை விடுத்து உண்மை நிலையை எடுத்துரைப்பது; ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ”(திருக்குறள் 972) எனப் பொதுமை உரைப்பது. இவ்வாறு இதன் பெருமை விரிந்து கொண்டே போகும்.

மூன்று பால்கள், நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள், அதிகாரத்திற்குப் பத்துக் குறள்கள் என்ற நிலையில் ஆயிரத்து முந்நூற்று முப்பது குறட்பாக்கள். பத்துக் குறட்பாக்களுள் வைப்புமுறைத் தொடர்பைத் தவிர வேறு பொருள் தொடர்புகள் கிடையாது. அதிகாரத்திற்குப் பத்துக் குறள்கள், பொருள் தொடர்பின்மை இவை பின்னர் வந்த குறள் இலக்கியங்களால் இத்தகைய சரியான அளவில் பின்பற்றப் படவில்லை.

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலையில்

”கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்” – இடைக்காடனார்

” அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்

குறுகத் தரித்த குறள்” – ஒளவையார்

என்ற இரு குறட்பாக்கள் அமைந்துள்ளன. இவை திருக்குறளைத் தொடர்ந்து எழுந்தவை. குறளை குறள் வடிவாலே பெருமை செய்தவை என்பது இவற்றுக்குக் கூடுதல் பெருமையாகும். இவையே குறள் இலக்கியங்கள் தொடர்வதற்கான காரணமாயின.

இதனடிப்படையில் சில நூல்களின் காப்புச் செய்யுள்கள் குறள் வெண்பாவால் படைக்கப் பெற்றன. தற்போது மக்களிடம் பக்தி நிலையில் பெருமை பெற்று வரும் கந்தர் சஷ்¢டிக் கவசம் பெற்றுள்ள குறள் வெண்பா காப்புச் செய்யுள் இதற்குச் சிறந்த காட்டு.

”அமரர் இடர்தீர அமரம் புரிந்த

குமரனடி நெஞ்சே குறி”

எனவரும் இப்பாட்டு பக்திக்கும்¢, மக்களிடம் பரவிய குறள் வெண்பா யாப்பிற்கும் சான்றாக பலரால் பாராயணம் செய்யப் பெற்றுப் பாடப்பெற்று வருகிறது.

ஒளவைக் குறள் (ஞானக்குறள்)

திருவள்ளுவ மாலையைத் தொடந்து கிடைக்கும் நூல் ஒளவைக் குறள் ஆகும். இதனை ஒளவையார் எழுதியதாகக் குறிக்கிறார்கள். இருப்பினும் அதற்கான அகச் சான்றுகள் இந்நூலில் இல்லை என்பது உறுதி.

உயிர் என்பது ஒன்றுதான். அதற்கு ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை. இவ்வடிப்படையில் இந்நூல் அனைத்து உயிர்களுக்கும் வீடுபேறு அளிக்க முன்வருகிறது. ஆனால் இந்நூல் கூறும் வீடுபேறு அளிக்கும் முறைகள், உயிர் படைப்பு பற்றிய கருத்துகள் அனைத்தும் ஆண் சார்பினவாக உள்ளன. இதனால் ஒளவையார் என்ற பெண் எவ்வாறு ஆண் உயிர் அனுபவத்தைப் படைத்தார், அவர் ஏன் பெண்அனுபவத்தை, பெண் உயிரை வரையறை செய்யவில்லை என்ற கருத்துகள் எழுகின்றன. இதே நிலை அவரின் மற்றொரு குறள் படைப்பாக கருதத்தக்க அட்டாங்க யோகக் குறள் நூலிலும் உள்ளது. மேலும் விநாயகர் அகவலும் பெரும்பாலும் ஆண் வயப்பட்ட குண்டலினி யோகத்தையே கூறுவதாக உள்ளது. இவற்றை ஒப்பு நோக்கி ஆராய்கையில் ஒளவையார் என்ற பெயரில் ஆண்கள் படைத்த நூல்களாக இவை இருக்கலாமோ என்ற எண்ணம் எழுகிறது.

”தொக்கு திறந்தோடூன் மூளை நிணமென்பு

சுக்கிலம் தாதுகள் ஏழு” (ஞனாக்குறள், பிறப்பின் நிலைமை 8)

” இவையெல்லாம் கூடி உடம்பாய ஒன்றின்

அவையெல்லா மானது விந்து”(மேலது 10)

என்ற இந்தப் பகுதிகளில் பயன்படுத்தப் பெறும் விந்து, சுக்கிலம் ஆகியன ஆண்பாலின என்பது தௌ¤வு. பிறப்பின் நிலைமை சொல்ல வந்த ஞானக்குறளின் ஆசிரியர் உயிர் பிறப்பின் நிலைமை கூறாது ஆண்பிறப்பின் நிலை கூறுவது ஏன் என்ற கேள்வியின் அடிப்படையில் இந்த நூலைப் படிக்கப் புகுந்தால் பல உண்மைகள் வெளிப்படும். எவ்வாறாயி¢னும் இந்நூல் குறள் வெண்பா யாப்பினது என்பதில் மாற்றமில்லை. எனவே இந்நூல் குறள் இலக்கியத்திற்குப் பெருமை சேர்ப்பது என்பதில் ஐயமில்லை.

இந்நூலில் வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்ற மூன்று பகுப்புக்களில் முப்பத்தோரு தலைப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் பத்துக் குறட்பாக்கள் என்ற நிலையில் முந்நூற்றுப் பத்துக் குறட்பாக்களை உடையது இந்நூல். வள்ளுவர் கடைபிடித்த அதிகாரத்திற்குப் பத்துக் குறள்கள் என்ற முறைமை இங்குப் பின்பற்றப் பட்டுள்ளது.

”உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்

உடம்பினில் உத்தமனைக் காண்” (ஞானக்குறள், உடம்பின் பயன்,1)

என்ற குறட்பா உடம்பில் உத்தமன் நிறையும் கருணையைக் கூறுவதாகும்.

”பாலின்கண் நெய்போற் பரந்தெங்கு நிற்குமே

நூலின்க ணீசனு ழைந்து.”(ஞானக்குறள், உருவொன்றி நிற்றல்,1)

என்பது இறைவன் உலகப் பொருள்களுள் கலந்துள்ள நிலையைக் கூறுகிறது.

”மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்கும்

காலமாய் நிற்கும் சிவம்” (ஞானக்குறள், சதாசிவம், 7)

இக்குறட்பாவில் சாதாசிவத்தின் இயல்பு காட்டப் பெறுகிறது.

இவ்வாறு எளிமையும் இனிமையும் உடையதாக இந்நூல் விளங்குகிறது.

அட்டாங்க யோகக்குறள்

இந்நூலை எழுதியவர் என்பதில் மாறுபாடு உள்ளது. ” இந்நூலை திருவாவடுதுறை ஆதினத்தி¢லிருந்து பெற்றுச் சேற்றூர் சுப்பிரமணியக் கவிராயர் ‘ செந்தமிழ் ‘ இதழின் வாயிலாக வெளியிட்டார். இதன் ஆசிரியர் பெயர் முதலியன விளங்கவில்லை என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார். ஆனால் கா.சு.பிள்ளை இதனை ஒளவையார் இயற்றியதாகத் தமது இலக்கிய வரலாற்றில் கூறியுள்ளார்” [2] என்ற கருத்து இங்கு ஆய்விற்குரியது. முன்னர் குறிப்பிட்டது போலவே இந்நூலும் பெண்தன்மை அற்று ஆண்வயப்பட்டதாகக் காணப்படுகிறது. எனவே இதனை ஒளவையார் எழுதியிருக்க இயலாது என முடியலாம். ஆனாலும் குறள் இலக்கியங்களில் இது தனியிடம் பெறுகிறது.

இந்நூல் பாயிரம், இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய தலைப்புகளில் அறுபத்தாறு குறட்பாக்களை உடையதாக யோகம் பற்றிய செய்திகளை விளக்குவதாக அமைக்கப் பட்டுள்ளது. இதனுள் அதிகாரத்திற்குப் பத்துப்பாடல் என்ற முறைமை முதலானவை பின்பற்றப் படவில்லை.

”உலகம் படைப்பித் தளிப்பித் தொழிப்பி

திலகுமுயி ருள்ளெம் இறை” (அட்டாங்க யோகக்குறள் பாயிரம் 2)

என்பது இறைவனி¢ன் இயல்பைச் சொல்லும் குறளாகும். மேலும் இந்நூல் ஒரு தலைப்பு முடிந்ததும் அடுத்த தலைப்பிற்குச் செல்லும் நிலையில் தொடர்பு படுத்தப் பட்டுள்ளது.

”இயமமிவை யெல்லாமினிப் பொறை யாதி

நியமமும் சொல்வாங்கே ளாய்நீ” (அட்டாங்க யோகக்குறள் இயமம் 15)

என்ற இந்தக் குறளில் முன்தலைப்பு சுட்டப் பெற்று அடுத்த தலைப்பு நியமம் செல்லும் நிலை சுட்டப் பெற்றுள்ளது. இந்நூலின் பயன் அட்டசித்திகள் பெறுவதாகும். இதனைப் பின்வரும் குறள் விளக்குகிறது.

”அட்டாங்க யோக சமாதி அடைந்தாருக்கு

அட்டாம சித்திகளுண் டால்”( அட்டாங்க யோகக்குறள் , சமாதி, 2)

இ¢வ்வாறு யோகம் அருளும் நூலாக இந்நூல் விளங்குகின்றது.

திருவிருக்குறள்

ஞானசம்பந்தர் பாடியது திருவிருக்குறள் ஆகும். வாசி தீர காசு நல்கக் கேட்ட பதிகம் இது. இப்பதிகம் இருசீரடிச் சிறுமை பெற்றதால் இப்பெயர் பெற்றது. இருப்பினும் குறள் வெண்பா யாப்பினின்று சற்று தள்ளி வைத்து எண்ணத்தக்கதாக இது உள்ளது.

”வாசிதீரவே காசு நல்குவீர்

மாசின் மிழலையீர் ஏசலில்லையே” (1)

இவ்வாறு தொடங்கும் இவ்வகை பத்துப் பாடல்களாக விரிகிறது. குறள் வெண்பா யாப்பினுள் அமையாவிட்டாலும் இருஅடி சிறுமை கருதி இதனைக் குறள் இலக்கியமாகக் கருதலாம். மேலும் இந்தவகையை திருவிருக்குறள் என குறள் பெயரிட்டு அழைப்பதால் இது இவ்விலக்கிய வகையுள் கருதத் தக்கது. மேலும் இறைவனுக்குக் கட்டளையிடும்போக்கில் இது அமைக்கப் பெற்றுள்ளதால் இதுவும் முன்பகுதியில் குறிப்பிட்டது போலப் பின்புலம் உடையதே.

திருவருட்பயன்

உமாபதி சிவாச்சாரியார் என்ற சைவ சாத்திரச் சான்றோர் இயற்றியது திருவருட்பயன் என்ற நூலாகும். இதனுள் சைவ சமய சாத்திரக் கருத்துகள் குறள் வெண்பா யாப்பி¢ல் தலைப்பிற்குப் பத்துக் குறட்பாக்கள் என்றநிலையில் நூறு குறட்பாக்களை உடையதாகப் பாடப் பெற்றுள்ளது.

உமாபதி சிவாச்சாரியார் திருக்குறள் மீது ஆறாத பற்றுடையவர் என்பதைப் பின்வரும் வெண்பா உணர்த்துகிறது.

”வள்ளுவர் சீரன்பர்மொ ழிவாசகம் தொல்காப்பியம்

தௌ¢ளுபரி மேலழகன் செய்வுரை ஒள்ளியசீர்

தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும்

தண்டமிழ் மேலாந் தரம்”

எனவே இவர் குறள் வெண்பா யாப்பில் ஒரு தத்துவ நூலைச் செய்துள்ளார். இந்நூல் சைவ சித்தாந்தக் கருத்தை அறிந்து கொள்பவர்களுக்கு நுழைவாயில் நூலாக உள்ளது.

”ஒருபொருளும் காட்டாது இருள்உருவம் காட்டும்

இருபொருளும் காட்டாது இது” ( திருவருட்பயன், இருள்மல நிலை 23)

என்பது ஆணவ மலத்தின் இயல்பு காட்¢டும் குறள் ஆகும்.

இறைவனது நிலையை

” பெருக்க நுகர்வினை பேர்ஒளியாய் எங்கும்

அருக்கன்என நிற்கும் அருள்”(அருளது நிலை 32)

என்ற குறள் எங்கும் நிறைந்திருக்கும் சூரியனாகக் காண்கிறது. இவ்வாறு தத்துவக் கருத்துகள் அடங்கிய பெட்டகமாக இந்நூல் விளங்குகிறது.

வருக்கக் குறள்

இது வண்ணச் சரபம் தண்டபானி சுவாமிகளால் படைக்கப் பெற்றதாகும். இது திருக்குறள் கருத்துகளை அடியொற்றியே அமைக்கப் பெற்றுள்ளது. திருக்குறளில் உள்ள கடவுள் வாழ்¢த்து, புலைகொலை கடிதல், பிறர்¢க்கு உதவி, அரசர் இயல்பு, வினைத்திட்பம், இனியவை கூறல், இன்னா செய்யாமை, மக்கட்பேறு, உழவு, தவம், துறவு, கேள்வி, பெண்மை, இல்லறம், வரைவின் மகளிர் போன்ற கருத்தாங்களிலும் வருக்கக் குறள் திருக்குறளை அடியொற்றியே பாடப் பெற்றுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறட்பாக்கள் இதில் உள்ளன.

”தந்தை பெறும்புகழைத் தம்புகழ்¢ச்சி யால் மறைக்கும்,

விந்தையுற்றார் மானிடரில் மேல்” (வருக்கக் குறள் 10)

என்ற குறள் மக்கட் பெருமை கூறுகிறது.

”தீயின் கொடுஞ்சொல் தினம்பேசு வார்பலரும்

நாயிற் கடையாம் நார்” (வருக்கக் குறள் 107)

என்பது தீச்சொல் கொடுமை காட்டுவதாகும். இவ்வாறு திருவள்ளுவரை அப்படியே அடியொற்றி வண்ணச்சரபம் தண்டபானி சுவாமிகள் தன் நூலை யாத்துள்ளார்.

கிறிஸ்து மொழிக்குறள்

திரு. வி. கல்யாண சுந்தரனார் இயற்றிய நூல் இதுவாகும். இவர் ஜுலை 1947 ஆம் ஆண்டில் இந்நூலை ஆக்கத் தொடங்கினார். இக்காலம் இவர் வீட்டுக்காவலில் அரசாங்கத்தின்ரால் வைக்கப் பெற்ற காலமாகும். போராட்டம் கருதி தொழிலாளர் சங்கத் தலைவராக இருந்தவர் கைது செய்யப்பெற்றுச் சிறையில் இருந்த நிலையில் அப்போராட்டத்தை முன்னைத் தலைவர் என்ற முறையில் இவர் நடத்த வேண்டியவரானார். அப்போதைய அரசாங்கம் இவரை அந்நேரத்தில் இவரின் செயல்பாடுகளை முடக்கக் கருதி வீட்டுக் காவலில் வைத்தது. அந்நேரத்தில் இவர் காந்தியடிகளையும், ஏசு பெருமானையும் எண்ணி ஏசு பெருமானின் மலைப் பொழிவுகளைக் குறள் வெண்பா யாப்பில் படைக்கத் தொடங்கினார். ” புறத்தே தடியும் ஈட்டியும் துப்பாக்கியும் ஏந்திய போலிஸார் சூழ்ந்து நிற்ப அகத்தே கிறிஸ்து பெருமான் மனக் காட்சி அமுதம் பொங்க முதுமையில் உடல் மெலிந்து நலிந்துள்ள வேளையில் இந்நூல் என்னால் இயற்றப் பெற்றது” [3] என்று நூல் உருவான கதையை இதன் ஆசிரியர் தெரிவிக்கிறார்.

இது தோற்றுவாய், மலைமொழி, மணிமொழி, இறுவாய் என்ற நான்கு பகுதிகளை உடையது. மொத்தம் முந்நூற்று எழுபது குறட்பாக்களை உடையது. இது காந்தியடிகளுக்குக் காணிக்கை ஆக்கப் பெற்றுள்ளது. மேலும் ஏசு பெருமானின் மலைப்பொழிவுகளை மாத்தேயு கூறும் கருத்துகளின்படி கூறுகிறது.

இந்நூலில் வந்துள்ள சில குறட்பாக்கள் பின்வருமாறு.

” வாழி மலைவாய்மை வாழச் செய் மத்தேயு

வாழி வழிவழி வாய்ப்பு” (தோற்றுவாய் 34)

” இரக்க முடையவர் இன்புற வாழி

இரக்கம் அடைவர் இனிது” (மலைமொழி .5)

”கடவுள் அறிவு கருதித் தொழுக

இடமில் ஒருபொருள் என்று” (மணிமொழி 1)

” பாவம் பொருத்தருளும் பான்மை அதிகாரம்

தேவமகற்கு உண்டு தேர்” ( மன்னிப்பு 1)

இவர்தம் படைப்பில் சீர் பிளவுபடாமல் சொற்கள் பொருத்தமுற இலக்கண வழிப்படி அமைக்கப் பெற்றுள்ளன. இந்தச் செய் நேர்த்தி மிகவும் கவனிக்கத்தக்கது.

அருட்குறள்

வீ. ப. கா சுந்தரனார் அவர்களால் எழுதப் பெற்ற நூல் அருட்குறள் ஆகும். இது விவிலியப் பகுதிகளை அப்படியே குறள் யாப்பில் தரும் பாங்கினது. இன்பத்துப்பால் என்ற ஒரு பகுதியும்¢ இதனுள் உண்டு. இதுவும் ஆயிரத்திற்கு மேற்பட்ட குறட்பாக்களை உடையது.


”நல்லாயன் நம்மில்லம் நாளும் நடத்துங்கால்

இல்லதென்? எல்லாம் உள”(அருட்குறள் 919)

என்றபகுதி இயேசு பெருமானின் நல்லாட்சி இல்லத்தில் நடக்கும் பாங்கினைக் குறிப்பதாகும்.

”தேன்கூட்டில் வார்க்கும் தௌ¤தேனில் மிக்கினிதாம்

வான்கூட்டு மாமறை வார்ப்பு” (அருட்குறள் 31)

என்பது மறைமொழியின் மாட்சிமை கூறும் குறளாகும்.

ஏனைய நூல்கள்

அகப்பொருட்குறள் என்பதை அழகசுந்தரம் என்பவரும், இரட்சணியக் குறளை எச். ஏ. கிருஷ்ணப்பிள்ளை என்பவரும், செபத்தியானக்குறள் என்பதை ஞானப்பிரகாச நாத சுவாமி என்பவரும், நித்ய கன்மக்குறள் என்பதை சிதம்பர நாத முனிவர் என்பவரும் மாணிக்கக்குறள் என்பதை வ.சுப. மாணிக்கம் அவர்களும் இருமை நெறிக்குறள் என்பதை ஜி. செ. வேதநாயகர் என்பவரும் படைத்தளித்¢துள்ளனர்.

வ.சுப. மாணிக்கனார் வள்ளுவம் என்ற பொழிவு நூலைத் தந்தவர். அவ்வடிப்படையில் தன்வாழ்வை முன்னிறுத்தி மாணிக்கக் குறள் என்ற அளவில் தன் பெயரை ஒட்டியே குறள் இலக்கியம் படைத்தள்ளமை சிறப்பிற்குரியது. இருமை நெறிக்குறள் என்பது ஓராயிரத்து எண்ணூறு குறட்பாக்களை உடையது. ” தேவனிடமிருந்து வந்தகுரு தேவனகம் பாவிகளைச் சேர்ப்பார்மற் றன்று” என்பது இதனுள் வரும் குறளுக்கு மாதிரியாகும்.

இவைதவிர சித்த மருத்துவக்குறள் என்பதை புலவர் சி. இரத்தினவேலனார் என்பவர் படைத்துள்ளார். புதுக்குறள், மானிடக்குறள் 500 ஆகியன மணிமேகலை பிரசுர வெளியிடுகளாக அண்மைக் காலத்தில் வெளியிடப் பெற்றுள்ளன.

முடிவுகள்

குறள் வெண்பா அயல் தளை விரவாத நிலையது. இதன் இத்தகு இயல்பே மனத்தூய்மையையும் உடல் தூய்மையையும் காக்கும் போக்கில் அமைந்த நீதிக் கருத்துக்களை பாட ஏதுவாக அமைந்தது.

திருக்குறளின் பெருமை, அமைப்பு போன்றன மற்ற படைப்பாளர்களை கவர்ந்துள்ளன. இதன் காரணமாக அவர்களும் குறள் யாப்பினைப் பின்பற்றி படைப்புகளைச் செய்ய முனைந்துள்ளனர்.

ஒழுக்கம் பாடுதல், யோகம் பாடுதல், தத்துவம் கூறுதல், கிறி¢ஸ்தவ மதக் கருத்துக்களைக் கூறுதல், தனி மனித ஒழுக்கம் போற்றல் என்ற படிநிலைகளில் குறள் இலக்கியங்கள் படைக்கப் பெற்றுள்ளன.

இவற்றின் பெருக்கம் தமிழ் இலக்கியப் பரப்பில் குறள் இலக்கியம் என்றத் தொடர் வடிவ வகை இலக்கியத்தை நிலைப்படுத்துவதாக உள்ளது.

——————————————————————————–

குறிப்புகள்

[1] ச. வே. சுப்பிரமணியன், திருக்குறள் நயவுரை, ப 17

[2] ப. சரவணன், ஒளவையார் கவிதைக் களஞ்சியம், ப. 113

[3]. திரு.வி.கல்யாணசுந்தரனார், கிறிஸ்து மொழிக்குறள், ப 8.

பயன் கொண்ட நூல்கள்

1. இரத்தினசபாபதி. வை(பொது. ப,ஆ), மெய்கண்ட சாத்திரங்கள், சைவசித்தாந்தத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை,1988.

2. இளங்குமரன், இலக்கிய வகை அகராதி, மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், டிசம் 1985

3. கல்யாணசுந்தரனார், திரு,வி.க, கிறிஸ்து மொழிக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1995

4. சரவணன், ப, ஒளவையார் கவிதைக் களஞ்சியம், இராசஇராசன் பதிப்பகம், சென்னை,2001

5. சுப்பிரமணியன். ச.வே., திருக்குறள்நயவுரை, மெய்யப்பன்தமிழாய்வகம், சிதம்பரம், 2001

6. பிருந்தாஸ்ரீ. ஜெ, திருக்குறளும் வருக்கக்குறளும், உலகத்திருக்குறள் மாநாட்டு மலர், மதுரை


முனைவர் மு. பழனியப்பன்,

தமிழ் விரிவுரையாளர்,

மா, மன்னர் கல்லூரி,

புதுக்கோட்டை,

muppalam2006@gmail.com

muppalam2003@yahoo.co.in

manidal.blogspot.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்