This entry is in the series 20030202_Issue

புஷ்பா கிறிஸ்ரி


மின்ன லொன்று கண்ணடித்து மறையும்

சின்ன சின்ன மழைத்துளிகள் சிதறும்

கிழக்கு வானம் இருளாடை பூணும்

வழக்கமான சூரியக் கதிர்கள் நாணும்

மண்வாசனை மனித மூக்கைத் தேடும்

விண்ணிலிருந்து நீர் நரம்புகள் வீழும்

வீதியெங்கும் வெள்ளம் நர்த்தனம் ஆடும்

வீட்டினுள்ளும் படகு ஓட்டும் கோலம்

வயல் வெளிகளில் சமுத்திரங்கள் தெரியும்

பயிர்களெல்லாம் மூச்சுத் திணறி மரிக்கும்

ஏழையவன் கண்கள் சோகம் பாடும்

வேளை வந்தால் வெள்ளநிலை மாறும்

கால் நடைகள் பரிதாபமாய்ச் சாகும்

காசு பணம் இல்லாதவர் பாவம்

பொருட்களுக்கும் விலை வாசி ஏறும்

பொக்கிடமான வாழ்வு ஆட்டம் காணும்

பசித்த வயிறும் தீப் பிடித்து எரியும்

புசித்த உணவு நினைவில் வந்து மறையும்

இரண்டு மூன்று தினங்கள் வீடு கசியும்

மருண்ட கண்கள் மனத்துயரில் மடியும்

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation