மழைக்குடை மொழி

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

சாரங்கா தயாநந்தன்


(தமிழாக்க வடிவக்கற்பனை)

மழைக்குடையாக
என் மனசிலுலவுகிறது ஒரு மொழி.
தேவை கருதி மட்டும்
நான் விரிக்கும் திருமொழி.
அது எனது தாய் பேசியது
அது என் தந்தை பேசியது
அழகிய அதன் முகவிலாசத்தின்
முழுமையை
நானறியேன்.
முன்பொருநாளில் என்தாய்
அதன் அழ்படிமான குறியீட்டை
அழகான எழுத்துருவை
என்னில்
மீள்பிரசுரிக்கத் தயங்கியதில்
நான்
பேச மட்டும் புரிந்துள்ள
நேச மொழி அது.
இதே மொழிகாக்கும் போரினால்
ஈழதேசத்திலிருந்து
உடைந்து விழுந்த என்பெற்றோர்
தங்களை
எனது தேசத்தில் ஒட்டிக்கொண்டனர்
தம் தேச உறவினை
வெட்டிக்கொண்டனர்.
‘வாய் புகா மொழி ‘ யில்
பிள்ளை பேசுவதாலாய
புளகாங்கிதம் அவர்களது
இன அடையாளம்
இழந்துபட்ட சோகம் எனது.
இப்போது தினமுயிர்க்கும் என்முயற்சி
தமிழ் கற்க.
இன்றதன் மூன்று சொற்கைளை
வரையப் பழகியுள்ளேன்
அம்மா, அப்பா, தமிழ் என்பதாக.
வளரும்என்றநம்பிக்கையுடன்…
—-

Series Navigation

சாரங்கா தயாநந்தன்

சாரங்கா தயாநந்தன்