மலை (நாடகம்)

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

கணேசன்


முதலாமவன்: விரல்களைத் வருடி உள்ளங்கையை துடைத்துக்

கொண்டிருக்கையில் வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு அடுத்துள்ள

பள்ளத்தாக்கில் விழுந்தாள். அவளைத்தொடர்ந்து ஓடிய அவனும் ….

பள்ளத்தில் விழுந்தான்.

அவர்கள் அமர்ந்திருந்த மலை மேடு பொட்டல் நிளம் போல்

நெடுந்தூரத்திற்கு வெறுமையாய் படர்ந்திருந்தது.

அவன் விழுந்ததும் , பொட்டல் மலை நிளத்தின் மறுமுனை

யிலிருந்து பெருந்திரளான மக்கள் ஓவென்று கத்திக்கொண்டு அவன் விழுந்த

இடத்திற்கு வந்து நொடியும் தாமதிக்காமல் பள்ளத்தாக்கில் விழுந்து மறைந்து

போகின்றனர்.

இது கனவாக இருந்தாலும் இந்த சம்பவம் நிச்சயம் எங்காவது நிகழ்ந்திருக்கலாம்

என்ற உணர்வு மனசுள் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

இது ஏதாவதொரு சினிமாவின் இருதிக்காட்சியோ என்று கூட

என்னத்தோன்றுகிறது.இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் ?.

இரண்டாமவன்:உன் கனவைப்பற்றி நான் என்ன நினைப்பது. அப்படியே நினைத்து ஏதாவது

சொன்னாலும் உன் கனவைப்பற்றியான நினைப்பில் மாற்றம் ஏற்படாதா ?. பிறகு நீ

அதைப்பிற்றி என்ன செய்தாலும் அதில் என் பங்கும் ஒட்டிக்கொண்டே வருமே.

முதலாமவன்:அப்போ நான் என்ன செய்வது ?.

இரண்டாமவன்:இதற்கும் என்னிடம் பதிலை எதிர்பார்க்காதே.

முதலாமவன்:எப்படி நீ பொறுப்பில்லாமல் போவாய். நான் உன்னுடன் உறங்கும்

போதுதானே அந்தக்கனவைக் கண்டேன். நீயும் தான் காரணம். வேறெங்காவது யாருடனாவது

து}ங்கியிருந்தேனென்றால் … இதோ பார் இத்தனை ஆண்டுகாலம் இல்லாத இது,

இப்போது வரக்காரணம்… ?, யோசித்துப்பார். நீ யார் ?. எனக்கென்ன வேண்டும் ?.

இரண்டாமவன்: நானுன்னுடன் உறங்கியது குற்றமா ?.

முதலாமவன்: இல்லை.பொறுப்பாளி.

இரண்டாமவன்: அதுதான் புரியவில்லை. நீ வேறு நான் வேறு. சும்மா பொய்கதைகளை

எல்லாம் சொல்லி என்னை முட்டாளாக்காதே.

முதலாமவன்: இதோ பார்.நான் மட்டும் படுத்திருந்தேனென்று வைத்துக்கொள்.

அப்போது ஒரு பாம்போ எறும்;போ யாரையாவது கடிக்கும் என்னத்தோடு வந்தால்

நிச்சயம் என்னைத்தான் கடிக்கும். அதே நேரத்தில் நீயும் இருந்தால் அங்கே

அவற்றிற்கு குழப்பம் ஏற்பட்டிருக்கும் யாரைக்கடிப்பது என்னது பற்றி.. ?. ஒரு வேளை

இரண்டு பேரையும் கடித்திருக்கலாம். என்னை மட்டும் தான் கடிக்க வேண்டும் என்று

ஏதாவது சட்டம் வைத்திருக்குமா ?. அப்போ எனக்கு மட்டும் தான் கனவு வந்திருக்குமா

சொல்லு.

இரண்டாமவன்: கனவு வேறு. எறும்பு வேறு.

முதலாமவன்: விளக்கேன்.

இரண்டாமவன்: உனக்கேதும் தெரியாதா ?.

முதலாமவன்: உனக்கு அவற்றின் மீதுள்ள பார்வையைத் தவிர.

இரண்டாமவன்: அது போதாதா ?.

முதலாமவன்: இல்லை.

இரண்டாமவன்: நான் சொன்னால் அவற்றின் மீதான பார்வை மாறிவிடுமே.

முதலாமவன்: மாறினால் என்ன ?.

இரண்டாமவன்: பின், நீ எடுக்கும் எல்லாக்காரியத்திற்கும் நானும்

பொறுப்பாகிவிடுவேன்.

(மொளணம்).

முதலாமவன்: உனக்கு என் கனவில் பங்கெடுத்துக்கொள்ளவும் விருப்பமில்லை ,

வேறெந்த உதவிக்கும் தயாராய் இல்லை அப்படித்தானே ?.

இரண்டாமவன்: அதில் என்ன சந்தேகம்.

முதலாமவன்: செ. நீயும் மனுசனா ?.

(மெளனம்).

முதலாமவன்: சரி உனக்கேதும் உதவி தேவைப்படுகிறதா சொல். நீதான்

செய்யவில்லை, நான் மற்றவர்க்கு உதவவே பிறந்திருக்கிறேன். என்ன வேண்டுமானாலும்

கேள். தயங்காதே. எந்த வித நிபந்தனையும் நான் விதிக்கப் போவதில்லை.

ம்…. கேள்.

இரண்டாமவன்: உன் கனவுக்காக நீ ….

முதலாமவன்: அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. இப்போது நான் ஏதாவது உனக்குச்

செய்யவேண்டும். அது தான் என் முதல் வேலை.

இரண்டாமவன்: கனவு உன் முதல் வேலையில்லையா ?.

முதலாமவன்: கனவு தான் என் முதல் வேலை. ஆனால் இப்போது அது மாறிவிட்டது.

இரண்டாமவன்: உன்னை அதனால் தான் நான் நம்ப மறுக்கிறேன்.

(மொளணம்).

முதலாமவன்: நீ ஒரு நாள் நம்பத்தான் போகிறாய். என் தேவை உனக்கேற்படும்.

என் காலடியில் விழுந்து கதறுவாய் . நிச்சயம் இது நடக்கும் அன்று இன்றைய

பேச்சுக்களை நினைத்து நினைத்து வருந்துவாய். ஒன்றை மட்டும் நினைவில்

வைத்துக்கொள் உன்னுடைய அந்த துர்பாக்கியமான அந்த நேரத்தில் கூட நான்

உதவுவேன். இது சத்தியம்.

இரண்டாமவன்: சரி இப்போ நீ உன் கனவுக்கான வேலையைத் தொடங்கப்போகிறாய்

இல்லையா ?.

முதலாமவன்: ஆம். இனி உன்னுடன் வெட்டிப் பொழுதைக் கழிப்பதைவிட உருப்படியான

வேலையைச் செய்யலாம்.

இரண்டாமவன்: நீ நிதானத்தில் இருந்தால் கடந்த சில நிமிடங்களாக நாம்

பேசியதை நினைவு படுத்திப் பார்.நீ எவ்வளவு து}ரம் நம்பகத்திற்கு உட்பட்டவன்

என்று உனக்கே புரியும்.

முதலாமவன்: நீ கொஞ்சங்கூட மனிதாபிமானம் இல்லாதவன். மற்றவற்கு உதவும்

எண்ணம் துளிக்கூட உன்னிடம் கிடையாது.

இரண்டாமவன்: இப்போது நான் என்ன செய்து கொண்டிருக் கிறேனாம்.

முதலாமவன்: நீ கபடக்காரன். விஷமி. நரி.

இரண்டாமவன்: சரி. வா உன் கனவைப் பற்றி சிந்திப்போம்.

முதலாமவன்: வேண்டாம்.

இரண்டாமவன்: பரவாயில்லை வா. சொல்லு. அந்தக்கும்பல் அப்படியே கொஞ்சங்கூட

யோசிக்காமல் பள்ளத்தில்…

முதலாமவன்: நிறுத்து. போதும். அதை நான் மறக்க முயன்று கொண்டிருக்கிறேன்.

உன்னையும் சேர்த்து.

இரண்டாமவன்: சரி அதை பற்றி வேண்டுமானால் வேறொரு நாள் பேசிக்கொள்ளலாம்.

என் கனவைக் கேட்கிறாயா ?.

முதலாமவன்: இல்லை. நான் தயாராய் இல்லை.

இரண்டாமவன்:ஏன்.

முதலாமவன்:தெரியவில்லை.

இரண்டாமவன்: தெரியவில்லையென்றால் விட்டுவிடு. அது நல்லது தான். இப்போது

தெரிந்துகொள்ள முயற்சிக்கலாம் இல்லையா ?. எந்த தடங்கலும் இல்லாமல்.

முதலாமவன்: எனக்கு உன்னைக்கண்டாலே பிடிக்கவில்லை.

இரண்டாமவன்: எனக்கு இப்போதுதான் உன்னை மிகவும் பிடிக்கிறது. உன்னுடன் நிறைய

பேசவேண்டும் போல் இருக்கிறது. நீ எனக்கு எந்த நேரத்திலும் உதவுவதாகச்

சொல்லியிருக்கிறாய். நீ வாக்கு காப்பாற்றுபவன். சரி, பழசை மறப்போம்.

( சுற்றியொருமுறைப்பார்த்துவிட்டு)

இந்த இடம் கூட நீ சொன்ன மலையைப்போல் தான் இருக்கிறது இல்லையா ?.

முதலாமவன்: நான் போகிறேன்.

இரண்டாமவன்: எங்கே ?.

முதலாமவன்: வீட்டுக்குத்தான்.

இரண்டாமவன்: ஏன் அதற்குள். இரு. கொஞ்ச நேரம் பேசிவிட்டு போவோம். நானும்

தான் வீட்டுக்குப் போகனும்.

முதலாமவன்: நீ வீட்டுக்குப் போனால் என்ன போகாவிட்டால் எனக்கென்ன ?. நான்

போகிறேன். அலுத்துவிட்டது.

இரண்டாமவன்: எது ?.

முதலாமவன்: எல்லாம் தான்.

இரண்டாமவன்: எல்லாம் என்றால். ?.

முதலாமவன்: எல்லாம் தான்.

இரண்டாமவன்: கனவா ?.

முதலாமவன்: கனவில்லை நிஜம்.

இரண்டாமவன்: ம்கும், கனவுமா என்று கேட்க வந்தேன்.

முதலாமவன்: எல்லாம் என்ற பின் கனவு மட்டும் என்ன பாக்கி ?.

இரண்டாமவன்: இது மிகவும் ஆரோக்கியமான நிலை. எல்லாவற்றையும் விட்டுவிட்ட

நிலை வந்த பின் புரணமாகிட்டாய். இப்போது நீ எது சொன்னாலும் நான் செய்யக்

கடமைப்பட்டுள்ளேன்.

முதலாமவன்: நான் சொல்லும் நிலையில் இல்லை என்று தொரிந்த பின் தான் உனக்கு

என் மீது கரிசனம் வந்திருக்கிறது.

இரண்டாமவன்: எனக்கு பரிதாபத்துக்குரியவர்களைக் கண்டால் பிடிக்கும்.

அவர்களுக்காக நான் உடனே உழைக்கத் தோடங்கிவிடுவேன். ஏழைகளைக் கண்டால்,

ஊணமுற்றவர்களைக் கண்டால், இடிந்த கோபுரங்தளைக் கண்டால், பாசிப்படிந்த

சுவற்றைக் கண்டால்,….

முதலாமவன்: என்னைக் கண்டால்.

இரண்டாமவன்: நிச்சயமாக. நீ இப்போது ஒரு வைத்தியன் முன்னுள்ள நோயாளி.

எப்படி உன் மீது எனக்கு பரிதாபம் உண்டாகாமல் இருக்கும்.

முதலாமவன்: வைத்தியன். என் கனவைத்தீர்க்க வக்கில்லாத வைத்தியன். என்னை

நோயாளியென்று கூறி அதில் சுகம் கானும் அர்ப்பன். சி. நீ வைத்தியன் என்று

எப்படி நீயே சொல்லிக்கொள்கிறாய்.

இரண்டாமவன்: நான் உன் கனவைத்தீர்க்க உகந்தவன் என்று நீயே

ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட பிறகு நான் யார்.

முதலாமவன்: நான் தீர்க்க வல்லவன் என்று எண்ணவில்லை. அந்தக்குறைக்குக்

காரணமானவன் என்றே நம்புகிறேன்.

இரண்டாமவன்: இதையே தான் திருப்பித்திருப்பிச் சொல்கிறாய்.

முதலாமவன்: ஆம். அதனால் அது உண்மையாகி உண்மையாகி , இப்போது உன்

கடமையாகிவிட்டது. இனி உன்னால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடியாத படி உழைக்க

வேண்டியாகிவிட்டது. என் கனவுக்காக. இனி நீ என்ன கெஞ்சினாலும் உனக்காக நான்

காத்திருக்கப்போவதில்லை. வருகிறேன்.

இரண்டாமவன்: உன்னைக் கொன்றுவிடுவேன்.

முதலாமவன்: நீ எப்போதோ இறந்துவிட்டாய். நீ. . . என்னைக்கொள்வதா ?!

இரண்டாமவன்: நில்

(போய்க்கொண்டிருக்கிறான்)

இரண்டாமவன்: நில்

(போய்க்கொண்டிருக்கிறான். ஆனால் பொறுமையாக)

இரண்டாமவன்: உன் கனவைச் சொல். என்னை மன்னித்துவிடு. எவ்வளவு

வருடங்களானாலும் காத்திருந்து கேட்கத் தயாராய் இருக்கிறேன். சொல். நண்பனே.

(நிற்கிறான்)

இரண்டாமவன்: நண்பனே.

(நண்பனே நண்பனே என்று பல முறை சொல்லிப்பார்க்கிறான்.)

நண்பனே உன்னை எப்படி மீட்பேன். நீயின்றி ஒரு நொடியும் என்னால் வாழமுடியாதே.

உன்னை. . . உன்னை. . . அய்யோ என்ன செய்வேன். உடம்பெல்லாம் அதிர்கிறதே.

என்னை மன்னித்துவிடேன். நானுன்னுடன் உறங்கியதால் தான் உனக்குக் கனவு வந்தது.

அதில் நீ கண்ட எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு எழுதித்தருகிறேன் . வா நண்பா.

வா.

(மெளணம் சில நொடிகளுக்குப்பின்.)

நண்பனே உன்னை எப்படி மீட்பேன். நீயின்றி ஒரு நொடியும் என்னால் வாழமுடியாதே.

உன்னை. . . உன்னை. . . அய்யோ என்ன செய்வேன். உடம்பெல்லாம் அதிர்கிறதே.

என்னை மன்னித்துவிடேன். நானுன்னுடன் உறங்கியதால் தான் உனக்குக் கனவு வந்தது.

அதில் நீ கண்ட எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு எழுதித்தருகிறேன் . வா நண்பா.

வா.

(மெளணம் சில நொடிகளுக்குப்பின்.)

நண்பனே உன்னை எப்படி மீட்பேன். நீயின்றி ஒரு நொடியும் என்னால் வாழமுடியாதே.

உன்னை. . . உன்னை. . . அய்யோ என்ன செய்வேன். உடம்பெல்லாம் அதிர்கிறதே.

என்னை மன்னித்துவிடேன். நானுன்னுடன் உறங்கியதால் தான் உனக்குக் கனவு வந்தது.

அதில் நீ கண்ட எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு எழுதித்தருகிறேன் . வா நண்பா.

வா.

(மெளணம் சில நொடிகளுக்குப்பின்.)

நண்பனே உன்னை எப்படி மீட்பேன். நீயின்றி ஒரு நொடியும் என்னால் வாழமுடியாதே.

உன்னை. . . உன்னை. . . அய்யோ என்ன செய்வேன். உடம்பெல்லாம் அதிர்கிறதே.

என்னை மன்னித்துவிடேன். நானுன்னுடன் உறங்கியதால் தான் உனக்குக் கனவு வந்தது.

அதில் நீ கண்ட எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பு எழுதித்தருகிறேன் . வா நண்பா.

வா.

(மயங்கி விழுகின்றான். தூரத்திலிருந்து ஒலி. அது ஒரு

பெருங்கும்பலொன்று ஏதோ பல்லத்தில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளவது போல்

ஒலிக்கிறது.) . ?

***

danasegar73@yahoo.com

magizham@rediff.com

Series Navigation