மறைக்கப்பட்ட செய்திகளும் பக்கச்சாய்வான விவாதமும்

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

வந்தியத் தேவன்



நமது அண்டை நாடான பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியாளரான முஷாரப் அவர்களின் உச்சநீதிமன்ற நீதிபதியினை பதவி நீக்கம் செய்த செயல்பாட்டினை வழக்கறிஞர்கள் சங்கம் மிகுந்த ஒற்றுமையுடன் போராடி அரசியல் கட்சிகளின் உதவியுடன் முறியடித்து மக்களாட்சியை மீண்டும் நிறுவப் பெரும் பங்காற்றியது. மேலும் புதிதாக உருவான சர்தாரியின் மக்கள் கட்சி அரசு தனது முந்தைய வாக்குறுதியை நிறைவேற்றாததால் மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கி எதிர்க்கட்சிகளின் உதவியுடன் அரசைப் பணிய வைத்து உச்சநீதிமன்ற நீதிபதியை பதவியிலமர்த்;தி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஒரு நாட்டின் அரசமைப்பு முறையை மக்களாட்சி முறைக்கு மாற்றவும்இ நடைபெற்று வரும் மக்களாட்சி முறையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் ஒற்றுமை எவ்வளவு இன்றியமையாதது என நிறுவப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழுர் பிரச்சனைக்காக நடந்த தீக்குளிப்பு சம்பவங்கள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள் பொதுநல இயக்கங்கள் மற்றும் மாணவர் போராட்டங்கள் ஆகியவற்றை விடவும் வழுக்கறிஞர்களின் போராட்டம் மிகுதியான கவன ஈர்ப்பை பெற்றது. இது மாநில அரசுக்கும் உறுத்தலைத் தந்திருக்கக் கூடும். இதன் பிறகு பிப்ரவரி 19ம் தேதி உயர்நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினைரால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலுக்கு எதிராக மிக நீண்ட போராடட்டதை நடத்தி தாக்குதலுக்கு ஆணையிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்கிற தீர்ப்பினை பெற்று தற்காலிகமாக போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட போராட்டங்கள் தொடர்பாக மக்கள் தொலைக்காட்யின் சங்கப்பலகை என்கிற நிகழ்ச்சியில் கடந்த 29.3.2009 அன்று தோழர் தியாகுவும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அமர்நாத் என்பவரும் விவாதித்தனர். வழக்கறிஞர் அமர்நாத் அவர்கள் கூறும்போது வழுக்கறிஞர்களின் முதல் கட்ட போராட்டமான ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஆதரவுப் போராட்டம் வெற்றிகரமாக பிப்ரவரி 18 வரை நடந்து முடிந்ததாகவும் அதன் பிறகு பணிக்கு திரும்பிய வழக்கறிஞர்களை காவல்துறையினரின் வன்முறைத்தாக்குதால் காரணமாக சுமார் 70 முதல் 80 வழக்கறிஞர்கள் வரை காயமடைந்து முதலில் அரசு மருத்துவமனையிலும் பிறகு அப்பல்லோ மருத்துவமணையிலும் தங்கி சிகிச்சை பெற்றதாகவும் பெருமளவு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும் போராட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதால்தான் மிகப்பெரும் வெற்றியை அடைய முடிந்ததாகக் கூறினார். மேலும் போராட்டத்தை குலைக்க தி.மு.க. கட்சியின் வழக்கறிஞர்கள் மூலமாக அரசு எடுத்த நடவடிக்கை பிசுபிசுத்துப் போனதையும் குறிப்பிட்டார். அரசு இருதுறையினரையும் சமாதானமாக போகும்படி சொன்னதையும் கூறினார். சமாதானமாக போகவில்லை என்றால் முதல்வர் உண்ணாநிலை மேற்கொள்ளப் போவதாக சொன்னார்இ ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வழக்கறிஞர்கள் இந்த செய்தியைக் கேட்டவுடன் காலையிலிருந்து மாலைவரை உண்ணாநிலை மேற்கொண்டதாகவும் கூறினார். இப்பிரச்சினை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தாக்குதலுக்கு ஆணையிட்டவர்கள் யாரென சொல்லாமலே மழுப்பிவிட்டு செய்தியாளர்களிடம் சொல்லி விட்டதாக அரசு பொய்சொன்னதாகச் சொன்னார். நீதிபதி கிருஷ்ணா அவர்களின் ஆய்வறிக்கையில் கூட இப்பெயர்கள் தெரிவிக்கப்படவில்லையெனக் கூறினார். இறுதியாக நடைபெற்ற வெற்றிப்பேரணியில் சுமார் 25இ000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டதாகவும் காவல்துறையினரின் பாதுகாப்பு உதவியின்றி சிறப்பாக நடந்ததாகவும் குறிப்பிட்டார். பேரணியின் போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு கூட வழக்கறிஞர்கள் பாதுகாப்பு தந்ததாகக் குறிப்பிட்டார். மூத்த வழக்கறிஞர்கள் இந்தப்போராட்டங்களில் நேரடியாக ஈடுபடவில்லையெனக் கூறுவது முற்றிலும் தவறு எனவும் மூத்த வழக்கறிஞர்கள் சுமார் 30 லட்சம் ரூபாய் அளவில் நிதி திரட்டி பாதிக்கபட்ட அனைத்து வழக்கறிஞர்களுக்கும் உதவியதாகக் குறிப்பிட்டார்.
மேற்கண்ட விவாதத்தில் மறைக்கப்பட்ட செய்திகள் மொத்தம் நான்கு. முதலாவது பிப்ரவரி 18ம் தேதி சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கில் தீட்சிதர்கள் சார்பில் வாதாடவந்த சுப்ரமணியசாமி மீது வழக்கறிஞர்களால் நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மூன்றாவது வழக்கு தொடர்பான வழக்கறிஞர்களை தாங்களாகவே ஒப்புவிப்பதாகச் சொல்லிக்கொண்டு வழக்கறிஞர் கூட்டம் உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள புறக்காவல் நிலையம் சென்றது. நான்காவது புறக்காவல் நிலையத்தில் ஏற்பட்ட சர்ச்சையில் காவல் நிலையத்தின் பொருட்களைச் சூறையாடியதுஇ காவலர்களை மிரட்டியது, ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தியது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டது.
மேற்கூறப்பட்ட காரணங்கள் தாம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் இரண்டாம் கட்ட போரட்டத்திற்கான காரணங்கள் என்பதை எல்லோரும் அறிவர். அவ்வாறு இருக்கும்பொழுது மேற்கூறப்பட்ட வன்முறைச் செயல்களில் வழக்கறிஞர்களுக்குப் பங்கு ஏதும் இல்லையென மறுத்துக் கூறவோ அல்லது அவை அரசு மற்றும் காவல் துறையினரால் செய்யப்பட்டவை என்றுகூறவோ இயலவில்லை. ஏன் சிறிதளவு வன்முறை வழக்கறிஞர்களால் ஏற்படுத்தப் பட்டிருந்தாலும் உடனடியாக காவல்துறை தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் என்ன?. சிறிது காலத்திற்கு முன்பு சென்னை சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை யாரும் மறந்திருக்க இயலாது. அப்பொழுது காவல் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என வழக்கறிஞர்களும் மற்றவர்களும் கண்டனம் தெரிவித்ததும் அரசு காவல்துறை அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்ததும் யாவரும் அறிந்ததே. சட்டக்கல்லூரி சம்பவத்தில் சற்று முன்னோக்கிப்பார்த்தால் இதற்கு முன் இவ்வாறு பிரச்சனை ஏற்பட்டு காவல்துறையினர் கல்லூரிக்குள் நுழைந்து நடவடிக்கை எடுத்த போது மாணவர்களுக்கிடையே நடந்த சிறு பிரச்சினையை காவல்துறை பெரிதாக்கி விட்டதாக மாணவர்களும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்து பிறகு அரசு தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்தது.
என்னுடைய சிந்தனையின்படி பிப்ரவரி 19 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியமான காரணம் என்னவெனில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய இருவரும் மக்களாட்சி நடைமுறையில் உயர்ந்த அதிகாரம் மிக்கவர்கள் தாங்களே என்ற தன்முனைப்பு(நுபழ) மிகுந்த ஆதிக்க(னுழஅiயெவெ) போட்டி மனப்பாங்கே காரணமாகும். இவ்விரு துறையினரும் சமூகத்தில் அமைதி நிலவவும் மக்கள் நிம்மதியுடன் வாழவும் சட்டரீதியாக தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளவும் மக்களிடம்(மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம்) கூலிபெற்று வேலைபார்ப்பவர்கள் என்பதை நினைவில் நிறுத்தினால் போதுமானதாகும். தமிழில் சிந்திக்கத் திராணியுள்ள சில மனிதர்கள் விரும்பிப்பார்க்கும் ஒரே காட்சி ஊடகம் மக்கள் தொலைக்காட்சிதான். அத்தகைய ஊடகத்தில் தோழர். தியாகு போன்ற அனுபவமிக்க போராளிகள் ஒரு நிகழ்வின் சில முக்கிய பகுதிகளை மறைப்பது மற்றும் பக்கச்சாய்வான விவாதத்தில் ஈடுபடுவது ஒரு சிறந்த நடைமுறையாக இருக்க இயலாது என நம்புகிறேன். எனவே இனிவரும் காலங்களில் தோழர். தியாகு அவர்கள் விவாதங்களின் போது நிகழ்வின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி விவாதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
(பின் குறிப்பு: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில் படித்த என்னுடைய நண்பர் ஒருவர் அவர் படிக்கும்போது சட்டக்கல்லூரி மாணவர்விடுதியில் சாதிப்பிரச்சனை அதிகமாக இருப்பதாக என்னிடம் வேதனையுடன் கூறியிருந்தார்)

Series Navigation