மறுபடியும் மனு ஸ்மிருதி

This entry is part [part not set] of 35 in the series 20070308_Issue

மலர் மன்னன்இடதுசாரி சிந்தனையுள்ள பெண்ணியவாதிகள் ஆக்ரோஷத்துடன் மனு ஸ்மிருதி நூலின் பிரதியை, அது ஏதோ நடப்பில் உள்ள சட்டம் மாதிரி ஒரு பிரமையைத் தோற்றுவித்துக் கொண்டு, பொது இடத்தில் தீயிட்டுக் கொளுத்தியதுண்டு.

சமஸ்கிருதம் படித்த அறிவாளி அம்பேத்கருங்கூட ஒரு மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சியாக மனு ஸ்மிருதி நூலின் பிரதியைக் கொளுத்தியிருக்கிறார். மனு ஸ்மிருதியை ஆதாரம் காட்டித்தான் தீண்டாமைக் கொடுமைகள் நியாயப்படுத்தப்படுவது போன்ற ஒரு பிரமையை அவர் தோற்றுவித்திருக்கத் தேவையில்லைதான். மனு ஸ்மிருதி என்கிற பெயரையே கேள்விப்படாத அடித்தட்டு மக்களால்தான் தீண்டாமைக் கொடுமைகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றன என்பதை அறியாதவரல்ல, அம்பேத்கர்.

ஓலைச் சுவடிகளில் இருந்த பழந் தமிழ் இலக்கியங்களில் கூடப் பிரதிக்குப் பிரதி பாட பேதங்கள் இருந்ததாக அறிகிறோம். பல தன்னம்பிக்கை யில்லாத பேர்வழிகள் தம் பெயர் வெளிப்படாவிட்டாலும் பரவாயில்லை தாம் எழுதிய வரிகள் பிரசித்தி பெற்ற இலக்கியப் படைப்புகளில் புகுந்து, சாகா வரம் பெற்றுவிடட்டும் என்று தமது கிறுக்கல்களைக் காவியங்களில் இடையிடையே செருகிவிடுவதுண்டு. புலமை மிக்கவர்கள் இந்த இடைச் செருகல்களை அடையாளங் கண்டுகொண்டு விடுவார்கள். எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்கிற மாதிரியும் இடைச் செருகல்கள் நுழைந்துவிடுவதுண்டு. அவற்றையும் பயிற்சி மிக்க புலவர்கள் கழித்துக் கட்டிவிடுவதுண்டு.

படைப்பிலக்கியங்களுக்கே இம்மாதிரியான ஆபத்துகள் நேரும்போது அற நூல்களுக்கு இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் அல்லவா? சொல்லப்படாத ஒன்றை, அது தனக்குச் சாதகமாக உள்ளது என்பதற்காகச் சொல்லப்பட்டதுபோல் கற்பிக்கும் குறுக்கு புத்தியுள்ளவர்கள் எல்லாக் கால கட்டத்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். தீவிரமான படிப்பாளிகள் அதிகம் இல்லாத முன் காலத்தில் இப்படிச் சிலர் தமக்கு இசைவான கருத்தை மரியாதைக்குரிய ஓர் அறநூலில் புகுத்தித் தமது இச்சையைப் பூர்த்தி செய்துகொண்டிருக்கக் கூடும் அல்லவா?

ஒரு தர்ம சாஸ்திரத்தின் ஆதார சுருதி எவ்வாறு உள்ளது என்று ஆராய்ந்து பார்த்து, எங்கெல்லாம் அபசுரம் கேட்கிறதோ அங்கெல்லாம் திருத்தம் செய்வதுதான் ஆய்ந்தறியும் அறிவாளிகளுக்கு அழகு.

திருக் குறளில் அதன் ஆதார சுருதிக்கு மாறாக இரு குறள்கள் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் எந்த மனநிலையில் இருக்கையில் எழுதியிருக்கக்கூடும் என்று யோசிக்க வேண்டும்.

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொõறுத்தானோ டூர்ந்தான் இடை

இரந்து முயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான்

என்கிற இரு குறள்கள்தாம் சுருதி பேதம் காட்டுகின்றன.

சிவிகையில் அமர்ந்து செல்பவனிடமும் அந்தச் சிவிகையைச் சுமந்து செல்பவர்களிடமும் (அவர்கள் ஒருசேர இருக்கையில்?) அறம் இன்னதென்று எடுத்துக் கூற வேண்டாம் என்கிறது முதல் குறள்.

அவ்வறாயின் அறமானது ஆளுக்கு ஆள், அவரவர் வசதியான வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்பவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போலவும் சமரசம் செய்துகொள்ளக் கூடியதா? அறம் என வள்ளுவர் குறிப்பிடுவது அவரவர் நிலைக்கு ஏற்பக் கடைப்பிடிக்க வேண்டிய தருமமா? அவ்வாறெனில் சிவிகையில் செல்லும் சமுதாயத்தின் உயர் நிலையில் இருக்கிறவன் அனுசரிக்க வேண்டிய தருமம் ஒருவகை, சிவிகை சுமந்து செல்லும் கீழ் நிலையில் உள்ளோர் அனுசரிக்க வேண்டிய தருமம் இன்னொரு வகை: ஆகவே இருவருக்கும் பொதுவாக ஒரு தருமத்தைச் சொல்ல வேண்டா என்கிறாரா? அவ்வாறயின் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றுதான் அவரும் சொல்வதாக ஆகிவிடாதா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்கிற குறளின் ஆதார சுருதிக்கு இது முரண் அல்லவா?

பிச்சையெடுத்துத்தான் ஒருவன் உயிர் பிழைக்க வேண்டியிருப்பின் அப்படியான இவ்வுலகைத் தோற்றுவித்த இறைவனும் பிச்சைக்காரன் பிச்சைக்காக அலைந்து திரிவது போலவே தானும் திரிந்து கெட்டுத் தொலையட்டும் என்கிறது இரண்டாவது குறள்.

ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு மனிதனால் உருவாக்கப்பட்ட சமூக ஏற்பாடு அல்லவா? இதற்கு இறைவன் மீது குற்றம் கண்டு அவனைச் சபிப்பது தவறு என்று திருவள்ளுவருக்குத் தெரியாதா? ஒருவேளை உலகியற்றியான் என அவர் குறிப்பிடுவது சமுதாய விதிமுறைகளை ஏற்படுத்திய ஆதிக்க சக்திகளையா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்று தொடங்கும் குறள் இறைச் சக்தியை இப்படிச் சபிக்கக் கூடுமா?

எந்நிலையிலும் மாந்தர் தமது ஒழுக்கத்திலிருந்து வழுவலாகாது என்பதுதான் திருக் குறளின் அடி நாதமாக இருந்து வருகிறது. ஆன்மிகக் கண்ணோட்டத்திலேதான் அது இறையுணர்வைப் பற்றிப் பேசுகிறது. உலகாயதத்துடன் அதனை சம்பந்தப் படுத்திக் குழப்பிக்கொள்வதில்லை. எந்தவொரு குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரையும் அது பேசாதமைக்குக் காரணமும் இதுதான். ஆன்மிகம், உலகாயதம், தனி நபர், குடும்பம், சமூகம், நாடு, ஆட்சியாளர், பிரஜைகள் என்கிற பிரிவுகளைப் பற்றி மிகவும் தெளிவாக இருப்பது திருக்குறள். ஒவ்வொரு பிரிவுக்கும் உரித்தான ஒழுக்கத்தை அது வலியுறுத்துகிறது.

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகமும் அருள் இல்லாதவர்களுக்கு அவ்வுலகமும் இல்லை என்று தெளிவாகவே சொல்கிறார், வள்ளுவர். கடவுளைப் பற்றி பாமரத்தமான நம்பிக்கைகளை அவர் வெளிப்படுத்தவில்லை.

திருக்குறள் தொகுக்கப்பட்டு, அதிகாரவாரியாகப் பெயரிடப்பட்டு வாசிக்கப்பட்டது பிற்காலத்தில் வேறு உரைக்காரர்களால்தான். அறம் பொருள், காமம் என அதனை வரிசைப் படுத்தியது வள்ளுவர் அல்ல.

ஆய்வுப் பார்வையுள்ள கண்ணதாசன் இந்த வரிசையே தவறு என்று சொல்வதுண்டு. வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களை ஒருவர் உணர்வது முதலிலும், அவற்றை நேரான வழியில் பெறுவதை வலியுறுத்தும் அறம் இரண்டாவதாகவும் அவற்றைப் பெறுவதற்கு அவசியமான பொருள் மூன்றவதாகவும் வரிசைப்படுத்துவதுதான் பொருத்தமாக இருக்கிறது என்பார். இது பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதவும் அவர் திட்டமிட்டிருந்தார்.

இப்படியெல்லாம் அறிவுபூர்வமாக அணுகி, ஒன்றுகொன்று முரணாக உள்ள செய்யுள்களை ஆராய்ந்து மனுவுக்கு என்ன ஒரு ஸ்திரபுத்தியே இருக்காதா என்று யோசித்து, அறத்தை வலியுறுத்தும் ஒருவன் இப்படியெல்லாம் விதிக்கக் கூடுமா எனவும் சிந்தித்து அபத்தமாக உள்ளவற்றையெல்லாம் தூக்கி யெறிவதற்குப் பதிலாக அவற்றையே பிரதானமாகப் பொருட்படுத்தி, அந்த நூல் முழுவதையுமே தீயிட்டுப் பொசுக்கிவிடுவது சரிதானா? ஹிந்து சமயத்தின் மீதுள்ள சினம்தான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறதே யன்றி, நிதானமான பரிசலனைக்குப் பிறகான முடிவு அல்லவே!

எமது மத நூலில் உள்ளதைதான் இது பேசுகிறது என்றால் எமது மத நூலே இருக்கையில் இது எதற்கு என்று ஒரு நூலையும், எமது மத நூலில் இல்லாததையெல்லாம் இது சொல்கிறது என்றால் இது இருக்கவே கூடாது என்று இன்னொரு நூலையும், ஆக எமது மத நூலைத் தவிர வேறு எந்த நூலுக்கும் அவசியமில்லை என்று எல்லா நூல்களையும் குவித்துக் கொளுத்தியவர்கள் போலவா நடந்துகொள்வது?

மனு ஸ்மிருதியை ஸ்லோகம் ஸ்லோகமாகப் படித்துக் கொண்டு வருகையில் இது நிச்சயம் இடைச் செருகலாகத்தான் இருக்க முடியும் என்று சாமானிய அறிவுள்ளவருக்குக் கூடப் புலப்பட்டுவிடும். சில அபத்தமான விதிகள் வக்கிர புத்திக்காரர்கள் இப்படியிருந்தால் நன்றாக இருக்குமல்லவா என்று ஆசைப்படுவதுபோல், விஷ்புல் திங்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அதுமாதிரியான தொனியில் உள்ளன. மேலும் அம்மாதிரியான அபத்தமான விதிகள் பாரத தேசத்தின் எந்தப் பகுதியிலும் நடைமுறையில் இருந்தமைக்கான சான்றும் இல்லை. மிக உயர்ந்த சிந்தனைப் போக்குடன் ஒழுக்க விதிகளை விவரிக்குமொருவர் இப்படி அபத்தமகவும் விதிகளை வகுத்திருக்ககூடுமா என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா?

புராணங்களை வரலாறுபோல் பாவித்து வரிக்கு வரி அங்கீகரிப்பது சாத்தியமல்ல. பூடகமான அவற்றை அனுமானங்களின் மூலமாகத்தான் அணுக முடியும். அவை சொல்லும் செய்தியை நேரடியாக ஏற்பதற்குப் பதிலாக அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று யூகிக்கத்தான் இயலும். ஆகவே மனுவைப் புராணக் கண்ணோட்டத்துடன் பார்ப்பது பொருத்தமல்ல. புதிருக்கு விடை காண்பதுபோலத்தான் புராணங்களைப் புரிந்து கொள்ளல். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடை கிடைத்து, அதுவே சரியென்று அவரவர் வாதிடவும் தோன்றும்.

முதலில் மனு என்பதாக ஒரு மனிதர் எழுதியதுதான் மனு ஸ்மிருதி என்று கருதப்படுவதே தவறாக இருக்கலாம். மனுக்குலம் எனப்படுகிற மானிட வர்க்கதாருக்குரிய தர்ம சாஸ்திரம் என்கிற பொருளில் அதனை இயற்றியவர் மனு ஸ்மிருதி என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கலாம். பின்னால் வந்தவர்கள் அவரவருக்குத் தோன்றியவாறு அதில் விதிகளைச் சேர்த்துக்கொண்டே வந்திருக்கலாம். பல நூறு ஆண்டுகளைக் கடந்துவரும் ஒரு நூலுக்கு, அதிலும் மக்களின் ஒழுக்க விதிகளைப் பிரதானமாகப் பேசுகின்ற ஒரு நூலுக்கு இம்மாதிரியான சோதனைகள் ஏற்படுவது சாத்தியம்தான்.

தொன்மையான மொழிகளில் ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதையும் அறிவோம். இதனால் அர்த்தமே அனர்த்தமாகப் போவதும் உண்டு! ஓரேயொரு உதாரணம் போதும் இதற்கு: சமஸ்கிருதத்தில் மஹிஷி என்றால் அரசி, அதே சமயம் பெண் எருமையும்தான்! சபைக்கு மஹிஷியை அழைத்து வந்தார்கள் என்றால் அழைத்து வந்தது ராணியை, எருமைக் கிடேரியையை அல்ல என்று இடம், பொருள், ஏவல் பார்த்து அர்த்தப் படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்!

சொற்களைப் பிரிக்கும் விதத்திலும் பொருள் மாறிப் போய்விடுவதுண்டு. மனுஸ்மிருதியைப் பற்றிப் பேசும்போது இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தலை விதி வசம் என்பது தலைவி திவசம் என்று ஆனாற் போலத்தான்!
கேரள சம்பிரதாயத்தைப் பிடிக்காத வேற்று வட்டார சமஸ்கிருத பண்டிதர் ஒருவர்,
கேரளம் வானராசாரம், அதாவது கேரளத்து சம்பிரதாயம் குரங்குகளின் சம்பிரதாயம்தான் என்று கிண்டல் செய்தாராம். அதற்குக் கேரளத்து சமஸ்கிருதப் பண்டிதர், ஆமாம், கேரளம்வா, நராசாரம், அதாவது கேரளத்து சம்பிரதாயம்தான் மானிடர் சம்பிரதாயம் என்றாராம், சாமர்த்தியமாக!

ஆண்களுக்கு இடுப்புக்கு மேலே உள்ள துவாரங்கள்தாம் சுத்தமானவை; பெண்களுக்கோ உடம்பு முழுவதுமே பரிசுத்தமானது எனப் பெண்களைப் போற்றும் மனு ஸ்மிருதியைப் பெண்ணியவாதிகள் கொளுத்துவதும், எந்த ஸ்மிருதியில் உள்ள விதியாயினும் காலத்திற்கு ஒவ்வாதெனில் ஒதுக்கிவிடுக என்று தீர்மானமாகச் சொல்லும் அதனை சமூக ஏற்றத் தாழ்வு நடை முறையைக் கண்டிக்கும் ஒரு சாரார் எரிப்பதும் ஆங்கில மொழியின் வழியே உள்நோக்கத்துடன் விமர்சிக்கப்படும் மனு ஸ்மிருதியின் ஒரு சில சுலோகங்களைப் படித்ததன் விளைவே யல்லவா?

ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், மீண்டும் ஒருமுறை தனியாக அல்லாமல், ஆய்வுப் பார்வையுள்ள விவரம் தெரிந்த சிலரை உடன் வைத்துக்கொண்டு சமஸ்கிருத மூலத்தில் மனுஸ்மிருதியை வரிவிடாமல் படித்து, சிந்தித்து, உடன் வாசிப்போரிடம் விவாதித்து, பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விரிவுரை என்றெல்லாம் மறு வாசிப்பில் மனு ஸ்மிருதி என எழுத விருப்பம் தோன்றுகிறது. ஆனால் இதற்கு வேளையும் வாய்ப்பும், உடல், மன நிலையும் கூடிவருமா என்றுதான் சந்தேகமாக இருக்கிறது.


malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்