மருதாணி

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

புகாரி, கனடா


அடா மருதாணீ

என்
விரல் கன்னியர்
நாணிச் சிவக்க
அப்படி என்னதான்
ரகசியம் சொன்னாய்

என்
மன்மதன் அனுப்பியோ
இங்கு நீ
தூது வந்தாய்

நீ
முத்தமிட்டு
முத்தமிட்டா
என்
விரல் நுனிகள்
இப்படிச் சிவந்தன

O

மருதாணீ
நீ
யாருக்குப் பரிசம் போட
இங்கே
பச்சைக் கம்பளம்
விரித்தாயோ

அடியே…
நீ
வெற்றிலையைக் குதப்பி
என்
விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்

அன்றி…
உன்னை
நசுக்கி அரைத்து
இங்கே
அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும்
இரத்தக் கண்ணீரோ
இது

அழாதேடி தோழீ

உன்
மரகத மொட்டுக்கள்
என்
சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப்
பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்

என்
அவருக்காய்
காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன்
காயங்களுக்கு
அவர் இதழ் எடுத்து
ஒத்தடம்
கொடுக்கச் சொல்லுகிறேன்.

*

buhari@rogers.com

Series Navigation