மனு நீதி

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

எஸ்ஸார்சி


‘நீ ஒரு கம்முனேட்டிங்றது தான் இங்க முக்கியம் .பின்ன என்னாத்துக்கு கவர்மென்டுல உனக்கு ரூவா குடுக்குறான்.’ அதட்டலாய் க்கேட்டான். அந்த தாலுக்கா அலுவலக அரச மரத்தடி நிழல் அமர்ந்து வழக்கமாய் மனு எழுதும் தாடிவைத்த எழுத்துக்காரன்
சவுந்தலாவுக்கு இது கொஞ்சம் அதிகம் என்றாலும் அவன் சொல்வதே சரி ஏன்று பட்டது. வயது ஐம்பதை எப்போதோ தாண்டிய சவுந்தலாவுக்கு இன்று யார் இருக்கிறார்கள். தருமங்குடி பஞ்சாங்க ஐயர் வீட்டில் தெரிந்த நாளாய் கூடைகூடையாய் பத்து பாத்திரம் தேய்க்கிறாள் அக்கிரகாரத்து ஆலோடி போட்ட அய்யரின் ஒட்டு வீடு முழுதும் இரண்டு வேளை குனிந்து குனிந்து பெருக்குகிறாள்.
.சவுந்தலாவின் தந்தை குப்பன் எப்போதோ இல்லை. அவன் மாரி கோவிலில் பூசாலியாய் வேப்பிலைக் கரகமும் அக்கினிச்சட்டியும் தூக்கியே காலம் தேய்த்து முடிந்துபோனவன். மாரிக்கடவுள் பெண்ணென்றாலும் குப்பனுக்கு ஆண் வாரிசு என்று ஒன்று இருந்தால் மட்டுமே கோவில் பூசைக்கு சரிப்பட்டு வரும். மைக் வைத்த மேடையில் தாண்டிக்குதித்து ப் புரட்சிப்பெண்ணியம் சிலது பேசி விடலாம். மற்றபடிக்கு காரியம் ஏதும் ஆகாது.
பூசாலி .குப்பனுக்கு ஆத்தா மாரி அருளியது இரண்டும் பெண் குழந்தைகள். சின்னவள் ஆர்வக்கோளாறில் அவசரப்பட்டு முந்திக்கொண்டாள். முன்னமேயே திருமணமாகி குடியும் குடித்தனமாய் வாழ்ந்த ஒருவனை கள்ளத்தனமாய் காதலித்து தருமங்குடியை விட்டே ஔடிப்போனாள். யாரைக்குறை சொல்வது எப்போதும் தூரப் பார்வையற்றவைதானே இந்த பாலியல் உணர்வு சமாச்சாரங்கள். அவள் தருமங்குடிக்கு இனி திரும்ப வந்து வாழவும் முடியாது ஒரு வழியில் கோணலாய் அதுவும்சரி என்றபடிக்கு ஊர்க்கட்டுப்பாடு அந்தச் சின்னவள் எங்கு போனாளோ. என்ன ஆனாளோ பெற்றெடுத்த தாய் தங்காயாள் தான் செத்துப்போன சமயம் சகுந்தலாவுக்கு இருக்கட்டும் என்று
விட்டுப்போனது பவுன்தோடு ஒரு ஜதை . அதுமட்டுமே பவுன். சவுந்தலாவின் ஆகப்பெரிய சொத்து பத்து பலம் எல்லாம். தங்காயாள் இற்றுக்கொண்ட அன்று கைப்பாடைக்கு மூங்கில் வெட்டிச்சீவிய தருமங்குடி ஏகாலிச் சிங்காரம் சவத்திலிருந்து கழட்டிக்கொடுத்து.. ‘ ஏ சகுந்தலா இதப் புடி நாளக்கு ஒரு காலம் உன் சாவு மோதலுக்காச்சிம் இந்தக் கம்மலு ஆவும் பதனமா வச்சிகு’ சகுந்தலாவிடம் சொன்னதுதான்.
அந்த வட்ட ஆட்சியர் அலுவலக வளாகத் தரைமீது சம்மணமிட்டமர்ந்த எழுத்துக்காரன் மீண்டும் ஆரம்பித்தான் ‘ காதுல போட்டுகினு இருக்கிற கம்மல கழட்டு ஒண்ணும் யோசன பண்ணாத. கட்டிகிட்ட புருசன் செத்துட்டான்னு சொல்லுற. துரை அய்யாகிட்ட நின்னு நா ஒரு அனாதன்ற கையேந்துற அப்பறம் என்னா தோடு சிமிக்கி பூணாரம்’ கறாராய்ப்பேசினான்.
சமுத்திர குப்பத்து வெள்ளைக்காரன் கட்டிய தாலுக்கா அலுவலகம். செந்நிறத்து முனிசீப் கோர்ட்டும் இதே வளாகத்துள் இருப்பதால் தாம் ஆற்றும் அருஞ்செயலுக்குப் பொருத்தமாய்க் கருப்பு சட்டை மாட்டிக்கொண்ட வக்கீல்கள். அங்கும் இங்குமாய் அல்லாடிக்கொண்டிருந்தார்கள். நான்கைந்து கிளி சோசியக்காரர்கள் மண் தரையில் தள்ளி தள்ளி அமர்ந்து ஜம்பம் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைச்சுற்றி கூட்டமாய்த் தெரிந்தது . சமுத்திரகுப்பத்து தாசில்தார் அய்யாவை ப்பார்த்து அவள் விதவை உதவித்தொகைக்கு இனி மனு கொடுத்தாக வேண்டும். அரசாங்கம் அளித்து இருக்கிற பெருங்கருணைச் சலுகை. அனாதை அபலைப்பெண்களுக்கு இப்பவும் மாதம் ரூபாய் நானூறு. அதனில் நாற்பது ரூபாய் ஒன்றும் அதிகம் இல்லை. ஒரு நூற்றுக்கு பத்து என்கிறபடி நானூறுக்கும் நாற்பது மட்டும் வீடு தேடி வந்து பணம் பட்டுவாடா செய்யும் அந்தந்தபால்காரருக்கு மாமூலாய்ப்போய்விடும். பார்டிக்கு பாக்கி நிச்சயம். சவுந்தலாவிடம் தருமங்குடியில் இத்யாதி பென்சன் வாங்கும் மூத்த குடிமக்கள் ஒரிருவர் விளக்கமாய் இது விஷயம் சொல்லி இருக்கிறார்கள். ஆகத்தான் தனக்கு என்று இருந்த ஒரு ஆட்டுக்குட்டியினையும் சேத்தித்தோப்பு சந்தையில் விற்றுக் காசாக்கிக்கொண்டு சமுத்திர குப்பத்துத்தாலுக்கா அலுவலகம் வந்திருக்கிறாள் சவுந்தலா. விண்ணப்ப மனு வைத் தாலுக்கா அலுவலகம் பெரிய ஆபிசில் சேர்த்துவிட்டால் போதும் மீதி வேலையை தருமங்குடி த்தபால்காரன் கச்சிதமாய் முடித்து வைப்பான். ஊர் மணியக்காரர் ரெவின்யூ இன்சுபெக்டர் என்று ரெட்டைப்படிக்கட்டுக்கள் ஏறி இறங்காது எந்தக்காரியம் தான் யாருக்குத்தான் ஆகும் சொல்லுங்கள். ஆட்டுக்குட்டி விற்ற பணத்தில் தாலுக்கா அலுவலகத்து எழுத்துக்காரனுக்கு இருபத்தைந்து போக மீதியை தபால்க்காரனிடம் ஒப்படைத்துவிடவேணும் என்பதில் மிகக் கவனமாய்
இருந்தாள் அவள். தபால்க்காரன் சொன்னால் சொன்னது என்றும் வார்த்தை பிசகாதவன் என்றும் ஊரில் பேசிக்கொண்டார்கள். ‘சென்ரல் கவர்மென்ட் உத்தியகம் லேசுப்பட்டதுவா என்றும் மகிழ்ந்து போனார்கள்.’ பென்சன் வாங்கும் பலான ஆள் ஊரில் இல்லை எங்கு தேடியும் கிழத்தை க்காணோம் என்று ஒரு சின்ன ரிபோர்ட் எழுதிக்கிறுக்கினால் போச்சு பென்சனே இனி இல்லை என்று ஆக்கிவிடமுடியும் தான், ஆனால் தருமதுரைகள் அப்படியா செய்கிறார்கள் இல்லையே ஆக க்காசு கொஞ்சம் கொடுப்பதில் ஒன்றும் தவறு இல்லை. காசு எண்ணைக்கும் பெரிசில்லை ஆகும் காரியம்தான் பெரிசு’ இப்படித்தான் பெருமையாய்ப் பேசிக்கொண்டார்கள்..
‘அம்மா நீ காதுல இருக்கிறத கழட்டிடு இல்ல உன் சவுரியம் அப்பறம் பெரிய அய்யாவ பாத்துட்டு வந்து என்ன கொற சொல்லுறது கோளாறு சொல்லுறது கூடாது. எத்தினி கழுதவுளை இங்க பார்த்து இருக்கேன் நா ஒரு சமாச்சாரம் சொன்னா கேட்டுக்குணும்’
எழுத்துக்காரனைப்பார்க்க அவளுக்கு இப்போது அச்சமாக இருந்தது. தோட்டைக்கழட்டி விடுவது நல்லதுதான். தங்கத்தில் இருக்கும் ஒரே தோடு அதுவும் ஒரு விதவைப்பெண்ணுக்கு. ஊரின் தெற்கே ஔடும் மணி முத்தாற்றுப்படுகைக் குழியில் நிரந்தரமாய் சவுந்தலாவின் கணவன். அவனைப் புதைத்த மேட்டில் கைகையாய் சப்பாத்தி முளைத்து விட் டிக்கிறது .அவன் தான் இவளுக்கு விதவைப்பட்டமாவது அருளியிருக்கிற ஆண்மகன். அவனும் இவளைக் கட்டி மடிந்து போகாவிட்டால் அந்த விதவைப்பட்டத்திற்கு சவுந்தலா என்ன செய்யமுடியும். கழுத்தில் தாலி ஏறாத கன்னியர்கள் தருமங்குடியில் படும் அன்றாடப் பாடு எல்லாம் மடியுலும் மார்பிலும் இறுக்கமாய் அணைத்து வைத்துக்கொண்டு அருள் பாலிக்கின்ற கடவுளர்க்குத்தெரிய நியாயம் இல்லை.
எந்த ஆண்பிள்ளைக்குத்தான் மனம் ஒப்பும். எண்ணிப்பார்த்தாள் சவுந்தலா. வக்கில்லா நாயிக்கு காதில் பவுன் கம்மல் எதற்கு. சரித்தான். தாடி வைத்த எழுத்துக்காரன் சொல்வதும்.
‘எம் சாவுமொதலுக்குன்னு அம்மா குடுத்துட்டுப்போனது’ கண்கள் ஈரமாயின.
‘அதுக்கென்ன இனிமேலுக்கு மாசம் மாசம் நொட்டப்போறான்ல.’
அவளுக்குச்சுருக்கென்றது. இதனை கழட்டி பதனமாய் பஞ்சாங்க அய்யர் வீட்டில் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம். ஏன் போட்டுக்கொண்டு வந்தோம்
என்று நினைத்தாள். கம்மலைக்கழட்டி திருகினை அதன் அதன் ஜோடியோடு பிணைத்து க்கொண்டிருந்தாள்.
‘பாத்து பாத்து கீழ உழுவுது பாரு என்னா புள்ள’
கீழே விழுந்த தோட்டினை எடுத்து ஒட்டிய புழுதியை த்தட்டினாள்.
என்னா கம்மலு தவறுது எல்லாம் என் நேரம்
ஆமாம் நாம புத்தியோட இருக்குணும் நேரம் என்னா செய்து நேரம்
இந்தா எழுதுன மனு அய்யாகிட்ட கும்புட்டுக்குடுக்கணும் உள்ளார போவையிலே கந்த செருப்பு கூடம் கால்ல இருக்கக்கூடாது தெரிதா
செருப்பை க்கழட்டி விட்டாள் சகுந்தலா.
இப்பிடி போடு கம்மலை’ ஒரு காகிதத்தை எடுத்து நீட்டினான்.
கம்மலை பொட்டணமாய் கட்டிய எழுத்துக்காரன், ‘ நா அடுத்தவன் பொருளைக்கையால தொடுவனா’
ஊக்குப்போட்டு பிணைத்துக்கொண்ட சிலிப்பரை கழட்டி விட்டுக்கொண்டே சகுந்தலா யோசித்தாள்
‘இதுல என்னா ரோசனை நா வச்சிருக்கேன் கம்மலை எழுத்துக்கூலி கொடம் நீ வந்து குடு’

தாடிக்காரனிடம் கம்மலைக்கொடுத்து விட்டு
‘பத்திரம்’
கெடக்கு போ அசிக்கிதமா இருக்கு. அதுவும் போயிம் போயிம் ஒரு கமுநாட்டிகிட்ட போயி’
‘இல்ல’.
‘என்னா நொள்ள’
வட்ட அலுவலகத்து படிக்கட்டுகளில் ஏறிய சகுந்தலாவிடம் மனுவை வாங்கிய கோபுர முத்திரைபோடும் பியூன்
‘தருமங்குடி தபால்க்காரரு வெஷயம் சொன்னாரு. நீ போ நான் தாசில்தாரு அய்யா கிட்டபேசிக்கிறேன். உனக்கு காசி வரும் அப்ப கொறயும் பேசிக்குலாம்.’
சொன்ன பியூனின் கால்களை கெட்டியாய்ப்பிடித்துக்கொண்ட அவள்.
‘சாமி பெரிய மனசு பண்ணி இது செய்யுணும்.’ பணிவாய்க் கூறி முடித்தாள்.
தொரய நானு பாக்குணுமுங்களா
‘எல்லாம் நா பாத்துக்குவேன். நீ போயி அந்த தருமங்குடி தபால்காரரண்டை இந்த சேதி சொல்லு போதும்
‘வரன் சாமி’ என்றாள். வணக்கமாய்க் கும்பிட்டபடி.
நேராக கூலிகூட இன்னும் வாங்கிக்கொள்ளாத அந்த எழுத்துக்காரன் அமர்ந்திருக்கும் இடம் நோக்கி விரு விரு என்று நடக்க ஆரம்பித்தாள்.
இடம் காலியாகி இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரையும் அவன் ஜாடையில் அங்கே பார்க்க முடியவில்லை. அவள் விட்டுவிட்டுப்போன
செருப்பு மட்டும் அனாதையாய்க்கிடந்தது.
அருகில் நின்றிருந்தவர்களை க்கேட்டாள். யாருக்கும் அவன் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை. கிளி சோசியக்காரர்களைக்கேட்டாள்.
‘இங்க யாரு எழுத்துக்காரனை பாத்தா’ பதில் வந்தது.
‘என் தோடு தோடு . ஔங்கிக்கத்தினாள், கண்கள் குளமாகிக்கொட்டியது. தரையில் விழுந்து புரண்டு அழுதாள்.
‘ஏ பூ மாதா நாயத்த நீயே கேளு’ அலறினாள்..
தூரத்தி இருந்து அவளை நோட்டம் விட்ட ஒரு காவலர் அருகில் வந்தார்.
‘இது தாலுக்கா ஆபிசு. பெரிய மனுசங்க போற வர்ர இடம். பக்கத்து கட்டடம் கோ¡வக்கார முனிசீப் ஜட்ஜம்மா குந்தியிருக்கிற ஆபிசு. வீணா புலம்பாதே. தெரிதா .என்னா நடந்துதோ அத அப்பிடியே ஒரு வெள்ள கடுதாசில மனுவா எழுதிகிட்டு நாளைக்கு பெரிய பள்ளிக்கூடத்துக்கு பக்கத்து சின்ன இன்சுபெக்டர்
ஆபிசுக்கு வந்துபுடு. கொறயும் நா பாத்துகிறேன், எழுந்திரிச்சி மொகத்த கழுவிகினு கெளம்பு கெளம்பு. கட்டளை பிறப்பித்த காவலர் யாரோ ஒரு
பெரிய உருவத்துக்காய் மீண்டும் தவமிருந்தார்.
‘மனு எழுதாம ஏதும் செய்யமாட்டாங்களா சாமி. அம்மா குடுத்த அர பவுன் தோட்ட தார வாத்துட்டு வெருவாலி முண்டமா நிக்குறென் சாமி மேச்சிகிட்டு கெடந்த ஒரு ஆட்டுகுட்டி போணி ஆயி கம்முனாட்டி இந்தப் பென்சனுக்கு அலயுறன்.. நா படாத பாடு. என் கம்மல திருடன அந்த எழுத்துக்காரன் குந்துன இடம் பச்சப் பில்லு மொளயுமா சாமி. ஔ வென் அழ ஆரம்பித்தாள்.
‘இடத்தக்காலி பண்ணுறயா இல்ல . உன்னையும் புடிச்சி உள்ளாற போடுறதா. கருமண்டா வந்து சேந்துட்டாளுவ கம்மலக்காணும்
கொழாயக்காணும்னு,
‘ தருமங்குடித்.தபால்க்காரன் வார்த்தை பிசகாதவன்’ .ஊரார் சொன்னது அவளுக்கு மனதில் ஒரு மூலையில் கிடக்க தன் இருப்பிடம் நோக்கி தயங்கித்தயங்கி நடக்க ஆரம்பித்தாள்.


essarci@yahoo.com

Series Navigation