மனுஸ்மிருதியை நிலைநாட்ட பட்டப்பெயர்கள்….

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

தம்மாம் பைசல்


அரவிந்தன் நீலகண்டன் எழுதிய மெமிட்டிக் கிளவுன்களுக்கு படித்தேன். பாவம் அவரால் வேறு என்ன செய்ய முடியும் – பட்டப் பெயர்களை வைத்து அழைப்பதைத் தவிர. காரணம் விளக்கம் விளக்கத்திற்கு விளக்கம் அதற்கு விளக்கம் என்று என்னவெல்லாமோ செய்து குருசீ கோல்வாக்கரை நியாயப்படுத்தப் பார்க்கிறார். ஆனால் – குருசீ எழுதிவைத்து விட்டு போனது எல்லாம் இவருக்கு எதிராக அல்லவா இருக்கிறது.

வர்ணாசிரமக் கொள்கையை மீண்டும் கொண்டு வரவும் அப்பாவி மக்களை அடிமைப் படுத்தவும் பார்ப்பன பனீயாக் கோஷ்டிகளை ஆளும் கூட்டமாக மாற்றவும்தான் ஆர்.எஸ்.எஸ் என்ற சமூக விரோத அமைப்பு செயல்படுகிறது என்கிறோம். அதைத்தானே கோல்வாக்கர் சொல்கிறார் என்கிறோம். ஐயோ ஐயோ Bunch of Thoughts உடன் எனக்கு முழு உடன்பாடில்லை என்கிறார் அரவிந்தன்.

இவர் இப்படிச் சொல்வதற்கும், அதிலே சொல்லப்பட்டிருப்பது கோல்வாக்கர் சொன்னதல்ல – அது லாலா ஹர்தயாள் சொன்னதாக்கும் என்று சொல்வதற்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன். ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் எப்பவுமே தன்மீது ஒரு பழி வரும் நேரத்தில் அதை அப்படியே மற்றவர்கள் மீது திருப்பி விடுவதில் கைதேர்ந்தவர்கள். அதனால்தான் கோல்வாக்கர் தன்மீது ஒரு குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாது என்று (என்ன ஒரு முன்னெச்சரிக்கை) எண்ணி லாலா ஹர்தயாள் சொன்னதாக சொல்கிறார்.

லாலா ஹர்தயாள் என்ன சொல்வதாக( ?) கோல்வாக்கர் சொல்கிறார் – ஒரு படிக்காத ஒரு பிராமணன் அவனைவிட படித்த உயர்பதவியிலுள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவரை விட உயர்ந்தவன். அந்த உயர் பதவியிலிருக்கும் அதிகம் படித்திருக்கும் அந்த தாழ்த்தப்பட்டவன் – தன்னை விட குறைந்த தகுதியுடைய பிராமணனை வணங்கவேண்டும் என்கிறார் – அது கடவுளுக்கு செய்யும் மரியாதை என்கிறார். இதைப் பார்த்த ஆங்கிலேயன் அதை வைத்து பிரித்தாளும் முறையை பயன்படுத்தினான் என்கிறார். சரி – அப்படியானால்

ஆங்கிலேயன் பார்ப்பதற்கு முன்பும் அதேபோல நடைமுறை இருக்கத்தானே செய்தது. இன்றுவரை இருக்கத்தானே செய்கிறது.

லாலா ஹர்தயாள் சொல்வதாக கூறி மனுஸ்மிருதி கூறும் வர்ணாசிரமத்தை நியாயப்படுத்துகிறார் கோல்வாக்கர். ஆனால் நேரடியாக தான் நியாயப்படுத்தினால் தனக்கு பின்னால் இந்த கொடிய சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்த பாடுபடும் பரிவார்கள் எங்கே கேள்வி கேட்டு விடுவார்களோ என நினைத்து மற்றவர்கள் பெயரை பயன் படுத்துகிறார். ஆனால் பாவம் நீலகண்டன் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் கோல்வாக்கர் லாலா ஹர்தயாள் பெயரை குறிப்பிட்டு இருக்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் நேரடியாக தன் கருத்தாக சொல்லியிருப்பதை வசமாக மறந்து (மறைத்து) விடுகிறார்.

அதைப்பற்றி கேட்டால் – ஆஹா அந்த மேற்கோளில் புள்ளி வைக்கவில்லை. இந்த மேற்கோளில் Full Stop க்கு பிறகு இரண்டு space விடவில்லை. Comma க்கு பிறகு ஒரு space விடவில்லை. முழு புள்ளி வைக்கவில்லை. முக்காற்புள்ளி வைக்கவில்லை டைப்ரைட்டிங் சென்டரின் class ஐ திண்ணையில் எடுக்கிறார்.

மோசடி மோசடி என்று கூறியே மோசடி வேலை பார்க்கிறார் அரவிந்தன். எங்கே படிப்பவர்கள் கவனம் கருத்துக்களில் படிந்துவிடக்கூடாது என்று எண்ணி திசைதிருப்பும் வேலை பார்க்கிறார். அதுபோலவே விவாதத்தை திசை திருப்பவேண்டியும் பலஇடங்களில் முயல்கிறார். எங்கே அதற்கு நான் விளக்கம் கொடுக்கப் போக அப்படியே கோல்வாக்கரையும் – ஆர்.எஸ்.எஸ்-ஐயும் பிழைக்க வைத்துவிட்டு விவாதத்தை வேறு விஷயங்களுக்கு கொண்டு போய்விடலாம் என்று நினைத்து பல விஷயங்களை இடையில் செருகுகிறார். ஆனால் இத்தகையவர்களுடன் கொஞ்ச நாள் கூட இருந்தவன் என்பதால் இவர்களுடைய குறுக்கு புத்தியை நன்றாகவே அறிந்திருக்கிறேன். எனவே

தான் விவாதத்தை மற்ற விஷயங்களுக்குள் கொண்டு செல்லவில்லை.

பாமர மக்களின் அறியாமையை மட்டுமே பயன்படுத்தி ஆதிக்கத்தை அறுவடை செய்து வருகின்றனர் பாசிஸ்டுகள். இவர்கள் பாடுபடுவதெல்லாம் வருணாசிரமத்தை நிலைநிறுத்துவதற்குதான். ஆனால் நீலகண்டன் போன்றவர்கள் கூட

இதைப்பற்றி புரிந்து கொள்ளாமல் – இதே வருணாசிரமம் நிலைநிறுத்தப் படுமேயானால் தான் கூட அடிமைக் கூட்டத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் வருணாசிரமத்திற்காகவும் பாசிசக் கூட்டத்திற்கு ஆதரவாகவும் கொடிபிடிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக ஆண்டான் அடிமை எனும் கொடிய சித்தாந்தத்தின் வழி அப்பாவி மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வருகின்றது பார்ப்பனீயக் கூட்டம். இதை தடுக்க ஆர்.எஸ்.எஸ் கூடாரம் என்ன செய்தது ? அறிய வேண்டுமா ? இதோ பாருங்கள்.

அரியானாவில் செத்த பசுவின் தோலை உரித்த ஐந்து தலித் இளைஞர்களை நடுரோட்டில் வைத்து அடித்தும் எரித்தும் கொன்றனர் விசுவ இந்து பரிசத்தைச் சார்ந்த உயர்ஜாதி இந்துக்கள். இதைப் பற்றி கருத்து தெரிவித்த ஆச்சார்யா கிரிராஜ் கிஷோர் கூறும் போது ‘பசுவின் உயிர் தாழ்த்தப்பட்ட மனிதனின் உயிரை விட மேலானது என்றுதான் இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன ‘ என்றார். இவர்கள் தான் மனுதர்மத்திற்கெதிராக

போராடுபவர்கள் என்று சொன்னால் இதைவிட மிகப்பெரிய ஜோக் வேறு ஏதாவது உண்டா ?

இதுமட்டுமல்ல… இதேபோல ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சம்பவங்கள் நமது நாட்டில் நடைபெற்றிருக்கின்றன. எந்த ஒரு காலத்திலும் ஆர்.எஸ்.எஸ் இதற்கெதிராக களம் இறங்கியதில்லை மாறாக இவற்றை நடத்திக் கொண்டிருப்பதே இந்த ஆர்.எஸ்.எஸ் எனும் கொடிய இயக்கம்தான்.

நமது நாட்டின் பூர்வீக குடிகள் இன்று ஆதிக்க சக்திகளின் முன் கூனிக்குறுகி நிற்கின்றன. இதை நியாயப்படுத்த வேண்டி இந்துராஷ்டிரா ( ?) என்ற கலர்கனவு காட்டி கூட்டம் சேர்த்து வைத்திருக்கின்றனர்.

இத்தகைய அடிமைத்தளையிலிருந்து விடுபட்டு சமத்துவத்தைவும் சகோதரத்துவத்தையும் போதிக்கின்ற இஸ்லாத்திற்கும் இன்றும் கிறிஸ்தவத்திற்கும் மக்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இத்தகைய கலர் கனவுகள் காட்டப்படுகின்றன. இதற்காக வேண்டி பல கலவரங்களை நடத்துகின்றனர். பாதிக்கப் படுகின்றவர்கள் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இன்னும் கலவரத்தில் களம் இறங்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும் – இதில்

அரவிந்னின் சமுதாயமும் அடங்கும். பார்ப்பனர்கள் சுகம் அனுபவிப்பதற்காக திட்டங்களையும் Bunch of Thoughts போன்ற வேத நூல்( ?)களையும் தயாரிக்கின்றனர்.

கோல்வாக்கரின் கருத்துக்களை நியாயப்படுத்த வேண்டி புரட்டுக்களை அள்ளி விடுகிறார் நீலகண்டன். நான் குறிப்பிட்ட மேற்கோள்களுக்கு பதிலளிக்க முடியாமல் ஆரம்பத்தில் Bunch of Thoughts உடன் எனக்கு உடன்பாடில்லை என்கிறார். இப்போது என்னால் இன்ஸ்பெக்டர் வேலை பார்க்க முடியாது என்கிறார். விளக்கங்களை அளிப்பதற்கு பதிலாக வியாக்கியானங்களை அள்ளி வீசுகிறார். பாவம் சட்டியில் இருந்தால் தானே

அகப்பையில் வருவதற்கு.

பூனாவில் போன ஊர்வலத்திற்கு பதிலளிக்கும் போது எக்கனாமிகல் அன்ட் பொலிடிகல் வீக்லியில் எழுதியிருப்பது பொய் என்கிறார். சிரிக்காமல் என்ன செய்ய…. Economical and Political Weekly பொய் பத்திரிகை. The Hindu அரை வேக்காடு. இதேபோல மற்ற பத்திரிகைகளிலிருந்து தகவல்களைத் தந்தாலும் இதே போன்றுதான் எழுதுவார் போலும். அரவிந்தன் அவர்களே! இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? எதுதான் உண்மையான பத்திரிகை ? விஜயபாரதமும் ஆர்கனைசரும் சாம்னாவும் மட்டும்தானா ? கொஞ்சம் விட்டால் இவைகளை தவிர மற்றவை பத்திரிகைகளே கிடையாது என்று சொன்னாலும் சொல்வீர்கள்.

இந்து மகா சபையும் ஆர்.எஸ்.எஸ் எல்லாமே பார்ப்பனீயத்திற்காக பாடுபடுபவை. மனுதர்மத்தை நிலைநிறுத்தி மக்களை கூறுபோட்டு ஆதிக்கம் செலுத்துவதற்கு என்பதே இதுவரை நான் எழுதியவை. அதற்கு எந்த ஒரு விளக்கத்தையும் தரவில்லை நீலகண்டன். ஆனால் தனக்கு எதிராக கருத்து சொல்பவர்களை புனைப் பெயர் வைத்து கூப்பிடுவதற்கு மட்டும் கொஞ்சமும் தயங்கவில்லை.

கருத்துக்களை எதிர்கொள்வதற்கு உரிய தைரியமும் விவேகமும் மனஉறுதியும் இல்லாமையால் அதற்குரிய பதில்களை தரமுடியாமல் புனைப்பெயர்களை வைத்து அழைக்கிறார். இதில் எனக்கு எவ்வித மனவருத்தமும் கிடையாது. ஆனால் இதன் மூலம் தனது பண்பையும் பண்பாட்டையும் தான் பயின்ற பாசறையின் பண்பாட்டையுமே வெளிப்படுத்தியுள்ளார். இந்த அளவிற்காவது அவரிடமிருந்து உண்மையை வெளிக்கொணர

முடிந்ததே என்பதில் மகிழ்ச்சியே.

ஆனாலும் கருத்து ரீதியான விவாதங்களைக் கூட எதிர்கொள்ள இயலாத ஒரு கோழைக் கூட்டத்தைச் சார்ந்தவருடன் விவாதம் செய்வதில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியுமில்லை. இருந்தாலும்….

அன்புடன்

தம்மாம் பைசல்

—-

mohdfaisel@hotmail.com

Series Navigation