மனுஷி

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

தாஜ்


காலத்திரை தாண்டி
தாய்ப்பாலை
மறந்த வயதை மீட்டுக்
கோலமிடும் நினைவு.
ஒரு நரைத்த உடம்பில்
நான் நுகர்ந்த அது
கண்டு தெளிந்த
ஞானங்களையும் விஞ்சும்.

உருமாறிக் கல்வியென
பதினாறில் விழுந்து
பருவத்தை ஊதி
நிஜத்தைச் சுட்டு
கண்களில் அப்பிய
மேடை
நிழல்களை லாகிரித்து
பஞ்சம் பிழைக்கவென
பாலையில் திரிந்து
பறந்த நாட்களிலெல்லாம்
என் சிறகுகள்
நோகாதிருக்க
அது வாடும்
வதங்கும்
திசை பார்த்து.

முதிர்ந்த அழகின்
தேங்கிய வசீகரத்தை
துருவாய்
காலம் தின்றபோதும்
தவசு பேரன்னான்
இமைகளுக்குள்
பத்திரமானேன்.

தாயினும் தாயான
அந்த உச்சிப்பூ
காணாவோர் நாளில்
உதிர்ந்தது
கசிந்த அதன்
கடைசி சுவாசத்திலும்
என் நினைவின்
உச்சி முகர்ந்து.

*********
– தாஜ்
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation

தாஜ்

தாஜ்