மனச்சுமை

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்


காலை பத்து மணி. ·போன் ஒலித்தது.
“ஹலோ!”
“ஹலோ! டிடேக்டிவ் ஸ்டெர்லிங், டெட்ராயிட் ஈஸ்ட் ப்ரிஸிங்க்ட்லிருந்து பேசுகிறேன். மிஸ்டர் ராவ் இருக்கிறாரா?”
“நான்தான் ராவ் பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும்?” போலீஸ் அதிகாரி என்னை எதற்காக கூப்பிடுகிறார் என்று பதற்றமடைந்து கொண்டே கேட்டேன்.
“இங்கே ஸ்டேஷனுக்கு ஒரு பெண்மணி அழைத்து வரப்பட்டிருக்கிறாள். அவளுக்கு ஆங்கிலம் சரியாக பேசத் தெரியவில்லை. இந்தியாவைச் சேர்ந்தவள். தாய்மொழி தெலுங்காம். அவள் சொன்னதை மொழிபெயர்த்து சொல்வதற்காக ஒரு துபாஷி தேவை. நீங்க தெலுங்கு மொழி பேசுவீர்கள் என்று தெரியவந்தது. உங்களுடைய உதவியை நாடுகிறோம்.”
என் பெயரும் ·போன் நம்பரும் எப்படித் தெரியும் என்று கேட்க நினைத்தாலும் கேட்வில்லை.
“எப்போ வரவேண்டும்?” என்று கேட்ட போது எவ்வளவு சீக்கிரம் வர முடிந்தால் அவ்வளவு நல்லது என்றார்.
குளியலை முடித்துக் கொண்டு ஸ்டேஷனுக்குப் போய்ச் சேரும்போது ஒரு மணியாகி விட்டது. உதவி செய்ய முன் வந்ததற்கு முதலில் நன்றியைத் தெரிவித்தார் ஸ்டெர்லிங். என்னை உட்கார வைத்துவிட்டு அவளை அழைத்து வருவதற்காக உள்ளே போனார்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு அந்தப் பெண்ணுடன் வந்தார். கலைந்த தலைமுடி, அழுது அழுது வீங்கிய முகம், சிவந்த கண்கள். என்னைப் பார்த்ததுமே தலையைக் குனிந்துகொண்டு அழத் தொடங்கினாள்.
“இவங்க வீட்டில் ஏதோ சண்டை நடக்கும் சததம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் ·போன் செய்தார்கள். இரண்டு போலீசார் வீட்டுக்குப் போனார்கள். அவர்கள் போகும் போதே இவள் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டிருக்கிறாள். பிணத்தை போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பிவிட்டு இவளை இங்கே அழைத்து வந்தோம்.” சுருக்கமாக விஷயத்தை தெரிவித்தார் ஸ்டெர்லிங்.
“என்ன நடந்தது என்று விவரமாக அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் அவளுக்கு இருக்கும் உரிமைகளைப் பற்றி அவளுக்குத் தெரியப்படுத்தணும். கொலை செய்த குற்றத்திற்காக அவள் மீது கேஸ் போடப் போகிறோம். அவள் சொல்லும் விவரங்களை நாங்கள் கேஸில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். எங்களிடம் எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்தாலும் அது அவளுடைய விருப்பம். பொருளாதார வசதி இருந்தால் தனிப்பட்ட முறையில் லாயரை ஏற்பாடு செய்துகொள்ளலாம். இல்லாவிட்டால் அரசாங்கமே ஒரு லாயரை ஏற்பாடு செய்யும். முதலில் இந்த விஷயங்களை அவளிடம் தெளிவாக சொல்லுங்கள்” என்றார் ஸ்டெர்லிங்.
அவளிடம் எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று புரியாமல் ” உங்கள் பெயர் என்ன?” என்றேன்.
மறுபடியும் குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். கணவனின் பிணத்திற்கு முன்னால் அமர்ந்துகொண்டு உறவினர்கள் யாராவது வந்தால் ஹோவென்று ஒப்பாரி வைக்கும் பெண்கள் நினைவுக்கு வந்தார்கள். நாடு விட்டு நாடு வந்தால் தாய்மொழி பேசுபவன்கூட உறவினனாக தென்படுவான் போலும்.
கொஞ்சம் தேறிக் கொண்ட பிறகு தலை குனிந்தபடியே “சாரதா” என்றாள். இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயங்களை அவளிடம் சொன்னேன். அவள் பதில் பேசவில்லை. லாயர் கிடைக்கும் வரையில் போலீசாரிடம் எதுவும் தெரிவிக்காமல் இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்று எனக்குத் தெரிந்தாலும் அவளிடம் எப்படிச் சொல்வது என்று புரியாமல் குழம்பினேன்.
“இன்ஸ்பெக்டர் உங்களிம் சில கேள்விகள் கேட்க நினைக்கிறார். பதில் சொல்வீங்களா?” என்று கேட்டேன். அழுதுகொண்டே தலையை அசைத்தாள்.
அழுகையினூடே அவள் சொன்ன விவரங்கள் இவை. காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு சமையலறைக்குச் சென்று சாம்பார் தயாரித்து தோசை வார்க்கத் தொடங்கினாள். கணவனும் எழுந்துகொண்டு சமையலறையிலேயே இருந்த ப்ரேக்·பாஸ்ட் டேபிள் முன்னால் உட்கார்ந்து கொண்டானாம். இரண்டு தோசைகளை தட்டில் வைத்து கிண்ணத்தில் சாம்பாரை ஊற்றி அவன் முன்னால் கொண்டு வைத்தாளாம். அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது காபி மேக்கரில் பொடி போட்டு டிகாஷன் போட்டிருக்கிறாள். அடுத்த தோசை வார்த்துக் கொண்டிருந்தபோது “தேங்காய் சட்னி எடுத்து வா” என்றானாம். பயந்துகொண்டே “தேங்காய்சட்னி அரைக்கவில்லை. நாளைக்கு செய்து வைக்கிறேன்” என்றாளாம் அவள். “நாளை வரையிலும் என்னை இங்கேயே உட்காரச் சொல்கிறாயா?” என்று டம்ளரை எடுத்து அவள் மீது வீசியிருக்கிறான். அது அவள் தலையில் பட்டதும் முன்னால் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவன் மீது பாய்ந்து ஆவேசமாக குத்தியதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்து விட்டதாம்.
அதெல்லாம் நினைவுக்கு வந்து மறுபடியும் அழத் தொடங்குவாளோ என்று நினைத்தேன். ஆனால் முதல் முறையாக தலையை உயர்த்தி என் பக்கம் பார்த்தாள். என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் கண்கள் எனக்குப் பின்னால் எங்கேயோ சூனியத்தில் நிலைத்திருப்பது போல் தோன்றியது. அவளுக்கு மிஞ்சிப் போனால் இருபத்தைந்து வயது இருக்கலாம். இருந்தாலும் தேங்காய் சட்னி கேட்டதற்காக கொலை செய்வதாவது?
ஸ்டெர்லிங்கிற்கு மேலும் சில விவரங்கள் தேவைப்பட்டன. இதற்கு முன்னால் சண்டை போட்டுக் கொண்டதுண்டா என்று கேட்கச் சொன்னார். கேட்டேன். அவள் தலை குனிந்தபடியே மெல்லிய குரலில் அழுதாள். கொஞ்ச நேரம் கழித்து தினமும் சண்டை போடுவான் என்றும், முடியைப் பிடித்து இழுப்பதும், சுவற்றில் மொத்துவதும் அன்றாடம் நடப்பவைதான் என்றாள். கல்யாணமாகி இரண்டரை வருடங்கள் முடிந்துவிட்டன. அவள் அமெரிக்காவுக்கு வந்த புதிதில் சில நாட்கள் ஒழுங்காகத்தான் இருந்தானாம். பிறகுதான் துன்புறுத்த ஆரம்பித்தானாம்.
மணி இரண்டாகிவிட்டிருந்தது. ஸ்டெர்லிங் தனக்கு வேண்டிய விவரங்களை குறித்துக் கொண்டு அவளை மறுபடியும் உள்ளே அழைத்துக்கொண்டு போனார். திரும்பி வந்து நான் செய்த உதவிக்காக நன்றியைத் தெரிவித்தார். நான் கிளம்ப முற்பட்டபோது “அவள் என்ன சாப்பிடுவாள் என்று தெரியவில்லை. காலை முதல் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.
அப்பொழுதுதான் தோன்றியது வெஜிடேரியனாக இருப்பாளோ என்று. கொலை செய்தவளுக்கு இரக்கம் காட்டுவதாவது என்று நினைப்பு வந்ததும் “எனக்குத் தெரியாது” என்றேன்.
வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் இந்தக் கதையைச் சொன்னேன். “பாவம்! வெஜிடேரியனோ என்னவோ. ஜெயிலில் என்ன சாப்பாடு கொடுப்பார்களோ? நாம் சாப்பாடு கொடுத்தால் கொடுக்க அனுமதிப்பார்களா என்று கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்றாள்.
·போன் செய்து விசாரித்த போது ஆட்சேபணை எதுவும் இல்லை என்று தெரிவித்தார் ஸ்டெர்லிங். மறுநாள் கேரியரில் சாப்பாடு கொண்டு போய் அவளையும் பார்த்துவிட்டு வந்தோம். மறுபடியும் அழுதாள். சாப்பாடு கொண்டு தந்ததற்காக இரு கைகளையும் கூப்பி நன்றி தெரிவித்தாள்.
அவளுடைய உணவு பழக்கங்களை ஸ்டெர்லிங்கிடம் விவரமாக தெரிவத்தோம். நோட்புக்கில் குறித்துக்கொண்டார்.
இரண்டுநாட்கள் கழிந்த பிறகு சாரதாவைப் பார்க்க மறுபடியும் காவல் நிலையத்திற்கு சென்றேன். முதலில் அழுதாலும் சட்டென்று தேறிக்கொண்டாள். நான் மௌனமாக காத்திருந்தேன். சற்று நேரத்திற்குப் பிறகு தானே சொல்லத் தொடங்கினாள்.
“சமீபத்தில்தான் அம்மா இறந்துபோனாள். அப்பா தனியாக இருக்கிறார். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதென்று அப்பாவுக்கு எப்படி தெரிவிப்பது? நீங்களே கடிதம் எழுதி விடுங்கள்” என்றாள் விசும்பலுக்கு நடுவில்.
அவளை எப்படித் தேற்றுவது என்று தெரியவில்லை. கடைசியில் “ஆகட்டும். உங்க அப்பாவுக்கு கடிதம் எழுதுகிறேன்” என்றேன். அப்பாவின் பெரரையும் முகவரியையும் தெரிவித்தாள். நெல்லூருக்குப் பக்கத்தில் சிறிய கிராமம். அவருக்கு சாரதாவைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. மறுநாளே கடிதம் எழுதுவதாக சொல்லிவிட்டு வந்தேன்.
அடுத்தவாரம் சாரதாவை காவல் நிலையத்திலிருந்து டெட்ராயிட் கௌன்டீ ஜெயிலுக்கு மாற்றினார்கள். முதல் முறையாக நீதிபதிக்கு முன்னால் நடந்த விசாரணையில் சாரதா தவறு செய்யவில்லை என்றும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் அவள் கணவனை எதிர்த்துப் போராடினாள் என்று அவளுக்காக அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த லாயர் வாதம் புரிந்தார்.
பப்ளிக் பிராசிக்யுடர் மட்டும் சாரதா கொலை செய்திருக்கிறாள். கணவன் அவளை அடித்ததற்காக எந்த ஆதாரமும் இல்லை. கேஸ் விசாரணை நடக்கும் வரையில் அவள் ஜெயிலில் இருப்பதுதான் நல்லது என்றார். நீதிபதியும் ஒப்புக்கொண்டார்.
ஒரு வாரம் வரையிலும் அவளைப் பார்க்கப் போவதற்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமையன்று போய் பார்த்தபோது கொஞ்சம் இளைத்து விட்டாற்போல் தென்பட்டாள். ஆனால் கண்களில் அதற்கு முன்னால் இருந்த சோகம் தெரியவில்லை. முகத்தில் கவலையும் இருக்கவில்லை. நிலைமை என்னவென்று சரியாக புரிந்து கொண்டாளோ இல்லையோ என்று தோன்றியது. ஜெயில் சாப்பாடு எப்படி இருக்கு என்று கேட்ட போது பரவாயில்லை என்றும் அதிகாரிகள் நன்றாகவே பார்த்துக் கொள்வதாகவும் சொன்னாள்.
தன்னுடைய கேஸ் பற்றி என்னுடைய அபிப்பிராயத்தைச் சொல்லச் சொன்னாள். சொல்வது கஷ்டம் என்றேன். “இன்னும் சில நாட்களில் விசாரணை தொடங்கும். பன்னிரெண்டு பேர் ஜுரியாக தேர்வு செய்யப் படுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் நீங்கள் கணவனைக் கொலை செய்ய நேர்த்தது என்று உங்கள் லாயர் அவர்களை நம்ப வைத்தால் நான்கைந்து வருடங்களில் சிறை வாசத்திலிருந்து வெளிறே முடியும். ஆனால் திட்டமிட்டுத்தான், கொலை செய்யும் நோக்கத்துடன்தான் கத்தியால் குத்தியிருக்கீங்க என்று நிரூபணமாகிவிட்டால் ஜுரி உங்களுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும்படியாக செய்ய முடியும்” என்றேன்.
அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை. முன்று வருடங்கள் என்றாலும் முப்பது வருடங்கள் என்றாலும் அவளுக்கு ஒன்றுதானா? அவள் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்வம் இருந்தாலும் கேட்டால் நன்றாக இருக்காது என்று சும்மா இருந்தேன்.
“கடந்த இரண்டு வருடங்களாக நரகத்ததை அனுபவித்த பிறகு இந்த இரண்டு வாரங்கள் எவ்வளவு அமைதியாக கழிந்தன தெரியுமா?” திடீரென்று சொன்னாள்.
இதென்ன? ஜெயில் வாழ்க்கை அமைதியாக இருப்பதாவது? உண்மையிலேயே அவள் கணவன் அரக்கன்தானோ? அவன் போனபிறகு ஜெயில் வாழ்க்கையே மேல் என்று நினைக்கிறாளோ?
“அவர் உங்களை ரொம்ப துன்புறுத்தி வந்தாரா?”
“கல்யாணம் ஆன பிறகு ஒரு மாதம் வரையில் நன்றாகவே பார்த்துக் கொண்டார்” என்று தொடங்கி அவள் சொன்ன கதை இது.
சாரதா பெற்றோருக்கு ஒரே மகள். மாதவன் சா·ப்ட்வேர் இன்ஜினியர். கல்யாணம் செய்துகொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவன் சாரதாவை பெண்பார்த்துவிட்டு அடுத்த வாரத்திலேயே கல்யாணத்தை முடித்துக் கொண்டு மூன்றாவது நாளே டெட்ராயிட்க்கு திரும்பிப் போய்விட்டான். சில நாட்கள் கழித்து விசா கிடைத்ததும் சாரதா அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போனாள். டெட்ராயிட்டில் ஒரு அபார்ட்மெண்டில் புது குடித்தனம் தொடங்கியது.
மாதவன் காலையில் எட்டுமணிக்குக் கிளம்பிப் போனால் இரவு ஏழுமணிக்குத்தான் வீடு திரும்புவான். இந்தியாவில் அவனுடைய பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் இருந்தார்கள். தங்கைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு இருந்ததால் மாதவன் பணவிஷயத்தில் ரொம்ப சிக்கனமாக இருந்துவந்தான். அவ்வப்பொழுது ஊருக்கு பணம் அனுப்புவான். சனி, ஞாயிறுகளிலும் பாதி நாளாவது வேலைக்கு போய் விடுவான். அதனால் அவளுக்கு வெளி உலகத்துடன் அதிகமாக சம்பந்தம் இருந்தது இல்லை. காய்கறி மற்றும் பால் போன்றவற்றை வாங்குவதற்காகத்தான் அபார்ட்மெண்டை விட்டு வெளியே வருவாள். அவனுடைய ஆபீஸில் நிறைய பேர் தெலுங்குக்காரர்கள்தான். எப்பொழுதாவது அவர்கள் விருந்துக்கு அழைப்பார்கள். இவர்களும் பதிலுக்கு அழைத்திருக்கிறார்கள்.
சாரதா அமெரிக்காவுக்கு வந்த சில மாதங்களுக்குள் மாதவனுக்கு வேலை போய்விட்டத. அவனுக்குப் பையித்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது. நிறைய இடங்கில் முயற்சி செய்தான். பலன்தான் கிடைக்கவில்லை. தானும் ஏதாவது வேலையைத் தேடிக் கொள்வதாக சாரதா சொன்னாள். ஆனால் ஆங்கிலம் சரியாக வராததாலும், கார் ஓட்டத் தெரியாது என்பதாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
வெட்டியாக வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்காமல் ஏதாவது வேலைக்குப் போயிருந்தால் வருடத்திற்கு முப்பதாயிரம் டாலராவது கிடைத்திருக்கும் என்று அவளை குத்திக் காண்பிக்க தொடங்கினான் மாதவன்.
“எல்லாம் தெரிந்துதானே பண்ணிக் கொண்டீங்க? இங்கேயே நன்றாக சம்பாதிக்கும் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே?” என்றாள் சாரதா.
“இங்கேயே இருக்கும் பெண்கள் கண்டவனோடும் சுற்றுவார்கள். கற்புடைய பெண்ணாக வேண்டும் என்றும் உன்னைப் பண்ணிக் கொண்டேன்” என்றான்.
அவனுக்கு எரிச்சல் வந்த போதெல்லாம் அவளை அடிப்பதும், முடியைப்பிடித்து இழுப்பதுமாக செய்து கொண்டிருந்தான். வலிக்கிறது என்று சொன்னாலும் கேட்க மாட்டான். பகலில் மட்டுமே அல்லாமல் இரவிலும் அவன் நடந்துகொள்ளும் முறை அவளக்கு சங்கடத்தை அளித்தது. ஆவன் உறங்கும் போதுதான் அவளுக்கு நிம்மதி. மறுபடியும் காலையில் எழுந்தது முதல் அடிமைவாழ்க்கை.
அதிர்ஷ்டவசமாக அவனுக்கு மறுபடியும் வேலை கிடைத்தது. ஆனால் அவன் நடத்தையில் மட்டும் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அவன் ஆபீஸில் இருக்கும் நேரத்தில் சாரதா வீட்டில் பயமில்லாமல் இருந்து வந்தாள்.
ஆறுமாதங்களுக்கு முன்னால் இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. அவள் தாய்க்கு உடல்நலம் சரியாக இல்லை என்றும், அவளைப் பார்க்க வேண்டும் என்று தவிப்பதாகவும் போன் வந்தது. போய் வரச் சொன்னான் மாதவன். திரும்பி வரக் கூடாது என்ற எண்ணத்துடன்தான் சாரதா இந்தியாவுக்குப் போனாள்.
அவள் தாய் சுபத்ராவுக்கு ரொம்பநாளாகவே ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து வந்தது. அடிக்கடி படுக்கையில் கிடந்து வந்ததால் ரொம்ப க்ஷ£ணமாக இருந்தாள். இப்பொழுதும் அப்படித்தான் இருக்கும் என்றும், தாய்க்கு உடல் நலம் குன்றிவிட்டதால் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே இந்தியாவுக்குப் போனாள் சாரதா.
ஆனால் அவள் போய்ச் சேரும்போதே தாய் இறந்துபோய்விட்டாள். அத்துடன் சாரதாவுக்கு மனம் விட்டுப் பேசவும் ஆள் இருக்கவில்லை. தந்தையை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால் தான் இங்கேயே தங்கிவிடுவதாக சொன்னாள் சாரதா. ஆனால் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை. தன் காரணமாக மகளில் வாழ்க்கை வீணாவது அவருக்கு விருப்பம் இல்லை. தந்தையிடம் உண்மையைச் சொல்லிவிட்டால்? அமெரிக்காவுக்குத் திரும்பிப் போகும் எண்ணம் இல்லை என்று சொல்லிவிட்டால்?
மனைவியை இழந்த துக்கத்தில் இருக்கும் தந்தையிடம் தன் கதையைச் சொல்லி மேலும் வருத்தத்தை ஏற்படுத்த விரும்பாமல் மௌனமாக இருந்துவிட்டாள். தன் வாழ்க்கை இப்படித்தான் கழிய வேண்டும் போலும் என்று நினைத்துக் கொண்டே திரும்பி வந்தாள் சாரதா.
அர்த்தம் இல்லாத வாழ்க்கை. பயம் நிறைந்த வாழ்க்கை. அடிமைத்தணம் நிரம்பிய வாழ்க்கை? அப்படியாவது இந்த வாழ்க்கை வாழத்தான் வேண்டுமா?
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த சாரதாவிற்கு கணவனிடம் எந்த மாற்றமும் தென்படவில்லை. திட்டுவதும் அடிப்பதும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன. செய்வதறியாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வந்தாள் சாரதா. அன்று மட்டும் அவளையும் அறியாமல் ஆவேசம் அணையை உடைத்துக் கொண்டு பொங்கிவிட்டது.
தலையைக் குனிந்தபடி கதையைச் சொல்லி முடித்த சாரதா, நிமிர்ந்து என் பக்கம் பார்த்துவிட்டு சிரித்தாள். அந்த சிரிப்பில் துக்கம் இல்லை. வருத்தம் இல்லை. சாந்தமும், தூய்மையும் கலந்த சிரிப்பு.
நேரமாகிவிட்டிருந்தது. மறுபடியும் வருவதாக சொல்லிவிட்டு எழுந்துகொண்டேன். “உங்களுக்கு படிக்க ஏதாவது புத்தகங்கள் வேண்டுமானால் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன்.
“ஜெயில் வாழ்க்கையைப் பற்றி ஏதாவது புத்தகம் இருக்குமா?” சாரதா கேட்டாள்.
“அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை. நீங்கள்தான் எழுத வேண்டும் புதிதாக” என்றேன்.
வாய்விட்டு சிரித்தாள் சாரதா.

முற்றும்

தெலுங்கு மூலம் ஆரி சீதாராமய்யா
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email id tkgowri@gmail.com

Series Navigation