புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

வே.சபாநாயகம்தமிழ் இலக்கிய உலகில் கட்டுரை இலக்கியம் இன்னும் சிறுகதை, நாவல் போல வளர்ச்சி பெறவில்லை. எழுதுகிறவர்கள் எல்லோரும், சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிற அளவிற்கு
கட்டுரையில் ஆர்வம் காட்டுவதாகக் காணோம். 1950களில் ஆங்கிலத்தில் எஸ்.வி.வியும், ஆர்.கே.நாராயணனும் தம் மண்ணின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை பிரதிபலிக்குமாறு, மேல் நாட்டு ஜி.கே.செஸ்டர்டன் போன்ற கட்டுரை ஜாம்பவான்களுக்கு இணையாக எழுதினார்கள். தமிழில் வ.ரா தொடங்கி வைக்க, தி.ஜ.ர, கல்கி போன்றவர்கள் மிக எளிமையாக மக்களது நித்தியப் பிரச்சினைகளை திகட்டத் திகட்ட எழுதினார்கள். கே.சீனிவாசன் என்பவர் கலைமகளில் சுவாரஸ்யமான அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார். ஆனால் அவர்களைத் தொடர்ந்து அவ்வளவு ரசமாக எழுதுகிறவர்கள் இல்லாமலிருந்தது. அதிஷ்டவசமாக தற்போது
அரசியல் கட்டுரைகளை திருமதி. வாசந்தியும், மக்களது நடைமுறை யதார்த்தங்களை திரு.நாஞ்சில்நாடனும் அற்புதமாக வாசிப்பு சுகத்துடன் எழுதி வருவது ஆறுதல் தருவதாக உள்ளது. சமீப காலமாக தில்லியிலிருந்து
தாயகம் திரும்பியுள்ள திரு.பாரதிமணி அவர்கள் கட்டுரை இலக்கியத்துக்கு ஒரு புதிய அந்தஸ்தை அளிக்கும் -அற்புதமான, நம்மில் பலருக்கும் தெரியாத தில்லி சம்பவங்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதி வருவது
மிகுந்த வரவேற்புக்குள்ளாகி இருக்கிறது. பாரதி மணி, நாஞ்சில்நாடன் வாசந்தியைத் தொடர்ந்து இன்னும்
அதிகமான கட்டுரையாளர்கள் பெருகவேண்டும்.

ஓர் ஆறுதலாக கணினியின் பிரவேசத்தால் இப்போது இணையதளங்களில் பெருகி வரும் இலக்கிய இதழ்களும் தனி நபர் வலைமனைகளும் கட்டுரை இலக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது மகிழ்ச்சி தரும் செய்தியாகும். ‘திண்ணை’ இலக்கிய வார இதழில் நிறைய இலக்கியக் கட்டுரைகளும், அரசியல் மற்றும் நடைமுறை வாழ்வியல் சிந்தனைகளும் காணப்படுகின்றன. அப்படி ‘திண்ணை’ யில் திரு.பாரிபூபாலன் அவர்கள் எழுதியுள்ள வாழ்க்கைச் சித்திரங்களின் தொகுப்புதான் இப்போது ‘எனி இந்தியன் பதிப்பகம்’ வெளியிட்டுள்ள ‘ஓவியத்தின் குறுக்கே சில கோடுகள்’ என்பது.

பாரிபூபாலன் அவர்கள் அமெரிக்க வாழ் தமிழர். அமெரிக்காவின் கிராமங்களிலும், நகரங்களிலும் வெகு
நாட்கள் வாழ்ந்த அனுபவம் மிக்கவர். தன்னைச் சுற்றி நடப்பவைகளைக் கூர்ந்து மனதில் பதிவு செய்து வைத்திருப்பவர். நித்திய வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண அனுபவங்கள், சமூகப் புறநிகழ்வுகள், சக மனிதர்களிடம் காணும் பெருமை சிறுமைகள் ஆகியவற்றை நமக்குச் சொல்வதாக இல்லாமல், தனக்கான உரத்த சிந்தனையாக அவர் இக் கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவற்றில் நாம் நமக்குப் பரிச்சயம் இல்லாத அமெரிக்க வாழ்வின் நிறைகுறைகளைக் காண முடிகிறது. வாழ்க்கை பற்றிய புதிய சிந்தனைகளை நனவோடை
யாகச் சொல்லிச் செல்கிறார்.

‘புலம்பல்’ என்ற தலைப்பில், நாம் அன்றாடம் பார்க்கிற புலம்பல் பேர்வழிகளைப் பற்றிச் சொல்கிறார்.
சொந்தப் பிரச்சினைகள், சமூகம், அரசியல் என்று இவர்கள் அலுத்துக் கொள்ளாத விவகாரங்கள் இல்லை. கேட்பவரின் மனநிலை சூழ்நிலை பற்றி இவர்கள் அக்கறை காட்டுவது இல்லை. கேட்பவர்களில் பலருக்கு தமது பிரச்சினைகளே பெரிதாக இருக்கும். சிலருக்கு இவர்களது புலம்பல் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தீர்வை
எதிர் நோக்கும் அல்லது எதிர்பார்க்காத புலம்பலாக இருக்கும். நீங்கள் தீர்வு சொல்வதால் பயனும் இருக்காது. அதனால் ‘புலம்புவதைப்பற்றி ஜாக்கிரதையாய் இரு; எது உனக்குப் பிடிக்கலையோ அதை மாற்றப் பார், மாற்ற முடியலைன்னா, அதைப் பத்தி உன் நோக்கத்தை மாத்திக்கோ. வீணாய்ப் புலம்பாதே!’ என்று தன் தாத்தா அறிவுறுத்தியதை நினைவு கூர்கிறார்.

பழிக்குப்பழி வாங்கும் மனப்பாங்கு பற்றி ஒரு கட்டுரை. தன் அண்ணன் தனது பூனை பயத்தை எல்லோருக்கும் சொல்லி வாண்டுகள் கூடத் தன்னை கேலி செய்யும்படி செய்து விட்டதற்காக அண்ணனை பழிவாங்க நினைத்ததையும், அதற்காக அண்ணன் இரவு வரைந்து மேஜைமீது வைத்திருந்த அழகான ஓவியத்தின் குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள் போட்டு அதைச் சிதைத்து விட்டதையும் அதனால் தனக்கு ஏற்பட்ட வெற்றி பெருமிதத் தையும் தற்போது நினைத்தாலும் மனிதமனத்தின் பழிதீர்க்கும் உணர்வு ஆச்சரியம் தருவதாக இருப்பதை நூலின் தலைப்பை நினைவூட்டும் கட்டுரையில் எழுதுகிறார்.

‘செய்வன திருந்தச் செய்’யும் மன ஒழுங்கு பற்றிக் குறிப்பிடும் கட்டுரையில், பலர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அதனால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று தமக்குத் தாமே சமாதானம் செய்து கொள்ளும் மனப்பாங்கைச் சித்தரிக்கிறார்.

இந்தியாவில் பெருகிவிட்ட லஞ்ச மனப்பன்மை பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. பணம்தான் காரியத்தைச் சாதிக்கும் என்றால் எவ்வளவு கேட்டாலும் கொடுத்துக் காரியத்தை சாதிக்க நினைக்கும் அநாரோக்கியமான இன்றைய அவலத்தை அக் கட்டுரையில் ஆசிரியர் சுட்டுகிறார்.

எல்லாமே மன நிலையைப் பொறுத்தது என்பதை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்குகிறார். தன்னால் இனி என்ன செய்ய முடியும் என்று ஏங்கும் முதியர் ஒருவரை அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் விளையாட அழைத்ததையும் தன்னால் முடியாது என்று அவர் தன் இயலாமையைச் சொன்ன போது ‘உங்களால் முடியும்’ என்று கூறி அவரையும் விளையாட்டில் ஈடுபடுத்தியதையும் எடுத்துக் காட்டுகிறார்.

‘வாழ்க்கை நமக்குத் தரும் தினசரிச் சவால்களினால், வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதைச் சில சமயம் நாம் மறந்து விடுகிறோம். வணக்கம், நன்றி அல்லது தயவு செய்து எனும் வார்த்தைகளைக் கூறவோ அல்லது புகழவோ அலது காரணமே இல்லாமல் எதையாவது இரசிக்கத்தக்க அளவிலே செய்யவோ நாம் மறந்து விடுகிறோம்’ என்பதை ‘உனது பாரச்சூட்டினை அடுக்கி வைத்தது யார்?’ என்ற கட்டுரையில் வரும் வியட்நாம் ஜெட்விமானி ‘சார்லஸ் ப்ளம்ப்’ பின் அனுபத்திலிருந்து எடுத்துச் சொல்கிறார்.

‘தங்களுக்குப் பிறகே நான்’ என்கிற கட்டுரையில் அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல பிறருக்கு
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை நம் நாட்டில் இல்லாததை எண்ணி வருந்துகிறார். ‘ஏன் நம்மூர்க்காரர்கள் இப்படி இருப்பதில்லை? இந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் எப்படி சக பிரயாணிகளிடம் இவ்வளவு மரியாதையுட னும் பொறுமையுடனும் நடந்து கொள்கிறார்கள்?’ என்று வியக்கிறார்.

‘அம்மாயி’ என்கிற கட்டுரை ‘செண்டிமெண்ட்’ என்கிற ஆசிரியரது அபிமான உருக்கத்தைச் சித்தரிக்கிறது.
தன் அம்மாவைப் பெற்ற பாட்டியின் மரணச் செய்தி, தொலைதூரம் வந்து விட்டதால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனினும் பாட்டி தொடர்பான இளமை நினைவுகளைத் தடுக்க முடியாமை பற்றி உருக்கமாகக் கட்டுரை சொல்கிறது.

இப்படி இன்னும் பல அனுபவங்கள் – காரில் உள்ள பொருளைத் திருடுகிறவன் எழுப்பும் சிந்தனைகள்,
மேலதிகாரிகளின் பாராட்டும் நன்றிதெரிவிப்பும் பெறுபவனிடம் உண்டாக்கும் ஆரோக்கியமான மாற்றங்கள், உலக வர்த்தகமையம் தாக்கப்பட்டபோது அங்கிருந்த சாட்சியாய் நெஞ்சில் உணர்ந்த உருக்கமான பாதிப்புகள், பிறந்த நாள் கொண்டாட்டங்கள் என ஆசிரியரின் பல்வேறு அனுபவங்களின் தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. ‘திண்ணை’ வாசகர்க்கு படிக்க வாய்த்த இந்த ரசமான பதிவுகளை அதைப் படிக்காத மற்ற வாசகரும் படித்து ரசிக்கும் வகையில் நூலாக்கித் தந்துள்ள ‘எனி இந்தியன் பதிப்பகம்’ பாராட்டுக்குரியது.

நூல்: ஓவியத்தின் குறுக்கே கோடுகள்.
ஆசிரியர்: பார்பூபாலன்.
வெளியீடு: என் இந்தியன் பதிப்பகம், சென்னை – 17.


Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்