மனச்சாட்சியற்றோரிடையே மாதர்க்கு மரியாதை!

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

ஜோதிர்லதா கிரிஜா


(28.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் “பெண்ணுக்கு அதிகாரம் vs மரியாதை” என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தாக்கம்.)

மரியாதை என்பது ஒருவர் மற்றவரிட மிருந்து கேட்டுப் பெறுவதன்று என்பது உண்மைதான். இதைத்தான் குருமூர்த்தி அவர்கள் தமது கட்டுரையின் 9 ஆம் பாராவில் “அவர்கள் (பெண்கள்) மதிக்கத்தக்கவர்களாக இருக்கும் போதுதான், அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறது” என்று கூறுவதாகக் கருதுகிறோம். இந்த விதி பெண்களுக்கு மட்டுமன்று. ஆண்களுக்கும் பொருந்தும் என்பதைக் குருமூர்த்தி ஒப்புக்கொள்ளுவார் என்றே நம்புகிறோம். ‘உடல் வலிமை, அதன் பயனான அச்சுறுத்தல், அதன் விளைவான அடக்கியாளல், கல்வி மறுப்பு, தன்னைச் சார்ந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம் போன்றவைகளால் பெண்களை இதுகாறும் அடிமைப் படுத்திவைத்து வந்துள்ள ஆணை அடிப்படைக் கல்வியறிவற்ற ஒரு பட்டிக்காட்டுப் பெண் கூட மனத்துள் ஆத்மார்த்தமாக மதிப்பதில்லை என்பதே உண்மையாகும். வாய் திறக்க இயலாமல், அவள் ஆணைப் பொறுத்துக்கொள்ளுவதைத் தவிர வேறு வழியற்ற நிலையில் இருந்து வந்துள்ளாள் என்பதும் உண்மையாகும்.

நம் ஆண்களின் கண்ணைத் திறந்தது ஆங்கிலக் கல்விதான். படித்த சில ஆண்களின் துணை கொண்டு இந்த நாட்டில் சதி என்னும் உடன்கட்டை ஏற்றும் வழக்கம், பாலிய விவாகம் போன்ற கொடுமை ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களை வெள்ளைக்காரர்கள்தான் இயற்றினார்கள். அவர்கள் இங்கு வந்து இது போன்ற இன்னும் பல சீர்திருத்தங்களைச் செய்ய முற்பட்ட வரையில் குருமூர்த்தி போற்றிப் புகழும் நம் பாரம்பரியக் காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்னும் கேளிக்குப் பதில் கிடைக்கவே செய்யாது. (இந்தக் கொடுமைகள் நடைமுறையாக இருந்ததுதான் நமது பாரம்பரியம்! இவை கொடுமைகள் என்பதைப் புரிந்து கொள்ள மறுத்து அவை தொடர்ந்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் நமது கலாச்சாரம்!! நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட விதவைகளின் தலைகள் மழிக்கப்பட்டு வந்துள்ளதும் நமது கலாச்சாரமே!!!) “நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம்” என்றெல்லாம் குருமுர்த்தி வரிக்கு வரி புலம்புவது என்ன வென்பதை அவர் சுருக்கமாய்க்கூடத் தெளிவுபடுத்தவில்லை. பொத்தாம் பொதுவாய் இவ்விரு சொற்களைப் பல்லவிபாடுகிற பாணியில் திரும்பத் திரும்ப உச்சரிப்பதை விடுத்து அவை என்னென்ன, எந்த வகையில் அவை பிற நாடுகளின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றைக் காட்டிலும் உயர்ந்தவை, என்பதை யெல்லாம் குருமூர்த்தி புரியும்படியாய்ச் சொன்னால்தான் எம்மைப் போன்ற அரைகுறகள் உரிய பதிலைக் கூற இயலும்.

தான் ஒரு கணவனாக இருக்கும் போது பெண்களின் நிலை குறித்துச் சிந்திக்கவே செய்யாத ஆண் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் ஆனதன் பிறகு அவளுடைய நிலையால் பாதிக்கப்பட்டு அதன் விளைவாய்த் தன் பழைய கருத்துகளை மாற்றிக் கொள்ளுகிறான். இப்படி நேர்ந்த மாற்றமே நம் நாட்டில் பெண்களுக்காக வாதாடிய ஆண் மக்களைத் தோற்றுவித்தது! அவர்களுக்குக் கல்வி யளிப்பதன் அவசியம், பாலியத் திருமணத் தடுப்பு, கைம்பெண்களின் திருமணம் போன்ற (பாரபட்சமற்ற நியாயத்தின் அடிப்படையிலான) பல்வேறு பெண் முன்னேற்றங்களுக்கும் வழி வகுத்தது. வெள்ளைக்காரர்கள் இந்த மண்ணில் கால் பதித்த பிறகே இம்மாற்றங்கள் விளைந்தன. (ஒருவேளை குருமூர்த்தி போன்றவர்கள் இதை மறுக்கக்கூடும். அப்படி இல்லை யெனில், அதுகாறும் நம் நாட்டுச் சிந்தனையாளர்களும் அதிமேதாவிகளும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்னும் கேள்வி எழுகிறது. பல்வேறு முனிவர்கள் பெண்ணாதரவுக் கருத்துகளைத் தெரிவித்திருந்தும் அவற்றை இருட்டடிப்புச் செய்து அவற்றால் பெண்கள் பயனடையாமல் செய்தது நம் நாட்டுத் தந்திரச் சிந்தனையாளர்களின் கைங்கரியமே. இல்லாவிட்டால், ஆண் முனிவர்களைத் தர்க்க சாஸ்திரத்தில் தோற்கடித்த மைத்ரேயி, கார்க்கி போன்ற பெண் அறிவாளிகள் வாழ்ந்த திருநாட்டில், ‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு ?’ என்னும் பழமொழி ஏற்பட்டிருந்திருக்குமா ? அல்லது மகாகவி பாரதியாரின் பெண்ணாதரவுக் கவிதைகள்தான் தோன்றி யிருக்குமா ?

“பாரதியார் ஒரு நல்ல கலாசரரத்துக்கு எதிராய்ப் பெண்கள் உருப்பெறுவதை ஒருபோதும் ஆதரித்திருந்திருக்க மாட்டார்” தான். இதில் குருமூர்த்தியின் கருத்தே நமது கருத்தும் ஆகும். ஆனால், ‘பாரதியார் கண்டது கலாச்சாரத்தின் அரவணைப்பில் மதியுத்டனும், மரியாதையுடனும் வாழும் பெண்’ என்று கடைசிக்கு முந்திய பாராவில் அவர் சொல்லியுள்ளது பாரதியாரின் எந்தப் பாடல், அல்லது கட்டுரையின் அடிப்படையில் என்பதையும் குருமூர்த்தி எடுத்து எழுதியிருந்தால், பாரதியாரை முழுவதும் படிக்காத எம்மைப் போன்றவர்கள் தெளிவடையத் தோதாக இருந்திருக்கும். தாம் இன்னும் எழுத விருக்கும் கட்டுரைகளுள் ஒன்றில் இதை அவர் எடுத்துக்கூறுவார் என்று நம்புகிறோம். ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

‘பொதுவாகப் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் பாரம்பரியம் உள்ள சமுதாயங்களில் பெண்களுக்குப் பதவி மற்றும் அதிகாரத்தின் மூலம் மரியாதையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று அதே 9 ஆம் பாராவில் குருமூர்த்தி கூறுகிறார். இந்த நாட்டுப் பெண்ணுரிமைவாதிகள் ஒன்றும் தங்களுக்குப் பதவிகள் மூலம் மரியாதை கிடைக்கும் என்று (நாம் அறிந்த வரையில்) சொன்னதாய்த் தெரியவில்லை. Dear Mr. Gurumurthi, it is the other way round. ஆண்களாகிய உங்களுக்குப் பெண்கள் மீது இருக்கவேண்டிய நியாயமான மரியாதை இருந்தால், அவர்கள் கேட்காமலே, போராடாமலே அவர்களுக்கு நீங்களாகவே பதவிகளைத் “தந்து” பாரதியார் சொன்ன “சட்டங்கள் செய்யும்” பணியில் அவர்களுக்கும் சம உரிமை “அளித்திருப்பீர்கள்”. (அதுதான் நியாயம்!)

கட்டுரையின் இறுதியில், “ஆனால் இன்று விடுதலை பெற்ற பெண் என்பவள் கலாச்சாரச் சீரழிவின் சின்னம். இந்தச் சின்னத்திற்கு மதிப்பும் மரியாதையும் உண்டுபண்ண முடியாது” என்று சொல்லியிருக்கிறீர்கள். ‘பெண்ணின் கலாச்சார்ச் சீரழிவு’ என்பதாய் நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதும் விளக்கப்படவில்லை. நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் கலாச்சாரமே இன்னதென்று புரியாத போது, கலாச்சாரச் சீரழிவு என்பது எப்படிப்புரியும் ? எனவே, இதையும் உங்களின் அடுத்து வரும் கட்டுரை ஒன்றில் தயவு செய்து விளக்குங்கள். அதில் உண்மை இருப்பின், எம்மைப் போன்றவர்கள் கண்டிப்பாக எங்கள் கருத்தை மாற்றிக் கொள்ளுவோம். கருத்து மாற்றம் ஒன்றும் வெட்கப்பட வேண்டிய விஷயம் இல்லையே!

புகை பிடிப்பது, குடிப்பது, திருமணம் இன்றிச் சேர்ந்து வாழ்வது, பாலியல் சுதந்திரம் போன்ற அருவருக்கத்தக்க சில நடவடிக்கைகளில் மிக, மிக, மிக, மிகச் சில பெண்கள் ஈடுபட்டு வருவதாய்க் கேள்விப்படுகிறோம். அவர்களுக்கும் பெண்ணுரிமை இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் அறவே கிடையாது என்பதை நம்பவும். மேலும், இத்தகைய இழிவான பெண்கள் விதிவிலக்குகள். இவர்களின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாய்ப் பெண்களைக் கலாச்சார ரீதியாய்ச் சீரழிந்து வருபவர்கள் என்றெல்லாம் எடை போட வேண்டாம். செல்வந்தர்களான, மிகப் பெரிய மேல்தட்டுப் பெண்களைப் பற்றிப் பெண்ணுரிமைக்காரர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. (அதே சமயம் இவற்றையெல்லாம் செய்வது ஆண்மையின் இலக்கணம், அடையாளம் என்று கருதும் பெரும்பான்மையான ஆண்மக்களுக்கும் துளியாவது அறிவுரை சொல்லுங்கள், மிஸ்டர் குருமூர்த்தி!)

ஸ்வீடன் நாட்டு (அத்துமீறிய, அறிவுகெட்ட) விடுதலை நமக்கு வேண்டாம். இங்கே யாரும் (நாம் அறிந்த வரையில்) அப்படி ஒரு “விடுதலை”க்காகப் போராடிக்கொண்டிருக்கவில்லை.

“ஸ்வீடன் நாட்டில்தான், உலகிலேயே பெண்கள் அதிகமாகக் கேவலப்படுத்தப்பட்டு, கீழ்த்தரமாக நடத்தப் படுகிறார்கள். கிட்டத்தட்ட 67 சதவிகிதம் பெண்கள் அடிக்கப்பட்டும், திட்டப்பட்டும், மற்ற வகையிலும் கொடுமைக்கு ஆளாகிறார்கள். . . . இவர்களை இப்படிக் கொடுமைப்படுத்துவது அச்சமயத்தில் அவர்களுடன் நெருங்கி வாழும் ஆண் சகாக்கள்தான். இது போன்ற துன்புறுத்தலினால் கொலையுண்டும், தற்கொலை செய்துகொண்டும் பெண்கள் உயிரிழக்கின்றனர்” என்று 7, 8 ஆம் பாராக்களில் சொல்லிவிட்டு, “ஆக, அதிகார பலம், பணபலம், பதவி பலம் அவர்களுக்கு அளவுக்கு மீறிக் கொடுக்கப்பட்டும் எந்த வகையிலும் பெண்களின் நிலை உயரவில்லை “ என்று முத்தாய்ப்பும் வைத்திருக்கிறீர்கள்.

திருமனம் என்கிற சடங்கைச் சட்டபூர்வமாக்கிக் கொள்ளாமல் வாழும் வாழ்க்கை முறையால் இக்கேடு விளைகிறதே தவிர, இதற்கும் பெண் சுதந்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. இதுதான் சுதந்திரம் என்று அந்தப் பெண்கள் (ஒருகால்) நினைப்பது போல் இங்கேயும் நினைத்துப் பெண்கள் அதற்காகப் போராடினால் நீங்கள் அதைப் பற்றிக் கவலைப் படுவது நியாயம். அப்படி இல்லாத போது எதற்கு இந்த வீண் வாதம் ? மேலும், இன்னொரு விஷயத்தைச் சுட்டிக்கட்டியதற்கு மிக்க நன்றி. எந்த நிலையிலும் ஆண்கள் பெண்களை அடித்துத் துன்புறுத்தும் குரூர இயல்பு படைத்தவர்களே என்பதைச் சொல்லி யுள்ளீர்களே, அதைத்தான் சொல்லுகிறோம். (ஒருவேளை, இங்கே நாம் மாற்றி மாற்றி மோசமான கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவது போல், அந்தப் பெண்களும் பொல்லாத ஒரு கணவனிடமிருந்து தப்ப இன்னொரு பொல்லாத கணவனை நாடிச் சென்று அவனிடமும் உதை வாங்குகிறார்களோ என்னவோ! இன்னொன்றும் கூட. ஸ்வீடனில், இப்படி ஒரு “முன்னேற்றம்” ஏற்படுவதற்கு முன்னால், 100% பெண்களும் ஆண்களிடம் அடி வாங்கிச்செத்துக் கொண்டிருந்தார்களோ என்னவோ! அது இப்போது 67 ஆய்க் குறைந்துள்ளதோ என்னவோ! யார் கண்டது ? எதற்கும் ஸ்வீடன் நாட்டு ஆண்-பெண்களைக் கலந்து கொண்டு ஒரு முடிவுக்கு வருவதுதான் சரியாக இருக்கும். ஏதோ கிண்டலுக்காக இப்படி நாம் சொல்லுவதாகத் தயவு செய்து நினைக்க வேண்டாம். உண்மையாகத்தான் சொல்லுகிறோம்.)

அடுத்து, 11 ஆம் பாராவில், “‘ஒரு தனிப்பட்ட பெண்ணின் புகழ் பெண் என்கிற இனத்தைச் சென்றடையாது. பெண் என்கிற வர்க்கத்திற்கான குணங்களின் மூலமாகத்தான், அவர்களுக்கு சமுதாயத்தில் மரியாதை கிட்டும்” என்று சொல்லி இருக்கிறீர்கள். அப்படியானால், உங்களுடைய சென்ற கட்டுரை ஒன்றில் இந்த நாட்டில் உயர் பதவி வகித்த இந்திரா காந்தி போன்ற நான்கைந்து பெண்களின் உதாரணத்தைச் சுட்டிக் காட்டி இந்தியாவில் பெண்ணினம் முழுவதும் மிகவும் முன்னேறிவிட்டது என்பது போல் எழுதினீர்களே, அது தவறுதானே ? ஆக, உங்கள் கருத்துக்கு ஆதரவு தேட உங்களின் ஒரு கருத்துடன் நீங்களே முரண்படுவீர்கள் போலும்!

12 ஆம் பாராவில், “பெண்களுக்கே உரித்தான அந்த (நற்) குணங்களையே குறைகளாக மதிக்கும், அல்லது அதை மாற்றும் சிந்தனாமுறைதான் இப்போது மேற்கத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவி வரும் விடுதலை பெற்ற பெண்களின் வாழ்க்கை நெறியாக மாறி வருகிறது” என்று கவலைப் படுகிறீர்கள். அப்படியெல்லாம் ஆகாது, திரு குருமூர்த்தி அவர்களே! நம் பெண்கள் அவ்வளவு இலேசில் கெட்டுப் போய்விட மாட்டார்கள். (இப்படி நீங்களே வேறொரு கட்டுரையில் சொல்லியிருக்கிறீர்கள்.) வெகு நாள் கட்டிப் போடப் பட்ட பின், திடாரென்று கட்டவிழ்க்கப்பட்ட கழுதைகளின் நிலையில் உள்ள அவர்கள் விரைவிலேயே சரியாகிவிடுவார்கள். இந்தக் கேடு பெரும்பான்மைப் பெண்களுக்குப் பரவவே செய்யாது. கவலைப் படாதீர்கள்.

கடைசியாக ஒன்று. பெண்களுக்கே உரித்தான தாய்மையின் காரணமாகவும், இயற்கையாகவே தன்னை அடக்கி, மற்றவர்களைப் பராமரிக்கும் குடும்பப் பாங்கின் மூலமாகவும்தான் அவர்களுக்கு மரியாதையும் மதிப்பும் உருவாகிறது என்று 11 ஆம் பாராவில் கூறியுள்ளீர்கள். ரொம்பவும் சரியென்றே வைத்துக்கொள்ளுவோம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை அப்படி அடங்கியும் ஒடுங்கியும், தாய்மையைப் பெரும் பேறாய்க் கருதியும் குடும்பப்பாங்குடன் வாழ்ந்து வந்துள்ள நம் பெண்களுக்கு ஆண்கள் கொடுத்த மரியாதைதான் என்ன ? அதை நீங்கள் விளக்கவே இல்லையே! இவற்றுக்குரிய மதிப்பையும், மரியாதையையும் பெண்களுக்கு ஆண்கள் கொடுத்திருந்தால், பெண்களில் 99 சதவீதத்தினர் வீட்டுக்குள் ‘குடும்பவிளக்குகளாய்’ இருப்பதையே அதிகம் விரும்புபவர்களாக இருந்திருப்பார்களே – வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்கவேண்டும், அதற்குத் திருமணம், கணவனின் பொறாமை ஆகியவை இடைஞ்சலாக இருக்கும் என்கிற நிலையிலுள்ள பெண்களைத் தவிர ?

ஆனால், அப்படி இருந்த பெண்களின் மனநிலை மாறியதற்கு யார் காரணம் ? என்ன காரணம் ? அப்படிப்பட்ட பெண்களுக்கு உரிய, தகுந்த மரியாதையைத் தர ஆண்மக்கள் தவறியதே அல்லவா! பெண் சிசுக் கொலை எதனால் வந்தது ? பெண்ணை ஒரு சுமை என்று கருத நேர்ந்து விட்டதால் அல்லவா ? அதற்கு யார் காரணம் ? தனக்குப் பெண்ணுறவு தரும் மனைவியாய், தன் குழந்தைகளைப் பத்து மாதம் சுமந்து உயிரைப் பணயம் வைத்துப் பெறுபவளாய், அவற்றை வளர்ப்பவளாய், தான் நோய்வாய்ப்படும் போது பணிவிடை செய்பவளாய், இன்னும் எத்தனையோவாகவும் இருபத்து நான்கு மணி நேரமும் சேவகியாய் இருக்கும் பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு வாங்கும் வெட்கங்கெட்ட – மனச்சாட்சியற்ற – குற்ற உணர்வே இல்லாத – பெற்றோர் மீது பழி போடும் – முதுகெலும்பே இல்லாத ஆண்களே யல்லவா! பெண்கள் வெளியே வர நேர்ந்ததும் இவர்களால் தானே ?

பெண்களுக்கு வர்தட்சிணை (கன்யா சுல்கம்) கொடுக்கும் கலாச்சாரமே நம்முடைய கலாச்சாரம் என்று அதற்கும் சாஸ்திரத்தைச் சுட்டிக்காட்டிச் சப்பைக்கட்டுக்கட்ட மாட்டார்கள் என்று நம்புகிறோம். நடைமுறையில் நடப்பது என்னவென்பதைக் கவனியுங்கள், மிஸ்டர் குருமூர்த்தி!

கடைசியாக – எய்தவன் (ஆண்) இருக்க அம்பை (பெண்ணை) நோகாதீர்கள், திரு குருமூர்த்தி அவர்களே!

. . . . . . . . .

jothigirija@vsnl.net / jothigirija@hotmail.com

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா