மனசுக்குள் வரலாமா ?

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

வேதா


மண்ணும் மனசும்
மணக்கிறதே,

நீதான் என் முதல் மழையோ ?

கனவுகளிலும் நீ,
கவிதைகளிலும் நீ,

காத்திருந்து காத்திருந்து,
ஒரு நிலவுக்குளியலில்,
நெஞ்சு சாய்த்து,
முடி கோதி, முத்தம் தந்து
என்னை மூழ்கடித்தாய்!

பறித்துப் பறித்து – என்னைப்
பதியம் நட்டு வைத்தாய்!
பார்வைக் கம்பிகளால் – பூ
மத்தாப்பு பற்றி வைத்தாய்!

என்
பெண்மையைப் பிரித்துப்போட்டு
புள்ளிகளில் புருவம் வரைந்தாய்!

உன்
தீண்டல்களில் திகைக்க வைத்து
தித்திப்புத் தீ மூட்டினாய்!

வளைகரத்தை வளைத்து – என்னை
நீ செய்த வன்முறை எல்லாம்
வயதை வதைக்கிறதே! – என்
மனதைக் கலைக்கிறதே!
கனவை விதைக்கிறதே!- கடல்
கரையைக் கடக்கிறதே!

மனசுக்குள் உன் வாசம்
மல்லிகையாய் தினம் பூக்கும்
கல்லுக்குள் தேரை போல்-என்
உள்ளுக்குள் நீ உண்டு,
உயிர் ஓடும் நாடி என்று,
உனக்கு என்ன சந்தேகம் ? – நான்
உரக்கச் சொல்லத் தேவை என்ன ?

என்
விடியல் வெண்ணிலவே!
நான்
வழியோடு தொலையும் முன்
வழிகாட்ட வருவாயா ?-என்னை
புதுப்பித்துத் தருவாயா ?

கண்டெடுத்த கவிதைபோல்
கலைத்து வைத்தென்னை
உன்
கள்ளச் சிரிப்புகளில்
கடன் வாங்கிச் சென்றாயே!

வாங்கிய கடன் பாக்கி,
வட்டியோடு முதல் பாக்கி,
வட்ட விழி அழகே,
உன்
வட்டிக்கு வட்டியாய் – என்
வாலிபம் தரலாமா ?

மையலுக்கு மாற்றாக – உன்
மனசுக்குள் வரலாமா ?

piraati@hotmail.com
tamilmano@rediffmail.com

Series Navigation