மந்திர உலகின் தந்திரங்கள்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

சித்ரா ரமேஷ்,சிங்கப்பூர்


சிறு வயதில் நாம் படித்த மந்திரக் குளிகை மாயக் கம்பளம், சித்திரக் குள்ளர்கள், மந்திரவாதி சூனியக்காரி, பொன்வண்டில் ஒளிந்திருக்கும் ராட்சஸனின் உயிர், கொடுமைக்கார சித்தி, வரம் தரும் தேவதைகள் இவை எல்லாம் வரும் மாயாஜாலக் கதைகளிலிருந்து இன்னும் குழந்தைகள் மீளவில்லை என்பதற்கு அடையாளமாக இப்பொழுது பிரபலமாக இருக்கும் ஹாரி பாட்டர் கதைகள். இதை எழுதிய ஜே.கே.ரெளலிங் இது வரை ஐந்து புத்தகங்கள் எழுதி விட்டார். மில்லியன் கணக்கில் பணம் சம்பாதித்தும் விட்டார். ஏதேதோ வேலை செய்து கொண்டு எழுதுவது என் ஆத்ம திருப்திக்காகத்தான் என்று சொல்லிக் கொள்ளும் தமிழ் எழுத்தாளர்கள் பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.

சரி நாம் ஹாரி பாட்டருக்கு வருவோம். இந்த ஐந்து புத்தகங்களில் முதலிரண்டு புத்தகங்கள் ஏற்கனவே திரைப் படமாக வந்து விட்டன. ஜூன் மாதம் மூன்றாம் தேதி மூன்றாவது கதையான Harry Potter and the prisoner of Azkaban திரைப்படம் வர இருக்கிறது. ஹாரி பாட்டராக நடிக்கும் டானியல் ராட்க்க்ள்ிப்புக்கு இப்போது ஏகப்பட்ட பெண் விசிறிகள். முதல் இரண்டு படங்களில் நடித்த போது குட்டிப் பையனாக இருந்தவன் இப்போது பதின்ம வயது பையனாக இருப்பதினால் வரும் வயதுக் கோளாறு தான்.

ஹாரி பாட்டர் என்ற சிறுவன் ஒரு சாதாரண பையனாக சித்தியால் (மாற்றாந்தாய் இல்லை) கொடுமைப் படுத்தப்படும் அப்பாவியாக மாடிப் படிக்குக் கீழே இருக்கும் ஒரு சிறிய அலமாரியில் செல்லோ டேப் போட்டு ஒட்டப்பட்ட கண்ணாடியுடன் சித்தியின் பையன் போட்டுக் கிழித்த பழைய உடைகளை அணிந்து கொண்டு சித்தப்பா எது சொன்னாலும் கீழ் படியும் பயந்த சிறுவனாக பத்து வயது வரை வாழ்ந்து வருகிறான். நெற்றியில் மின்னலைப் போன்ற ஒரு வடு. அவன் சித்தி அவ்வப்போது அதை மறைக்க முயற்சிக்கிறாள். ஏன் ? சில சமயங்களில் அவனையும் அறியாமல் சில விஷயங்கள் நடப்பது ஏன் என்பது புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவனது பதினோராவது பிறந்த நாளின் போது ஒரு கடிதம் வருகிறது. அது அவனிடமிருந்து மறைக்கப் பட்டு விடுகிறது. பிறகு ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான கடிதங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அவன் சாதாரண மானிடப் பையனில்லை. ஜேம்ஸ் பாட்டர், லில்லி என்ற நல்ல மந்திரவாதிகளுக்குப் பிறந்த அதியற்புத சக்தி நிறைந்த பையன்தான் ஹாரி பாட்டர்.

அவன் மந்திர தந்திரங்கள் கற்றுக் கொள்ள ஹேக்வார்ட் பள்ளியில் சேர வந்த அழைப்பைத்தான் அவன் சித்தப்பா அவனிடமிருந்து மறைக்கிறார். ஹாரி பாட்டர் ஹேக்வார்ட் பள்ளியில் சேருவதும் அங்கே அவனுக்கு கிடைக்கும் ரான் வீஸ்லி என்ற தோழனும் ஹெர்மயானி என்ற தோழியும் இந்த மூவரும் சேர்ந்து செய்யும் சாகசங்கள் தான் தொடரும் கதைகள்.

சாதாரண அற்ப மானிட உலகத்தைப் போலவே போட்டிகளும் பொறாமைகளும் நயவஞ்சகமும் நிறைந்த உலகமாகவே இருக்கிறது அந்த மந்திர உலகமும். நல்லவர்கள், தீயவர்கள், திறமைசாலிகள், ஞானிகள், நண்பர்கள், பகைவர்கள், கோமாளிகள், வேலைக்காரர்களைக் கொடுமைப் படுத்தும் எஜமானர்கள் (நல்ல வேளை மாமியார் மாட்டுப்பெண் கொடுமை மட்டும் மஸ்ஸிங்) மற்றபடி ஃப்யூடலிஸ அமைப்பை சற்றும் மாற்றாமல் காவல் காக்கிற பூதங்கள், வங்கியில் வேலை செய்யும் தந்திரக் குள்ளர்கள், வீட்டு வேலை செய்ய அடிமைக் குள்ளர்கள் என்று மந்திர வாதிகளின் உலகத்திலும் வர்ண பேதங்கள். க்விடிச் என்ற மந்திர துடைப்ப விளையாட்டிலும் கிட்டத்தட்ட மேட்ச் பிஃக்ஸிங் போல் முறைகேடுகள் நடந்து இறுதியில் ஜெயிக்க முடிகிறது. கையில் மந்திரக் கோல் இருந்தாலும் அப்படி நினைத்ததையெல்லாம் நடத்திக் கொள்ள முடியாது என்ற யதார்த்த உண்மைகளும் அவ்வப்போது சொல்லப் படுகிறது. மனிதர்கள் இருக்கும் உலகத்திற்கு வந்தாலும் தலைபோகிற அவசரம் இல்லை அவசியம் இருந்தாலேயொழிய மந்திர சக்தியை உபயோகிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகளும் உண்டு.

இன்னும் இரண்டு புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன. அத்தோடு ஹாரி பாட்டர் தொடர் முடிவு பெற்றுவிடுமென்று கதாசிரியை அறிவித்திருக்கிறார். அடுத்த புத்தகத்தில் ஹாரி பாட்டருக்கு ஒரு காதலி கிடைத்து விடுவாள் என்று சொல்லப் படுகிறது. அவன் கூடவே இருந்து உதவும் ஹெர்மாயினி அவன் காதலி இல்லையென்று தொடர்ச்சியாகப் படிப்பவர்களுக்குப் புரிந்து விடும். ‘ஆட்டோகிராஃப் ‘ ஸ்டைலில் சொன்னால் நல்ல ஸ்நேகிதி மட்டும் தான். ரானும் ஹெர்மாயினியும் காதலன் காதலியாகலாம். அப்புறம் என்ன ? இறுதி புத்தகத்தில் தன் தாய் தந்தையை கொன்று தன்னையும் ஒரு வயதிலேயே கொல்ல முயன்ற வால்டிமார்ட் என்ற தீய மந்திரவாதியை ஒழித்துக் கட்டி, அவன் ஹாரி பாட்டரை கொல்ல முயன்ற போது ஏற்பட்ட வடுதான் ஹாரி பாட்டரின் நெற்றியில் இருக்கும் அந்த மின்னலைப் போன்ற வடு. அந்த வடு மறைந்து விடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (யார் அந்த நம்பத் தகுந்த நபர் என்கிறீர்களா ? ஜே கே ரெளலிங்! இல்லை என் பெண்தான்) கடைசி புத்தகத்தின் கடைசி வார்த்தை ‘the scar ‘ என்று முடிவு பெறுமாம்.

நம் இளமைப் பருவ பிரமிப்புகள், ஏக்கங்கள் எல்லாம் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட நிலையிலிருக்கும் தற்காலக் குழந்தைகளை பிரமிப்பை ஊட்டும் ஒரு கற்பனை உலகத்திற்கு அழைத்துச் செல்வது இந்த கதையின் வெற்றிதான். நாம் கற்பனை செய்யும் நீளமான கறுப்பு அங்கிகளில் உலவும் மந்திரவாதிகளை விட கலையம்சத்திலும் தொழில் நுட்பத்திலும் மேம்பட்ட மாயாஜால உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது

திரைப்படம். இதை படித்து விட்டு நிறைய குழந்தைகள் தாங்களும் மந்திர உலகத்தைச் சேர்ந்த மாயாவிகள் என்று தீவிரமாக நம்பிக் கொண்டிருக்கின்றன. ஏற்கெனவே சொன்னது போல் எந்த விஷயங்களுமே நவீன தொழில் நுட்பத்தாலும், விஞ்ஞான அறிவாலும், ஊடகங்களாலும் முக்கியமாக எதையும் குழந்தைகளுக்காக வாங்கித் தரத் துடிக்கும் ‘பெற்றோர்களாலும் ‘ எளிமையும் பேதமையும் நிறைந்த குழந்தைப் பருவத்தை தொலைத்து கொண்டிருக்கிற ‘ஹை டெக் ‘ குழந்தைகளுக்கு பதின்ம வயதினருக்கும் இது போன்ற கற்பனைகளாவது மிச்சமிருக்கட்டுமே!

ஆனால் அந்த உலகத்திலும் படிக்க வேண்டும். மனப்பாடம் செய்ய வேண்டிய மந்திரங்கள், ஓவியம் வரைதல், ரசவாத வித்தை வகுப்புகள்,மந்திரக் கோலை பயன்படுத்துவதற்கு வேண்டிய தொழில் முறைக் கல்வி, அறிவியல், புவியியல், பரீட்சை,விடுமுறை எல்லாம் இருக்கிறது. மந்திரக்கோலைப் பிடித்துக் கொண்டு மந்திரவாதியாக மந்திரத் துடைப்பத்தில் வலம் வருவது ஒன்றும் அத்தனை எளிமையான விஷயமில்லை என்பதும் புரிந்து விடுகிறது.

ஹாரி பட்டரைப் பற்றி இன்னும் விவரம் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஜேகே ரெளலிங் வைத்திருக்கும் இணைய தளத்திற்குச் சென்று விவரங்கள் பெறலாம். இணைய தள முகவரி

www.jkrowling.com

உங்களில் யாருக்காவது நமக்கும் ஹாரி பாட்டர் போல் ஏதாவது அற்புத சக்தி மறைந்திருக்கலாம் என்று தோன்றுகிறதா ? உங்களுக்கு ஒரு சின்ன பரீட்சை! நீங்களே செய்து பார்க்கலாம். ஏதாவது ஒரு பாடலை மனதில் நினைத்துக் கொள்ளவும். உங்களுக்குப் பிடித்த பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்தப் பாடலை எட்டு மணி நேரத்தில் கேட்டு விட்டால் உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கிறது என்று தீர்மானித்துக் கொண்டு குறி சொல்வதையோ இல்லை ஜோஸ்யம் சொல்வதையோ உங்கள் வசதி போல் ஆரமித்து விடலாம். பாடல் என்று நான் சொன்னதும் ‘அப்படி போடு போடு தன்னாலே ‘ பாட்டையோ இல்லை ஆயுத எழுத்து பாட்டையோ இல்லை. இவற்றையெல்லாம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கேட்கக் கூடிய சாத்தியகூறுகள் அதிகமிருப்பதால் ஐம்பதுகளில் வெளியான பாடல்கள் (மொழி மாற்றுப் பாடல்களாக இருந்தால் இன்னும் சிறப்பு ‘உன் பேரைக் கேட்டேன் தன்னந்தனியில் தான் ‘ போன்ற பாடல்கள்) தெலுங்குக்கும் தமிழுக்கும் பொதுவான பாடல்கள் போன்ற பாடல்களை தேர்ந்தெடுத்து இந்த பரீட்சையில் இறங்கவும்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

—-

சித்ரா ரமேஷ்

சிங்கப்பூர்

kjramesh@pacific.net.sg

Series Navigation

சித்ரா ரமேஷ்

சித்ரா ரமேஷ்