மத்தியக்கிழக்குப் போரும் இந்தியாவும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

சின்னக்கருப்பன்


அமைதிக்காக போர் என்று எதுவும் இல்லை. போர் ஏற்கெனவே நடந்துகொண்டிருக்கிறது. ஒரு எல்லையை தாண்டும்போது அது வன்முறையாக வெடிக்கிறது. போர் ஆரம்பம் என்பது அறிவித்து வருவதில்லை. அடுத்தவன் இருப்பது நமக்கு ஆபத்து என்று உணர்வதில் ஆரம்பித்து, ஆநிரை கவர்கிறான் என்று தொடர்ந்து வெளிப்படையான அறிவிப்பு வரை பல்வேறு தடங்களை தாண்டிவருகிறது.

போர் மூலம் அமைதியும் வருவதில்லை. எல்லா அமைதியும் அடுத்த போருக்கான ஆயத்தங்களே. போர்களை சற்று தள்ளிப்போடலாம். என்னிடம் வலிமையான ஆயுதம் இருக்கிறது என்னிடம் வாலாட்டாதே என்று பகிரங்கமாக அறிவிப்பதிலிருந்து, நான் கிறுக்கன் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வது போல பல ஆயுதங்கள் மூலம் போர்களை தள்ளிப்போடலாம். போர்கள் நிரந்தரமாக முடிவுபெறுவதில்லை.

போர்கள் நிரந்தரமாக முடிவு பெறுவது சம அந்தஸ்து உள்ள குடிமக்களாக மக்கள் உணர்ந்து ஒரு நாட்டுக்குள் ஐக்கியமாகும்போதுதான். பாகிஸ்தானும் இந்தியாவும் எக்காலத்திலும் போரை நிறுத்தாது. பாகிஸ்தானும் இந்தியாவும் இணையும்போதுதான் அந்த போர் நிற்கும். ஒரு சில விட்டுக்கொடுத்தல்கள் மூலம் நடுவே சற்று நீண்ட அமைதியை உருவாக்கலாம். அவ்வளவுதான். போர் நிற்கவேண்டுமென்றால், போர் மூலம் பயன்பெறக்கூடிய அரசியல்வாதிகளின் அடித்தளம் நீக்கப்படும்போதுதான். (இங்கே அரசியல்வாதிகள் என்பது ராணுவ சர்வாதிகாரிகளையும் தீவிரவாதக்குழுக்களின் புரட்சித்தலைவர்களையும் சேர்த்துத்தான்)

ஒரே மதத்தைப் பின்பற்றும் ஈரானும், ஈராக்கும் நிரந்தரப் பகைவர்களாய் இருப்பதும், மூன்றுக்கு மேற்பட்ட மொழியினர்கள் ஸ்விட்சர்லாந்தில் இணைந்து ஒரே நாட்டில் வாழ்வதும் , நாடு என்ற அமைப்புக்குள் இணங்கி இருக்கும் தன்னிச்சையான குழுக்கள் தான் ஜனநாயகம் மூலம் போர்க்குணம் அற்று வாழமுடியும் என்பதன் நிரூபணம்.

இங்கே இஸ்ரேல் நாட்டுக்குள் வடக்கு இஸ்ரேலும் தெற்கு இஸ்ரேலும் தனித்தனி (யூத!) நாடுகளாகவே இருந்திருந்தாலும் -ஈரான் ஈராக் மாதிரி – , இவர்களுக்குள் அடித்துக்கொள்வதே பெரிய பிரச்னையாக இருந்திருக்கும். அப்போது எது உண்மையான யூத நாடு என்று நிரூபிக்கும் போட்டியில் சகோதரக்கொலை மற்ற கொலைகளை விட அதிகமாக இருக்கும். ஒன்றுபட்ட இஸ்ரேல் நாட்டில் யூத குணாம்சம் முன்னிறுத்தப்படும்போது அது தன்னை அருகாமையில் இருக்கும் இஸ்லாமிய நாடுகளுடன் ஒப்பிடுகிறது. தனது எல்லைகளை விரிவு படுத்த முனைகிறது. இதுதான் இந்தப் போரின் அடித்தளம்.

இந்த போர் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே திட்டமிடப்பட்டுவிட்டது என்றுதான் தோன்றுகிறது. இன்றைய தெற்கு லெபனானில் இஸ்ரேலிய படைகள் வெகுகாலம் ஆண்டுகொண்டிருந்தன. அங்கிருக்கும் ஷியா மக்கள் மத்தியில் தனக்கென ஆதரவு ஆயுதக்குழுக்களைக்கூட இஸ்ரேல் கொண்டிருந்தது. ஈரான் அதற்குள் வந்து தனது ஆதரவாக ஹிஜ்போல்லா குழுவை உருவாக்கியது. அது கெரில்லா போர்முறையில் இஸ்ரேலிய படைகளை தாக்கி கொண்டிருந்தது. கெரில்லா போர்முறையை எதிர்த்து ஒரு இடத்தை தக்க வைப்பது கடினம் (ஈராக்கில் அமெரிக்க படைகள் கஷ்டப்படுவது போல)

இஸ்ரேலுக்கு ஷியா பெரும்பான்மையாக இருக்கும் ஒரு பிரதேசத்தை ஆக்கிரமித்து அங்கு ஆட்சி புரிவது தேவையில்லாத விஷயம். இஸ்ரேலுக்கு தேவை இடம். எந்த ஆட்களும் இல்லாத இடம். அதற்கு ஷியா பிரதேசத்தை ஆள்வதன் மூலம் பெற முடியாது. ஷியா பிரதேசத்தில் உள்ள ஷியா மக்களுக்கு உதவ வேண்டிய கட்டாயமும் வந்து சேரும். அது இஸ்ரேலுக்கு தேவையில்லாதது. அதனால்தான் அங்கிருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறின. இதனை தனது வெற்றியாக ஹிஜ்பொல்லா கொண்டாடியது. அதன் மூலம் ஹிஜ்போல்லா ஷியா மக்களின் பிரதிநிதியாக ஆனது. ஹிஜ்போல்லா தலைவர் தெற்கு லெபனானின் தன்னிகரற்ற தலைவர் ஆனார். ஈரான் ஹிஜ்பொல்லாவுக்கு கொட்டிக்கொட்டி கொடுத்தது. ஈரான் ஹிஜ்போல்லா மூலம் தெற்கு லெபனானின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது. எப்படி? அங்கு பங்கர் கட்டுவது, அங்கு சுரங்கப்பாதை கட்டுவது, அங்கு குடிமக்கள் வாழும் பகுதிக்கு நடுவில் பீரங்கி கொத்தளங்களை அமைக்க வேலை என்று! இன்று அங்கிருக்கும் ஷியா மக்களுக்கு முக்கிய தொழில் இப்படிப்பட்ட ராணுவ அமைப்புகளை தங்கள் வாழும் பகுதியில் கட்டுவது!

இரண்டு வீரர்களுக்காக இஸ்ரேல் அங்கு போருக்குப் போகவில்லை. ( பல இந்தியர்கள் கொதித்து போயிருப்பது போல, இரண்டு வீரர்கள் இஸ்ரேலுக்கு முக்கியமில்லை. போர் செய்ய தகுந்த நேரமில்லை என்றால், இஸ்ரேல் இதனைப் பெரிய விஷயமாக பேசவும் பேசாது) இது ஒரு வெறுமே காரணம்தான். ஆநிரை கவர்தல் மாதிரி. போருக்கான காரணங்களே வேறு.

இப்போது இஸ்ரேல் தெற்கு லெபனான் முழுவதும் துண்டுச்சீட்டுகளை “மனிதாபிமான அடிப்படையில்” போடுகிறது. “மக்களே இங்கே போர் நடக்கப்போகிறது. பாதுகாப்பான இடங்களுக்கு ஓடுங்கள்”

தெற்கு லெபனானை ஷியா மக்கள் இல்லாமல் காலி செய்யவேண்டும். அதுதான் இஸ்ரேலின் நோக்கம். சுமார் 2 வருடங்கள் போர் நடந்தால், தெற்கு லெபனான் முழுவதும் காலியாகும். காலியாகும்போது மெல்ல மெல்ல யூதர்கள் அங்கே ராணுவத்தினராக வந்து குடியேறுவார்கள். ஆக்கிரமிப்பு நிரந்தரமாக ஆக்கப்படும்.

***

இரண்டு போர் வீரர்களுக்காக இஸ்ரேல் லெபனான் மீது படையெடுக்கிறது, ஆனால் 200 பேருக்கும் மேல் மும்பையில் படுகொலை செய்யப்பட்டிருந்தும், இந்தப் படுகொலைகளின் காரணம் யார் என்று தெரிந்திருந்தும், பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத கையாலாகாத்தனம் இந்தியாவின் அரசியல்வாதிகளை ஆக்கிரமித்திருக்கிறது என்று பலரும் கொதிப்பு அடைகிறார்கள்.

இதில் எதனை இந்தியா காப்பி அடிக்க முடியும்? இந்தியாவுக்கு பாகிஸ்தானின் நிலப்பரப்பின் மீது ஆசை இல்லை. இந்திய நிலப்பரப்பின் மீது பாகிஸ்தானின், பங்களாதேஷின், சீனாவின் ஆக்கிரமிப்பை தடுப்பதே முழு வேலை. அந்த வேலையையும் இந்தியா உருப்படியாக செய்வதில்லை. ஏன் பிரதமமந்திரியின் அலுவலகத்தினுள்ளே அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கூட தடுக்க முடியாது. இந்தியா ஒரு மென் அரசு. அது ஜனநாயக நாடாக இருப்பதால் வரும் மென்மை தாண்டி இன்னும் கையாலாகாத மென் அரசு. ஒரு திட்டவட்டமான நீண்டகால லட்சியம் இல்லை. பாகிஸ்தான் போரை இந்தியாவின் எல்லைக்குள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது – இஸ்ரேல் லெபனானில் நிகழ்த்துவதும், லெபனானின் ஹெஜ்பொல்லா இஸ்ரேலில் நிகழ்த்துவதும் இதுவே. சீனா மாவோயிசக் குழுக்களின் வழியாக இந்திய எல்லைக்குள் போரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இதன் பலன் இந்தியாவின் போர் ஆயத்தங்களை தம்முடைய எல்லைக்குள்ளேயே நிகழ்த்திக் கொண்டாக வேண்டிய கட்டாயத்தினால், கார்கில் போன்ற ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடிக்கக் கூட நேரம் இல்லாத சூழ்நிலை.

இந்தியா பாகிஸ்தானுடன் ஒரு நல்லுறவை பேணுவது என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. அப்படிப்பட்ட கானல் நீரை தேடி ஓடுவது வேண்டுமென்றால், இந்திய அரசியல்வாதிகளுக்கு பொழுது போக்காகவோ அல்லது கனவாகவோ இருக்கலாம். ஆனால், எந்த ஒரு பாகிஸ்தானிய அரசியல்வாதியும் இந்தியாவுடனான சமாதானத்துடன் வாழ முடியாது. பாகிஸ்தானின் இருப்பே அதன் இந்திய எதிர்ப்பில்தான் இருக்கிறது. அதன் இருப்பை காலி செய்யும்போது இந்திய எதிர்ப்பும் மறையும். இதற்காக எல்லைக்கோடுகளை வைத்துக்கொண்டே பல முயற்சிகள் செய்யப்படுகின்றன. தெற்காசிய பொருளாதார கூட்டமைப்பு போன்ற தற்காலிக நடவடிக்கைகளும், சிபிஎம் என்னும் நம்பிக்கை ஊட்டும் முயற்சிகளும் இதனை குறித்து நடத்தப்படுகின்றன. இவை எல்லாமே கவைக்குதவாதவை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருக்கும் எல்லைக்கோடு நீக்கப்படும்போதுதான் பிரச்னை நீங்கும். (இந்த எல்லைக் கோடு நீக்கம் என்பது பௌதீக எல்லைக் கோடல்ல. இரண்டு நாடுகளுமே சுதந்திரமான, மதச்சார்பற்ற ஜனநாயக நாடாக இருக்கும் பட்சத்தில், பரஸ்பரப் பிரசினைகளை ஆயுதப்போர் இல்லாமல் தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும்.) இந்தியா பாகிஸ்தானின் எல்லைக்குள்ளும், சீனாவின் எல்லைக்குள்ளும் இந்தியா தன் படைபலத்தை வேறு வடிவங்களில் கொண்டு செல்ல முடியாது அதற்கான அவசியமும் இல்லை. ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தகுதி அதன் ஜனநாயகமே. ஜனநாயகத்தின் கருத்துப் பரவலுக்கு இந்தியா அவசியமான கருத்துப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். ஒன்றுபட்ட இந்தியாவின் தலைவராக ஒரு முஸ்லீம் பிரதமர் தோன்றுவது அப்போதுதான் சாத்தியமாகும் என்று எனக்கு தோன்றுகிறது.

இல்லையேல் கோயம்புத்தூர் குண்டுவெடிப்புகளின் பிறகு கைது செய்யப்பட்ட பல முஸ்லீம்களை கொட்டடியில் அடைத்துவைப்பது போலத்தான் நாம் மனித உரிமை மீறல்களை சகித்துக்கொண்டிருக்க வேண்டுமா? குண்டு வெடிப்பு நடந்ததும் ஒரு விசாரணையுமில்லாமல் நூற்றுக்கணக்கான மக்களை கொட்டடியில் போட்டு பூட்டி வைப்பதில் என்ன சாமர்த்தியம்? ஒன்று விசாரணை செய்து நிரூபித்து தண்டனை கொடுக்க வேண்டும் இல்லையேல் ஆதாரம் இல்லை என்று விடுதலை செய்யவேண்டும். இரண்டுமில்லாமல் பல அப்பாவிகளின் வாழ்க்கையை பலிகொடுப்பதில் என்ன பிரயோசனம்? வெளியே விட பயம் என்றால், அவமானமாக இல்லை? மும்பாய் குண்டுவெடிப்புக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் கோயம்புத்தூர் சேலம் குண்டுவெடிப்புகள் என்று பேசுகிறார்கள். பலர் கைது செய்யப்படுகிறார்கள். இது உண்மையிலேயே சதித்திட்டம் தீட்டியவர்களைத்தான் கைது செய்கிறார்கள் என்று எனக்கு நம்பிக்கை வராததற்கு என்ன காரணம்? இவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

ஒரு விஷயம் சொல்கிறேன். இந்திய முஸ்லீம்கள் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டுபவர்கள் இந்திய விரோதிகள். இந்தியாவில் சுமார் 15 கோடி முஸ்லீம்கள் இருக்கிறார்கள். அவர்களில் 1 சதவீதம் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தால் எண்ணிக்கை என்ன தெரியுமா? 15 லட்சம். 15 லட்சம் ஆயுதம் தாங்கிய முஸ்லீம்கள் பயங்கரவாதிகளாக இருக்கிறார்களா என்ன? இதுவரை இந்தியாவில் தீவிரவாத முஸ்லீம்கள் என்று கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சுமார் 150 பேர் இருப்பார்களா? அது எத்தனை சதவீதம் என்று நீங்களே கணக்குப்போட்டுக்கொள்ளுங்கள். எல்லா சமூகங்களிலும் கிறுக்கர்கள் இருக்கிறார்கள். எல்லா சமூகங்களிலும் அதைவிட அதிகமாக அராஜகவாதிகள், கொலைகாரர்கள். கொள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு குண்டு வெடிப்பின் பின்னரும், குற்றவாளிகளை அடையாளம் காட்டப்படும்போது பாகிஸ்தானிய அரசியல்வாதியின் வெற்றிக்களிப்பு எனக்கு கேட்கிறது. ஒவ்வொருமுறை பாகிஸ்தான் தனது உளவாளிகளால், கோயம்புத்தூர் மும்பாய் என்று குண்டுவெடிப்புகளை செய்தபின்னாலும் முஸ்லீம்கள் ஒரு சிலர் கைது செய்யப்படும்போது, அது முஸ்லீமல்லாத இந்தியர்கள் மத்தியில் முஸ்லீம் இந்தியர்களைப் பற்றிய அவநம்பிக்கையை வளர்க்கிறது. தொடர்ந்து முஸ்லீம்கள் மீது முஸ்லீம் அல்லாதவர்கள் கொள்ளும் அவநம்பிக்கை ஒரு நாள் வெடிக்கும், குஜராத் கலவரம் போல. அந்த கலவரங்களை தனது ஆள்சேர்க்கும் படலத்துக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உபயோகப்படுத்திக்கொள்ளும். அந்த கலவரங்களின் படங்களை போட்டு ஒரு சில இஸ்லாமியர்கள் தங்கள் சமூகத்தின் உள்ளே வன்முறையை தூண்டுகிறார்கள். இது பாகிஸ்தானுக்கு வேலை செய்வது போலத்தான். இந்தியாவின் ஜனநாயகத்தையும் இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் குலைப்பதே பாகிஸ்தானிய ஆளும் வர்க்கத்தின் முதல் நோக்கம். சர்ச்சில் சொன்னதுபோல துண்டு துண்டாய் சிதறும் இந்தியாவையே பாகிஸ்தான் விரும்புகிறது. அதற்கு போடும் ரொட்டித்துண்டுகள் இப்படிப்பட்ட கலவரங்கள்.

இங்கும் நடப்பது போர்தான். இந்தப்போரில் உயிர்ப்பலி இப்படி போகிறது.

எனக்கென்னவோ, உலகளாவிய போர் ஒன்று மேற்குலகத்துக்கும் இஸ்லாமிய உலகத்துக்கும் எதிராக நடக்கும் என்று தோன்றுகிறது. அப்படியரு போர் ஏற்பட்டால் அது மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பினால் அல்ல, இஸ்லாமிய நாடுகளில் உள்ள வளங்களுக்கான போராகத் தான் இருக்கும். ஆனால் இஸ்லாமிய நாடுகளும், இஸ்லாமிய நாடுகள் வளர்த்துவிடும் தீவிரவாத இயக்கங்களும், அந்தப் போரை இஸ்லாமிற்கு எதிரான போராகத்தான் பிரசாரம் செய்ய முயலும். அந்த போரில் பல்வேறுவிதமான தூண்டுதல்கள் மூலம், பாகிஸ்தான் நம்மை அதற்குள் இழுத்துவிட பிரம்ம பிரயத்தனம் செய்யும். அதாவது இது போன்ற குண்டுவெடிப்புகள் மூலம். நாம் என்ன தூண்டுதல் இருந்தாலும், அணுகுண்டே நம் பிரதேசத்துக்குள் போடப்பட்டாலும், அமைதி காக்கவேண்டும். ஏனெனில் அந்த உலகப்போரினுள் நுழைவது, நம் மக்களுக்கு மாபெரும் அழிவையே கொண்டுவரும்.

தற்போதைக்கு, நாம் தூண்டுதலுக்கு இடம் கொடாமல் அமைதி காக்கவேண்டும். இந்திய முஸ்லீம்கள் மீது நடக்கும் பொய்ப்பிரச்சாரங்களை எதிர்கொள்ள வேண்டும். தவறாக பேசும் இந்திய முஸ்லீம் தலைவர்களை பரபரப்புக்காகவும் பத்திரிக்கை விற்கும் ஆவலுக்காகவும் இடம் கொடுப்பதை நிறுத்தி, அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். நவாஸ் ஷெரீப்புக்கும், பெனசீர் புட்டோவுக்கும் உதவி செய்யவேண்டும். அவர்கள் ஜனநாயக ஆட்சியை பாகிஸ்தானில் கொண்டு வரச் செய்யும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அனைத்து நாடுகளிலும் சென்று, சர்வாதிகார ஆட்சிக்கு அங்கீகாரம் அளிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யவேண்டும்.

***
karuppanchinna@yahoo.com
***

Series Navigation

author

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

Similar Posts