மடியில் நெருப்பு – 32

This entry is part [part not set] of 33 in the series 20070405_Issue

ஜோதிர்லதா கிரிஜா



அன்று மாலை தொலைபேசி மனியடிக்க, எடுத்துப் பேசிய ஜகந்நாதன், மறு முனையில் லில்லியின் குரலைக் கேட்டதும், “என்ன, லில்லி? சொல்லு,” என்றார்.

“அந்தப் பையன் சேதுமாதவன் தனக்குக் கல்யாணத்திலே பிரியம் இல்லைன்னு சொல்லியனுப்பிட்டான். ஏன்னு தெரியல்லே.”

“விட்டுத்தள்ளு. லண்டன், அமெரிக்கான்னெல்லாம் அலையாதீங்க. உள்ளூர் மாப்பிள்ளைகளைப் பத்தியே முழு விவரமும் கண்டுபிடிக்க முடியறதில்லே! வேற எடம் பாக்கலாம்.”

“அப்புறம் எப்ப வர்றீங்க?”

‘ரெண்டொ¡ரு நாள்லெ வர்றேம்மா.!” என்ற ஜகந்நாதன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

. . . அன்றிரவும் சூர்யாவுக்குத் தூக்கமில்லை. கமலாவின் தற்கொலைக்குக் காரணமானவன் என்று நம்பப்படும் அந்தத் தண்டபாணிக்கும் ராஜாதிராஜனுக்கும் நட்பு என்பதை அவளால் தாங்கவே முடியவில்லை. அவனைத் தனக்குத் தெரியவே தெரியாது என்று ராஜாதிராஜன் சாதித்ததோ மர்மமாக இருந்தது. எதற்காக இந்தப் பொய் என்று அவள் மண்டையை உடைத்துக்கொண்டு வெகு நேரம் உறங்காமல் இருந்தாள். எவ்வளவு யோசித்தும், காரணம் எதையும் அவளால் ஊகிக்க முடியவில்லை.

. . . மறுநாள் அலுவலகத்தின் வரவேற்பு அறையிலிருந்து சூர்யாவைத் தொலைபேசியில் அழைத்து வரவேற்பாளர் அவளைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாய்த் தெரிவித்தார். சூர்யா யாராக இருக்கும் என்று தனக்குள் யோசித்தவாறு எழுந்து சென்றாள்.

அவள் வரவேற்பறையை அடைந்ததும், அவளுக்கு அறிமுகம் அற்ற அவ்விளைஞன் எழுந்து நின்றான். ‘”நீங்கதானே மிஸ் சூர்யா?”

“ஆமா! நீங்க?”

“என் ·போட்டோவை நீங்க பாத்திருக்கீங்க. நல்லா ஞாபகப் படுத்திப் பாருங்க.”

அவள் விழிக்க, “நான் தாங்க உங்க அக்கா ராஜலட்சுமியோட புருஷன்!” என்று அவன் புன்னகை செய்தான்.

“ஆங்! ஆமாங்க! இப்ப தெரிஞ்சிடிச்சு. அந்த ·போட்டோவில இவ்வளவு குண்டாயில்லே நீங்க. . . அதாவது. . . இப்ப நீங்க குண்டுனு நான் சொல்லல்லே. . .”

“பரவால்லே. சொல்லுங்க. இது மாதிரி கேலிப் பேச்சுக்கெல்லாம் நமக்குக் குடுத்து வைக்காம போயிறுச்சு. ராஜிதான் என்னய அனுப்பி வெச்சுது. முந்தா நாளு தற்செயலா ஒரு நண்பர் மூலமா நீங்க உங்க பழைய வேலையை விட்டுட்டு இங்கே வேலைக்குச் சேந்துட்ட விஷயம் தெரிய வந்திச்சு. ஒரு நாளு வீட்டுக்கு வரச் சொல்லிச்சு. உங்களால முடியற அன்னைக்கு ·போன் பண்ணிச் சொன்னா நானே வந்து இட்டுட்டுப் போவேன். . .ராஜி உங்களுக்கு ஒரு லெட்டர் கூடக் குடுத்து அனுப்பியிருக்கு. . . இந்தாங்க. . .அதிலேயே எங்க வீட்டு விலாசமும் இருக்கு.”

சூர்யா ராஜலட்சுமியின் கடிதத்தை உடனே படித்தாள்:

‘அன்புள்ள சூர்யா,

நீ எப்படி இருக்கிறாய்? வீட்டில் எல்லாரும் நலமா? சுகன்யா இப்போது கல்லூரியில் படிக்கிறாள் என்று நினைகிறேன். நீ ஒரு நாள் – விரைவில் – என் வீட்டுக்கு வர வேண்டும். அம்மாவின் கோபம் கொஞ்சமாவது குறைந்திருக்கிறதா? நிலைமை சரியாக இருந்தால், நானே வந்து எல்லாரையும் சந்திப்பேன். அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டா? உன்னைப் பார்த்துப் பேச நான் துடித்துக் கொண்டிருகிறேன். முடிந்தால் இன்றே வா. இங்கே உனக்கு ஓர் ஆச்சரியம் காத்துக் கொண்டிருக்கிறது.

அன்புடன்,

ராஜி.

கடிதத்தைப் படித்து முடித்த சூர்யாவுக்குக் கண் கலங்கினாலும், ராஜலட்சுமி நன்றாக இருப்பது பற்றிய செய்தியில் நிம்மதியுற்ற அவள் உதடுகள் புன்சிரிப்புக்கொண்டன.

“இன்னைக்கே வர முடியுமா?”

“இன்னைக்கு முடியாதுங்க. எப்ப வர்றேன்றதுக்கு நாளைக்கு ·போன் பண்றேன். “

“இந்தாங்க எங்க கம்பெனி முகவரி அட்டை. இதிலே ·போன் நம்பரெல்லாம் இருக்கு. . .” என்று அவன் கொடுத்த அட்டையில் ‘பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ்’ என்று இருந்ததைப் பார்த்து அவள் திகைத்துப் போனாள். தன் வருங்காலக் கணவனின் கீழே தன் அக்காவின் கணவன் பணி புரிந்துகொண்டிருந்த செய்தி அவளுள் ஒரு நிம்மதியைத் தோற்றுவித்தது. ‘ராஜாதிராஜனைப் பற்றி இவரிடம் கூடக் கேட்டுப் பார்க்கலாமே!’

“சரி. அப்ப நான் போயிட்டு வர்றேன்.”

“கொஞ்சம் இருங்க. காண்டீன்லே காப்பி குடிச்சுட்டுப் போலாம்.”

“சாரிம்மா. இன்னொரு நாள் பாத்துக்கலாம். அரை மணிக்குள்ளே வர்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அப்ப, நாளைக்கு ·போன் பண்ணுங்க.”

அவள் வாசல் வரை சென்று அவனை வழியனுப்பிவிட்டுத் தன் பிரிவுக்குப் போனாள். இருக்கையில் அமர்ந்ததும், “பவானி! எங்கக்கா புருஷன் வந்திருந்தாரு. நான் எங்கக்காவைப் பத்தி உங்கிட்ட சொன்னதில்லே. சாரி. . . அது எங்கப்பாம்மாவுக்கு விருப்பம் இல்லாம ஒரு அரிஜனப் பையனைக் கல்யாணம் பண்ணிக்கிடிச்சு. .” என்று தொடங்கிய சூர்யா மற்ற விவரங்களையும் பவானிக்குச் சொன்னாள்.

“இந்த நாட்டிலே ஜாதி ஜாதின்னு ஏன் தான் ஜனங்க இப்படி அடிச்சுக்குறாங்களோ! எப்ப தான் மாறுவாங்களோ!” என்று பவானி பெருமூச்செறிந்தாள்.

. . .. கார் ஓடிக்கொண்டிருந்தது. சூர்யா இயல்பாக இருக்க முயன்றாள். தனது அம்முயற்சி வெளிப்படாதவாறு கவனமாகவும் இருந்தாள். செயற்கையான புன்னகைகளையும், பதில்களையும் ராஜாதிராஜனின் பேச்சுக்குப் பதில்களாக உதிர்த்துக் கொண்டிருந்த அவள் மனமென்னவோ தண்டபாணிக்கும் அவனுக்கும் உள்ள உறவையும், அதை அவன் மறைக்க வேண்டிய காரணத்தையும் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது.

ஒரு தோதான கணத்தில், “ என் தங்கச்சி சுகன்யா நேத்து சாயந்திரம் உங்களைப் பாத்திச்சாம். ரம்யா ஒட்டல்லேருந்து உங்க ·ப்ரண்ட் ஒருத்தரோட சிரிச்சுப் பேசிக்கிட்டே நீங்க வெளியே வந்தப்போ பாத்திச்சாம்,” என்றாள்.

“என்னை அவளுக்கு எப்படித் தெரியும்?”

“தினத்தந்தி ·போட்டோவை அதுதானே கொண்டு வந்து காட்டிச்சு? நீங்க குடுத்த ·போட்டோவையும் காட்டினேனே! அதிலே இன்னும் தெளிவா விழுந்திருந்தீங்களே! நீங்க போட்டிருந்த பேண்ட், ஷர்ட் கலர் கூடச் சொல்லிச்சு. வெளிர் நீலத்துலே ஷர்ட், கறுப்புப் பேன்ட்! சரிதானே? ப்ரவுன் கலர் ப்ரீ·ப் கேஸ் வச்சிருந்தீங்கன்னு கூடச் சொல்லிச்சு”

“என்னைப் பத்தி என்ன சொல்லிச்சு?”

“அழகா யிருக்கீங்கன்னு சொல்லிச்சு.”

“வேற என்ன சொல்லிச்சு?”

“ . . . ‘உங்க ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதம்’ அப்படின்னிச்சு.. . அப்புறம் இன்னொரு விஷயம்.”

“சொல்லு.” .

“எவ்வளவு நெருங்கின ·ப்ரண்டா யிருந்தாலும் நம்ம உறவைப் பத்தி இப்பவே அவங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டிருக்காதீங்க.”

“சேச்சே! நானே உங்கிட்ட அப்படித்தானே சொல்லி வெச்சிருக்கேன்? அப்படி யிருக்கிறப்போ, அவன் கிட்டே யெல்லாம் சொல்லுவேனா, என்ன?”

‘அவன் கிட்டே யெல்லாம் சொல்லுவேனா என்ன’ எனும் அவனது பதிலை அவள் தன் மனத்துள் குறித்துக்கொண்டாள்.

‘ . . . . .‘ரம்யா ஓட்டல்லேருந்து உங்க ·ப்ரண்ட் ஒருத்தரோட சிரிச்சுப் பேசிக்கிட்டே நீங்க வெளியே வந்தீங்களாம்’ எனும் கூற்றை இவர் மறுக்கவில்லை. அப்படியானால் அந்தத் தண்டபாணி இவருக்கு நிச்சயம் ஒரு நண்பன்தான்! ‘எவ்வளவு நெருங்கின ·ப்ரண்டாயிருந்தாலும் நம்ம உறவைப்பத்தி இப்பவே அவங்க கிட்டே யெல்லாம் சொல்லிட்டிருக்காதீங்க’ன்னு நான் பொதுவாய்த்தான் சொன்னேன். ஆனால் இவரோ ‘அவன் கிட்டே யெல்லாம் சொல்லுவேனா என்ன?’ என்கிறார். அப்படியானால், அந்த ஆள் இவருக்கு ஒரு நண்பன் என்றுதானே ஆகிறது? ஆனால் அன்று காரை நிறுத்த முயன்ற அவனைத் தனக்குத் தெரியவே தெரியாது என்றாரே! ஏனிந்தப் பொய்? இந்தப் புதிரை எப்படி அவிழ்ப்பது? . . .’

‘இப்போதே பளிச்சென்று கேட்டுவிட்டால்தான் என்ன? ஆனால் ·போட்டோவைக் காட்டித் தமது குற்றமின்மையை நிரூபித்தது போல், இதற்கும் சரியான பதிலைச் சொல்லிவிட்டாரானால், நான் சந்தேகப்பட்டது தானே மிஞ்சும்? என் மேல் இவருக்கு அதிருப்தி ஏற்படுமே? . . வேண்டாம். இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம். . .’

“அப்புறம் எஙகப்பா உன்னை உன் வேலை விஷயமா எங்க வீட்டுக்கு வரச் சொல்லி யிருக்காரில்லே? எப்ப வர்றே?”

“ஆ·பீஸ்லே அடிக்கடி பெர்மிஷன் கேக்குறதுக்கு அசிங்கமா யிருக்கு. அதனால, உங்க அப்பாவுக்கு சவுகரியப்பட்ட ஒரு நாள்லே அரை நாள் லீவே போட்டுட்டு வர்றேன். . . ஏங்க! உங்கப்பாவுக்கு என் மேல ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்குன்னு தோணுதுங்க. அதான், ஞாயித்துக் கெழமையன்னைக்கு வீட்டுக்கே வரச் சொல்றாரோன்னு தோணுது.”

“மகன் கல்யாணம் கட்ட ஆசைப்பட்ற பொண்ணுன்றதை ஊகிச்சாலும் ஊகிச்சிருப்பாரு! பொண்ணு எப்படி இருக்குன்னு பாக்குறதுக்காகக் கூட உன்னை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கலாம்! ஒரு விதத்துலே அதுவும் நல்லதுக்குத்தான். ஆனா ஒண்ணு. எங்கப்பா முன்னாடி நாம ரொம்ப ஜாக்கிரதையா நடந்துக்கணும். அதனால, அவரு முன்னாடி நான் உன் கிட்ட கொஞ்சம் கடுப்பாப் பேசினாக் கூட நீ கண்டுக்காதே! என்ன?”

“சரிங்க.”

இருவரும் காருக்குள்ளேயே மேலும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்த பின் வழக்கமான பாதையில் பிரிந்தார்கள்.

. . . “அண்ணே! அப்ப, அந்த சூர்யாப் பொண்ணுகிட்ட ஒரு பொம்பளையை அனுப்பிப் பேச வெச்சு ராஜாதிராஜனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி யிருக்கிற சங்கதியைச் சொல்ல வேணான்றே! இல்லியா?” என்ற நாகதேவனைப் பார்த்துத் தண்டபாணி விரல் சொடுக்கி வெற்றிப் புன்னகை பூத்தான்.

“ஆமாம்ப்பா, நாகு. அதுக்கு இப்ப அவசியம் இல்லே. ராஜாவுடைய குடுமிதான் இப்ப நம்ம கையிலே இருக்கே! நேத்து ராத்திரியை தண்டையார்ப்பேட்டை பங்களாவிலே அவனும் அந்தப் பொண்ணும் கழிச்சதைத்தான் நான் வீடியோ எடுத்தாச்சே! இனி என்ன? அதைச் சொல்லிச் சொல்லி அவனைப் பயமுறுத்த வேண்டியதுதானே? பய வசமாச் சிக்கிக்கிட்டான் நம்ம கையிலே! . . . இப்ப நான் என்ன பண்ணப் போறேன், தெரியுமில்லே? அவனை ப்ளேக்மெயில் பண்ணப் போறேன். . . .”

“இனிமே என்ன? அந்தாளு சூர்யாப் பொண்ணை முழுக்க முழுக்க உங்களுக்கே விட்டுக் குடுத்துட்டு ஒதுங்கிறுவான்! . . .”

இருவரும் விஸ்கி கோப்பைகளை உரசிவிட்டு அட்டகாசச் சிரிப்புடன் குடிக்கத் தொடங்கினார்கள்.


jothigirija@vsnl.net

தொடரும்

Series Navigation