ஜோதிர்லதா கிரிஜா
கதவை அகலத் திறந்து வழி யமைத்துக் கொடுத்த சத்தியானந்தத்தைப் பார்த்து, “குட் மார்னிங், இன்ஸ்பெக்டர்!” என்ற பாவானி அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.
“வாங்க, மிஸஸ் பவானி! வாங்க. . . . உக்காருங்க!. . .ஏதாச்சும் முக்கியமான தகவல் கிடைச்சு அதை ரகசியமா எங்கிட்ட சொல்றதுக்காக வந்திருக்கீங்கன்னு தோணுது. சரியா?”
பவானி உட்கார்ந்த பின் சத்தியானந்தம் தாமும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
“ஏன், இன்ஸ்பெக்டர், சார்? கமலா வீட்டை விக்க நினைச்சிருந்திருக்காளே, அந்த தண்டபாணி அதை விக்கச் சொல்லி அவளைக் கட்டாயப் படுத்தி யிருப்பானோ? ஏதாவது தொழில்லே முதலீடு செய்யிறதுக்கோ, இல்லாட்டி வேறா ஏதாவது பொய்க் காரணம் சொல்லியோ அதை விக்கச் சொல்லியிருப்பானோ?”
சத்தியானந்தம் புன்னகை செய்தார்: “பரவால்லே! துப்பறியும் நாவல்கள் நிறையப் படிச்சுப் படிச்சு எல்லாருக்குமே துப்புக் கண்டு பிடிக்கிற சாமர்த்தியம் வந்திருக்கு! என்னோட மிஸஸ் கூட கொஞ்ச நேரத்துக்கு முந்திச் சொல்லிச்சு – அந்த ஆள் எதுக்கோ அவளை ப்ளேக் மெயில் பண்ணியிருக்கணும் அப்படின்னு! . . .ரம்மி! ரம்மி! ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போ!”
ரமா உடனே வந்தாள்.
“இவங்கதான் என் மனைவி. ரமா. ரம்மின்னுதான் கூப்பிடுவேன். போலீஸ்லே இருந்துக்கிட்டு ரம்மி ஆடக் கூடாதில்லே? அதான், இவங்களை ரம்மி, ரம்மின்னு கூப்பிட்டுத் திருப்திப் பட்டுக்கிறது!”
“போதும்! வழியாதீங்க!”
“இவங்க மிஸஸ் பவானி. கமலாவுக்கு ஓரளவு நெருங்கின சிநேகிதி. ஏதோ தகவல் சொல்றதுக்காக வந்திருக்காங்க. ஒரு வாய்க் காப்பி கொண்டா, ரம்மி!”
ரமா சமையற்கட்டு நோக்கி விரைந்தாள்.
“அப்புறம்? என்ன விஷயமாப் பாக்க வந்தீங்க, மிஸஸ் பவானி?”
“போன மாசம் இருபதாந் தேதியன்னிக்குத்தான் நான் அந்த தண்டபாணியைப் பாத்தேன். எங்க ஆ·பீசுக்கே வந்திருந்தான். அன்னைக்குத்தான் கமலாவும் தான் அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதாச் சொல்லிச்சு. ‘அப்ப கண்டிப்பா நாளைக்குப் பத்து மணி! சரியா?’ அப்படின்னு சொல்லிட்டு அந்தாளு அவகிட்டேருந்து கெளம்பிப் போனான். அவன் சொன்னது என் காதுலே நல்லா விழுந்திச்சு. “
“அதெப்படி, தேதியெல்லாம் துல்லியமாச் சொல்றீங்க?”
அவள் சொன்னாள்.
“அப்படின்னா? மத்தா நாளு இருபத்தொண்ணாந் தேதி. . . பகல் பத்து மணியா, ராத்திரி பத்து மணியான்னு தெரியல்லே, இல்லயா?”
“தெரியல்லே, இன்ஸ்பெக்டர்.”
“கண்டு பிடிச்சுடலாம். இப்ப நீங்க சொன்ன தகவல் ரொம்பவும் உபயோகமான தகவல்தான். கமலா வீட்டுக்குப் பக்கத்துலே ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் இருக்கு. டிரைவர்க¨ளை ஒரு மடக்கு மடக்கினா விஷயம் தெரியலாம். ஆனா, வெளிப்படையா எதுவும் செய்ய முடியாத நெலைமையிலே இருக்கேன்.”
“ஏன், இன்ஸ்பெக்டர்?”
“நீங்க சொல்ற தண்டபாணியும், நான் சந்தேகப்பட்ற தண்டபாணியும் ஒரே ஆளாயிருந்தா, நான் சாமர்த்தியமாத்தான் விசாரிக்கணும். இந்த ஏரியாவிலே வேலை ஏத்துக்கிட்ட அன்னைக்கே காதுலே விழுந்திச்சு. தண்டபாணின்னு ஒரு ஆளு போலீசோட ஒத்தாசையோட விபசாரம் பண்ணிட்டிருக்கிறதா. எனக்கே அவமானமா யிருக்கு. என்ன செய்யிறது? அநியாயம் பண்ற போலீஸ்காரங்களாலே என்னை மாதிரி நியாயமா நடக்கிறவங்களுக்கு ஆபத்தாயிருக்கு! அதான் இப்ப எனக்கும் இவங்களுக்கும் சண்டை!” என்று சிரித்தபடியே அப்போது பவானியின் கையில் காப்பியைக் கொண்டுவந்து கொடுத்த ரமாவைக் காட்டி, சத்தியானந்தம் சிரித்தார்.
ரமா சிரித்துக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.
“என்னோட விலாசம் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?”
“நேத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ·போன் பண்ணிக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேங்க.”
“இப்ப வந்தது வந்துட்டீங்க. அதைப் பத்திப் பரவால்லே. ஆனா இனிமேற்பட்டு இப்படிச் செய்யாதீங்க. தண்டபாணியுடைய ஆளுங்க யாராச்சும் கவனிச்சாங்கன்னா, ஏதோ விஷயம் இருக்குன்னு ஊகிச்சுடுவாங்க. அதானால, என்னோட பேசணும்னா, இந்த நம்பருக்கு ·போன் பண்ணுங்க,” என்ற சத்தியானந்தம் ஒரு தாளில் தனது தொலைபேசி இலக்கத்தை எழுதி அவளிடம் கொடுத்தார்.
“சரிங்க. அப்ப நான் வரட்டுமா? .. . .. உங்க மிஸஸ் கிட்ட சொல்லிடுங்க! அவங்களைக் கூப்பிடாதீங்க. பிஸியாயிருப்பாங்க.”
“சரி,சொல்லிடறேன். பொது மக்கள்லாம் உங்கள மாதிரி ஒத்துழைச்சாங்கன்னா எங்க வேலை பாதி குறைஞ்சுடும். . . தேங்க் யூ வெரி மச்!”
பவானியை அனுப்பிவிட்டு உள்ளே வந்த சத்தியானந்தம், “ ரம்மி! பாத்தியா! எம்புட்டுப் பொறுப்புள்ள பொண்ணு!” என்றார்.
அவரை முறைத்த ரமா, “ இப்ப என்ன? உடனே அந்த ஆட்டோ ஸ்டாண்டுக்குப் போய் வம்பை விலைக்கு வாங்கப் போறீங்க! அதானே?” என்றாள்.
“அதான் இல்லே. நேரடியா சம்பந்தப்படாம எப்படிக் கண்டு பிடிக்கலாம்னு இப்போ மண்டையை உடைச்சுக்கிட்டிருக்கேன்.”
“ஏன்? அந்தப் பொண்ணு ஆட்டோவில்தான் போயிருக்கணுமா என்ன? ப்ஸ்ல கூடப் போயிருக்காலாமே?”
“யாரு இல்லைன்னாங்க? ஆனா, ராத்திரி பத்து மனியா யிருந்தா நிச்சயம் அது பஸ்லே போயிருக்காது.”
“பகல் பத்து மணியா, ராத்திரி பத்து மணியாங்கிறதை எப்படிக் கண்டு பிடிப்பீங்களாம்?”
“அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லே,” என்ற சத்தியானந்தம் நாள்காட்டியில் முந்திய மாதத்தின் இருபத்தோராம் நாள் என்ன கிழமை என்று பார்த்தார். அது ஞாயிறு என்பது தெரிந்ததும் அவருக்குச் சப்பென்று ஆயிற்று.
“எதுக்குக் காலண்டரைப் பாக்குறீங்க?”
“வேலை நாளாயிருந்தா, காலை பத்து மணின்னா, அது பெர்மிஷன் போட்டிருக்கும். அல்லது அரை நாளுக்கோ முழு நாளுக்கோ லீவ் போட்டிருக்கும். ஞாயித்துக் கிழமையா யிருக்கிறதாலே அது எந்தப் பத்து மணியா வேணும்னாலும் இருக்கலாம். அவளோட தம்பியை விசாசிச்சுப் பாக்கணும்.”
“இப்பவே அந்தப் பையணைப் பாக்கப் போறீங்களா? என்ன வேஷத்துல போறதா யிருக்கீங்க? என் புடவையைக் கட்டிக்கிட்டு பொம்பளை வேஷத்துலயா?”
“போலாந்தான். ஆனா அதுக்கு மீசையை எடுக்கணுமே!”
“சரி, சரி. ஆனா இப்பவே விழுந்தடிச்சு அந்தப் பையனைப் பாக்கப் போக வேனாம். அப்பாலே பாத்துக்கலாம்.”
“உத்தரவு!” எனற சத்தியானந்தத்துக்கும் உடனே மறுபடியும் போய் அந்தப் பையனைப் பார்த்துக் கேள்விகள் கேட்காமல், கொஞ்சம் விட்டுப் பிடிப்பது நல்லது என்று தோன்றியது. குற்றவாளி இன்னான் என்பது அவனுக்குத் தெரிந்திருப்பின் – அந்த உண்மை ஒருகால் அந்தக் குற்றவாளிக்கே கூடத் தெரிந்திருப்பின் – அவன் விஜயகுமாரை அச்சுறுத்துகிறானோ என்னும் ஐயமும் அவருக்கு ஏற்பட்டது. அவர் ஒரு பெருமூச்சுடன் எழுந்து தமது அறைக்குப் போனார்.
. . . . . செத்துப்போன குழந்தையை வெளிக்கொணரச் செய்த அறுவைச் சிகிச்சையில் நிறைய இரத்தமிழந்திருந்ததாலும், அதிரிச்சியாலும் கல்பனா மயக்கமாகியிருந்தாள். ராஜாதிராஜன் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் அவள் கண் விழித்தாள். அவனைக் கண்டதுமே அழத் தொடங்கினாள். “கொழந்தை உங்க மாதிரியே நல்ல மஞ்சள் நிறம்ங்க! தக தகன்னு தங்கம் மாதிரி மின்னிச்சுங்க! என்ன பாவம் பண்ணினோமோ தெரியல்லே. வயித்துலேயே செத்திடிச்சு. ..” என்றவாறு கல்பனா கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
கல்பனாவைப் பார்க்கப் பாவமாகவும், குழந்தை இறந்து பிறந்ததில் சற்றே வருத்தமாகவும் இருந்தாலும், அவனது நினைப்பெல்லாம் சூர்யாவிடம் இருந்தது. ‘நல்ல வேளை! கல்பனா கண் விழித்துவிட்டாள். இல்லாவிட்டால், இவள் விழிக்கிற வரை நான் இங்கே இருக்க வேண்டி வந்திருக்கும்! பிழைத்தேன்! . . . கல்பனாவிடம் இதமாகப் பேசி, அவசர பிஸ்னெஸ் வேலையாக உடனே புறப்பட்டாக வேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்ளுவாள். . .’ – இப்படி அவனது எண்ணம் ஓடியது.
“என்னம்மா செய்யிறது? நாம குடுத்து வெச்சது அவ்வளவுதான்!. . . நானும் எவ்வளவு ஆவலா இருந்தேன், தெரியுமா? விடு. அதையே நினைச்சுக் கவலைப் படாதே. உடம்புதான் இன்னும் மோசமாகும். நமக்குச் சின்ன வயசுதானே? அப்புறம். . . நான் நாளைக்கே கெளம்பணும். ஒரு அவசர பிஸ்னெஸ் காத்துட்டிருக்கு. அப்பாவுக்கும் உடம்பு சரியில்லே. இல்லாட்டி அவரு பாத்துப்பாரு. . . அதான். . . அந்த வேலையை முடிச்சுட்டு மறுபடியும் ஒரு நடை வர்றேன். சரியா? . . . என் கண்ணே! எப்படி இளைச்சுட்டே? நல்லா சாப்பிட்டு உடம்பைத் தேத்திக்கிட்ட பெறகே வா. . .”
“ சரிங்க. . .” என்ற அவள், அவன் ‘ என் கண்ணே’ என்று தன்னை விளித்ததில் உச்சி குளிர்ந்து போய் அகலமாய்ப் புன்னகை செய்தாள்.
. . . ஞாயிற்றுக் கிழமை காலையில், “அக்கா! நேத்தே நான் உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன். ஆனா அதுக்கு சமயமே வாய்க்கல்லே. இதோ, இது சனிக்கிழமை வந்த தினத்தந்தி. இதுல வந்திருக்கிற படத்திலே இருக்கிறவரைத்தானே நீ லவ் பண்றே?”என்று நாளிதழிலிருந்து கிழிக்கப்பட்ட புகைப்படத்தைச் சுகன்யா சூர்யாவிடம் காட்டி விசாரித்தாள்.
ஆவலுடன் அதைப் பறித்துப் பார்த்த சூர்யா, “ஆமாண்டி! இவரேதான்!” என்று கூறி வெட்கப்பட்டாள்.
ராஜாதிராஜன் தன் கம்பெனி ஊழியர்களுள் சிறந்த விளையாட்டு வீரர் ஒருவருக்குப் பரிசுக்கோப்பை வழங்கும் படம் அது. படத்தின் கீழ், பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ் கம்பெனி முதலாளி ஜகந்நாதனின் மகன் ராஜாதிராஜன் பரிசளிப்பதாய்க் குறிப்பிடப் பட்டிருந்தது.
“அக்கா! இதை எங்கிட்ட கொண்டுவந்து தந்தது யாரு, தெரியுமா?”
“யாருடி? நானே கேக்கணும்னு நெனச்சேன்.”
“சாவித்திரிதான் குடுத்திச்சு, அக்கா. அதுதானே உங்க ரெண்டு பேரையும் மாருதி கார்லே பாத்திச்சு? . . . அப்புறம் இன்னொண்ணு கூடச் சொல்லிச்சு. உன்னோட ஆளு அவங்க தெருவிலதான் குடியிருக்காராம். ரொம்பப் பெரிய பணக்காரங்களாம். அன்னைக்கே எங்கிட்ட சொல்லணும்னு நெனைச்சிச்சாம். ஆனா பயந்துக்கிட்டு சொல்லாம விட்டிடிச்சாம். நான் என்ன பதில் சொன்றேன்னு பாக்குறதுக்காக ஒண்ணும் தெரியாத மாதிரி விசாரிச்சிச்சாம்.”
“இதுலே பயப்பட்றதுக்கு என்னடி இருக்கு?”
“இருக்குக்கா! . . . ஏன்னா, இந்தாளுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயிடிச்சாம். கல்யாணம் ஆயி மூணு வருஷம் ஆயிடிச்சாம்.”
“சீச்சீ ! உளறாதே!”
“இல்லேக்கா. அது சத்தியமே பண்ணுதுக்கா! நீ அந்தாளையே கேளு. யாரையும் சட்னு நம்பிடக் கூடாதுக்கா. அக்கா! நேத்து எங்க காலேஜ்லே ஒரு டிஸ்கஷன் நடந்திச்சு. விவாதத்துக்கு ஒரு கதையை எடுத்துக்கிட்டோம். என்ன கதை, தெரியுமா? ஜெயகாந்தனுடைய அக்னிப் பிரவேசம்குற கதை. நாம படிச்சிருக்கோம். ஆளாளுக்குக் கற்பு பத்திக் கருத்துச் சொன்னாங்க. நான் என்ன சொன்னேன், தெரியுமா?”
“என்ன?”
“கற்பு பத்தின பேச்சையெல்லாம் விடுங்க. இந்தக் கதையிலே பொண்ணுங்களுக்கு ஒரு நல்ல மெஸ்ஸேஜ் இருக்குன்னேன். . . அதாவது, முன்னே பின்னே அறிமுகம் இல்லாதவன் கூப்பிட்டா அவன் கார்லேயெல்லாம் பொண்ணுங்க ஏறக்கூடாதுன்னு ஒரு நல்ல மெஸ்ஸேஜ் அதிலே வெளிப்படுதுன்னு சொன்னேன். எல்லாரும் கை தட்டினாங்க!”
சூர்யாவின் உணர்வுகள் மங்கி அவளுள் ஒரு படபடப்புத் தோன்றியது. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அவள் கீழே விழாது சமாளித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்துபோனாள்.
jothigirija@vsnl.net
தொடரும்
.
- கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!
- சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’
- முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)
- சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்
- விளக்கு பரிசு பெற்ற அம்பைக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- இன்னும் சில ஆளுமைகள்
- எச்சரிக்கை
- An Invitation
- மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை
- என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
- எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்
- கடித இலக்கியம் – 46
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !
- தாஜ் கவிதைகள்
- நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்குப் பாராட்டு விழா
- இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது
- கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……
- தைத்திருநாள் விழா கவியரங்கம்
- இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி
- மடியில் நெருப்பு – 26
- பூக்கள் என் கவிதைகள்
- காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்
- திருட்டும் தீர்ப்பும்
- பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
- கவிதை மரம்
- கவிதைகள்
- ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு
- நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்
- பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –
- கிளிஜோசியக்காரரின் தேடல்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)
- நீர்வலை – (12)
- சிறகொடிந்த பறவை