மடியில் நெருப்பு – 6

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

ஜோதிர்லதா கிரிஜாசூர்யா ஆவலுடன் அவனை ஏறிட்டு, ” என்ன வழிங்க?” என்றாள்
“உங்க அம்மா அப்பா கையிலே கணிசமா ஒரு தொகையைக் குடுத்துட்டு, நான் உன்னை என் செலவில கல்யாணம் பண்ணிக்கிறேன்.”
அவள் வியப்புடன் கார்க்கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் தெரிந்தது வியப்பு மட்டுமன்று என்பதையும், அவற்றில் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சி, நன்றி, பரவசம் எல்லாமே அடங்கி இருந்தன என்பதையும் ராஜாதிராஜன் கண்டு புன்னகை பூத்தான்.
தன்னைத் தாக்கிய இன்ப அதிர்ச்சியிலிருந்து சில கணங்களில் விடுபட்ட சூர்யா, “அய்யோ! அதெப்படிங்க? அது நியாயமே இல்லே. உங்களை மாதிரி மாப்பிள்ளைக்கு லட்சக்கணக்கிலே வரதட்சிணை, அது, இதுன்னு குடுக்கிறதுக்கு ஆளுங்க கியூவிலே நிப்பாங்க. அப்படி இருக்கிறப்ப, நீங்க பணம் குடுத்து என்னைக் கால்யாணம் கட்டுறதா! அது தப்புங்க!” என்றாள்.
அவளது வாய் இப்ப்டிச் சொன்னாலும், ‘அப்படி நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்’ எனும் ஆவல் அவளது குரலில் தொனித்ததை அவன் புரிந்துகொண்டான். அவனுக்குச் சிரிப்பு வந்தது: “இத பாரு, சூர்யா. நியாயம், அது, இதுன்றியே, உண்மையிலே நியாயம் எதுன்னு தெரியுமா? பிள்ளை வீட்டார்தான் பொண்ணுவீட்டாருக்குப் பரிசம் கொடுத்துக் கல்யாணம் கட்டணும். அதுதான் நியாயம்…தெரிஞ்சுதா? உன் தங்கச்சி விஷயத்தை வேணும்னா இப்போதைக்குக் கிடப்பிலே போட்டு வைக்கலாம். அப்பாலே சமயம் வரும்போது என் சிநேகிதன் கிட்டே அவளைப் பத்திப் பேசிக்கலாம். இல்லே, அவனுக்கு அதுக்குள்ளே கல்யாணம் ஆயிட்டாலும், வேற எத்தனையோ ஆளுங்க இருக்காங்க…ஆனா நம்ம விஷயத்தை ரொம்பவும் ஒத்திப்போடக் கூடாதும்மா. என்னால் தாங்க முடியாது.”
அவள் முகம் சிவந்து கார்க்கதவுக் கண்ணாடி வழியே வெளியே பார்த்தாள். அவன் சத்தம் போட்டுச் சிரித்தான்: “என்ன! ‘எனக்கும் அப்படித்தான்’னு வாயிலே ஒரு வார்த்தை வர மாட்டேங்குதே!” – கழுத்தைத் திருப்பி அவளை ஆர்வத்துடன் பார்த்தான். அவள் தெருவில் பதித்த பார்வையைத் திருப்பவில்லை.
அவன் திரும்பிக் கார்ப் பாதையில் கவனித்தவாறு, “சரி, சரி…இது மாதிரி பேச்செல்லாம் உனக்குப் பிடிக்கல்லைன்னு தோணுது…கல்யாணத்துக்கு அப்பாலே வெச்சுக்கலாம்னு நினைக்கிறே. சரி… பீச் வந்துட்டுது. ஒரு ஓரமா நிப்பாட்டிக்கலாம்….” என்றான்.
காரை நிறுத்திவிட்டு, அவன் பக்கவாட்டில் நன்றாகத் திரும்பிப் பின்புறம் பார்த்தபடி கண்ணிமைக்காது அவளைப் பார்த்தான். அவள் கூச்சத்தில் குறுகினாள்.
“உன் கையையாச்சும் நீட்டேன், பிடிச்சுக்கறேன்…”
“வே…ண்…டா..ம்!..” – அவள் அவனைச் சற்றே கசப்புடன் ஏறிட்டு ஒவ்வோர் எழுத்தாக உச்சரித்து மறுத்தாள்.
“சரி…அம்மா, கற்புக்கரசி! … அப்ப ஏதாச்சும் பேசு. உன் இனிய குரலையாச்சும் ரசிக்கிறேன்.”
“நீங்கதான் பேசுங்களேன்.”
“நான் நிறையவே பேசிட்டேன். இப்ப உன்னோட முறை. உன் குரலைக் கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு.”
“சும்மாருங்க. வேற ஏதாச்சும் முக்கியமான விஷயமாப் பேசுங்க.”
“எனக்கு இதெல்லாம்தான் முக்கியமாப் படுது. பொம்பளைங்க சட்னு ஒத்துக்கிறதில்லே.நான் சொல்றது சரிதானே?”
அவள் பதில் சொல்லாதிருக்கவே, “முன் சீட்டுக்குக் கொஞ்சம் வாயேன்!.” என்றான்.
“ஊகூம். மாட்டேன்.”
“சரி. இது முதல் சந்திப்புத்தானே? அடுத்த சந்திப்பிலே முன் சீட்டு.”
“முடியவே முடியாது. நெவெர்!”
“சரி. அப்ப பின் சீட்டாவே இருக்கட்டும்.”
“அதுதான் சரி.”
“அப்ப, பின் சீட்டுக்கு வரட்டுமா?” – அவன் முன் கதவைத் திறக்க முற்பட, அவள் கலவரத்துடன், “தயவு செஞ்சு வேணாங்க. இப்படியெல்லாம் வம்பு பண்ணினீங்கன்னா, இனிமே நான் வரவே மாட்டேன்! சொல்லிட்டேன்!” என்றாள். குரலில் கடுமை இருக்கும்படி பார்த்துக்கொண்டாள்
“சரி. இன்னைக்கு உன்னை விட்டுட்றேன். இப்படியே எப்பவும் ஏமாத்தாலாம்னு நினைக் காதே… அது போகட்டும், நம்ம விஷயத்தைப் பத்தி எப்ப உங்க வீட்டிலே சொல்லுவே?”
“நீங்க எப்ப சொல்லச் சொல்றீங்களோ, அப்ப…”
“சொல்லலாம்னு எப்ப் உனக்குத் தோணுதோ அப்ப சொல்லிக்க. ஆனா, சொல்றதுக்கு முந்தி எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு.”
“எதுக்கு?”
“அட, சும்மாத்தான்…அப்புறம் என்னைப் பத்தி இன்னும் சில தகவல்களைச் சொல்லிட்றேன். எங்க அப்பாவுடைய கம்பெனிக்கு நானும் ஒரு பார்ட்னர்…”
“அதான் விசிட்டிங் கார்ட்லயே இருக்கே!”
“ஆமாமா…ஒரு வேளை, நம்ம விஷயம் பிடிக்காம, எங்க அப்பா என்னை வெளியே போடான்னு சொல்லிட்றார்னு வெச்சுக்குவோம். அப்ப, இந்தப் பார்ட்னர்ஷிப் என்னை விட்டுப் போயிடும் அப்பாலே, நானும் ஒரு ஏழைதான். அதாவது ஒரு வேலையைத் தேடிக்கவேண்டிய வேலையில்லாப் பட்டதாரி!…என்ன, அப்படிப் பார்க்கிறே, சூர்யா? அப்படின்னா, எப்படி இவனால நம்ம அப்பா அம்மா கிட்ட ஆயிரக் கணக்கிலே பணம் குடுக்க முடியும்னா?”
அவள் அதைப் பற்றித்தான் யோசித்தாள் என்பதால், தன் எண்ணங்களைப் படிக்க முடிந்த அவனது திறமை பற்றிய வியப்பு அவளுள் பெருகியது. இருந்த போதிலும், பொய்யாக – அதே நேரத்தில் முழுப் பொய் சொல்ல மனம் வராமல் – ” அப்படி யோசிக்கல்லீங்க… உங்க கையில் இருக்குற சேமிப்பை யெல்லாம் எங்க அம்மா அப்பா கிட்ட குடுத்துட்டீங்கன்னா, அப்புறம் நமக்குக் கஷ்டமாச்சேன்னு யோசிச்சேன்,” என்று சமாளித்தாள்.
“பார்க்கலாம்., முதல்லே எங்க அப்பாவுடைய எதிரொலி என்னன்னு தெரியட்டும் எப்படியும் இன்னும் ஒரு பத்து நாளுக்குள்ளே உங்க அம்மா அப்பாவைப் பார்த்து நான் பேசிட்றது நல்லதுன்னு தோணுது.”
“இப்பதானே, என் சவுகரியப்படி சொல்லலாம்னீங்க? அதுக்குள்ளே பத்து நாள்னு கெடு வைக்கிறீங்க?”
“சொன்னேன்தான்… ஆனா, நல்ல காரியத்தை ஒத்திப் போடக்கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கல்லே? அது நெனப்பு வந்திச்சு. அதான்!”
“சரிங்க. அப்ப, இன்னைக்கே வேணும்னாலும் என் தங்கச்சி மூலமா முதல்ல அம்மா கிட்ட சொல்லிட்றேன்.”
“எதுக்குத் தங்கச்சி மூலமா? நீயே நேரடியாச் சொல்ல மாட்டியா?”
“ஒரு மாதிரி கூச்சமா இருக்குதுங்க. தங்கச்சின்னா சிநேகிதி மாதிரியாச்சே?”
“சரி, சரி…ஆனா, நான் யாருங்கிறது இப்போதைக்கு அவங்களுக்குத் தெரியக்கூடாது.”
“அதெப்படிங்க?… ஆளு யாருன்னு கூட சொல்லாம எப்படிங்க அதைப் பத்திப் பேச முடியும்? என்ன காரணத்துக்காக இப்போதைக்குத் தெரியக் கூடாதுன்றீங்க? எப்படியும் ஒரு நாள் தெரிஞ்சுதானேங்க ஆகணும்?”
“ஆமாமா.. தெரிஞ்சுதான் ஆகணும். தெரியத்தான் போகுது. அதிலே மூடு மந்திரம் எதுவும் இல்லே. எதுக்குச் சொல்றேன்னா, ஒரு வேளை எங்க அப்பாவுடைய சம்மதம் கிடைக்கல்லேன்னா, நாம ரகசியமா பதிவுத் திருமணம் செய்துக்க வேண்டி வரும்.. அவருக்கு நாம கல்யாணம் செய்துக்கிட்டது தெரியவே கூடாது. அப்பதான் அவரோட சொத்துகள் நமக்குக் கிடைக்கும். அப்பா என் கல்யாணத்துக்கு வேற பொண்ணை ஏற்பாடு பண்ண முனைஞ்சாருன்னா, நான் ஏதானும் சால்ஜாப்புச் சொல்லி அதைத் தள்ளிப் போடுவேன். அதுக்குள்ளே ஏதாச்சும் வழி பொறக்கும்…அதான்.”
“நீங்க சொல்றது சரிதான். ஆனா எத்தனை நாளுக்கு மறைக்க முடியும்? எங்கம்மா அப்பா ஒத்துக்கணுமே!”
“அதையெல்லாம் அப்பால யோசிக்கலாம்..”
“அய்யோ! இருட்டத் தொடங்கிடுச்சுங்க! அம்மா கவலைப் படுவாங்க. பேசினது போதும். கெளம்பலாம்ங்க!”
அவனும் கைக்கெடியாரத்தைப் பார்த்துவிட்டு, ” நேரம் போனதே தெரியல்லே. அப்ப நாளைக்கும் வர்றியா? ஒட்டல் சோளா வேண்டாம் வேறெ இடத்திலே டி·பன் சாப்பிடலாம்…” என்று கூறிக் காரைக் கிளப்பினான்.
“ஆமாங்க. நானே சொல்லணும்னு நினைச்சேன். இந்த அளவுக்குச் செலவு ஆகாது.”
“.செலவைப் பத்தி இல்லே. அடிக்கடி ஒரே இடத்துலே நாம ஜோடியாத் தென்படக்கூடாதில்லே? வழக்கமா அங்க வர்றவங்க பார்வையிலே படும்படி ஆகும். அதுக்குத்தான்…உங்க வீடு இருக்கிற தெருவுக்கு ஒரு தெரு முன்னாடி காரை நிறுத்தறேன், நீ இறங்கி நடந்து போய்க்க.”
“நானே சொல்லணும்னு நெனைச்சேன்… நான் நெனைச்சதை நீங்க சொல்லிட்டீங்க.”
‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று அவன் விசில் அடித்தான். கார் கொஞ்சத் தொலைவு சென்றதும் தெருவின் நடைபாதை விளிம்பில் நடந்துகொண்டிருந்த ஒரு மனிதன் மிக அவசரமாய் ஓடிவந்து, வழி மறித்துக் காரை நிறுத்த முயன்றான். அதைக் கவனித்தும், ராஜாதிராஜன் காரை நிறுத்தாமல் அதை ஒடித்துத் திருப்பி அதிக விரைவுடன் ஓட்டினான்.
“யாருங்க அது? ரொம்பப் பழக்கப் பட்டவன் மாதிரியில்லே காரை நிறுத்தப் பார்த்தான்?”
ராஜாதிராஜனிடமிருந்து சில நொடிகளுக்குப் பதில் இல்லை.

jothigirija@vsnl.net

(தொடரும்)

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா