மடியில் நெருப்பு – 1

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

ஜோதிர்லதா கிரிஜா


ஆயாசத்துடன் அவள் பெருமூச்சு விட்ட கணத்தில் அந்தச் சிவப்பு நிற மாருதி கார் வழக்கம் போல் அவளைக் கடந்து சென்றது. அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சள் நிற இளைஞன் வழக்கம் போல் தலையைத் தனக்கே உரிய கோணத்தில் பக்கவாட்டாகத் திருப்பி அவளை ஒய்யாரமாகப் பார்த்தான். அன்று அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லை. சனிக்கிழமைகளில் சில அலுவலகங்கள் வேலை செய்வதில்லை என்பதால் அன்று கூட்டம் இல்லை என்பதை அவள் நினைவுபடுத்திக்கொண்டாள்.
கழுத்துச் சங்கிலியைப் பல்லில் மாட்டி இலேசாய்க் கடித்தவாறு அவள் தன்னைக் கடந்து சென்ற அந்தக் காரையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கணத்தில் அவள் சற்றும் எதிர்பார்க்காத அந்த நிகழ்ச்சி நடந்தது. அவளைக் கடந்து சென்ற கார் ‘சர்ர்ர்….’ என்று நிறுத்தம் பிடித்துப் பிறகு பின்னோக்கி வரலாயிற்று. கழுத்தைப் பின் பக்கம் திருப்பித் தெருவைக் கவனித்தபடி அவன் காரைப் பின்னுக்கு நகர்த்தியது தனக்காகத்தான் என்பது உள்ளுணர்வாகப் புரிந்துவிட்ட நிலையில் அவளுக்குப் படபடவென்று வந்தது. சங்கிலியைக் கடிப்பதை நிறுத்திய அவள் காரைக் கவனியாதவள் போல் நடித்தபடி தன் பேருந்து வரும் வழித்தடத்தில் பார்வையைப் பதித்தாள்.
மாருதி கார் அவளை உரசினாற்போல் வந்து பக்கத்தில் நின்றது. ரொம்ப நாள் பழக்கப்பட்டவனைப் போல் அவளைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டியபடி, “எக்ஸ்க்யூஸ் மி! நீங்க எங்கே போகணும்?” என்று அவன் கேட்டான்.
அவனது கேள்விக்குப் பதில் சொல்லுவதற்கு முன்னால், ‘என்ன கம்பீரமான குரல்!’ எனும் விமரிசனம் அவள் கருத்தில் தோன்றியது.அவளுக்குப் படபடப்பாக இருந்தது. உடனே பதில் சொல்ல முடியவில்லை. தொண்டையில் எதுவோ சிக்கிக்கொண்டிருந்தது. எச்சிலைக் கூட்டி விழுங்கி அதைச் சரிசெய்துகொண்டதன் பிறகு, அவள், “மவுண்ட் ரோட் போகணும்,” என்றாள்.
‘நான் எங்கே போறதா யிருந்தா உனக்கென்னடா?’ என்று பிறிதொரு சமயம் ஒருவனைக் கேட்டது மாதிரி இவனைக் கேட்க அவளக்கு வாய் வரவில்லை. கடந்த ஒரு வாரமாய்க் காரில் தன்னைக் கடந்து செல்லும்போது கண்களால் சிரித்தபடி போகும் அவனை எதானாலோ அவளுக்கு மிகவும் பிடித்துப் போயிருந்ததுதான் காரணம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. முன்பின் தெரியாத தன்னைப் பார்த்து, ‘எங்கே போகணும்?’ என்று கேட்டு உதவ நினைத்த அவனை ஒரு பொறுக்கியாகவும் அவளால் கணிக்க முடியவில்லை.
“அப்ப ஏறுங்க! நான் உங்களை மவுண்ட் ரோட்ல ட்ராப் பண்ணிடறேன்…” என்ற அவன் அவளுடன் வெகு நாள் பழகிய நண்பன் போல் கட்டளையிட்ட போது, அவளுக்குத் தொண்டை வறண்டு போயிற்று. ‘இவள் ஒருபோதும் என்னைத் தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டாள்’ என்கிற நம்பிக்கை அவன் குரல் ஒலித்த தினுசில் துல்லியமாய் வெளிப்பட்டதைக் கவனித்து அவளுக்குள் வியப்பான வியப்புக் கிளர்ந்தது. அவனது அழைப்பை மறுதலிக்க முடியாதவாறு எதுவோ அவளைக்கட்டிப்போட்டுவிட்ட போதிலும், அவள் அதிலிருந்து உடனே விடுபட்டு, ” உங்களுக்கு எதுக்குங்க வீண் சிரமம்?” என்று சொல்லிவிட்டுத் தன் நெற்றியில் துளித்திருந்த வேர்வையைக் கைக்குட்டையால் ஒற்றித் துடைத்துக்கொண்டாள். அவனது ஆழமான பார்வை அவளது படபடப்பை அதிகமாக்கியது.அவள் சட்டென்று தன் பார்வையை அகற்றிக்கொண்டு பேருந்து வரும் திசையைப் பார்த்தாள்.
அவளது மறுதலிப்பைப் பொருட்படுத்தாமல், “ப்ளீஸ்! ஏறுங்க. இல்லாட்டி எனக்கு வருத்தமாயிருக்கும்,” என்றவாறு அவன் காரின் பின்புறக் கதவைத் திறந்துவிட்டான்.
மந்திர சக்தியால் இயக்கப்பட்டவள் போன்று காரின் பின்னிருக்கையில் அவள் உடனே உட்கார்ந்துகொள்ள, அழகான அந்தக் கார் சீறிக்கொண்டு பாய்ந்து புறப்பட்டது.
” என்னடா, ஏதோ ரொம்பவும் பழகினவன் மாதிரி இவன் இப்படி வம்படிக்கிறானேன்னு தானே யோசிச்சுக்கிட்டு இருக்கீங்க?” என்று கார்க் கண்ணாடியில் தெரிந்த அவளது முகத்து அழகைப் பருகியபடி அவன் வினவியபோது, அவள் முகம் சிவந்து போயிற்று. அவளது படபடப்பு அடங்காதிருந்ததோடு, முகத்தில் வேர்வை துளித்துக்கொண்டே இருந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத ஓர் இளைஞன் விடுத்த அழைப்பை ஏற்று அவனுடன் தான் காரில் பயணித்துக் கொண்டிருப்பது சரிதானா என்கிற கேள்வி அவளை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவனது ஆழமான பார்வையைக் கார்க் கண்ணாடியிலேயே தானும் வெட்கத்துடன் எதிர்கொண்டபடி, “அதெல்லாம் இல்லீங்க… ஆனாலும், நீங்க கூப்பிட்டதும், நான் கார்ல ஏறிக்கிட்டது அவ்வளவா நாகரிகம் இல்லை யோன்னுதான் தோணுது…” என்று அவள் முனகலாய்ச் சொல்லிவிட்டுத் தலையைக் கவிழ்த்துக்கொண்டதும் அவன் இரைச்சலாய்ச் சிரித்தான்.
“நீங்க ஏறி உக்காந்துக்கிட்டது அநாகரிகம்னா, நான் உங்களைக் கூப்பிட்டதும் அநாகரிகம்தானே?” என்று அவன் எதிர்க் கேள்வி கேட்டதும் அவளுக்குத் திகைப்பாய்ப் போயிற்று.
“ஒரு பொண்ணுக்கு உதவணும்குற எண்ணத்தில கூப்பிட்டீங்க. ஆனா, அதுக்காக, முன்னபின்ன தெரியாதவங்க கார்ல நான் ஏறினா, அது சரியாகுமா? தப்புதானே? என்னைப் பத்தித்தான் நீங்க என்ன நினைப்பீங்க?” – இப்போது அவன் மறுபடியும் வாய்விட்டுச் சிரித்தான்
“ஓ! அப்ப? ஏறினதைப் பத்தி உங்களுக்கு ஒண்ணும் ‘இது’ இல்லே! இவன் தன்னைப் பத்தி என்ன நினைப்பானோங்கிறதுதான் உங்க கவலை யாயிடிச்சு! இல்லியா? ”
அவல் பதில் சொல்லத் தெரியாமல் மவுனமாக இருந்தாள். அவன் தொடர்ந்து பேசினான்:
“இப்ப காலம் ரொம்ப ரொம்ப மாறிப் போயிடிச்சு. இப்பல்லாம் உங்களை மாதிரிப் பொண்ணுங்க எங்க மாதிரி கார்லே போற ஆசாமிகளைக் கையைக் காட்டி நிறுத்தி லி·ப்ட் கேக்கறாங்க…நீங்க என்னடான்னா, நானே கூப்பிட்டதுக்கு இந்த பயம் பயப்பட்றீங்க! நான் ஒண்ணும் உங்களைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன்! நான் ஒரு சுத்த சைவனாக்கும்! முட்டை கூடச் சாப்பிட மாட்டேன்!”
அவளுக்குச் சிரிப்பு வந்தாலும், ‘ இவனென்ன, முதல் சந்திப்பிலேயே இந்த அளவுக்கு உரிமையாப் பேசறான்!’ எனும் எண்ணம் வந்தது. ‘கடிச்சுத் தின்னுட மாட்டேன்’ எனும் சொற்கள் விளைவித்த முகத்துச் சிவப்பில் அவள் மறுபடியும் பதில் சொல்லாதிருக்க நேர்ந்தது.
“என்ன, பதிலைக் காணோம்? ‘என்ன இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே இப்படியா அதிகப் பிரசங்கித்தனமாப் பேசறது?’ அப்படின்னு தோணுதா?” என்று அவன் கேட்டதும் அவளுள் வியப்பு விளைந்தது.
தனது வியப்பை மறைத்துக் கொள்ளாமல் தனது பார்வையை அவள் அவன் மீது செலுத்தியதும், அவன் இளநகை செய்து, ” என்ன, பார்க்கிறீங்க? எனக்கு ‘தாட் ரீடிங்’ தெரியுமாக்கும்!” என்றான், கண் சிமிட்டியவாறு.
அவள் பதில் சொல்லாமல், தெருவில் பார்வையை ஓடவிட்டாள். அச்சமும், கலக்கமும், தயக்கமும், மகிழ்ச்சியும் என்று வகை வகையான உணர்ச்சிகளின் கொந்தளிப்பாய்க் காணப்பட்ட அவள் முகத்தைக் குறும்பாய்ப் பார்த்தவாறு, “என் பேரு என்ன, நான் எங்கே வேலை செய்யறேன்…இந்த விவரமெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என்று அவன் கேட்டான்.
அவள் வலுக்கட்டாயமாய்த் தோற்றுவித்துக்கொண்ட துணிச்சலுடன், ” என் பேரு என்னன்னு உங்களுக்கு மட்டும் தெரியவேண்டாமா?” என்றாள். முதன் முதலாக அவள் முகத்தில் ஒரு புன்சிரிப்புத் தோன்றியது.
” அப்பாடா! ஒரு வழியா, முகத்துலே இப்பதான் லேசாச் சிரிப்பு வருது!” என்றவன், பிறகு, ” உங்க பேரு, நீங்க வேலை செய்யிற இடம், நீங்க குடி யிருக்கிற இடம் இதெல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும்….இல்லாட்டி, நான் உங்களைக் கேட்டிருக்கக் கூடிய முதல் கேள்வியே ‘ ‘உங்க பேரென்ன’ ங்கிறதாத்தானே இருக்கும்?” என்று சிரித்தான்.
அவளது வியப்பு மேலும் அதிகமாயிற்று. “அப்படின்னா, என் பேரு ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா. எங்கே? சொல்லுங்க, பார்ப்போம்!” என்றாள் ஒரு குழந்தை மாதிரி. அவன் சில நொடிகள் பேசாமலிருந்த பிறகு, “தினமணி!” என்றான்.
அவள் சிரித்து, ” என்னது! தினமணியா! அது ஒரு தமிழ் நாளிதழோட பேருன்னா?” என்றாள்.
“சரி. ஆனா, தினமணின்னா என்ன அர்த்தம்னு தெரியுமா? … சூரியன்னு அர்த்தம். உங்க பேரு சூர்யா தானே?” என்று கேட்டுவிட்டு அவன் தலையைத் திருப்பி அவளை ஒரு பார்வை பார்த்ததும், அவளது வியப்பு அதன் எல்லையைத் தொட்டது. அவளுடைய இளஞ்சிவப்பு உதடுகள் உடனே பிளந்து கொண்டன. அவற்றினிடையே பளிச்சிட்ட வெண்பற்களின் வரிசையை ரசித்தபடி, “இப்ப ஒரு உண்மையச் சொல்லட்டுமா, மிஸ் சூர்யா?” என்று அவன் சன்னக் குரலில் வினவினான்.
அவனது உள்ளக் கிடக்கையில் பாதிக்கு மேல் புரிந்துவிட்டதில், அவளது படபடப்பு மேலும் அதிகரித்து நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு கெடியாரத்தின் ஓசை அவளுக்குக் கேட்கலாயிற்று. முகத்துச் சிவப்பை மறைத்துக்கொள்ள அவளுக்கு வழி தெரியவில்லை. தலையை மட்டும் உடனே தாழ்த்திக்கொண்டு விட்டாள்.
“இன்னைக்கு சாயங்காலம் உங்களைத் தனியாச் சந்திச்சுப் பேசறதுக்கு ஒரு வாய்ப்புத் தருவீங்களா, மிஸ் சூர்யா?”
அவன் தன் ஆவம் ததும்பிய விழிகளை அவள் மீது கார்க்கண்ணாடி வழியாகவே பதித்துவிட்டு, இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னைக்கேவா? வீட்டுல தேடுவாங்களே?”
“அட, என்னங்க நீங்க? வழியா இல்லே?ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு ஆ·பீசை விட்டுக் கிளம்பிடுங்க. நான் காரை எடுத்துக்கிட்டு வறேன். ரெண்டு பேரும் பீச்சுக்குப் போய்ப் பேசிக்கிட்டு இருந்துட்டுப் போவோம்…சரியா?”
“காரை எடுத்துக்கிட்டு எங்க ஆ·பீசுக்கெல்லாம் வராதீங்க.”
அவன் சிரித்தான்: ” சரி. அப்ப ஒண்ணு பண்றேன்…மவுண்ட் ரோட் போஸ்டா·பீஸ் காம்பவுண்டுக்குள்ளே சரியா மூணு மணிக்கு என்னோட காரைக் கொணாந்து நிறுத்திடறேன். . உங்க ஆ·பீஸ்லேருந்து அஞ்சே நிமிஷத்துல வந்துட மாட்டீங்க?”
“அதையும் தெரிஞ்சு வச்சுட்டிருக்கீங்க!”
“எதையும்?”
“எங்க ஆ·பீஸ்லேருந்து மவுண்ட் ரோட் போஸ்டா·பீஸ் அஞ்சே நிமிஷ நடைங்கிறதை!”
“அது மட்டுமா? உங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறது, அவ காலேஜ்லே படிக்கிறது, அப்பா படுத்த படுக்கையா இருக்கிறது…அப்புறம் உங்க அம்மாவைப் பத்தி நான் சொல்லலாமா? தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?…அவங்க ஆப்பம் சுட்டு குடும்பத்தை நடத்தினது.. இப்ப நீங்க வேலைக்கு வந்ததும் அதை நிறுத்திட்டது…இவ்வªவு ஆர்வத்தை நான் உங்க மேலே காமிக்கிறதுக்கு என்ன கரணம்கிறதைத்தான் இன்னைக்கு சாயந்தரம் பீச்லே சொல்லப் போறேன்…” – அவள் தலை மேலும் தாழ்ந்ததை ரசித்து அவன் சத்தமாய்ச் சிரித்தான்.
காரை அண்ணாசலை அஞ்சலகம் முன்பு நிறுத்திய அவன், .”இங்கேயே இறங்கி நடந்துக்குங்க,” என்றான்.
அவள் கனவினின்று விடுபட்டவளுக்குரிய திடுக்கீட்டுடன் இறங்கி அவனைப் பார்த்துச் சிரித்த பின் தனது அலுவலகம் நோக்கி நடக்கலானாள். தன் குழப்பத்தில் அவனுக்கு நன்றி சொல்லாததும் அவன் தன் பெயரை வெளிப்படுத்தத் தானே முன் வந்தும் அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளாததும் தன் அலுவலக வாயிற்படியில் கால் வைத்த கணத்தில் அவளை உறுத்தின.
jothigirija@vsnl.net – தொடரும்
மடியில் நெருப்பு
ஜோதிர்லதா கிரிஜா
2.
அலுவலகத்துள் நுழைந்து, தன் பிரிவை யடைந்து இருக்கையில் உட்கார்ந்த சூர்யாவின் படபடப்பு வெகு நேரத்துக்கு அடங்கவே இல்லை. மாருதி காருக்குச் சொந்தக்காரனாக இருக்கும் அழகான, பணக்கார இளைஞனின் உள்ளத்தைத் தன்னால் கவர முடிந்திருக்கிறது என்பது அவளை நிலை கொள்ளாத பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாகத்தான் அவள் அவனைப் பார்த்து வருகிறாள்.முதல் நாளே அந்த இரத்தச் சிவப்புக் காருக்குள்ளிருந்து அவளை நோக்கித் திரும்பிய அவன் முகம் காரின் சிவப்புக்கு
மிகவும் பொருத்தமாய் ஒரு முழு நிலவைப்போல் ஒளிர்ந்த போது, அக்கம்பக்கத்து மனிதர்கள் கவனிப்பார்களே என்கிற சங்கோசத்தையும் கடந்து அவளையும் அறியாமல் அவளது பார்வை கணத்துக்கும் அதிகமாக அவன் மீது படிந்து மீண்டதை இப்போது அவள் வெட்கத்துடன் நினைவு கூர்ந்தாள். அவனது கம்பீரமும், பெண்ணினுடையவை போன்ற அகன்ற, கருமை நிறைந்த விழிகளும், கொங்கிணிக் காரர்களுக்குரிய மஞ்சள் நிறமும், சுருட்டைக் கிராப்பும், உதட்டுப் புன்னகையும் அவன் கார் தெருத்திருப்பம் வரை சென்று மறையும் வரை அவளது கவனத்தில் இருந்தாலும், அதற்குப் பிறகு அவள் அன்று முழுவதும் அவனைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்பது உண்மைதான்.
ஆனால், மறு நாளும் அந்தச் சிவப்பு நிறக் கார் அவளைக் கடந்த போது அவன் தன் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவனது செய்கையில் தன்னைப் பார்க்கும் ஆவலிலேயே அவன் அவ்வாறு செய்தான் என்பது புரிய, அவளுள் ஒரு திகைப்பு ஏற்பட்டது. தான் ஒரு பேரழகியாக இருந்ததுதான் அதற்குக் காரணம் என்று நினைத்து அவள் தனக்குள் சிரித்துக்கொண்டதோடு அவன்பால் அவளது மனத்து எதிரொலி நின்றது. ஆனால், அதற்கு அடுத்த நாளும் அவன் அவளை ஆழமாக நோக்கியபோது, அவள் தன் தலையைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது. ஏனெனில், அவனது ஆழமான பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. அதன் பிறகு தான் அவள் அவனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
அதற்குப் பிறகான நாள்களில் அவளே தன்னையும் அறியாது அவனது கார் தெருத்திருப்பத்தில் தென்படுகிறதா என்று பார்க்கத் தொடங்கினாள். ‘இதென்ன பயித்தியக்காரத்தனம்!’ எனும் எண்ணமும் அவள் மனத்தில் எழாமல் இல்லை. அக்கம் பக்கத்தவர்கள் பற்றிய விழிப்போடு அவள் சாடையாய்ப் பார்க்க, அவன் மட்டும் கூச்சமே இல்லாமல் அவளைப் பார்வையால் விழுங்கியவாறு கடந்தான்…
தன் தோற்றம் அவளைக் கவர்ந்து விட்டதை அவன் ஊகித்துவிட்டான்! தனது இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும், கவரத்தான் பட்டிருப்பாள் என்று அவள் எண்ணினாள். அதே நேரத்தில், தோற்றத்தால் கவரப்படுவது மட்டுமே காதல் ஆகிவிடுமா எனும் கேள்வியும் அவள் மனத்தில் எழத்தான் செய்தது. எனினும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் காதலில் புறக்கவர்ச்சிதானே மிகப் பெரிய அளவிலான அடிப்படையாக அமைகிறது என்றும் அவள் எண்ணிக்
கொண்டாள்.
“என்ன? நீங்களே தனியா உக்காந்து சிரிச்சுட்டிருக்கீங்க?” என்ற குரல் அவளது சிந்தனையில் குறுக்கிட்டு அவளை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. அவள் தன் முகவாயைத் தாங்கிக்கொண்டிருந்த கையை ஒரு திடுக்கீட்டுடன் அகற்றிக்கொண்டு தலை உயர்த்திப் பார்த்தாள். எதிர் இருக்கை முரளி புன்சிரிப்புடன் தன் மேசையைத் தூசு தட்டிக்கொண்டிருந்தான். அவளது முகம் சிவந்து போயிற்று. அவள் பதிலேதும் சொல்லாமல், மேசை இழுப்பறையிலிறந்து பேனாவை எடுத்து வருகைப் பதிவேட்டில் ஒப்பமிடத் தலைமை எழுத்தரின் மேசையை நோக்கி நடந்தாள்..
தன் கேள்வியைக் காதில் வாங்காதவள் போல் அவள் சென்றதைப் புரிந்துகொண்டு முரளியும் தனக்குத் தானே சிரித்துக்கொண்ட நேரத்தில், பிரிவினுள் நுழைந்த பக்கத்து இருக்கையாளன் பாராங்குசம், “என்னையா, நீரே சிரிச்சுக்குறீர்? குட் மார்னிங் சொன்னது கூடக் காதுல விழல்லியா?” என்று வினவியதும், முரளி சிரித்துவிட்டு, ” இன்னைக்கு எல்லாரும் தனக்குத் தானே சிரிச்சுக்கிற நாள்னு நினைக்கிறேன்!” என்றான்.
பாராங்குசம் ஒன்றும் புரியாமல் விழிக்க, முரளி மேலே எதுவும் பேசாமல் சூர்யாவைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தலைவாரலில் ஈடுபட்டான்.
“வெய்யில் கூட நேத்தை விட இன்னைக்குக் கம்மியாத்தானே இருக்கு?” என்று பாராங்குசம் தொடர, முரளி ஒரு சினிமாப் பாட்டை வாய்க்குள் முனகியபடி ஒரு கோப்பை பிரித்து வைத்துக் கொண்டான்.
“என்னையா! முரளி! நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன்! நீரானா பதிலே சொல்லாம இருக்கீர்?”
முரளி சூர்யாவை ஓரத்துப் பார்வை பார்த்தபடியே, பிறகு பேசுவதாக அவனுக்குச் சைகை செய்தான். சூர்யாவுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ‘முகத்தில் வழிகிற வேர்வை வேண்டுமானால் போகும். அதில் வழிகிற அசடு எப்படிப் போகும்?’
என்றும் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு மனத்துள் சிரித்தாள். ஆனால், இந்தத் தடவை மனத்துள் சிரித்த சிரிப்பு முகத்தில் தெரிந்துவிடாதபடி கவனமாக இருந்தாள்.
என்ன முயன்றும் சூர்யாவுக்கு வேலை ஓடவே இல்லை. பக்கத்து இருக்கைக்காரி பவானி நல்ல வேளையாக வராததில் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. வந்திருந்தால், அவளது தடுமாற்றத்தை அவள் கண்டுபிடித்து இல்லாத பொல்லாத கேள்விகளெல்லாம் கேட்டு அவளைக் குடை குடை என்று குடைந்திருப்பாள் என்பதில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
‘… கார் இருக்கையின் உச்சியைத் தாண்டி எடுப்பாய் அவன் தலை உயர்ந்து தெரிந்ததிலிருந்து அவன் மிகவும் உயரமாக இருப்பான் என்று தோன்றுகிறது. ஏன்? நாம்தான் நல்ல உயரம் – வைஜயந்திமாலா மாதிரி! .. என் அழகுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்? அம்மா அடிக்கடி எனக்கு திருஷ்டி கழிக்கிறார்களே! கன்பட்டுவிடுமாம்! ..இன்றைக்கு பீச்சில் அவன்… சீ… அவர் என்ன பேசுவார்?… ‘ஐ லவ் யூ’ என்று தான் சொல்லப் போகிறார். வேறென்னவாம்? ஆனால் அதற்கு நான் உடனே அசடு வழிய, ‘நானும்தான்’ என்று தலை யாட்டிவிடக் கூடாது…’ யோசித்துச் சொல்லுகிறேன்’ என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால், அவரது மதிப்பில் நான் தாழ்ந்து போவேன். எனது ஏழைமை, குடும்பம் என்னைச் சார்ந்திருப்பது இதையெல்லாம் சொல்லிவிட வேண்டும். ஏற்கெனவே அவருக்குத் தெரிந்திருந்தாலும் கூட இன்னும் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.பார்த்தால் பனக்காரரகத் தெரிகிறார்…அப்படி நான்தான் வேண்டுமென்றால் உதவி செய்யமாட்டாரா என்ன?’
“மிஸ் சூர்யா! அப்படி என்னம்மா யோசனை? நான் கூப்பிட்டது கூட காதுல விழாத அளவுக்கு?” என்ற தலைமை எழுத்தரின் குரல் அவளது சிந்தனையைக் கலைக்க, அவள் அசடு தட்டிப் போனாள்.
“சாரி, சார்!… எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகணும். இன்னைக்கு ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் வேணும், சார்…. அவங்களைப் பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன். .. எதுக்கு சார் கூப்பிட்டீங்க?”
“மன்த்லி ஸ்டேட்மெண்ட் போயிடிச்சான்னு கேக்குறதுக்குத்தான்.”
” போயிடிச்சு, சார். ” என்றபடி எழுந்த சூர்யா தலைமை எழுத்தரின் மேசையை நெருங்கி நின்றாள்.
“இன்னைக்கு மூணு மணிக்கு பெர்மிஷன் வேணும் சார்.”
“எடுத்துக்குங்க…எதுக்கும் செக்ஷன் ஆ·பீசர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க.”
“சரி, சார்!” என்ற சூர்யா நேரே மேல் தளத்தில் இருந்த அலுவலரின் அறை நோக்கி நடந்தாள்….
அவள் தலை மறைந்ததும், முரளி பாராங்குசத்தைப் பார்த்துக் கண் சிமிட்டினான். பிறகு, “அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஆனா மூஞ்சி முழுக்க சிரிப்பும் பிரகாசமுமா யிருக்காங்க. இன்னைக்குத் தனக்குத் தானே சிரிச்சிட்டிருந்தாங்க.. ” என்றான்
“ஓ! அதான் இன்னைக்கு எல்லாரும் தனக்குத் தானே சிரிச்சுக்குற நாள்னு சொன்னீரா?”
“ஆமா. பெர்மிஷன் போட்டுட்டு வேற எங்கேயோதான் போறாங்க…”
“அவங்க எங்கேயோ போகட்டும். அதைப் பத்தி உமக்கும் எனக்கும் என்ன, ஓய்! நம்ம ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆயிடுத்தே!”
“அதானே?” என்ற முரள்¢ பாராங்குசத்தோடு ஒத்துப் போனான்.
… மூன்று மணிக்குத் தன் பிரிவைவிட்டு வெளியே வந்த சூர்யா, இரண்டிரண்டு படிகளாய்க் குதித்து இறங்கிக் கீழ்த்தளத்துக்கு வந்த பின் அலுவலக வாயிலில் ஒரே ஒரு கணம் நின்று தனக்குப் பின்னால் பார்த்துவிட்டு, உற்சாகத் துள்ளலுடன் சாலையைக் கடந்தாள்.
மாருதி காரில் ஏறியபோது அவளிடம் விளைந்த பரபரப்பு இப்போது சாலையைக் கடந்துகொண்டிருந்த கணம் வ¨ரையில் இம்மியும் குறையவில்லை. மாறாக, அவன், ‘ஐ லர் யூ’ சொல்லப்போவதைக் கேட்கப் போகும் மனக்கிளர்ச்சியில் அது மேலும் தீவிரமடைந்திருந்தது.
‘எப்பேர்ப்பட்ட அதிருஷ்டக்காரி நான் தான்! இப்பவாவது அவரோட பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். என்னவா இருக்காருங்கிறதையும் தெரிஞ்சுக்கணும். ‘அழகான பொண்னைப் பெத்த அம்மா மடியிலே எப்பவுமே நெருப்புத்தான்’ அப்படின்னு அடிக்கடி புலம்புற அம்மாவுக்கு இது தெரிஞ்சா எம்புட்டு சந்தோஷமா யிருக்கும்! இப்படி ஒரு பணக்காரப் பையன் வந்து சிக்குவான்னு அம்மா நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க… அவருக்கு என்ன வயசு இருகும்?..முப்பதுக்குள்ளே தான் தெரியறாரு. அம்மாடி! என்ன நிறம்! ஏன்? நான் கூடத்தான் நல்ல நிறம்! …’
…காலையில் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த இடத்தில் அவன் அவளுக்காகக் காரில் காத்துக் கொண்டிருந்தான். முகமெல்லாம் சிரிப்பும் சிவப்புமாய் அவள் காரை நெருங்கியதும், “என் மேலே அவநம்பிக்கைப் பட்டு எங்கே வராம இருந்துடுவீiகளோன்னு உள்ளூற பயந்துக்கிட்டிருந்தேன். சொன்னபடி வந்துட்டீங்களே! தேங்க்ஸ்!…முன் சீட்ல உக்கார்றீங்களா, இல்லாட்டி பின் சீட்லயா?” என்று அவன் வினவினான். அவனது கை மட்டும் முன் இருக்கைக் கதவின் கைப் பிடியில் இருந்தது.
அதைக் கவனியாதவள் போல் – முகத்துச் சிவப்பு அதிகரிக்க – அவள், ” பின் சீட்லயே உக்காந்துக்கறேன்,” என்றாள்.
jothigirija@vsnl.net – தொடரும்
மடியில் நெருப்பு
ஜோதிர்லதா கிரிஜா
3.
அனந்தநாயக்¢க்கு மூச்சு வாங்கியது. தலை வேறு சுற்றியது. பித்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொத்துமல்லிக் கஷாயம் வைத்துக் குடித்தாள். இரண்டு தடவைகள் குடித்தும் முன்னேற்றம் இல்லை. மாறாக அவளது நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. உடனே மகளை யழைத்துத் தன்னை டாக்டரிடம் கூட்டிப்போகச் செய்யவேண்டும் என்று அவளக்குத் தோன்றிவிட்டது. இளைய
மகள் சுகன்யா கல்லூரியிலிருந்து திரும்பி யிருக்கவில்லை. பக்கவாதத்தால் படுத்த படுக்கையாக இருக்கும் அவள் கணவர் பார்த்தசாரதியால் எந்தப் பயனும் இல்லை. எனவே, அவளேதான் ஏதாவது செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்கிற திகைப்போடு அவள் வாசல் பக்கம் பார்த்த போது, எதிர்வீட்டுத் தம்பி தன் சைக்கிளுக்குக் காற்று அடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்து வாசலுக்குப் போய் அவனைக் கூப்பிட்டாள்.
“என்னங்கம்மா?” என்றவாறு அவன் வந்து நின்றான்.
“கொஞ்ச நேரமா எனக்கு ரொம்பவும் தலை சுத்தலா யிருக்கு, தம்பி. சுகன்யா இன்னும் காலேஜ்லேருந்து வரல்லே. அதனால, சூர்யாவை ·போன்ல கூப்பிட்டு அவளை பெர்மிஷன் போட்டுட்டு உடனே வரச் சொல்லணும்..”
“·போன் நம்பர் சொல்லுங்க.”
அவள் சொல்ல, அவன் தன் சட்டைப் பையில் இருந்த சிறிய நாள்குறிப்பேட்டில் அதைக் குறித்துக்கொண்டான். உடனே அருகில் இருந்த கடைக்குப் போனான்.
போய்ப் பத்தே நிமிடங்களில் திரும்பி வந்தான்.
“என்னப்பா சொல்லிச்சு சூர்யா? வருதாமா?”
“அக்கா இல்லேம்மா. ஒரு பத்து நிமிஷத்துக்கு முந்தித்தான், உங்களுக்கு உடம்பு சரி யில்லைன்னு சொல்லிட்டுப் பெர்மிஷன் போட்டுட்டுக் கெளம்பிப் போச்சாம்…அநேகமாக் கொஞ்ச நேரத்துல வந்துடும்…” என்ற மாரியப்பனை அவள் யோசனையுடன் பார்த்தாள்.
“காலையிலேயே உங்களுக்கு மேலுக்குச் சொகமில்லையாம்மா? அக்கா பெர்மிஷன் போட்டிருக்குதே?”
கணம் போல் திகைத்த பின், அனந்தநாயகி, “ஆமாம்ப்பா. அதான் இப்ப எப்படி இருக்கோ ஏதோங்கிற கவலையில பெர்மிஷன் போட்டிருக்குது,.” என்று சமாளித்தாள்.
மாரியப்பனுக்கு நன்றி கூறி அவனை அனுப்பிவைத்த பின் அவள் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தாள். காரணம் இன்றி அவளுள் ஒரு கலக்கம் தோன்றியது. அவள் காலை நீட்டிப் படுத்தாள். என்ன முயன்றும் கவலைப் படாதிருக்க முடியவில்லை. கண்கொள்ளா அழகும் கண்ணைப் பறிக்கிற தங்க நிறமும், ஒளி உமிழும் கண்களும், செழுமையான உடல்வளமும் கொண்ட சூர்யா வேலைக்குப் போகத் தொடங்கியதிலிருந்தே அவள் வயிறு நெருப்பாய்த்தான் கனன்று கொண்டிருந்தது.
‘சூர்யா பெர்மிஷன் போட்டுட்டு எங்கே போயிருப்பா? எவளாச்சும் சிநேகிதப் பொண்ணோட போயிருப்பாளோ? ஏன்? அது சிநேகிதப் பையனாக் கூட இருக்கலாம். யாரு கண்டா? இந்தக் காலத்துப் பொண்ணுங்களை நம்புறதுக்கே இல்லே! சூர்யா அடக்கமான பொண்ணுதான். ஆனாலும் வயசுன்னு ஒண்ணு இருக்கே! வயசு வந்துட்டா, ஆம்பளைப் பிள்ளைங்களுக்கும் சரி, பொம்பளைப் பிள்ளைங்களுக்கும் சரி தப்புப் பண்ற புத்திதானே வரும்? நானே கூட சின்ன வயசிலே முன்னே பின்னே இருந்தவதானே? சத்தம் போட்டுச் சிரிச்சா பாட்டி நறுக்னு குட்டும்! அதனால வீட்டுக்குள்ள சத்தம் போடாம சிரிச்சுட்டு, வெளியே என் சினேகிதப் பொண்ணுங்களோட – பாட்டியோட பாஷையிலே, அடக்கமே இல்லாம – சத்தம் போட்டுச் சிரிச்சுக்கிட்டு இருந்தவதானே நானும்!’….
அனந்தநாயகிக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. வயசுக் கோளறு என்பது எல்லாருக்கும் பொதுவானதுதான். ஆனால், ஒரு தாய் என்னும் முறையில் மகள்களைப் பற்றிய கவலை வந்து விடுகறது. அதிலும் மிதமிஞ்சிய அழகுள்ள பெண்ணைப் பற்றி ஒரு தாயால் எவ்வாறு கவலைப்படாமல் இருக்க முடியும் என்று அவள் தன்னைத் தானே வினவிக்கொண்டு பெருமூச்செறிந்தாள்.
எது எப்படியானாலும், இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவளது திருமணம் பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. கல்யாணத்துக்குப் பணம் சேமித்தாக வேண்டுமே! குடும்பம் இருக்கிற இருப்பில் சூர்யா பாட்டுக்குக் காதல் ஊதல் என்று உளறிக்கொண்டு வந்து நின்றால் குடும்பமே நாறிப் போகும். ஒரு மகளைப் பார்த்து, ‘இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு உனக்குத் திருமணம் கிடையாது’ என்று ஒரு தாய் சொல்லுவது அநாகரிகம்தான்! ஆனாலும், எல்லா நாகரிகங்களையும் துரத்தி யடிக்கிற வலிமை இந்த வயிற்றுக்கு இருக்கிறதே!… அனந்தநாயகி பெருமூச்சுவிட்டபடி வாசல் பக்கம் பார்வையைப் பதித்தாள்
… அவன் வாய்விட்டுச் சிரித்தபடியே காரைக் கிளப்பினான். பிறகு குறும்பு கொப்பளித்த குரலில் கேட்டான்: “ஏன்? முன் சீட்டிலே எனக்குப் பக்கத்துல உக்காந்தா என்னவாம்? கடிச்சா தின்னுடுவேன்? அதிலேயும் இந்த மவுண்ட் ரோட்லே! உம்? நான் சுத்த சைவம்னு காலையில்தானே சொன்னேன்?”
சூர்யா வெட்கத்துடன் தலையைக் குனிந்துகொண்டாள். ஒரே விநாடிக்குப் பிறகு தலையை உயர்த்திக் கண்ணாடி வழியே அவனைப் பார்த்து, “அது சரி, உங்க பேரை நீங்க சொல்லவே இல்லையே? எங்கே வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டாள்.
“நீங்க எங்கே கேட்டீங்க என் பேரை?”
“நான் ஒரே குழப்பத்துலே இருந்தேன்.”
அவன் புரிந்துகொண்டே, “அப்படியா? அப்படி என்ன குழப்பமாம்?” என்றான். பதில் கூற வேண்டிய அவசியமில்லை என்பது போல் அவள் மவுனமாக இருந்தாள். இறுகிய உதடுகளும் அரைப் புன்சிரிப்புமாக அவள் அமர்ந்திருந்த தோரணையிலிருந்து அவனுக்கும் அது புரிந்தது.
அவன் வாய்விட்டுச் சிரித்து, ” என் பேரு, ராஜாதிராஜன்,” என்று கூறிப் பின்புறம் தலையைத் திருப்பி அவளைப் பார்த்துவிட்டுத் தெருவில் கவனத்தைப் பதித்தான்.
“என்ன! ராஜாதிராஜனா! இதென்ன புதுப் பேரா இருக்கு! நான் கேள்விப்பட்டதே இல்லே!”
“ஏன்? பேரு பொருத்தமா யில்லையா? அதைச் சொல்லுங்க!” – அவன் குரலில் ஒலித்த செருக்கு அவள் கவனத்துக்குத் தப்பவில்லை.
‘நியாயமான கர்வம்தானே?’ என்றெண்ணி அவனது செருக்கை மன்னித்துவிட்ட அவள், “பொருத்தமாத்தான் இருக்கு. ஆனா, சும்மாவானும் ஒரு பொய்ப் பெயரைச் சொல்லி என்னைச் சீண்டுறீங்களோன்னும் தோணுது…” என்றாள்.
அவன் உடனே இயக்கு கருவி (steering) யிலிருந்து ஒரு கையை மட்டும் அகற்றிக்கொண்டு அதனால் தன் சட்டைப் பையிலிருந்து தனது முகவரி அட்டையை எடுத்துப் பின்புறமாக நீட்டினான். அவள் கை நீட்டி அதைப் பெற்றுக்கொண்டாள். அப்போது அவன் விரல்கள் தேவைக்கு மேல் நீண்டு அவள் விரல்களைத் தீண்டியதைத் தற்செயலாக அவளால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவன் மீது அவளுக்குக் கோபம் வரவில்லை. எனினும் ஒரு தடுமாற்றம் மட்டும் ஏற்படாமல் இல்லை. அவள் விரல்கள் சற்றே ஆடிவிட்டன. அதை அவன் கவனித்துவிட்டது அவனது குறும்புப் பார்வையிலிருந்து புரிய, அவளது தடுமாற்றம் மேலும் அதிகரித்தது.
அந்த முகவரி அட்டையைப் பார்த்து அவள் அதிர்ந்து போனாள். ‘ராஜாதிராஜன், ஜே.., பங்குதாரர், பயனீர் இம்ப்போர்ட்டர்ஸ் அண்ட் எக்ஸ்போர்ட்டர்ஸ்’ என்று ஆங்கிலத்தில் அது அச்சாகி யிருந்தது. அவள் விழிகள் அவளையும் அறியாது விரிந்துகொண்டன.
“இதை நானே வெச்சுக்கட்டுமா?”
‘இல்லே. குடுத்துடுங்க. புதுசு ப்ரின்ட் ஆகி வந்ததும் தறேன்…” என்ற அவன் இடக்கையை நீட்டினான். அவள் அதைத் திருப்பிக் கொடுத்தபோதும் அவன் விரல்கள் அவளுடையவற்றோடு அளவுக்கு மேல் உரசின.
“அப்படின்னா, கம்பெனி முதலாளி மிஸ்டர் ஜகந்நாதனுக்கு… நீங்க…” என்று அவள் முடிக்காமல் விட்டதை, “அவரு என்னோட அப்பா!” என்று அவன் முடித்துவிட்டுச் சிரித்தான்.
‘அடியம்மா! எப்பேர்ப்பட்ட தொழிலதிபர் அவர்! எவ்வளவு பெரிய பணக்காரர்! அவருடைய மகனா இவர்! … இவ்வளவு பெரிய அதிருஷ்டமா என்னைத் தேடி வந்திருக்கு?’
“என்ன யோசிக்கிறீங்க?”
அவள் பதில் சொல்லவில்லை. அவளது பிரமிப்பைப் புரிந்துகொண்ட அவன், “நம்பிக்கை வர மாட்டேங்குதா? இவன் எப்படிப்பட்டவனோ, என்னமோ! இவனை நம்பிக் கார்ல ஏறி இருக்கமே அப்படின்னு பயப்பட்றீங்களா? என் மேல நம்பிக்கை இல்லேன்னா இப்ப கூட நீங்க இறங்கிக்கலாம். உள்ளது உள்ளபடி சொல்லிடுங்க. பளிச்னு பேசுறவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும்!” என்றான்.
காரின் விரைவையும் அவன் உடனே மிகவும் குறைத்தான். அவளுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. “அய்யய்யோ! அப்படி யெல்லாம் இல்லீங்க. இம்புட்டுப் பெரிய அதிருஷ்டமா நம்மைத் தேடி வந்த்டிருக்குன்ற பிரமிப்புலே நான் வாயடைச்சுப் போயிட்டேன்! இது கனவா, நெனவாங்குற சந்தேகம் வந்துக்கிட்டே இருக்குது!”
அவன் அடுத்த கணமே காரின் விரைவை அதிகப்படுத்தினான். அந்த விரைவில் ஓர் உற்சாகம் பீரிட்டதாய் அவளுக்குத் தோன்றியது.
காரை அவன் ஓட்டல் சோளாவுக்கு எதிரே நிறுத்த, இருவரும் இறங்கினார்கள். அவன் உரிமையுடன் அவளை உரசியவாறு அவளை ஓட்டலுக்குள் இட்டுச் சென்றான். அவள் பெருமையுடன் தன் பார்வையைச் சுழலவிட்ட போது, பலருடைய பார்வைகளும் தங்கள் மீது படிந்திருந்ததைக் கண்டாள். ‘சரியான ஜோடிதான்!’ எனும் கணிப்பு அவர்கள் பார்வைகளில் தென்பட்டது உள்ளுணர்வாய் அவளுக்குப் புரிய, அவளது பெருமை இன்னும் அதிகமாயிற்று!
jothigirija@vsn.net – தொடரும்
மடியில் நெருப்பு
ஜோதிர்லதா கிரிஜா
4.
வண்ண விளக்குகள் விடிவிளக்குகளைப் போல் மங்கலாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒதுக்குப் புறமான ஒரு பகுதிக்கு அவன் அவளை அழைத்துச் சென்றான். அவளுடன் ஒட்டி உரசிக்கொண்டு, ‘நாங்கள் காதலர்களாக்கும்!’ என்று பறை சாற்றுகிற பாணியில் அதுகாறும் அவளோடு நடந்துவந்த அவன் இப்போது இன்னும் அதிகத் துணிச்சலுடன் அவள் கையை முழங்கைக்கு மேலே இறுக்கமாய்ப் பற்றிக் கூட்டிச் சென்ற போது அவளுக்கு அந்தக் குளிர்சாதன அமைப்பிலும் வேர்க்கும் போலாயிற்று. அவள் தன்னையும் அறியாது உடம்பைக் குறுக்கிக்கொண்டாள். ஏனென்றால், அவன் அவளது புஜத்தைப் பற்றியிருந்த தினுசில் – முதல் சந்திப்புக்கு ஒவ்வாத – அத்துமீறிய இறுக்கம் – துல்லியமாய்ப் புலப்பட்டுக் கொண்டிருந்தது. இருப்பினும், ‘ஆம்பளைங்க இப்படித்தான்! முன்னே பின்னே தான் இருப்பாங்க’ எனும் எண்ணத்தில், அவள் அவனை மன்னிக்கத் தயாரானாள்.
பக்கத்துப் பக்கத்து இருக்கைகளில் இருவரும் அமர்ந்தார்கள். அவன் தனது கையை அவளது நாற்காலி முதுகு விளிம்பில் வைத்துக்கொண்டான். பிறகு மெல்லத் தன் விரல்களால் அவள் கழுத்தில் வருடினான். அவள் நெளிந்தபடி தன் கழுத்தை நகர்த்தி அவன் புறமாய்ச் சற்றே கோபமாகப் பார்த்தாள். அவன் உடனே புரிந்துகொண்டு தன் கையை அப்புறப்படுத்திக்கொண்டான்.
“சாரி, சூர்யா! அதுக்குள்ளே இந்த அளவுக்கு நான் உரிமை எடுத்துக்கக் கூடாது தான். என்னை மன்னிச்சுடுங்க…”
“பரவால்லே. விடுங்க…ஆனா நாலு பேரு கவனிச்சுட்டிருக்காங்க இல்லே?” என்று அவள் மெல்லிய குரலில் முனகினாள். அவளது குரல் அவளுகே அன்னியமாக ஒலித்தது.
பணியாள் வந்ததும், ராஜாதிராஜன் பாசந்தி, வெங்காய பஜ்ஜி, காப்பி, ஐஸ் கிரீம் ஆகியவற்றுக்குப் பணித்தான். அவர் போன பிறகு, “ஓ! வெரி சாரி. உனக்கு இதெல்லாம் பிடிக்குமா? உன்னை நான் என்ன வேணும்னு கேட்டிருக்கணும்! தப்புப் பண்ணிட்டேன்…” என்றான்.
” நீங்க இப்ப சொன்ன எல்லா அயிட்டங்களும் எனக்கும் பிடிக்கும்ங்க”
“நான் என்ன கேக்குறதுக்கு உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேனோ, அதைக் கேக்குறதுக்கு எந்த அவசியமும் இல்லாத அளவுக்கு நமக்குள்ளே ஒரு நெருக்கம் தானா ஏற்பட்டிடுச்சு, இல்லே? என்ன? நான் சொல்றது சரிதானே?”
அவள் வெட்கத்துடன் மவுனமாயிருந்ததன் மூலம் அவனது கூற்றை ஒப்புக்கொண்டாள்.
” ஒரு ஆம்பளை மேல் நம்பிக்கை ஏற்பட்டாலொழிய, உன்னை மாதிரி ஒரு படிச்ச பொண்ணு அவன் கார்ல ஏற மாட்டா. அவனோட ஓட்டலுக்கு டி·பன் சாப்பிட இது மாதிரி வரமாட்டா! இல்லியா?” என்று அவன் அவள் காதருகே முகம் வைத்துக் கிசுகிசுப்பாய்ச் சொன்ன போதும் அவள் புன்சிரிப்போடு மவுனமாகவே இருந்தாள்.
“சூர்யா! நான் ரொம்ப ரொம்ப அதிருஷ்டசாலின்னு நினைக்கிறேன். நான் தினமும் எட்டு மணிக்கு இங்கே வந்து டி·பன் காப்பி சாப்பிட்டுட்டு என் கம்பெனிக்குப் போவேன். நீ தினமும் நிக்கிற பஸ் ஸ்டாப்புக்குக் கொஞ்சம் தள்ளி என்னோட சினேகிதன் ஒருத்தன் குடி இருக்கான். பாபுன்னு பேரு. ஒரு வாரத்துக்கு முந்தி ஒரு நாள் அவனைப் பார்க்கிறதுக்காக நான் அந்தப் பக்கம் வந்தேன். பஸ் ஸ்டாப்ல நின்னுக்கிட்டிருந்த உன்னை அப்பதான் பார்த்தேன். ஆகா!..பளிச்னு ஒளிவிட்ட உன்னோட அழகைப் பார்த்த அந்தக் கணமே என் மனசு எங்கிட்டேருந்து உங்கிட்டே ஒடிப்போயிடிச்சு!.. சூர்யா! மத்தா நா¡ள்லேருந்து தேவையே இல்லாமதான் நான் தெனமும் அந்தத் தெரு வழியாக் காரை ஒரு பயித்தியக்காரன் மதிரி ஓட்டிக்கிட்டிருக்கேன்! இன்னைக்குக் காலை யிலே ஏற்பட்ட ஒரு திடீர்த் துணிச்சல்லே நான் காரைப் பின்னுக்குத் திருப்பி உன்னைக் கூப்பிட்டேன். நீ மட்டும் தனியா நின்னுக்கிட்டிருந்தது என்னோட துணிச்சலுக்கு ஒரு காரணம். எல்லார் எதிர்லேயும், நீ பாட்டுக்கு, ‘ஏண்டா, பொறுக்கி! என்ன தைரியம் உனக்கு!’ அப்படின்னு எசகு பிசகாப் பேசிட்டியானா, எம்புட்டு அசிங்கமாப் போயிடும்? அதான்!”
அவள் பதைத்துப் போனவளாய், ” சேச்சே! அப்படி யெல்லாம் சொல்லாதீங்க!’ என்றாள்.
பணியாள் சிற்றுண்டித் தட்டுகளை அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டுப் போனார்.
“அப்ப, அந்தக் கேள்வியை நான் கேக்கத் தேவையில்லேன்றே!”
“அப்படி இல்லீங்க!”
“அப்ப, கேளுன்றே! சரி, கேக்கறேன்…”
அவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டான். பிறகு, “மிஸ் சூர்யா! நான் உங்களை நேசிக்கிறேன்… அடச்சீ! காதலிக்கிறேன்! என்னைக் கணவனாக ஏற்றுக் கொள்ளுவீர்களா?” என்று இலக்கணமாய்க் கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து பார்த்தான்.
ஆழமான அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை கவிழ்ந்தாள். அவனோ அவளது பதிலுக்குக் காத்திருக்கும் தோரணையில் கைகட்டிக் காத்திருந்தான்.
“என்ன, மிஸ் சூர்யா! உங்கள் மவுனமும், தலை கவிழ்ந்த நிலையும் சம்மதத்தின் அறிகுறிகள் என்பதாக நான் எடுத்துக்கொள்ளலாமா?” என்று அவன் சில நொடிகளக்குப் பிறகு கிசுகிசுப்பாய் வினவியபின் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, அவளது முகவாயை அழுத்தமாய்த் தொட்டுத் தன் பக்கம் திருப்பினான். அவள் கணத்துக்கும் குறைவான நேரம் அவனை நோக்கிவிட்டு, அவனது கையை அகற்றினாள். அவளது பார்வை எவரேனும் கவனித்திருப்பார்களோ என்னும் கூச்சத்தில் சுழன்றது.
அவன் வாய்விட்டுச் சிரித்தான்: “யாரும் கவனிக்கல்லே. .. அது சரி, வெறும் சிரிப்பு மட்டுந்தான் உன்னோட பதிலா? ‘எனக்கும் உங்களைக் கல்யாணம் கட்ட ஆசைதான்’ அப்படின்னு உன் செம்பவள வாயைத் திறந்து சொல்ல மாட்டியாக்கும்! சொன்னா, உன்னோட முத்துப் பாற்கள் உதிர்ந்து போயிடுமாக்கும்!”
அவள் இதற்கும் பேசாதிருந்தாள். ஆனால் முகத்தின் சிவப்பு மட்டும் மாறவில்லை.
“அடேய்ங்கப்பா! மொகம் என்னமாச் செவந்து போயிடிச்சு! இன்னும் கொஞ்ச நேரம் நான் இதே பாணியிலே பேசினா, ரத்தமே வந்துடும் போல இருக்கே? வேணாம்ப்பா. அந்தப் பாவம் எனக்கு வேணாம்!… சரி, சரி… சாப்பிடலாம்…” என்ற அவன், பாஸந்தியைக் கரண்டியால் கிளறி எடுத்து, ” எங்கே! வாயைத் தொற. நான் ஒரே ஒரு ஸ்பூன் உனக்கு வாயிலே போட்றேன்…” என்றான்.
அவள் சிரிப்புடன், “வேனாங்க! இதெல்லாம் நாலு பேரு போற வர்ற இடத்துலே வேணாம்!” என்றாள்.
“அப்ப? தனியான இடத்துலே கூடிய சீக்கிரம் சந்திப்போமா?”
“தனியான இடமெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறந்தான்!”
அவன் சட்டென்று சில கணங்களுக்கு மவுனமுற்றான். பிறகு, ” கல்யாணத்துக்கு அப்புறந்தான். யாரு இல்லைன்னாங்க? நான் ஒண்ணும் பொறுக்கி இல்லே!” என்றான்.
வாயருகே கொண்டு சென்ற பாஸந்தியை வழியில் நிறுத்திய அவள், கலவரத்துடன் திகைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.
“ஐ’ம் சாரி. தப்பா எடுத்துக்கிட்டீங்களா என்ன? நான் அது மாதிரி உங்களைப் பத்தி நினைச்சிருந்தா இப்படி உங்களோட கார்ல ஓட்டலுக்கு வந்து டி·பன் சாப்பிட்டுட்டிருப்பேனா?” என்று கம்மிப் போன குரலில் அவனை முழுவதுமாய்ப் பார்த்தவாறு அவள் வினவினாள்.
“சேச்சே! நான் கோவிச்சுப்பேனா – அதுவும் என் சூர்யாவை!.. அது சரி, உனக்கு சூர்யான்னு பேரு வெச்சது யாரு? உங்க அம்மாவா, அப்பாவா?”
“எங்கப்பாதான் வெச்சதா அம்மா சொல்லியிருகாங்க. ஏங்க?”
“உங்கப்பா புத்திசாலி. பொருத்தமாப் பேரு வெச்சிருக்கரு…இப்ப படுத்த படுக்கையா இருக்காரில்லே?”
“ஆமாங்க. நான் ஒருத்திதான் இப்ப சத்தியா சம்பாதிச்சிட்டிருக்கேன்.”
அவன் சாப்பிடுவதை நிறுத்தி ஆழமாய் அவளைப் பார்த்தான்: “கல்யாணத்துக்குப் பெறகு உன் சம்பளத்தை உங்கம்மா கிட்ட குடுக்கணும். அதுக்கு என்னோட அனுமதி வேணும். அதானே?”
“அதைப் பத்தியெல்லாம் நான் யோசிக்கவே இல்லீங்க. நாங்க ஏழைப்பட்டவங்கன்றதை நீங்க தெரிஞ்சுக்கணும்னுதான் சொன்னேன். எங்களுக்குச் சொத்துபத்துன்னும் எதுவும் கிடையாது நீங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதுன்னு தீர்மானிக்கிறதுக்கு முந்தி நீங்க இதைப்பத்தி நல்லா யோசிக்கணும்னுதான் சொன்னேன். உங்க வீட்டிலே இதுக்கு முழு மனசோட சம்மதிப்பாங்களா?”
அவன் சிரித்தான்: ” என் கல்யாணம் என் சொந்த விஷயம்! எங்க அப்பாதான் தகராறு பண்ணுவாரு. ஆனா, கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழப் போறது நான். எங்க அப்பா இல்லே!”
“உங்களுக்கு அம்மா இருக்காங்கதானே?”
“இல்லே. எனக்குப் பத்து வயசு ஆனப்போ செத்துப் போயிட்டாங்க.”
“உங்கப்பா மறு கல்யாணம் கட்டலையாங்க?”
“இல்லே…” – பாஸந்தித் தட்டுகளை நகர்த்திவிட்டு இருவரும் பஜ்ஜித் தட்டுகளை இழுத்துக் கொண்டார்கள்.
“நாம ரெண்டு பேரும் ஒரே ஸ்பீட்லே சாப்பிட்றோம்!” என்று அவன் சிரித்தான்.
“உங்கம்மா செத்துப்போனப்போ உங்கப்பாவுக்கு என்ன வயசு?”
“முப்பத்தெட்டு வயசுதான்! சித்தின்னு ஒருத்தி வந்தா அவ என்னைக் கொடுமைப் படுத்துவாளோன்ற பயத்துனாலதான் அவர் மறுகல்யாணம் கட்டல்லே.”
“அப்படின்னா, அவரு ரொம்ப நல்லவராயிருக்கணும். முப்பத்தெட்டுன்றது கல்யாணம் வேண்டாம்னு சொல்ற வயசா!”
அவன் சிரித்தான். அவளுக்கு அரைகுறையாய்ப் புரிந்தது. அவனே முழுவதும் கூறினான்:
“கல்யாணம்னு ஒண்ணைப் பன்ணிக்கல்லையே ஒழிய…தன்கிட்டே ஸ்டெனோவா யிருந்த ஒரு கிறிஸ்துவப் பொண்ணை “கீப்” பா வெச்சுக்கிட்டாரு. அவ வேலையை விட்டுட்டா. ஒரு தனி வீட்டில அவளை வெச்சிருக்காரு. ஒரு பெரிய வீட்டை அவ பேருக்கு எழுதிக் குடுத்துட்டாரு.”
“சின்னவீட்டுக் கார அம்மாவுக்குப் பெரிய வீடா!”
“ஆமா.அதேதான்! குழந்தை பெத்துக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாராம். நாளைக்குச் சொத்து விவகாரத்துலே சிக்கல் வருமில்லே? அதான்…”
“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“எங்கப்பாதான் சொன்னாரு…”
“அவரேயா சொன்னாரு? அதுவும் பெத்த மகன் கிட்டே? ஆச்சரியமா யிருக்கு.” – ஒரு தகப்பன் தன் மகனிடம் அந்த அளவுக்குப் பேசுவார் என்பது அவளை அயர்த்தியது.

தொடரும்

jothigirija@vsnl.net

Series Navigation