மக்காக்கா!…மக்காக்கா!

This entry is part [part not set] of 33 in the series 20061228_Issue

நரேந்திரன்


ஒரே ஒருவார்த்தை சொல்லி உள்ளதைத் தொலைத்தவரின் கதை தெரியுமா உங்களுக்கு? அப்படியரு அதிசயம் அமெரிக்காவின் வர்ஜீனிய மாநில செனட்டரான ஜார்ஜ் ஆலனுக்கு (George Allen) இந்த வருடம் நடந்திருக்கின்றது. 2006-ஆம் ஆண்டின் விலையுயர்ந்த (costly) வார்த்தையை உதிர்த்த ஜார்ஜ் ஆலன் இன்றைக்கு ஒரு முன்னாள் செனட்டர்.

நடந்தது இதுதான்,

ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் ஆலன், வர்ஜீனிய மாநில கவர்னர் பதவி வகித்தவர். பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டராக இருந்தார். இந்தியாவின் மாநில முதலமைச்சர் பதவி வகித்தவர்கள், சில சமயங்களில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆவார்கள் இல்லையா? அது போல. 2008-ஆம் வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஆயத்தங்கள் செய்து வந்த ஆலனுக்கு விதி ஒரு இந்தியர் வடிவில் வந்தது.

ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஜார்ஜ் ஆலனை, பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், பல்கலைக்கழக மாணவரும், இந்திய வம்சாவளியைச் சேர்தவருமான சித்தார்த் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். வெள்ளை இனவாதம் பேசுபவர் என்று அறியப்பட்ட ஜார்ஜ் ஆலனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த ஜனநாயகக் கட்சியினர் அவரை விடாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தனர். மழிக்காத தாடி, மீசையுடன் பல நாட்கள் தன்னைப் பின் தொடர்ந்து வீடியோ எடுத்துத் தள்ளிய சித்தார்த்தைக் கண்டு ஆலனுக்கு ஏதோ ஒரு கணத்தில் கோபம் கொப்பளிக்க, பொரிந்து தள்ளினார்.

ஜார்ஜ் ஆலன் பொரிந்து தள்ளியவை அனைத்தும் இணைய தளங்களில் விரவிக் கிடக்கின்றன. ஆனால், அவர் சித்தார்த்தைப் பார்த்தழைத்த “மக்காக்கா” (ஒருவித ஆப்பிரிக்கக் குரங்கினம்!) என்ற ஒரே ஒருவார்த்தை ஒரே நாளில் உலகப் புகழ் பெற்றது. பிரச்சாரக் கூட்டத்தின் வீடியோ படக்காட்சிகள், சில அமெரிக்க தொலைகாட்சி சேனல்கள் மற்றும் youtube.com போன்ற ஊடகங்களின் வாயிலாக பல்லாயிரக்கணக்கானேரைச் சென்றடைய, நாலாபக்கத்திலிருந்தும் கண்டனக் கணைகள், முக்கியமாக இந்தியர்களிடமிருந்து, ஜார்ஜ் ஆலனை நோக்கிப் பறந்தன. இதனை சற்றும் எதிர்பாராத ஆலன், தான் அப்படிச் சொல்லவே இல்லை என்று தடாலடியாக மறுக்க, சர்ச்சை இன்னும் தீவிரமடைந்தது.

இங்கு ஒரு விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு அமெரிக்க அரசியல் கட்சிகளுக்கும் கணிசமாக தேர்தல் நிதி வழங்குபவர்களில் படேல்களும், ஷாக்களும் அதிகம். அமெரிக்காவின் யூதர்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பணம் சம்பாதிப்பவர்கள் இந்தியர்களே. எல்லாத் துறைகளிலும், எல்லா மட்டத்திலும் வேகமாக வளர்ந்துவருபவர்களில் இந்திய வம்சாவளியினர் கணிசமானவர்கள். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அமெரிக்கா வந்திறங்கிய இந்தியர்களில் பெரும்பாலோனோர் நிரந்தரக் குடியுரிமை பெற்றுவிட்டார்கள் அல்லது பெறும் நிலைமையில் இருக்கிறார்கள். ஏறக்குறைய 2.3 மில்லியன் இந்திய வம்சாவளியினர் அமெரிக்காவில் வாழ்வதாக கணக்கிட்டிருக்கிறார்கள் (அங்கேயே பிறந்து வளர்ந்தவர்களும் இதில் அடக்கம்). 2000-ஆம் ஆண்டிற்கு முன் 1.7 மில்லியனாக இருந்த இந்தியர்களின் எண்ணிக்கை, கடந்த ஆறு வருடங்களில் கணிசமாகக் கூடியிருக்கிறது.

நடந்து முடிந்த அமெரிக்க செனட் தேர்தல் குடியரசுக் கட்சியினருக்கு மிக முக்கியமான ஒன்று. ஜனாதிபதி ஜார்ஜ் வாக்கர் புஷ், இராக்கில் நடத்திவரும் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” வெற்றியடைய வேண்டுமென்றால், செனட்டின் பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டே ஆக வேண்டிய நிலைமையில் இருந்தது குடியரசுக் கட்சி. நாளுக்கு நாள் சரிந்து வரும் அமெரிக்க ஜனாதிபதியின் செல்வாக்கினை நிலைநிறுத்த ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியம் என்ற நிலையில், செனட்டர் ஜார்ஜ் ஆலனின் பிரச்சினை பெரிதாக வெடித்தது. வணிகர்களுக்கு ஆதரவான கட்சி என்ற வகையில் குடியரசுக் கட்சியில் இந்திய வணிகர்கள் பலர் கணிசமாக இருக்கும் நிலையில், அவர்களின் ஆதரவை இழக்க விரும்பாத அக் கட்சி ஜார்ஜ் ஆலனை மன்னிப்புக் கேட்கும்படி நிர்பந்தித்தது.

U.S. Indian Political Action Commitee அங்கத்தினர்களுடன் நடத்திய மிக நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், தன் தவறை ஒப்புக் கொண்டு பகிரங்க மன்னிப்புக் கோரினார் ஜார்ஜ் ஆலன். இதே நிகழ்வு பத்து வருடங்களுக்கு முன் நடந்திருந்தால், மன்னிப்பு கோருவது என்பது நடந்திருக்கச் சாத்தியமே இல்லை. ஏற்கனவே Patriot Act போன்ற சட்டங்களினால் (இந்தியாவின் POTA போன்ற, பலமடங்கு வீரியமான) எரிச்சலில் இருந்த, புதிதாகக் குடியேறிய பிற நாட்டவரும் இந்தியர்களுடன் சேர்ந்து களத்தில் இறங்க, ஜார்ஜ் ஆலன் வெறும் 7000 வோட்டுக்களில் தோற்றுப் போனார். அமெரிக்க செனட்டை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

ஜார்ஜ் ஆலன் வெற்றி பெற்றிருந்தால், அமெரிக்க செனட்டில் இரு கட்சிகளும் சம பலத்தில் இருந்திருக்கும். முக்கியமான விவாதங்களில், இரு கட்சிகளும் சம ஓட்டுக்கள் பெற்றால், சபாநாயகரான அமெரிக்க உதவி ஜனாதிபதி, தன் ஓட்டினை தான் சார்ந்த கட்சிக்கே வாக்களித்திருப்பார்.

அமெரிக்க உதவி ஜனாதிபதியான டிக் செனி (Dick Cheney), குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர் என்பது நீங்கள் அறிந்த ஒன்றே!

Macaca : a genus of Old World monkeys including the rhesus monkey (M. mulatta) and other macaques

– Mariam-Webster’s Medical Dictionary.

Series Navigation