‘மகா’ அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

எஸ். அரவிந்தன் நீலகண்டன்


திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன்.

ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால் கடைபிடிக்கத்தக்கது. அத்தகைய சிறந்த மனிதர் இந்த பிரச்சனையை திறந்த மனதுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அலெக்ஸாண்டர் ஏன் மகா அலெக்ஸாண்டர்? அதே நேரத்தில் அட்டிலா ஏன் காட்டுமிராண்டி? அலெக்ஸாண்டர் மேற்கிலிருந்து கிழக்கே படையெடுத்தான். அட்டிலா கிழக்கிலிருந்து மேற்கே படையெடுத்தான். அலெக்ஸாண்டரை மகா அலெக்ஸாண்டர் ஆக்கியது காலனிய பார்வைதாம். அலெக்ஸாண்டர் மகா வீரன் எனும் பார்வையை கட்டுடைக்க பின் நவீனத்துவ சுத்தியல்-உளி தேவையில்லை. வரலாற்றுத்தகவல்களை ஆராய்ந்தாலே போதுமானது.

காலனிய கற்பிதமான அலெக்ஸாண்டர் மாவீரன் எனும் பார்வையை முதலில் கேள்விக்குள்ளாக்கியவர் நானறிய வீர சாவர்க்கர். ‘பாரத சரித்திரத்தின் ஆறு பொன்னேடுகள்’-முதல் பாகத்தில் அவர் இது குறித்து பல தகவல்களை முன் வைக்கிறார். எவ்வாறு வேறெங்கையும் விட பாரதத்தில் அலெக்ஸாண்டருக்கு அதீத எதிர்ப்பு இருந்தது என்பதையும். மிக மோசமான பின்னடைவுகளை அலெக்ஸாண்டர் இங்கேயே சந்தித்தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அலெக்ஸாண்டர் பாரதத்தில் வெற்றி அடைந்திருந்தால் அவன் இங்கல்லவா தமது பிரதேச ஆளுநர்களை நிலை நிறுத்தியிருக்க வேண்டும்? ஆனால் அவன் பாகிரிய பிரதேசத்தில் அல்லவா தனது இராணுவ பிரதிநிதித்துவ கேந்திரத்தை நிறுவிக்கொண்டான்? அங்கிருந்து பிற்காலத்தில் பாரதத்தின் மீது படையெடுக்க துணிந்த செல்யூக்கஸ் நிகேடாரும் அதற்கு பெரும் தோல்வியை விலையாகக் கொடுக்க நேரிட்டது.

அலெக்ஸாண்டர் மேற்கத்திய பெருநினைவில் ஒருவித தொன்ம படிமமாக திகழ்கிறான். உலகினை ஒன்றாக்க முயன்றவன். இராணுவத்தின் மூலமாக. அலெக்ஸாண்டர் முதல் ஜார்ஜ் புஷ் வரை இந்த விழைவு மேற்கத்திய பண்பாட்டில் துடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் விசித்திரமான மற்றொரு அம்சம். அலெக்ஸாண்டர் இஸ்லாமிய நினைவுகளிலும் வீர புருஷ அந்தஸ்தினை பெறுவதுதான். கஸ்னாவி தொடங்கி யூதர்களிடம் தோற்ற தோல்விக்கு முந்தைய நாசர் வரை ஒட்டோமான் பேரரசின் வீஸ்தீகரண கனவுகளிலும் புனிதப்போர்களிலும் அடியோடுகிறது அலெக்ஸாண்டரின் பிம்பம். இறையியல் கற்பிதம் மூலம் ஒரே தேவகுமாரனாக தன்னைக் கற்பித்து அதனை இராணுவத்துணையுடனான அதிகார பரவலுக்கு ஒரு முகாந்திரமாக முன்வைத்தவனும் அலெக்ஸாண்டரே. ஒரே தேவகுமாரனின் பெயரிலும் இறுதி இறைதூதரின் பெயரிலும் பின்னாட்களில் வாட்கள் உருவப்படவும் அந்நிய நாடுகளுக்குள் வன்முறைக்கு வித்திடும் இறையியல் சித்தாந்தங்களுடனும் ஆயுதம் தாங்கிய புனிதப்போருக்காக களமிறங்கும் பயங்கரவாதிகள் உருவாக்கப்படவும் காரணமானதோர் வியாதி பீடித்த மனநிலையின் தொல்-நிலை உதாரணம் அலெக்ஸாண்டர்.

அரேபியாவில் வழக்கில் இருந்த கிரேக்க மற்றும் கிரேக்க தாக்கம் கொண்ட தொடக்க கால கிறிஸ்தவ நாட்டுப்புற கதைகளில் அலெக்ஸாண்டர் பெரும் உலகப்புகழ் கொண்ட மற்றும் இறையருள் கொண்ட இராணுவ வீரனாகக் காட்டப்படுகிறான். இத்தகைய நாட்டுப்புற கதைகளின் ஆழ்மனத்தாக்கம், இஸ்லாமை உருவாக்கி தன்னை இறுதி நபியாக பிரகடனம் செய்த முகமதுவுக்கு இருந்திருக்கக் கூடும். துல்கர்னைனைக் குறித்த குரான் விவரணங்கள் அலெக்ஸாண்டர் குறித்த நாட்டார் கதைத் தாக்கங்களை காட்டுவதாகவே உள்ளது. (குரான். 18:83-90) து-அல்-கர்னைனைக் குறித்த குரான் வாசகங்களை அலெக்ஸாண்டருடன் இணைத்து எழுதிய முஸ்லீம் வரலாற்றாசிரியர் இபின்-ஹிஷாம் குறிப்பிடுகிறார்: “து-அல்-கர்னைன் என்பது கிரேக்க அலெக்ஸாண்டர் ஆகும். அவன் கிழக்கின் பெர்சியாவிற்கும் மேற்கின் கிரேக்கத்திற்கும் அரசனாவான். எனவே அவன் து-அல்-கர்னைன் (இரு கொம்புகள் உடையவன்) எனும் பெயரால் அழைக்கப்பட்டான்.” [அண்மைக்கால குரானுக்கு கொடுக்கப்பட்ட மீள்-வியாக்கியானத்தில் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் துல்கர்னைன் என்பவன் அலெக்ஸாண்டர் அல்ல என்றும் சைரஸ் எனும் அரசன் என்றும் கூறியுள்ளார்.] பழம் கிரேக்க காசுகளில் அலெக்ஸாண்டர் இரு கொம்புகளுடன் காட்டப்படுகிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கொம்புகள் அமோன் எனும் எகிப்திய தெய்வத்தின் கொம்புகள். குரானின் துல்கர்னைன் எவராயினும் துல்கர்னனை அலெக்ஸாண்டருடன் இணைத்த தொடக்ககால முஸ்லீம் எழுத்தாளரும் கூட தம் குறிப்பில் அலெக்ஸாண்டாரின் வெற்றியை பாரசீகத்துடன் (இன்றைய ஈரான்) முடிப்பதைக் கவனிக்கவும்.

அலெக்ஸாண்டர் குறித்து பின்னாட்களில் உருவாக்கப்பட்ட சித்திரங்கள் அனைத்துமே பின்வரும் ஐந்து ஆசிரியர்களிடமிருந்து உருவாக்கப்பட்டவை என வரலாற்றாய்வாளர்கள்
குறிப்பிடுகின்றனர்:
* ஏர்ரியன் (கிபி ஒன்றாம் நூற்றாண்டு),
* ப்ளூட்டார்க் (கிபி ஒன்றாம் நூற்றாண்டு)
* டயோடரஸ் (கிபி ஒன்றாம் நூற்றாண்டு)
* ஜஸ்டின் (கிபி இரண்டாம் நூற்றாண்டு)
* க்விண்டஸ் க்யூரிட்டஸ் (கிபி ஒன்றாம் நூற்றாண்டு முதல் – ஐந்தாம் நூற்றாண்டுக்குள்)

இந்த மூலங்களிலிருந்து பின்னால் ஐரோப்பிய பொது நினைவில் அலெக்ஸாண்டர் மீள்-உருவாக்கம் செய்யப்பட்டது பின்வரும் வரலாற்று பிரசுரங்களால். அவையும் அவற்றின்
ஆசிரியர்களும் பின்வருமாறு:
* ஸ்க்வான்பெக் (இண்டிக்கா, 1846),
* மெக் க்ரிண்டில் (மெகஸ்தனிஸின் பழங்கால இந்தியா குறித்த விவரணம், 1877)
* மெக் க்ரிண்டில் (இந்தியாவின் மீது மகா அலெக்ஸாண்டரின் படையெடுப்பு, 1893)
* ஹொகார்த் (பிலிப்பும் அலெக்ஸாண்டரும், 1897)
* பி.எல்.வீலர் (மகா அலெக்ஸாண்டர், 1900)

போரஸ் எனும் புருஷோத்தமன் மீது அலெக்ஸாண்டரின் வெற்றியைக் குறிப்பிடும் ப்ளூட்டார்க்கின் விவரணத்தில் சில விநோதங்கள் இருக்கின்றன: போரஸை அலெக்ஸாண்டர் வென்றதாகக் குறிப்பிடும் இந்த கிரேக்க வரலாற்றாசிரியன் அந்த வெற்றியின் விளைவினை பின்வருமாறு கூறுகிறான்: “அலெக்ஸாண்டர் போரஸை போரஸின் நாட்டிற்கே சத்ரப்பாக நியமித்ததுடன் தான் வென்ற மற்ற இனத்தவர்களின் பிரதேசத்தையும் போரஸ¤க்கு அளித்தான்.” அதிசயமான வெற்றி; அதிசயமான தோல்வி. வென்றவன் தான் வென்ற பிரதேசங்களை தன்னிடம் தோற்றவனின் அதிகாரத்துக்கு அளிக்கிறான். தோற்றவனின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசம் அதிகரிக்கிறது. வென்றவனின் பிரதேசம் குறைகிறது. ஒருவேளை அலெக்ஸாண்டர் வீரப் பெருந்தன்மையின் விளைவாக இத்தனை தயாளக்குணத்துடன் நடந்திருப்பானோ? ஆனால் அலெக்ஸாண்டரின் வரலாறு காட்டும் குணம் அப்படிப்பட்டதல்ல.

அரிஸ்டாடிலின் உறவினர் கலஸ்தனஸை தம்மை விமர்சித்ததற்காக கொலை செய்த அலெக்ஸாண்டர், தனது ஆத்திரத்தால் தன் நண்பன் க்ளைட்டஸையே கொன்ற அலெக்ஸாண்டர் மசாங்க வீரர்களை குழந்தைகள் பெண்களுடன் இரவில் தூங்கும்போது தாக்கி எரித்துக் கொன்ற அலெக்ஸாண்டர், தன்னைத்தாக்கி பெரும் அழிவினை உண்டாக்கி தன்னிடம் தோற்ற பின்னரும் தன்னை எதிர்த்து பேசியதாகக் கூறப்படும் போரஸ¤க்கு தான் வென்ற பிரதேசங்களை பெருந்தன்மையுடன் அளித்திருப்பானா? பினவரும் சில தகவல்கள் ப்ளூட்டார்க்கின் இந்த விநோத விவரணத்திற்கு விடை பகரக்கூடும்.

நான் முதலில் கூறியபடி வீர சாவர்க்கரே அலெக்ஸாண்டர் பாரதத்தில் தோல்விகளை சந்தித்திருக்க வேண்டும் என்பதனை ஆதாரத்துடன் கூறியவர். எனினும் அவரது கூற்றுக்கள் புறக்கணிக்கப்பட்டன. ஏனெனில் தீவிர தேசியவாதியான வீர சாவர்க்கர் பாரதத்தின் மீதுள்ள பற்றினால் அவ்வாறு கூறியிருக்க கூடும் என்பதனால். ஆனால் வீர சாவர்க்கரின் கருத்தினை வலுப்படுத்தும் ஆதாரங்கள் எதியோப்பிய மூலநூல்களிலிருந்து அலெக்ஸாண்டர் குறித்து கிடைத்த தகவல்கள் மூலம் வலுப்பெற்றன. இதனை வீர சாவர்க்கரே இறுதி வரை அறியவில்லை.

சர்.ஆல்பெர்ட் வில்லியம்ஸ் பட்ஜ் (1857-1934) மொழியியலாளர் மற்றும் ஆசியவியலாளர். எபிரேய, சிரிய, அராபிய, எத்தியோப்பிய மொழிகளில் வல்லுனர். (ஆசிய நாடுகளின் கலைப்பொருட்களை தம் நாட்டு மியூசியங்களுக்கு கடத்துவதில் தன்காலத்திய எந்த மேற்கத்திய ‘வரலாற்றாய்வாளருக்கும்’ குறைந்தவரல்ல பட்ஜ்). 1928 இல் வெளியிடப்பட்ட “A History of Ethiopia: Nubia and Abyssinia.” எனும் நூலில் The Life and Exploits of Alexander எனும் பகுதியில் குறிப்பிடுவது சுவாரசியமானது:

“ஜீலம் போரில் அலெக்ஸாண்டரின் குதிரைப் படைகள் கடுமையாக அழிக்கப் பட்டன. போர் தொடர்ந்தால் தான் நிர்மூலமாக்கப்படுவோம் என்பதனை அலெக்ஸாண்டர் உணர்ந்து
கொண்டான். எனவே போரஸ் மன்னனிடம் போரினை நிறுத்தும்படி வேண்டிக்கொண்டான். இந்திய பாரம்பரியத்திற்கே உரிய பெருந்தன்மையுடன் தன்னிடம் சரணாகதி என வந்த அலெக்ஸாண்டரை கொல்லவில்லை. இதற்கு பின்னர் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். புருஷோத்தமனுக்கு போர்களில் உதவியும் செய்தான்.”

இரண்டாம் ஐரோப்பியப் போரின் சோவியத் கமாண்டர் மார்ஷல் ஸ¤கோவ் டேராடூண் இராணுவ அகாதமியில் நிகழ்த்திய உரையின் போது இந்தியர்கள் அலெக்ஸாண்டரை தோற்கடித்தவர்கள் எனக் குறிப்பிட்டார். பாரதத்துக்குள் 40000 படைவீரர்களுடன் நுழைந்த அலெக்ஸாண்டர் 15000 வீரர்களுடன் திரும்பினான். “ஆசியா முழுவதிலும் தாம்
அனுபவித்த இன்னல்களைக் காட்டிலும் சிந்து பிரதேசத்தில் தாம் அதிக இன்னல்களை அனுபவித்ததாக அலெக்ஸாண்டரின் வீரர்கள் அனைவருமே பேசிக்கொண்டனர்.” என்று எழுதும் வரலாற்றாசிரியர் ராபின் லேன் பூல் அலெக்ஸாண்டர் பாரதத்தில் முதன்முதலாக தோல்வியின் சுவையை அறிந்ததான் என்றே குறிப்பிடுகிறார். ப்ளூடார்க்கின் விசித்திர விவரணத்தை அலெக்ஸாண்டரின் பெருந்தன்மை என நம்புவர்கள் நம்பட்டும். ஆனால் அந்த விசித்திர விவரணத்தின் உண்மை இங்கு கூறப்பட்ட தகவல்களிலும் இருக்கலாம்.

ஆனாலும் அலெக்ஸாண்டரின் படைவீரர்கள் இந்தியாவில் கடும் தாக்குதல்களின் காரணமாக படுவிரக்தியும் கலக்கமும் அடைந்து புறங்காட்டி ஓட யத்தனித்தது கலகமாகவே மேற்கத்திய வரலாற்றாசிரியர்களால் காட்டப்பட்டு வருகின்றது. என்றபோதிலும் தங்களது மிகச்சிறந்த வீரன் தாம் காலனிய ஆதிக்கத்திற்கு உள்ளாக்கிய நாட்டினால் தோற்கடிக்கப்பட்டதை ஜீரணிப்பது இன்றளவும் மேற்கத்திய வரலாற்று பொதுப்பிரக்ஞையில் கடினமாகவே உள்ளது போலும். எனவேதான் அண்மையில் வெளியான அலெக்ஸாண்டர் திரைப்படத்தில் அலெக்ஸாண்டரின் இந்திய பின்வாங்கல் காட்டப்பட்ட நேரம் நான்கு விநாடிகளே.

எனவே தேசபக்தியும் அனுபவமும் அறிவியல் பார்வையும் கொண்ட எழுத்தாளரான ஜெயபாரதன் வஜ்ரா சங்கரின் கடிதம் கூறும் வரலாற்று உண்மையினை ஏற்றுக் கொள்ளவேண்டும். குறைந்த பட்சம் ஒரு வலிமையான வரலாற்று ஆதாரம் கொண்ட மாற்று-கருதுகோளாகவேனும் ஏற்று தமது எழுத்துக்களில் கூறவேணும். இந்த விவாதத்தினை தொடங்கி பாரத வரலாற்றின் பொன்னேட்டினை குறித்து சிந்திக்கவும் எழுதவும் தூண்டிய வஜ்ரா சங்கருக்கும், ஜெயபாரதனுக்கும், திண்ணைக்கும் நன்றி.

அன்புடன்,
எஸ். அரவிந்தன் நீலகண்டன்.

[நன்றி:
* பேராசிரியர் தினேஷ் அக்ரவால் எழுதிய ‘Alexander, The Ordinary’ (சிபி.காம்)
* குரானில் அலெக்ஸாண்டர்: காண்க-http://en.wikipedia.org/wiki/Alexander_in_the_Qur’an]

Series Navigation