மகாத்மாவின் பொம்மைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

மைக்கேல்


பாபுஐியை, அவரின் மனதுக்கினிய பல நண்பர்களை இழந்தாயிற்று. சபர்மதி, வார்தா, யமுனைக்கரை, ராஐாஐிவீடு, எல்லாம் போய் நாளாகிவிட்டன. பாபுஐியின் சில நண்பர்களும் வரத்துப் பறவைகளாக வந்து போகின்றனர். மனத்தில் ஒன்றிய அன்பையும் சத்தியத்தையும் குருஐியுடன் வழியனுப்பிவிட்டனர். கத்தியவார் கடற்கரையிலிருந்து உஷ்ணம் தாங்கி வீசும் உப்புக்காற்று, தேகத்தை உக்கவைக்கிறது. நீண்ட ஆண்டுகள் குந்திய நிலையில் இருந்து அலுப்பேறி, எழுந்து திரிந்து தேசங்களை, ஷேத்திராடனங்களைப் பார்த்து கர்மா முடித்து விடவேண்டுமென மூன்றுக்கும் சமநேரத்தில் தோன்றிவிட்டது. நினைவாலயத்திலிருந்து உடம்பைப் பெயர்த்துக் கொண்டு எழும்பி நடந்தன.

நிச்சயமாகச் சொல்லமுடியாவிட்டாலும் ஏறக்குறைய அறுபது, எழுபது ஆண்டுகள் புலன்களை மறைத்து வைத்திருந்த கைகள் வேரோடி தசைநார்கள், இரத்தநாடிகள் சுருங்கி, விறைத்து விட்டன. வீதியில் அவை நடக்கும்போது குத்தி அகலும் பொதுக்கண்களில் பாபுஐியினது ஞாபகம் வராமல், மாறாக ஏளனமும் நக்கலும் தொனித்தது மூன்றுக்கும் பெருத்த சங்கடமாக இருந்தது.

பயணவழியில் தேவாலயமோ மசூதியோ தென்பட்டால் உள்ளே நுழைந்து கைகளை சுயாதீனமாக இயங்க வைத்து மேலே நடப்பதென தீர்மானித்தன. எதிர்வரும் ஒவ்வொரு கிராமத்திலும் பற்பல ஆலயங்கள். விஷ்ணு, ராமர், சிவன், இன்னும் பல இந்து வடிவங்களைத் தாங்கிய கோயில்களே வழிமறித்தன. மதநல்லிணக்கம் பேணும் இந்தியாவில்தானா நடக்கிறோம் என்ற சந்தேகமே வந்து விட்டது. ஒருமித்த முடிவில் இந்துக் கோவிலுக்குள் இனிமேல் அடிவைப்பதில்லை என்று 1948 ஐனவரி 30 இல் எடுத்த சபதம் ஞாபகத்தில் நின்றதால் மெளனமாக நேரே நடந்தன.

கட்புலனை மறைத்திருந்த பொம்மைக்கு அநுமார் கோயிலுக்குள் நுழைவது பாதகமில்லை என்ற எண்ணம் துாக்கினாலும் பெரும்பான்மை எதிர்ப்பின் வன்மை கருதி வெளியில் சொல்லாமல் காலுழைய நடந்து கொண்டிருந்தது.

பாபுஐியின் கைத்தடி, பாதரட்ஷை, மூக்குக் கண்ணாடி, என்பவற்றிலிருந்து விலகி வந்தும் நினைவுகள், போர்ப்பந்தரை விட்டு அகல மறுத்தன. துாரம் மனதில் பாரத்தை ஏற்ற பேச்சைத் துணைக்களைத்தது காதை மறைத்த பொம்மை.

‘அந்த நல்ல மனிதன் பின்னர் வரவேயில்லையே மறந்து போய்விட்டானா ‘

‘நீ யாரைச் சொல்கிறாய்.. ? ‘ எனக்கேட்டது கண்மறைத்த பொம்மை.

‘அவன்தான், பாபுஐியுடன் விவாதிப்பானே அந்த வெள்ளை மனிதன் ‘.

‘ஓ.. லுாயிஃபிஷரா அவன் கடைசிவரை பாபுஐியிடம் நம்பிக்கை இழக்கவில்லை. என்றாலும் வயது வாழ்வுக்கு எதிராயிற்றே..! கொண்டுபோயிருக்கும். சொர்க்கத்தில் பாபுஐியுடன் விவாதித்துக் கொண்டிருப்பான். ‘

‘சொர்க்கத்தில் கைராட்டைகள் உண்டோ… ? ‘

அது ஆச்சரியம்தான்… உணர்வுமிகுதியால் பேசுவதற்கு உன்னி, தன்னிச்சையாக கைகள் வாயிலிருந்து விடுபட்டுவிட்டன. கேள்வியை மறந்து அது சந்தோசத்தில் துள்ளிக் குதித்தது. கள் குடித்த மந்தியைப்போல குட்டிக்கரணம் போட்டு புழுதி அளைந்தது.

‘உஸ்.. உஸ்.. காலிப்பயலே.! சாந்தி சாந்தி.. ‘

விளிச்சொல் சுயபாஷையிலும், பின்னது பொக்கைவாய் திறந்து பாபுஐி சொல்வதைக் காப்பி அடித்தும், ஆனந்த அட்டகாசம் செய்த பொம்மையை அடக்கியது காதுமறைத்த பொம்மை.

நிதானங்கொண்டு, சமநிலையடைந்து, சகாக்களது கரங்களையும் விடுவித்தது. பின்னர் கைகளைப் பயிற்றுவதற்கு, இல்லாத கர்லாக்கட்டைகளை வானுக்கும் பூமிக்குமாக சுற்றத் தொடங்கின மூன்று பொம்மைகளும்.

*****************************

வண்டல் வெடிக்கும் உச்சிவெயிலின் வீச்சில் பாதங்கள் அவிந்தன. ரோமங்கள் வியர்வையில் நனைந்து வெம்மையில் உலர்ந்தன. காலாற்றிக் கொள்ள நிழல் தேடிய கண்கள் வலித்தது. அவைக்கு அரசமரத்து நிழல்தான் இஸ்டம். சிந்தனைகள், ஞானங்களுக்கு அரசமரம் உகந்தது. நுாற்றாண்டுகளாக மோனத் தனிமையில் வாழ்ந்தாலும், அதன் நிழலின் கீழ் அமர்பவனுக்கு அது ஞானத்தை அள்ளி ஊட்டிவிடும். அதுவும் வெள்ளரசமரம் பிரபஞ்சத்தின் வெள்ளைப்புறா. ஆனால் அது கண்ணுக்கு தென்படாமல் கால்கள் சோர்ந்தன.

பாபுஐியின் மாபெரும் போராட்டம் நிகழ்ந்த இடமெல்லாம் இரத்த உறவினரின் வீடு போன்ற நெருக்கம் மனதில் குளிர்ந்ததால் தண்டிப்பட்டணத்தை நோக்கி கால்கள் இழுத்தன. வெள்ளையனின் வரிச்சுமைக்கு எதிராக கொதிக்கும் வெயிலில் பாபுஐியும், தொண்டர்களும் உப்புக்காய்ச்சி சிறை சென்ற தண்டிப்பட்டணத்தில் தங்களுக்கு கிடைக்கப்போகும் வரவேற்பை எண்ணச் சந்தோசம் சிறகடித்தது. உடலுழைவு மறந்தது. தொடர்ந்த நடையில் அந்தக்கடற்கரைப் பட்டணத்தை அடைந்தபோது அது அந்திமவயது அனாதைபோல வறுமையும் அமைதியுமாய் மூச்சிழுத்துக் கிடந்தது.

விடுதலை வரலாற்றுப் புத்தகத்தில் ஒரு திமிர்த்தனமான பக்கங்களை எழுதக் காரணமான இந்தப் பட்டணம் அதைப்பற்றிய எந்தப் பிரஞ்ஞையும் அற்று அன்றாட வாழ்வின் சிக்கலில் திணறியது தெரிந்ததும் மூன்றுக்கும் ஏமாற்றம் பொங்கி வழிய இரவிரவாய் அந்நகரைக் கடந்து பாரதத்தின் தென்கோடி மூலையான இராமேஸ்வரத்தில் பசுமைப்புரட்சி இயக்கத்தினரால் நடப்பட்டு இன்னும் மூலவேர் தெறிக்காத ஒரு அரசங்கன்றின் கீழமர்ந்து அயர்வு போக்கிக் கொண்டபோது பயணத்தின் திசை பற்றிய விவாதம் எழுந்தது.

‘முதலில் இலங்கை போகலாமா.. ? ‘ என்று கேட்டது வயதில் இளைய பொம்மை.

துணிகரங்களில் அதீத பிடிப்பு அதன் முகத்தில் தெரிந்தது. இளம்பருவத்தின் இலக்குகள் பெரும்பாலும் பின் விளைவை ஆராய்வதில்லை. திரிகாலம் கணிக்க ஞானிகளால்கூட முடிந்ததா.. ? நேசத்தையே மூச்சாக வாழ்ந்த அன்புக்கினிய பாபுஐி ‘ஹே ராம் ராம் ‘ என்று மண்ணில் சரிய ஒரு விடலைதானே காரணமாகிவிட்டான்.

போகட்டும் இதன் அறிவும் வயதும் கருதி மன்னிக்கப்பட வேண்டும் என மூத்தது இரண்டும் மனதில் எண்ணின.

‘பழைய சம்பவத்தின் பிசிறாக ஏதாவது அசம்பாவிதம் ஏற்படலாம். வாலில் தீ வைப்பது வழக்கிழந்து இப்போது ஞாபகக்கிடங்கிலிருந்து பழிவாங்கப்பட வேண்டிய முகங்கள் தூரெடுக்கப்படுகின்றன. கையில் கிடைத்ததும், உடனே சிதைக்கப்பட்டு மீண்டும் மண்ணில் ஆழப் புதைக்கப் படுகின்றனவாம். தென்திசை வேண்டாம். ‘ அறிவார்ந்த ரீதியாக மறுத்தது முதியது.

‘ஆனால் சர்வதேசப் பயணங்களுக்கு அங்குதான் சிறந்த முகவர்கள் இயங்குவதாக ஒரு பஞ்சாபி இளைஞன் கூறினானே. ‘

‘வாயிருந்தால் வங்காளம் போகலாம். எங்கள் முன்னோன் திசைகளைக் கடந்து மலையைக் கெல்லியவனாச்சே…! அவனது பாதம் பட்ட பூமியது. யாராவது வாரிசுகள் இருக்கலாம் எதற்கும் போய்ப் பார்ப்பது நல்லது. ‘ பட்டும் படாமல் தன்விருப்பத்தை வார்த்தையாக விட்டது நடுத்தரவயதுப் பொம்மை.

பொங்கி வந்த வன்சொல்லை மென்று விழுங்கிவிட்டு, எழும்பி வேதாரண்யம் நோக்கி நடந்தது மூத்த பொம்மை. பட்டறிவுதான் பலன். மூத்தோர் சொல்லுக்கு அடங்கிய காலம் மலையேறிப் போச்சு என எண்ணிப் பெருமூச்சு விட்டது. அதைப் பின்தொடர்ந்த இரண்டுக்கும் பாக்குநீரிணையைக் கடப்பது எப்படி என்ற கேள்வி குடைந்தது.

வேதாரண்யக் கரையை அடைய கிழக்கு வெளுத்தது. கடற்பறவைகளின் கீச்சொலியும் கவிட்டு வைத்த இரண்டொரு படகுகளையும் தவிர கடற்கரை வெறிச்சுக் கிடந்தது. செயலுள்ள மீனவர்கள் எல்லாம் வெள்ளாப்பிலேயே கடலில் இறங்கிவிட்டார்கள்.

மோப்பம் பிடித்தலைந்த மூன்றின் கண்களுக்கும் ஒரேயொரு மீனவன் அகப்பட்டான். எட்டி நடந்து அவனையடைந்து தமது விருப்பம் தெரிவித்தனர்.

கூர்ந்து கேட்டபின் திரண்டதசைகள் வாய்ந்த உடம்பை நிமிர்த்தி சோம்பல் விட்டான். பின்னர் உறுதியான மெளனம் கலைத்து கடலில் நீரோட்டத்தின் வேகம் பற்றியும், ரோந்து செல்லும் படைகளின் கண்ணில் பட்டால் கிடைத்துவிடும் கதிமோட்சம் பற்றியும் விளக்கி, இவற்றைமீறி கடந்து சென்றுவிடக்கூடிய தன் திறமை, அதற்கு இவ்வளவு கூலி என்று பேச்சை முடித்தான்.

காசு என்றதும் கலங்கிவிட்டாலும் குகன் என்று அந்த மீனவன் பெயரைச் சொன்னதும் இளவலுக்கு நம்பிக்கை வந்தது.

குரலைச் செருமிக் கொண்டு, அவனது உடன்பிறவாத சகோதரனுக்கு தங்கள் முன்னோர் எந்தக் கூலியும் வாங்காமலேயே செய்த உபகாரம். அன்று கங்கைக் கரையில் மார்புறத்தழுவி ஆத்மன் என்று அழைத்தவனையும், மரவுரியிலும் கபடமில்லாத அழகு கொழித்தவளைக் கண்டு பிடிக்க கடல் தாண்டியவனையும் ஞாபகப்படுத்தி இன்னும் எவ்வளவோ நியாயங்கள், நீதிகள் பேசி உதவி கேட்டது.

எவ்வளவு கூறியும் பேரத்தில் குறியாய் இருந்தான் மீனவன் குகன். இந்து சமுத்திரத்தின் ஒவ்வொரு கனசதுர அடியையும் அறிந்து வைத்திருந்த குகனுக்கு இராமநட்பு புரியவில்லை. அவனது குடிசையில் அடுப்பு புகைவதற்கு காசுதான் பிரதானம் என்றான்.

கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விடுங்கள் என்று, பாகிஸ்தானுக்காக உணவைத் துறந்த பாபுஐியின் நேசர்கள், குகனுக்கு கடன் சொல்லி வேதாரண்யத்திலிருந்து மன்னார் கரையில் கால் பதித்தார்கள்.

************************************

எங்கும் எரிந்த சுவடுகள் கண்டு மிரண்டது இளையது. ஆதாரங்கள் அழிவதற்கு முன்னால் இங்கு வந்தது தப்பு என்பதை உணர்ந்தது. ஆனாலும் இழந்த மாடங்களைத் திருப்பிக் கட்டாத விபீஷண மன்னனைச் சபித்தது.

‘என்ன மன்னன் இவன். தமையனைப் போல உறங்கிவிட்டானோ.. ? நீதி நியாயங்கள் நிறையப் பேசுபவன் செயலில்லாதவன் ‘ என்று புறுபுறுத்தது.

இளவலின் கொதிப்பைக் கேட்டதும் படாரெனப்பிறந்த சிரிப்பைக் கொடுப்புக்குள் அடக்கியது முதியது.

சதுப்பு நிலத்தில் அடிவைப்பது போல வீதியில் நடந்தனர் மனிதர்கள். நீரில் ஆடும் பிம்பங்களாக அவர்களது முகங்கள். அதில் மண்ணில் நிகழும் பிரளயத்தின் உறைந்து போன காட்சிகள். இவர்களுக்குள் முகவர்களைத் தேடுவதோ ஸ்தலவிபரம் அறிவதோ முடியாத வேலை என மூன்றுக்கும் ஏமாற்றம் தொற்றியது.

சொல்லுக் கேளாத இளையது எங்கோ அலைந்து சில செய்திகளுடன் வந்தது.

‘இங்கிருந்து தெற்காக பலகாத தூரநடையில் இராச்சியபாரம் தாங்கும் மாபெரும் நகரம் ஒன்றுண்டாம். புத்தனின் தர்மங்களை அள்ளி வீசும் காற்றிலெறிந்து, அங்கிருந்துதான் பரவவிடுவார்களாம். காற்று மாறிவீசும் திசைக்கெல்லாம் தர்மம் பரவி அவ்விடத்து மாந்தரின் தலையில் தாமரைமலர்களாக சொரியுமாம். அந்த நகரம் நோக்கி நடப்பது உசிதம். போகும் வழியில் நாம் களைப்பாறுவதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பேணிவரும் வெள்ளரசமரம் ஒன்றும் உயிர்வாழ்கிறதாம். ‘

முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்த கட்டுடல் வாய்ந்த நடுவயதுப் பொம்மைக்கு குண்டும் குழியுமான வீதியும் மருந்துக்குக் கூட ஒரு தாமரை இதழின் சருகு காணாததும் ஒரு கேள்வி பிறந்தது.

‘பல வருஷங்களாக இந்தத் தென்பருவக்காற்று மாறவேயில்லையோ.. ? ‘

மற்றது இரண்டும் பதில் சொல்லாமல் நேரே வீதியைப் பார்த்தன. பாதையை அடைத்து பிரமாண்டமான கம்பிவேலிகள், தடைஅரண்கள். எங்கும் மினுமினுக்கும் துப்பாக்கிச் சனியன்கள். தலைக்கவசத்திற்கு கீழ் மிரளும் விழிகளுடன் இராணுவ உடம்புகள். ‘தா..ண்..டிக்..குளம். ‘ என்று ஒவ்வொரு எழுத்தாக நீட்டி வாசித்தது இளையது.

இளம்பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது. இளவல் கூறியது போல அவ்வளவு இலகுவாக மணிமுடிதாங்கிய நகரத்தையோ, வெள்ளரச நிழலையோ அடையமுடியவில்லை. அனுமதி எடுக்க கிழமைக் கணக்காக மக்கட்கூட்டம் நாடிதாங்கி நின்றது. அனுமதி இல்லாமல் தெற்கின் எல்லைக்குள் கால்வைக்க முடியாது. இரையெடுத்த மலைப்பாம்பாக வரிசை நீண்டு உறங்கியது. இவைக்கு கம்பிவேலியைக் கடந்து போவது ஒன்றும் சிரம வேலையில்லை. எனினும் பாபுஐியின் அருகே வாழ்ந்த குற்றத்திற்காக அவை வரிசையில் நின்றன.

காவலரண்களிலிருந்து வரிசையை நோக்கி நீண்டிருந்த சிறுபீரங்கிகளும், வானிலிருந்து சூரியனும் வியர்வையைக் கொட்டின. பசிக்களைப்பும் கால்க் கடுப்பும் வாட்ட இளவல் பாபுஐியைக் கடிந்து பேசியது.

‘கீழ்ப்படிய வேண்டியதற்கு உண்ாணாவிரதம். கீழ்ப்படிய வேண்டாததற்கு கீழ்ப்படிதல். பாபுஐி பெரும்புதிர். ‘

‘நாக்கை அடக்கு ‘ என்று வள்ளென விழுந்தது மூத்தது. அதற்கும் பசிக்களை அத்துடன் குருவிசுவாசம்.

நடுவிலானை வரிசையில்க் காணவில்லை. அது முன்னும் பின்னுமாக நடந்து, வரிசையில் நின்ற மக்களைப் பேட்டி கண்டது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு பெரிய வரலாறு வைத்திருந்தனர். அது குந்தியைக் கண்டது. காணாமல் போன லோகிதாசனைத் தேடிய சந்திரமதிகளுக்கு ஆறுதல் கூறியது. பிள்ளைகளை வீட்டில் விட்டுவிட்டு தலைநகரம் நோக்க்ி வந்த பல நல்லதங்காள்களின் கவலை புரிந்தது. கையில் மாலை இல்லாது சோகம் தாங்கி நின்ற தமயந்திகளுக்கு மனதில் கண்ணீர் விட்டது. தள்ளாத வயதில் உலர்ந்து போன தசரதன் நின்றான். அனுமதி வழங்கும் மேசைக்கருகே முகத்தை மறைத்துக் கொண்டு இரண்டொரு சகுனி நிற்பதாகவும் பேசிக் கொண்டனர்.

அது பின்பனிக்காலம். கிடுகு விரித்து உடம்பைக் கிடத்தி விறைத்தனர் மனிதர். மூன்று நாட்களாக வரிசை நகர்ந்த சுவடு இல்லை. சிடுசிடுத்து அலைந்த இளவல் பசிக்களைப்பில் மயங்கிச் சரிந்தது. பேதம் பார்க்காது வேப்பமர அடிக்கு இழுத்துச் சென்று இளவலைக் கிடத்தினர். வரிசையை விட்டு அவைகள் உருவி வந்ததும் அது இடைவெளி அற்று இறுகியது.

கொஞ்சம் கொஞ்சமாக நடுவிலானிடமும் களைப்பின் சாயல் தெரியத் தொடங்க மூத்ததுக்கு கவலை பிடித்து ஆட்டியது. இருந்த நாள்வரை பாபுஐியிடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டிய முக்கிய பாடத்தை அலட்சியம் செய்ததையிட்டு மனமுடைந்தது. உணவை மறுத்து உடம்பை இயக்கும் சித்து அறிந்த மனிதர் அவர்.

நீண்டநேரம் நினைவுகளில் சால்பிடித்து உழுதது மனது. நினைவாலயத்தின் நீள்சதுர அறையைத்தவிர வெளி உலகத்தில் அமைதி இல்லை. வாழ்வும் இல்லை. இதன் நீண்ட வாழ்வின் அந்திம வயதில் ஒன்றில் மட்டும் அதற்கு தெளிந்த ஞானம் கிடைத்தது.

பாபுஐியின் நிழலில் வாழ்ந்த மட்டும் தமக்கு முகம் இருந்தது. கருத்தும் மதிப்புமாக அரையுடைப்பிதாவின் உயிர்வரை வாழ்வின் பயன் முடிந்தது. பின்வந்த நாட்கள் நினைவாலயக் கூண்டுள் இருப்பு உண்மையில் சமாதி நிலையே.

நினைவாலயக் கூண்டுக்கு வெளியே அக்டோபரும், ஐனவரியும் வரிசைகட்டி வந்து பார்த்துச் சென்ற மனிதர்கள் யாவரும் இறந்தகாலத்தையே எடுத்துச் சென்றனர்.

சம்பவங்களின் தொடர்பறுந்து காலத்தின் முள்ளு வலமிருந்து இடமாக மூளைக்குள் ஓடத்தொடங்க நெற்றி குளிர்ந்த வியர்வையில் நனைந்தது. பசிமயக்கம் தலைக்குள் புற்று வைப்பதை உணர்ந்ததும் திடுக்கிட்டு தலையைத் துாக்கி, ‘இருந்த இடத்திற்கு திரும்பி விடலாமா.. ? ‘ என்று கேட்டது.

கேள்வி காற்றில் அலைந்து மறைந்து போனது. போதுமான இடைவெளி விட்டும் பதில் வரவில்லை. தலையைத் திருப்பிப் பார்த்தது. மயக்கத்தில் விழுந்து அலங்கோலமாக நிலத்தில் கிடந்தது நடுவிலான். சிரமப்பட்டு அதையும் இழுத்து இளவலின் அருகே போட்டுவிட்டு நிமிர்ந்தபோது, வரிசையில் நின்ற மக்கள் பரபரப்படைந்து இயங்குவது தெரிந்தது. அங்கு ஏதோ முன்னேறுதல் நடக்கிறது. ஆனால் நண்பர்களை விட்டு ஒரு அடிகூட விலகமுடியாத ஏமாற்றத்தால் பெருமூச்சுடன் அவைகளுக்கருகே குந்தியது. தன்னிச்சையாக அதன் கைகள் எழும்பி வாயை மறைத்தன.

இந்த மண்ணில் எண்ணப்படாமல் எலும்புக்கூடுகள் நிறைந்துள்ளனவாம். அதற்கு இலக்கம் போட்டு, இடுப்பகலம்கூடிய எலும்புக்கூடுகள் எத்தனை.. ? வளர்வதற்கு முன்னே எலும்பாகிப் போன கூடுகள் எத்தனை என்று வகைபிரித்து ஆவணங்களில் பதிவு செய்ய் ெஐனிவாவிலிருந்து நேற்றுக்காலை ஒரு கறுப்பு அறிஞர் தலைநகரத்திற்கு வந்திறங்கி, எலும்புக்கூடுகளின் நகரம் நோக்கி பலத்த பாதுகாப்புடன் காரில் வந்திருக்கிறார்.

சிறிது நேரத்திற்குள் வரிசையாக நின்ற மக்கள் எங்கோ ஒரு கூரைக்குள் மறைக்கப்பட்டனர். பாதச்சுவடுகளை தண்ணீர் விசிறிச் சென்ற வாகனம் அழித்துப் போனது. இயற்கைக் காற்றை திசைதிருப்பும் சக்தி இல்லாமையினால் படைவீரர்கள் தங்கள் துவக்குகளைச் சாத்தி வைத்துவிட்டு கைகளில் தாமரைமலர் தாங்கி துாவிச் சென்றனர். கம்பி வேலிகள் அகற்றப் படுவதும் முன்பு வரிசையை நோக்கி நீண்டிருந்த பீரங்கிக் குழல்கள் திசை மாற்றப் படுவதும் தெளிவாகத் தெரிந்தது.

ஆடம்பரமான வெள்ளைக்கார் ஒன்று வந்து சறுக்கி நின்றது. படைஅதிகாரிகளின் கைகுலுக்கலை ஏற்றுக் கொண்டு காரிலிருந்து கறுப்பு அறிஞர் இறங்கி வந்தார். அவரை அழைத்துச் சென்ற படைஅதிகாரி ஈரமண்ணையும், தாமரை மலர்களையும் சுட்டிக்காட்டி ‘முப்போக மழைபொழிந்து, மண் செழித்து, மலர் சொரிந்து ‘ கவிதைநடையில் இன்னும் ஏதோ சொல்லிச் சென்றார். எல்லாவற்றுக்கும் சுருள்வில்லில் பொருத்திய பொம்மைத்தலை ஆடுவது போல தலையை ஆட்டினார் கறுப்பு அறிஞர்.

கண்முன்னாலேயே ஒரு பொய் நிஐமாகிக் கொண்டு போவதைப் பார்த்த மூத்ததுக்கு இலங்கையையே எரித்துப் பஸ்பமாக்க வேண்டுமென்ற வெறி வந்தது.

பாபுஐி கூறுவார் ‘அன்பு… அமைதி.. அதன் பலனாக வெற்றி ‘ என்று.

அவரை மீறக்கூடாது.

ஆனாலும் மூத்ததுக்கு படைஅதிகாரி மீது அன்பு வரவில்லை. மாறாக தள்ளாமை உணர்வைத் தின்னத் தொடங்க மயக்கம் வந்தது. பூமி சுற்றிச் சுழன்று மூளைக்குள் குதிப்பது போல இருந்தது. நட்சத்திரங்கள் கண்ணுக்குள் இறங்கின. குந்தி இருந்த முதியது சற்றுச் சாய்ந்து படுக்க நினைவு தப்பியது.

************************************

ஆபிரிக்காவின் சிற்றுார் ஒன்றில் பிறந்து பணி நிமித்தம் ெஐனிவாவில் வாழ்ந்தாலும் மண்ணும், மரஞ்செடி கொடிகளும், தாய்நாட்டின் ஏக்கத்தை விதைக்க கறுப்பு அறிஞர் நடக்க விரும்பினார். மரியாதையான துாரம் இடைவெளிவிட்டு படைஅதிகாரி பின் தொடர்ந்தார்.

வனங்களிலிருந்து சிறிது குளிர்மையைத் துாக்கிக் கொண்டு காற்று வந்தது. ஆனாலும் காற்று தெற்கு நோக்கியே வீசியது.

சிறுநடை போட்ட அறிஞரின் காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தார். மல்லாந்த நிலையில் மூன்று பொம்மைகள். ஒரு பொம்மை மட்டும் கையினால் வாயை மறைத்தபடி கிடந்தது. அவற்றைப் பார்த்துக் கொண்டே அவர் ஏதோ ஞாபகம் தேடினார். தேடியது பளிச்சிட்டதும்

‘ஓ…பென் கிங்ஸ்லியின் பொம்மைகள்..! ‘

என்ற ஆச்சரியக் குறிப்புடன் அவற்றைப் பொறுக்கி தன் கையில் வைத்திருந்த ஆவணப்பைக்குள் திணித்துக் கொண்டார்.

***

Series Navigation

author

மைக்கேல்

மைக்கேல்

Similar Posts