மகப்பேறு

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

ருத்ரா


எனக்கு தொிகிறது.

டாக்டர் வருடிகொடுக்கிறார்

என் தாயின் நெற்றியை.

புதைக்கப்பட்ட

டைம் பாம்ப்

இதோ வெடிக்க காத்திருக்கிறது.

கடிகாரமுட்கள்

என் ஜன்மநட்சத்திரத்தை

குத்தி குத்தி

காட்டிக்கொண்டிருக்கிறது.

என் அன்னையின்

நரம்புக்குள்

அக்கினியாய் பாய்கிறேன்.

இருட்டோடு

வேர் பிடித்து கிளை பரவி

‘பிக் பேங்க் ‘

மறுமுனைவரை

வாசம் பிடித்து வந்திருக்கிறேன்.

பிரபஞ்சத்தை பிசைந்து

சுருட்டிக்கொண்டு

வரக்காத்திருக்கிறேன்.

வெளியே எனக்கு

என்ன வர்ணம் பூசக்காத்திருக்கிறீர்கள் ?

அதோ

வலியின் விாிவு

‘பொக்ரான் ‘ கிளப்பிய

அலை வட்டங்களாய்

அன்னை மணி வயிற்றில்…..

காலம் கிழிந்தது.

துணிப்பரப்பில்

நிமிடங்களின் கரைசலில்

எனது முதல் மைல்கல்

ஊன்றப்பட்டு விட்டது.

ஓட்டுப்பெட்டிகள் வாய் பிளக்க

அடையாள அட்டைகளில்

நமைச்சல் எடுக்க

கணக்கில் ஒன்று கூடிவிட்டேன்.

‘என்ன குழந்தை ?

ஆணா ?பெண்ணா ? ‘

கிணற்றுக்குள்ளிருந்து கேட்கிறது.

அதே கணத்தில்

என்னோடு பிறந்த

அந்த கருப்பு ஆட்டுக்குட்டிக்கு

அடியில்

ஒரு கசாப்பு கத்தியின் நிழல்

ஒட்டிக்கிடக்கிறது.

எனக்கும்…

என் காலில் ஒன்று இடறுகிறது.

அது…

சாக்ரட்டாஸ் அருந்திவிட்டுச் சென்ற

கோப்பை.

அந்த ‘ஹெம்லாக் ‘ விஷத்தின்

மிச்ச சொச்சம் எல்லாம்

உங்கள் குரல்களில்…

உங்கள் வசனங்களில்….

உங்கள் சாம்பிராணி கற்பூரங்களில்..

சவம் மூடிய சல்லாத்துணியாய்

படலம் காட்டுகிறது.

பிரசவம் ஆனது

கேள்வியா ?விடையா ?

கன்னிக்குடம் உடைத்து வந்த

பட்டிமன்றம் இது.

சவைத்துக்கொண்டே இருங்கள்

காலம்

உங்கள் நாக்குகளில்

சக்கையாகப் போகும் வரை.

===============================ருத்ரா

Series Navigation

ருத்ரா

ருத்ரா