போலி விவாதத்தின் நிஜ முகங்கள் – புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை, பதிப்புரிமை தொடர்பான சட்டப் பிரச்னை தொடர்பான இலக்கிய

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

அரவிந்தன்

சமீபத்தில் தமிழ் இலக்கிய உலகில் ஒரு விவாதம் நடந்து வருகிறது. உண்மையில் இதை ஒரு விவாதம் என்று சொல்வதே தவறு. ஒரு சட்டப் பிரச்னை சந்திக்கு இழுக்கப்பட்ட கதை என்று சொல்லலாம். உணர்ச்சிகரமான கோஷங்களை முன்வைத்து மெய்யான பிரச்னைகளின் கூர்மையை மழுங்கடிக்க முயலும் மலிவான அரசியல் தந்திரம் இலக்கிய வட்டத்திற்குள் ஊடுருவி இருப்பதன் உதாரணம் என்றும் சொல்லலாம்.

நவீன தமிழ் எழுத்தளர்களின் முன்னோடிகளில் ஒருவரும் தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான புதுமைப்பித்தனின் படைப்புகளின் காப்புரிமை வெளியீட்டு உரிமை ஆகியவை தொடர்பாக நடைபெற்று வரும் சட்டப் பிரச்னைதான் இந்த விவாதத்தின் வேர். இதை ஒட்டி, புதுமைப்பித்தன் யாருக்கு சொந்தம், புதுமைப்பித்தன் தமிழ்ச் சொத்தா தனிச் சொத்தா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. துண்டுப் பிரசுரங்களிலும் கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் இந்தக் கேள்விகளை ஒட்டிய வாதப்பிரதிவாதங்கள் அனல் பறக்கின்றன. புதுமைப்பித்தனின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தின் பின்னணியைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

காப்புரிமைப் பிரச்னை

புதுமைப்பித்தன் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து ‘கண்மணி கமலாவுக்கு ‘ என்ற பெயரில் கவிஞர் இளையபாரதி 1994இல் சாந்தி பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டார். தமிழ் வளர்ச்சித் துறையின் அரிய புத்தகங்கள் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பகுதி நிதி உதவியுடன் இப்புத்தகம் வெளியானது. இக்கடிதங்களைப் புத்தகமாக வெளியிடும் உரிமையைப் புதுமைப்பித்தன் மனைவி திருமதி கமலா விருத்தாசலம் இளையபாரதிக்கு அளித்திருந்தார். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பிய கடிதம் மூலம் அவர் இந்த அனுமதியை அளித்திருந்தார்.

1998இல் புதுமைப்பித்தன் படைப்புகள் அனத்தையும் வெளியிடும் உரிமையை அவரது சட்டபூர்வமான ஒரே வாரிசுதாரரான அவரது புதல்வி தினகரி சொக்கலிங்கத்திடமிருந்து காலச்சுவடு பதிப்பகம் பெற்றது (பு.பியின் மனைவி 199….இல் மறைந்து விட்டார்).1998 இறுதியில் அதுவரை வெளிவராத புதுமைப்பித்தனின் படைப்புகளைக் கொண்ட ‘அன்னை இட்ட தீ ‘ என்ற நூலைக் காலச்சுவடு வெளியிட்டது. அதுவரை புத்தகமாக வெளிவந்திராத பு.பியின் படைப்புகளை சேகரித்த ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடசலபதி அந்த நூலைத் தொகுத்தளித்தார். தொடர்ந்து பு.பியின் நூல்களைப் பிழைகள் அற்ற முறையில் சிறந்த முறையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவிருக்கிறது என்ற அறிவிப்பும் அந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தது. புதுமைப்பித்தனின் எல்லாப் படைப்புகளையும் வெளியிடுவதற்கான சட்டரீதியான உரிமையைக் காலச்சுவடு பெற்றிருக்கும் தகவலும் அன்னை இட்ட தீ முன்னுரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதையடுத்து 2000ஆவது ஆண்டில் புதுமைப்பித்தன் கதைகள் என்ற தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டது. காலவரிசைப்படி அமைந்த செம்பதிப்பாக அது இருந்தது. கதைகளின் பிரசுர விவரங்களும் பு.பியின் படைப்புகளின் பாட பேதங்கள் குறித்த சர்ச்சைகளுக்கான ஆதாரபூர்வமான விளக்கங்களும் அதில் அளிக்கப்பட்டிருந்தன. இந்த நூலுக்கும் தொகுப்பாசிரியர் வேங்கடசலபதிதான். தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள் ஆகியோர் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் இத்தொகுப்பு பெற்றது. வெளிவந்த ஓராண்டிற்குள் இரண்டாம் பதிப்பு வெளியிடுமளவிற்கு இது வரவேற்பைப் பெற்றது.

இதற்கிடையில் புதுமைப்பித்தன் பதிப்பகம் என்ற பதிப்பகம் சென்னை அசோக் நகரில் உள்ள சந்தியா நடராஜன் என்பவரை உரிமையாளராகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. உரிமையாளர் சந்தியா நடராஜன் என்றாலும் இதன் சூத்ரதாரி இளயபாரதிதான் என்பது வெளிப்படையான விஷயம். புதுமைப்பித்தன் பதிப்பகம் சார்பில் இளையபாரதி கண்மணி கமலாவுக்கு என்ற நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். அது தொடர்பான விளம்பரத்தைக் காலச்சுவடில் வெளியிடுவதற்காக அனுப்பினார். அந்த விளம்பரத்தை வெளியிட மறுத்த காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன், புதுமைப்பித்தனின் கடிதங்கள் உள்பட அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து வெளியிடும் உரிமைமயைப் புதுமைப்பித்தனின் ஒரே வாரிசான தினகரி சொக்கலிங்கம் அவர்களிடமிருந்து காலச்சுவடு பதிப்பகம் பெற்றிருப்பதால் கண்மணி கமலாவுக்கு என்ற நூலைப் பிரசுரிக்க வேண்டாம் என்று இளையபாரதியைக் கேட்டுக்கொண்டார். இது சம்பந்தமாக தினகரிக்கும் தகவல் தெரிவித்தது. தன் தந்தையின் படைப்புகளைப் பிரசுரிக்கும் உரிமையைக் காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே கொடுத்துள்ளதாகவும் எனவே கண்மணி கமலாவுக்கு நூலைப் பிரசுரிக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு தினகரி புதுமைப்பித்தன் பதிப்பகத்திற்குக் கடிதம் எழுதினார்.

அதற்கு எதிர்வினையாக சந்தியா நடராஜனின் சார்பில் அவரது வக்கீல் எஸ். செந்தில்நாதனிடமிருந்து காலச்சுவடு பதிப்பகத்திற்கு வக்கில் நோட்டாஸ் வந்தது. புதுமைப்பித்தனின் படைப்புகளை வெளியிடும் முழு உரிமையைக் காலச்சுவடு பெற்றிருப்பது தன் கட்சிக்காரருக்குத் தெரியாது என்றும் ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலில் உள்ள கடிதங்களை வெளியிட புதுமைப்பித்தனின் காலம்சென்ற மனைவியிடமிருந்து இளையபாரதி உரிமை பெற்றிருப்பதாகவும் அந்த உரிமை ரத்து செய்யப்படாத காரணத்தால் அந்த நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிடும் உரிமை இளையபாரதிக்கு இருப்பதாகவும் அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டது. எனவே காலச்சுவடு இனி வெளியிடும் தொகுப்புகளில் அந்தக் கடிதங்களை சேர்க்கக் கூடாது என்றும் அந்த நோட்டாஸ் கூறியது. இந்த நோட்டாஸின் நகலை தினரிக்கு அனுப்பியது. அதில் உள்ள தவறான பல தகவல்களால் சீண்டப்பட்ட தினகரி சொக்கலிங்கம் கண்மணி கமலாவுக்கு நூலை இளையபாரதி வெளியிடுவதற்கும் புதுமைப்பித்தன் பெயரில் பதிப்பகம் நடத்துவதற்கும் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறார். வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் முறைமை கருதி காலச்சுவடு சார்பில் பதில் நோட்டாஸ் அனுப்பப்பட்டது.

விவகாரம் முற்றியது எப்படி

இதற்கிடையில் ஏப்ரல் இறுதியில் புதுமைப்பித்தன் வாசகர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் (இதன் அமைப்பாளர்கள் யார் என்று தெரியவில்லை. புதுமைப்பித்தன் பதிப்பக முகவரியில்தான் இதன் அலுவலகமும் இருக்கிறது) சென்னையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் செந்தில்நாதன், பேராசிரியர்கள் வீ. அரசு, அ. மார்க்ஸ், இன்குலாப், விக்ரமாதித்யன், அப்துல் ரகுமான் போன்ற கவிஞர்கள் உள்படப் பலர் இந்தக் கூட்டதில் கலந்துகொண்டு காலச்சுவடு சம்பந்தப்பட்டவர்களைக் கடுமையாக விமர்சித்தார்கள். புதுமைப்பித்தன் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தினகரியின் அட்சேபம் எல்லோராலும் விமர்சிக்கப்பட்டது. தினகரியைக் கேடயமாக வைத்து புதுமைப்பித்தனைத் தன் ஏகபோக சொத்தாக மாற்றக் காலச்சுவடு முயல்கிறது என்ற குரல் பலமாக வெளிப்பட்டது. பு.பியின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்பதற்காகப் போராட வேண்டும் என்றும் குரல் கொடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாகக் காலச்சுவடு தன் நிலையை விளக்கி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இதற்கு பதிலடியாக இளையபாரதி தரப்பு குறைந்தது மூன்று துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டது. இவற்றைப் பின்னர் தொகுத்து ‘புதுமைப்பித்தன் தமிழ்ச் சொத்தா தனிச் சொத்தா ‘ என ஒரே துண்டுப் பிரசுரமாக பலருக்கும் அஞ்சல் வழி அனுப்பப்பட்டது. அனுப்புநர் முகவரி இருக்கவில்லை. மையக் கட்டுரையை எழுதியவர் பெயர் இல்லை. சட்டத்திற்கு விரோதமாக அச்சிட்ட விபரமும் கொடுக்கப்படவில்லை. எனவே இதை ஒரு துண்டுப் பிரசுரம் என்பதைவிட அச்சிட்ட மொட்டைக் கடுதாசி எனக் கருதுவதே சரியானது.

பு.பி. படைப்புகளின் முழு வெளியீட்டு உரிமையைக் காலச்சுவடு பதிப்பகம் சட்டப்படி பெற்றிருக்கும் நிலயில் பு.பியின் கடிதங்களை இளயபாரதி வெளியிடலாமா கூடாதா என்பதுதான் இந்தப் பிரச்னையின் மையம். பிரச்னை நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்புக்குக் காத்திருப்பதுதான் முறை. மேலும் காப்புரிமை, வெளியீட்டுரிமை போன்றவை தொடர்பான சட்டச் சிக்கல்கள் இதில் இருப்பதால் இது பற்றிய விளக்கத்தை நீதிமன்றம்தான் அளிக்கவேண்டும். தீர்ப்பினால் பதிக்கப்பட்டவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்பிருக்கிறது என்றாலும் இரு தரப்ப்னரும் சமரசத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், இது சட்டத்தின் அடிப்படையில் சட்டரீதியான ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டிய பிரச்னை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியானால் ஒரு சட்ட விவகாரத்தை வைத்து ‘இலக்கிய விவாதம் ‘ நடத்தவேண்டிய அவசியம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகிறது. புதுமைப்பித்தன் வாசகர் பேரவை நடத்திய கூட்டத்திலும் பத்திரிகைகள்/இணைய இதழ்கள் ஆகியவற்றில் அளித்த பேட்டிகளிலும் இளையபாரதி தரப்பினர் பிரதானப்படுத்தும் இரண்டு அம்சங்களில் இதற்கான விடை இருக்கிறது. ஒன்று பு.பியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்ற தினகரியின் ஆட்சேபம். இரண்டாவது, ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலின் இரண்டாவது பதிப்பைப் புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்டது சட்ட விரோதமானது என்று கூறி, அந்தப் புத்தகங்களை ‘சந்தையிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு அழித்து விடவேண்டும் ‘ என்று காலச்சுவடு சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டாஸில் காணப்படும் வாசகம். இவை இரண்டையும் சுட்டிக்காட்டி காலச்சுவடின் ‘சர்வாதிகாரப் ‘ போக்கையும் ‘புதுமைப்பித்தனைத் தனிச் சொத்தாக முடக்கும் ‘ முயற்சிகளையும் இளையபாரதி தரப்பினர் கண்டிக்கிறார்கள். கூடத்தில் பேசிய பலரும் இந்த இரண்டு அம்சங்களையும் குறிப்பிட்டு காலச்சுவடு தரப்பினரை மிகக் கடுமையாகவும் நாகரிக எல்லைகளைக் கடந்தும் விமர்சித்தார்கள். புதுமைப்பித்தனைக் காலச்சுவடு கும்பலிடமிருந்து மீட்கவேண்டும் என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டார்கள். இந்நிலையில் இந்த உணர்ச்சிகளின் பின்னணி, பெறுமானம் ஆகியவற்றைப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

ஆவேசங்களுக்குப் பின்னால்…

இளையபாரதி தன் பதிப்பகத்திற்குப் புதுமைப்பித்தன் பெயரை வைப்பதை ஆட்சேபிப்பது புதுமைப்பித்தனின் ஒரே வாரிசான தினகரி சொக்கலிங்கம். புதுமைப்பித்தன் நூற்றாண்டு இன்னும் நான்கு ஆண்டுகளில் வருகிறது. அதையொட்டி அவர் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவத் திட்டமிட்டிருப்பதால் அவர் பெயரைப் பதிப்பகத்திற்கு வைப்பதை ஆட்சேபிக்கிறோம் என்பது பு.பி. குடும்பத்தினரின் வாதம். பு.பியின் பெயரை வைத்ததற்காக அவர்கள் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும் என்று கூறும் அப்துல் ரகுமான், இனிமேல் துவக்கப்படும் எல்லா நிறுவனங்களுக்கும் புதுமைப்பித்தன் என்றே பெயரிடுங்கள் என்று அறைகூவல் விடுக்கிறார். தினகரியின் ஆட்சேபம் சட்டரீதியாகச் செல்லுமா என்பதை நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். ஆனால் எந்தப் பின்னணியில் தினகரியின் ஆட்சேபம் எழுந்தது என்பதைப் பார்க்க வேண்டும். பு.பியின் பெயரில் இலக்கிய விருது ஏதேனும் அறிவிக்கப்பட்டிருந்தால் அதை நினைத்து சந்தோஷப்பட்டிருக்கலாம். ஆனால் இளையபாரதி (அல்லது அவர் நண்பரின் பதிப்பகம்) பு.பியின் பெயரை வியாபாரத்திற்காகப் பயன்படுத்தும் போது அதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க, பு.பியின் எழுத்தைப் பிரசுரித்த இளயபாரதி அதற்கான ராயல்டி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார், நூலை மறு பதிப்பு செயும்போது எப்படி நடந்துகொண்டார் என்பதையும் பார்க்கவேண்டும். 1994இல் இளையபாரதி திருமதி கமலா விருத்தாசலத்திடம் ‘கண்மணி கமலாவுக்கு ‘ நூலை வெளியிட அனுமதி பெற்றார். அதற்குரிய ராயல்டி தொகையாக திருமதி கமலாவிடம் 3500 ரூபாய் தந்திருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அப்படி எதுவும் தரவில்லை என்று புதுமைப்பித்தன் குடும்பத்தினர் கூறுகிறார்கள். அது மட்டுமல்ல. அவர் புத்தகமாக வெளியிட்ட கடிதங்களில் சிலவற்றை அவர் பணியாற்றி வந்த சுபமங்களா இதழும் வெளியிட்டது. அந்த இதழின் சார்பில் கமலாவுக்கு சன்மானமாகக் கொடுத்த பணத்தைக் காசோலையாக அல்லாமல் ரொக்கமாக இளையபாரதி கையெழுத்துப் போட்டுப் பணம் பெற்றுக்கொண்டதாகவும் பு.பியின் மருமகன் சொக்கலிங்கம் தினமணி கதிர் வார இதழுக்கு எழுதிய கடிதத்தில் (03.06.01) குறிப்பிட்டிருக்கிறார்.

கண்மணி கமலாவுக்கு நூலின் இரண்டாம் பதிப்பு வெளியிட்ட போதும் இளையபாரதி ராயல்டி தொகை எதையும் தரவில்லை. காப்புரிமைப் பிரச்னை எழுந்த பிறகு தினகரிக்கு 5000 ரூபாய் ரயல்டி தொகையை இளையபாரதி அனுப்பியிருக்கிறார். தினகரி அதை ஏற்க மறுத்துத் திருப்பி அனுப்பிவிட்டார். தவிர இரண்டாம் பதிப்பு வெளியிடுவதற்கு முன்பு அது பற்றி இளையபாரதி எங்களிடம் நேரில் பேசியிருந்தால் இந்தச் சர்ச்சையைத் தவிர்த்திருக்கலாம் என்று தினகரி தினமணி கதிருக்கு (20.05.01 தேதியிட்ட இதழ்) அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். ஆக, பு.பியின் எழுத்துக்களை மறு பதிப்பு செய்வதற்கு முன்பு அவரது சட்டரீதியான வாரிசுதாரரிடம் அதைத் தெரிவிக்கவேண்டும் என்ற நாகரிகத்தைக் கூட இளையபாரதி கடைபிடிக்கவில்லை. திருமதி கமலாவிடமிருந்து அந்தக் கடிதங்களை எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பிரசுரிப்பதற்கான உரிமையை இளையபாரதி பெற்றிருந்தாலும் கூட, ஒவ்வொரு பதிப்பின் போதும் பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரருக்கு ராயல்டி தர வேண்டிய கடமை சட்டப்படி அவருக்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டபூர்வமான வாரிசுதாரருக்குத் தெரிவிக்காமலேயே புத்தகத்தை வெளியிட்டுவிட்டு, ஆட்சேபம் எழுந்த பிறகு ராயல்டி அனுப்புவது என்ன நியாயம் ? காலச்சுவடு பதிப்பகத்திற்கு புபியின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடுவதற்கான முழு உரிமையையும் அளித்துள்ள பு.பி குடும்பத்தினர், முறையான அனுமதி பெற்று, முறையாக ராயல்டி தரும் காலச்சுவடுக்குக் கூடப் பு.பியின் பெயரைப் பயன்படுத்த அனுமதி தர மாட்டோம் என்று கூறியிருக்கிறார் (குமுதம் 17.05.2001). அப்படியிருக்க, தங்களிடம் சொல்லாமலேயே புபியின் எழுத்துக்களை வெளியிட்டு, பிரச்னை கிளம்பிய பிறகு ராயல்டி தர முன்வரும் ஒரு நபர் பு.பியின் பெயரை வியாபாரத்திற்காகப் பயன்படுத்துவதை எதிர்ப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது ?

இது தவிர, திருமதி கமலாவிடமிருந்து அந்தக் கடிதங்களைப் பிரசுரிப்பதற்கான உரிமையை இளையபாரதி பெற்றுவிட்டதால் அவற்றை மறு பதிப்பு செய்துகொள்ளும் உரிமை அவருக்கு இருக்கிறது என்று இளையபாரதி தரப்பு கூறுகிறது. ‘… கடிதங்களைத் தொகுத்து வெளியிடும் உரிமையை திரு. இளையபாரதி அவர்களுக்கு வழங்குகிறேன் ‘ என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கு எழுதிய 1994, நவம்பர் 11அம் தேதியிட்ட கடிததில் திருமதி கமலா குறிப்பிட்டிருப்பது உண்மைதான். ஆனால் அதே ஆண்டில் திருமதி கமலாவின் அனுமதியுடன் பு.பியின் படைப்புகளை எல்லாம் பிழையின்றி சிறப்பாக வெளியிடும் முயற்சியைக் காலச்சுவடு துவங்கியது என்று கண்ணன் குறிப்பிடுகிறார். பிறகு பு.பியின் படைப்புகள் அனைத்தையும் வெளியிடும் உரிமையை 1998இல் புபியின் புதல்வியும் அவரது ஒரே சட்ட பூர்வமான வாரிசுதாரருமான தினகரியிடமிருந்து காலச்சுவடு பெற்றது (திருமதி கமலா அப்போது உயிருடன் இல்லை). இதன் பிறகு 1994இல் இளையபாரதி பெற்ற உரிமை காப்புரிமை சட்டப்படி தானாகவே காலாவதி ஆகிறது என்பது காலச்சுவடின் வாதம். பு.பியின் மனைவியிடமிருந்து தான் பெற்ற உரிமை என்றென்றும் தனக்கு உரியது என்று இளயபாரதி நினைத்தால் அதை அவர் சட்டப்படி போராடி நிறுவிக்கொள்வதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. ஆனால் அதைவிட்டுவிட்டு பு.பி. யாருக்கு சொந்தம், காலச்சுவடு பு.பியை ஏகபோக உரிமை கொண்டாடலாமா என்றெல்லாம் கூட்டம் போட்டு கோஷம் எழுப்புவதில் அர்த்தமில்லை. ராயல்டி விஷயதிலும் பதிப்பை வெளியிடும் தகவலைப் பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரருக்குத் தகவல் தெரிவிக்கும் விஷயத்திலும் இவ்வளவு அநாகரிகமாக நடந்துகொள்பவர் பிரச்னையை திசை திருப்பவே இப்படி செய்கிறார் என்ற சந்தேகத்தைத்தான் இது ஏற்படுத்துகிறது.

அது போலவே, இளையபாரதி வெளியிட்ட இரண்டாம் பதிப்பு சட்டப்படி செல்லாது என்று கூறும் காலச்சுவடு, இளையபாரதியின் வக்கீல் அனுப்பிய நோட்டாஸுக்கு அனுப்பிய பதில் நோட்டாஸில் ‘புத்தகங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவற்றை அழித்துவிட வேண்டும் (… withdraw the books from the market and destroy them) ‘ என்று குறிப்பிட்டுள்ளது. இதுவும் உணர்ச்சிகரமாக எதிர்கொள்ளப்படுகிறது. உரிமை பெறாமல் நூலை வெளியிடும்போது சட்டரீதியாக இப்படித்தான் கோரிக்கை வைக்க முடியும் என்று தினமணி கதிருக்கு (20.05.01) அளித்துள்ள பேட்டியில் கண்ணன் கூறியிருக்கிறார். உற்பத்தி செய்யப்பட்ட ஒரு பொருள் சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது என்ற பட்சத்தில் அந்தப் பொருளை சந்தையிலிருந்து திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்டத்தின் தீர்ப்பாக இருக்க முடியும். ஆனது ஆயிற்று இதை மட்டும் விற்றுக்கொள்கிறேன் என்பது சட்டப்படி செல்லுபடி ஆகாது. காப்புரிமை சட்டத்தை மீறி வெளியிடப்படும் எந்தப் பொருளுக்கும் இது பொருந்தும். ‘பெருந்தன்மையோடு ‘ காலச்சுவடு இதை அனுமதித்தால் மேலும் பலர் புபியின் படைப்புகளின் பல்வேறு பகுதிகளைத் தனித்தனியே வெளியிட்டு விற்பனை செய்ய முனையக்கூடும். அப்படி நடக்கும் பட்சத்தில் பு.பியின் மொத்த எழுத்துக்களையும் வெளியிடும் உரிமையை அதற்குரிய தொகையைக் கொடுத்து காலச்சுவடு பெற்றதில் எந்த அர்த்தமும் இருக்காது. காலச்சுவடு பதிப்பகத்தினரும் சலபதியும் பல ஆண்டு கால உழைப்பை செலவிட்டு பு.பியின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடி எடுத்து, அவரது அனைத்துப் படைப்புகளையும் பிழைகள் இல்லாதவண்ணம் பல பிரதிகளுடனும் சரி பார்த்து, பல ஆய்வாளர்களைக் கலந்தாலோசித்து, உரிய தகவல்களுடனும் ஆதாரங்களுடனும் செம்மையாகப் பதிப்பித்து வருவதில் எந்த அர்த்தமும் இருக்காது. தவிர, சட்டமும் அதை ஒப்புக்கொள்ளாது. உதாரணமாக, புபியின் படைப்புக்களை இதற்கு முன்பு இரண்டு பெரிய தொகுதிகளாக வெளியிட்ட ஐந்திணைப் பதிப்பகம் கூட இப்போது – காலச்சுவடு பு.பியின் படைப்புகளை வெளியிடும் முழு உரிமையைப் பெற்ற பிறகு – வெளியிட முடியாது. அப்படி இருக்க, முன்பு பெற்ற உரிமையை வைத்துக்கொண்டு இளையபாரதி இப்போது வெளியிடுவதை முழு வெளியீட்டுரிமை பெற்ற காலச்சுவடும் அதை அந்தப் பதிப்பகத்திற்கு அளித்த பு.பியின் சட்டபூர்வமான வாரிசுதாரரும் ஆட்சேபிப்பதில் என்ன தவறு ? இளையபாரதி இதை சட்டப்படி எதிர்கொண்டு தீர்வு காணலாம் அல்லது சமரசம் செய்துகொள்ளலாம். இரண்டையும் விட்டுவிட்டு காலச்சுவடின் மீது பல காரணங்களுக்காக விரோதம் பாராட்டிக்கொண்டிருப்பவர்களையெல்லாம் அழைத்து கூட்டம் போட்டு கோஷம் எழுப்புவதில் அர்த்தம் இல்லை.

உச்சகட்ட அநாகரிகம்

உணர்ச்சிகரமான கோஷங்கள் பிரச்னையை எந்த அளவுக்கு மலினப்படுத்தி திசை திருப்பிவிடும் என்பதற்கு புதுமைப்பித்தன் வாசகர் பேரவை நடத்திய கூட்டமே அத்தாட்சி. இது வரையிலும் பு.பியைக் கடுமையாகத் தூற்றியும் விமர்சித்தும் வந்த பலர் அன்றைக்குப் பு.பியின் படைப்புகள் காலச்சுவடின் தனிச்சொத்தாகிவிட்டதே என்று முதலைக் கண்ணீர் வடித்தார்கள். பு.பியை மக்களுக்கன இலக்கியம் படைக்கதவர் என்று சொல்லி அலட்சியப்படுத்திவந்த ‘முற்போக்கு ‘ எழுத்தாளர்கள் அவரது படைப்புகள் மக்கள் சொத்து என்று குரல் கொடுத்தார்கள். காலச்சுவடு சார்ந்த நபர்கள் மீது தனக்கிருக்கும் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிக்கான வடிகாலாக இந்தக் கூட்டத்தைப் பேராசிரியர் வீ. அரசு பயன்படுத்திக்கொண்டார். ‘கண்ணன் ஒரு பொடிப்பயல் ‘, ‘சலபதி குள்ளப்பயல் ‘, ‘சலபதி ஒரு திருடன் ‘ என்றெல்லாம் நாலாந்தர மேடைப் பேச்சாளர் போல பேராசிரியர் முழங்கினார். பு.பியின் படைப்புக்களில் அவரது சாதிய, மத உணர்வுகள் மண்டிக்கிடப்பதாக சொல்லிவரும் பேராசிரியர் அ. மார்க்ஸ், பு.பியின் படைப்புகளைக் காலச்சுவடின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் என்று கூறினார். காலச்சுவடு மீதும் சுந்தர ராமசாமி, கண்ணன், மனுஷ்ய புத்திரன், ஆகியோர் மீதும் ஆதாரமற்ற அவதூறுகளையும் பேராசிரியர் சுமத்தினார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கவிதை நூல் ஒன்றின் ஆசிரியர் வைத்துக்கொண்டிருக்கும் புனைப்பெயரில் கூட (சல்மா) அரசியல் நோக்கம் கண்டுபிடித்து இழிவுபடுத்தினார். பு.பியின் மருமகன் சொக்கலிங்கம் கூட்டத்திற்கு வந்திருந்தார். கூட்டத்தின் நடுவே ஒரு முறை அவர் எழுந்து ஏதோ சொல்ல முயன்ற போது அவர் பேச அனுமதிக்கப்படவில்லை. மார்க்ஸும் அரசுவும் மற்றவர்களும் போட்ட சத்தத்தில் இந்தப் பிரச்னையில் சட்டம் காலச்சுவடின் பக்கம்தான் இருக்கிறது; இளையபாரதி விட்டுக்கொடுத்து விடுவதுதான் முறையானது என்று இன்குலாப் சொன்னது யார் கவனத்திற்கும் வராமல் போனது. கூட்டத்தில் பேசிய பலரும் இந்தப் பிரச்னையை சாக்காக வைத்து காலச்சுவடு மற்றும் அதைச் சார்ந்தவர்கள் மீது தங்களுக்கிருக்கும் கடுப்பையெல்லாம் கொட்டித் தீர்த்துக்கொண்டார்கள். ஒவ்வொருவரும் பேசிய விதம், அவர்களுடைய ஆவேசம், நாடகத் தன்மை ஆகியவற்றையெல்லாம் பார்த்த போது பு.பியின் 96ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கு என்ற பெயரில் அங்கே தமிழக அரசியல் மேடைக் கூத்து ஒன்று அரங்கேறியது என்றுதான் சொல்லவேண்டும். பத்திரிகையாள நண்பர் ஒருவர் என்னிடம் கூறிய ஒரு வாசகம் இந்தக் கூட்டத்தின் தன்மையையும் தகுதியையும் கச்சிதமாக விளக்கும்: ‘கூட்டம் முடியறப்ப போடுங்கம்மா ஓட்டுனு சொல்லுவாங்களோ ? ‘.

ஆக, காப்புரிமை, பதிப்புரிமை, வெளியீட்டுரிமை, ராயல்டி ஆகியவை தொடர்பான சட்டப் பிரச்னை உணர்ச்சிகரமான பிரச்னையாக மாற்றப்பட்டிருக்கிறது. பு.பியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் வலுவாக எழுப்பப்படுகிறது. நாட்டுடமையாக்கும் முயற்சிகளைக் காலச்சுவடு எதிர்க்காது என்கிறார் கண்ணன். சட்டப்படி அவர்களால் எதிர்க்கவும் முடியாது. பு.பியின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டுமானால் பு.பியின் சட்ட்டபூர்வமான வாரிசுதாரரை முறைப்படி அணுகவேண்டுமே தவிர, கூட்டம் போட்டுக் காலச்சுவடைத் திட்டவேண்டிய அவசியம் இல்லை. அவர் எழுத்துக்கள் பரவலாக வாசகர்களைச் சென்றடையவேண்டும் என்ற ஆசையில் இவர்கள் யாரும் இந்தக் கோரிக்கையை எழுப்புவதாகத் தெரியவில்லை. அந்த அக்கறை இருந்தால் பு.பி இறந்து இத்தனை ஆண்டுகள் இதற்காக ஒரு முறை கூட வலுவாகக் குரல் கொடுக்காமல் காப்புரிமைச் சிக்கல் எழும் நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? தவிர, இப்படிக் குரல் கொடுக்கும் பலர் பு.பியை மக்களுக்கான எழுத்தாளராகவே ஒப்புக்கொண்டதில்லை என்பதையும் மறந்து விடாமல் இதைப் பார்க்கும் போது அவர்களுக்கு இப்போது பீறிட்டெழுவது புதுமைப்பித்தன் மீதான அபிமானமா அல்லது காலச்சுவடின் மீதான காழ்ப்புணர்ச்சியா என்பது தெளிவாகும். மெய்யான விவாதங்களில் ஈடுபடுவதற்கான அக்கறையும் உழைப்பும் கொண்டவர்கள் அதிகம் இல்லாத தமிழ்ச் சூழலில் இது போன்ற போலி விவாதங்களும் போலி உணர்ச்சிகளும் போலி ஆவேசங்களும் தவிக்க முடியாதவை என்ற கசப்பான யதார்த்தம் இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. கசப்பான யதார்த்தத்தை ஈவிரக்கமின்றித் தோலுரித்துக் காட்டிய ஒரு கலைஞனின் பெயரால் இது வெளிப்படுவது ஒரு விதத்தில் பொருத்தமானது என்றுதான் சொல்லவேண்டும்.

எழுத்தாளர் இராசேந்திர சோழன் ‘தமிழர் கண்ணோட்டம் ‘ இதழில் எழுதியிருப்பதை மேற்கோள் காட்டுவதுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன்:

‘ஒரு பிரச்சினையில் மறுக்கப்பட்ட சனநாயக உரிமை மீட்பு ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு என்கிற நோக்கில் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பது என்பது வேறு, வந்துள்ள பிரச்சினையின் நியாய அநியாயங்கள் பற்றிக் கவலைப்படாமல இதற்கு முந்தைய வெவ்வேறு பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு அவைகளைக் காரணமாக முன்வைத்து அந்த நோக்கிலேயே எதிர்ப்புத் தெரிவித்து வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்குவது வேறு. . .

‘படைப்பாளனையும் அவர்களது குடும்பத்தாரையும் சுரண்டி அவர்களது உரிமைகளைக் கைப்பற்றி புதுமைப்பித்தன் படைப்புகளுக்கு வாரிசு ஆக முனையும் இளையபாரதியின் நாணயமற்ற நடிவடிக்கைகளும் மோசடி நோக்கமும் கண்டிக்கப்பட வேண்டும். அதைவிட்டு ஒரு தலைபட்சமாக மட்டுமே குரலெழுப்புவது நியாயத்தை நிலை நாட்டாது நீதியைப் பாதுகாக்காது. இது பிரச்சினையில் நியாய அநியாயங்களை மறுத்து, அதைக் குழி தோண்டிப் புதைத்து, கும்பலாகச் சேர்ந்து கொண்டால் போதும், எதையும் நியாயப்படுத்தி விடலாம் என்கிற நடப்பு அரசியல் போக்கையொத்த சூழலையே இலக்கிய உலகிலும் உருவாக்கும். இது தமிழ் இலக்கியத்திற்கும் நல்லதல்ல. தமிழ்ச் சமூகத்தின் நலனுக்கும் உகந்ததாகாது. ‘

***

Series Navigation