போட்டோ

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

எஸ் ஜெயலட்சுமி


ஊரிலிருந்து தம்பி தங்கை குழந்தைகளுடன் வந்திருந்ததால் வீடே கலகலப்பாக இருந்தது.எல்லோரும் சேர்ந்து சோழி பல்லாங்குழி,தாயக்கட்டம் ஆடுபுலி ஆட்டம்,பாம்பும் ஏணியும் என்று இஷ்டம் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.”இதென்னடா இந்த கிராமாந்தர விளையாட்டுக்களையெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறீர்களே” என்றால்”ஆமாம், பெரியம்மா,எங்க ஊர்லதான் கேரம், செஸ், சீட்டு , டிரேட், அப்படீன்னு எத்தனையோ கேம்ஸெல்லாம் இருக்கே.இந்த கேம்ஸெல்லாம் அங்க ஒருத்தருக்கும்
தெரியாது.இது எங்களுக்குப் புதுசாயிருக்கு.” என்பார்கள்.

ஆத்தங்கரையில் போய் குளிக்க அவர்களுக்கு ரொம்ப ஆசை.”அத்தை எங்களுக்கு நீச்சல் கத்துக்குடுங்களேன்.ப்ளீஸ்”என்பார்கள்.பத்மா இரண்டு கைகளையும் நீட்டி அவர்களை குப்புறப் படுக்கச் செய்து கால்களை கொட்டச் சொல்லி கற்றுக் கொடுப்பாள்.அவர்கள் பயத்தில் கழுத்தையும் இடுப்பையும் இறுகக் கட்டிக் கொள்வார்கள்.”நீங்க இப்படி பயப் படறேளே ஒங்கப்பா சங்கர் இந்த ஆத்தங்கரையில
கொஞ்சமாவா லூட்டி அடிச்சிருக்கான்” என்று சொன்னதும் ”எப்படி லூட்டி அடிச்சார்”? என்று கதை கேட்பது போல் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.அவளும் ரொம்ப சுவாரசியமாகச் சொல்லுவாள்.உயரேயிருந்து ஓடிவந்து படித்துறையில் எப்படிக் குதித்து நீச்சல் அடிப்பான் என்று சொல்லும்போது கண்கள் விரிய ஆச்சரியமாகக் கேட்பார்கள்.மல்லாக்காகப் படுத்துக் கொண்டு நீச்சல் அடிக்கமுடியும் என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. ஒரு நாள் பெட்டியைத் திறந்தபோது ஆல்பங்களைப் பார்த்து விட்டார்கள்.”ஐயா, கல்யாண ஆல்பம் என்று சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.”ஐ….. இது பெரியமாமா ஆல்பம் என்று பத்மாவின் பெரிய அண்னாவின் ஆல்பம் பார்க்க ஆரம்பித்தார்கள்.அதில் இருப்பவர்களைத் தங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயற்சி செய்தார்கள்.இது தாத்தா,பாட்டி,இது மாமாதாத்தா,
இது அத்தைப் பாட்டி,இது எங்கம்மா இது எங்கப்பா,” என்று ஒரே கும்மாளம்.அடுத்ததாக சின்ன மாமா ஆல்பம்.அந்த ஆல்பத்தில் இருந்தவர்களுக்கும் இந்த ஆல்பத்தில் இருப்பவர்களுக்கும் என்னென்ன வித்தியாசம்,அதில் மீசை இல்லை இதில இருக்கு.அதில பாவாடை சட்டை இதில புடவை,தாவணி அதில டிராயர் இதில பேண்ட் இப்படி ஒரு விளையாட்டு!

அதன் பின் அவரவர்களுடைய அம்மா,அப்பா ஆல்பங்களைப் பார்த்ததும் ஒரே குஷி!”இதோ பார் அம்மா மடிசார் கட்டிண்டிருக்கா.இதுல பாரு எங்கப்பா காசியாத்திரை போறார்.இதுல நலுங்கு உருட்டறா.இங்கபாரு தாத்தா மடில அம்மாஒக்காந்துண்டிருக்கா.
அப்பா தாலி கட்டறார்.”ஒரு வழியாக கூச்சலும் கும்மாளமுமாக அந்த ஆல்பங்களை உண்டு இல்லை என்று புகுந்து விளையாடினார்கள்.

திடீரென்று ஸ்யாம்”பெரியம்மா,ஒங்க ஆல்பம் எங்க? காட்டுங்கோ” என்றான்.அதுவரை குழந்தைகளோடு குழந்தையாகக் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த பத்மாவின் முகம் வாடி விட்டது.”அத்தை,ஒங்க ஆல்பம் காட்டுங்கோ” என்று விடாப்பிடியாக வற்புறுத்தினார்கள். .”என்னோட ஆல்பம் இல்லை’.”சரி கல்யாண போட்டோவையாவது காட்டுங்கோ”.”என் கல்யாணத்தில போட்டோ எடுக்கலை” குரல் கம்மியிருந்தது.”என்ன பெரியம்மா ஒரு போட்டோ கூடவா எடுக்கல? அவர்களால் நம்ப முடியவில்லை.”அப்ப ஒங்களுக்கு எத்தன வயசு? போட்டோ எடுக்கணும்னு நீங்க சொல்லலியா? பத்மாவின் முகம் போன
போக்கைப் பார்த்தால் அழுது விடுவாள் போலிருந்தது. அதைப் பார்த்த கல்யாணியும் சங்கரனும் குழந்தைகளை ”வாசலில் போய் விளையாடுங்கள்”என்று விரட்டி விட்டார்கள்.பத்மா அந்த ஆல்பங்களையே பார்த்தவாறு இடிந்துபோய் உட்கார்ந்திருந்தாள்

பத்மாவின் கல்யாணம் நிச்சயிக்கப் பட்டு நேராக 20வது நாளில் முகூர்த்தம் வைத்து விட்டார்கள்.தடபுடலாக வேலை கள் நடக்க ஆரம்பித்தன.நாலு வீடுகளை அடைத்துப் பந்தல்!தெருவிலிருந்த பாதி வீடுகளிலும் பத்மாவின் உறவினர்கள் தங்கிக்கொண்டார்கள்.அவர்கள் வீட்டுக்கு எதிர் வரிசையில் ஏழெட்டு வீடுகள் தள்ளி ஒரு ரெட்டை வீட்டில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஜாகை வைத்துக் கொண்டார்கள்.அந்த வீட்டு மாடியில் ஒரு போட்டோ ஸ்டூடியோ.பத்மாவுக்கு கல்யாண போட்டோ எப்படியெடுக்க வேண்டும் என்ற யோஜனை ரொம்பவே யிருந்தது.அவள் மாமாவும் மாமியும் எடுத்துக் கொண்ட போட்டோவில் மாமி சேரில் கழுத்தில் மாலையோடு உட்கார்ந்திருக்க மாமா சேரின் கைப்பிடியில்உட்கார்ந்திருப்பார்.பத்மாவின் மாமாபெண் கல்யாண போட்டோவில் மாப்பிள்ளை உட்கார்ந் திருக்க மாமா பெண் நிற்பாள்.சில போட்டோக்களில் இருவருமே நின்று கொண்டிருப்பார்கள்.மாமா மாமி போட்டோ மாதிரி தான் எடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.அது வரை பத்மா ஒரே ஒரு தடவை தான் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறாள்.ஸ்கூலில் 11வது வகுப்பு முடிந்து வகுப்பு மாணவிகளோடு கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருப்பாள்.

அம்மாவுக்கு பக்ஷணங்கள் செய்வதிலேயே கவனம் பூராவும் இருந்தது.வீட்டிலே சதா திரிப்பதும்.இடிப்பதும் சீர் அப்பளம் இடுவதுமாக அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.சம்பந்திகளிடம் சர்டிபிகேட் வாங்க வேண்டுமே!அப்பாவுக்கு விறகுவாங்கு வதும் கடைகளுக்குப் போகவும் ஆசாரி £££ட்டிற்குப் போகவும் நேரம் போதவில்லை.அண்ணன்மார்களும் பத்திரிகை அடிக்கக் கொடுக்கவும் ப்ரூ·ப் பார்ப்பதும் விலாசம் எழுதவும் ஸ்டாம்ப் ஒட்டவும் அப்பா அம்மா சொல்லும் எடுபிடி வேலைகளைச் செய்வதுமாக ஓடிக்கொண்டிருந் தார்கள்.போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் பத்மா அதைப் பற்றி அதிகமாகக் கவலைப் பட வில்லை. கட்டாயம் ஏற்பாடு செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை!

பத்மாவின் கல்யாணத்தன்று அவள் தம்பி சங்கரின் பூணூல் போடும் விசேஷமும் இருந்தது.காலையில் பூணூல் நடந்து கொண்டிருந்தபோது அவளை மாடியிலேயே இருக்கச் சொல்லி விட்டார்கள்.மாப்பிள்ளை காசியாத்திரை போய் வந்ததும் தான் பத்மாவை கீழே வரச்சொன்னார்கள்.மாலை மாற்றும் போதோ,ஊஞ்சல் ஆடும் போதோ போட்டோ எடுக்கவில்லை.சரி,முகூர்த்த சமயத்தில் தான் எடுக்கப்போகிறார்கள் என்று நினைத்தாள்.முகூர்த்தம் முடியவே 12 மணிக்குமேல் ஆகிவிட்டது.முகூர்த்தம் முடிந்தபின் நாற்காலி எல்லாம் போட்டபின் எடுப்பார்கள் என்று நினைத்ததும் நடக்கவில்லை.அவளுக்கு யாரிடம் கேட்பது என்றே தெரிய வில்லை.அம்மா சம்பந்தி களைக் கவனிக்கப் போய் விட்டாள்.அப்பாவைச் சுற்றி ஒரே கூட்டம்!அண்ணாக்களையும் காணவில்லை.அவர்கள் பந்தி விசாரிக்கப் போய் விட்டார்கள்.ஸாஸ்த்திரிகள் ஏதோ சொல்ல இவள் இயந்திரம் போல் இயங்கிக் கொண்டிருந்தாள்.

கிரஹப்ரவேசம் போக வேண்டுமென்று பத்மாவின் மாமனார் அவசரப் படுத்தவே வேறு வழியில்லாமல் காரில் ஏற வேண்டியதாயிற்று. போட்டோவைப் பற்றி யாரிடம் கேட்பது?போட்டோ எடுக்க ஏற்பாடு பண்ணியிருந்தார்களா இல்லையா?அவளுக்குக் கோபமும் துக்கமுமாக இருந்தது.ஆனால் ஊர்க்காரர்களும் சம்பந்திகளும் கல்யாணம் ரொம்ப விமரிசையாக நடந்ததாகப் புகழ்ந்தார்கள்.
பத்மாவின் ஏக்கம் யாருக்குத் தெரியும்?சம்பந்திகளும் போட்டோ எடுக்காதது பற்றி ஒன்றும் சொல்லாததால் அதைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தோன்றவில்லை

போட்டோ எடுக்காதது பற்றி பத்மா அம்மாவிடம் குறைப்பட்டுக் கொண்டபோது அம்மா”நான் என்ன செய்ய முடியும்?இதெல்லாம் புருஷா பார்த்துச் செய்யணும்.எங்களுக்கு அடுப்படி வேலைல வாயில போன ஈ தெரியல.”என்றாள்.அப்பா பட்டும் படா மலும்”எடுத்திருக்கலாம்.எப்படியோ விட்டுப் போச்சு.போஸ்ட் மார்ட்டம் பண்ண வேண்டாம்” என்று முற்றுப் புள்ளி வைத்து விட்டார்.அண்ணா
மார்கள் வேடிக்கையும்.கிண்டலுமாக”கவலைப் படாதே,நேரா எட்டாம் மாசம் சீமந்தம் வரும் பார்.அப்போ மாலையும் கழுத்துமாக போட் டோவா எடுத்துத் தள்ளி விடறோம்”என்று சமாளித்தார்கள்.ஆனால் அப்படி ஒரு போட்டோ எடுக்கும் சான்ஸ் வரவேயில்லை!

பத்மாவின் புக்ககத்தில் அவள் தான் மூத்த மருமகள்.இவள் கல்யாணத்துக்கப்புறம் நடந்த ஐந்து கல்யாண போட்டோக்களையும் பிரேம் செய்து மாட்டினார்கள்.பத்மாவின் மூன்று நாத்தனார்கள் கல்யாணங்களிலும் பத்மா தன் கணவரிடம் போட்டோ எடுக்க மறக்காமல் ஏற்பாடு செய்தாள்.அவள் மாமனார் ”ஆல்பமெல்லாம் எதுக்கு போட்டோ மட்டும் போறுமே என்ற போது அவள் தான் ”எவ்வளவோ செலவழிக்கிறோம்.இது தலைமுறை சமாசாரம்.நாளை அவர்கள் குழந்தைகள் கூடப் பார்க்க முடியுமே என்று வாதாடி அவரை சம்மதிக்க வைத்தாள்.பத்மா ஏன் அப்படி வாதாடினாள் என்று அவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்.பத்மாவின் ஏக்கம் அவர்களுக்குத் தெரியாதே!

பத்மாவின் சகோதர சகோதரிகளின் கல்யாண போட்டோக்களும் வரிசையாக அவர்கள் வீட்டில் மாட்ப்பட்டன.பத்மாவின் மாமனார் ஷஷ்டியப்த பூர்த்தியின் போது மாமனார் போட்டோ எடுக்க சம்மதிக்க வில்லை”.குழந்தைகள் கல்யாணம் சரி,எங்களுக்கெல்லாம் என்ன போட்டோ”? என்றார்,ஆனால் மாமியாருக்கு ரொம்ப ஆசை யிருந்தது.தன் குழந்தைகள் கல்யாணத்தில் போட்டோ எடுத்திருந்தாலும் மாமியார் கல்யாணத்தின் போது போட்டோ எடுக்கும் வசதிகள் இல்லையாம். அதனால் ஷஷ்டியப்த பூர்த்தி சமயம் மாலையும் கழுத்துமாக ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசை!மாமியாரின் மனநிலை பத்மாவுக்குப் புரிந்தது.தன் கணவரிடம் சொல்லி மற்ற பையன்களிடமும் சொல்லி எல்லோருமாகச் சேர்ந்து மாமனாரை சம்மதிக்க வைத்தார்கள்.மாமியாருக்கு ரொம்ப சந்தோஷம். அவளுடைய சந்தோஷம் போட்டோவில் தெரிந்தது!அந்த போட்டோவை மாட்டும் போதுதான் எல்லோருமே கவனித்தார்கள்.பெரிய அண்ணா, மன்னி போட்டோ இல்லையே!அண்ணாவின் ஷஷ்டியப்த பூர்த்தியின் போது இதுபோல் மாலையும் கழுத்துமாய் போட்டோ
எடுத்து மாட்ட வேண்டும்”,என்றார்கள்.

பத்மாவின் அப்பா ஷஷ்டியப்த பூர்த்தியன்றும் எல்லோரும் இதே மாதிரி சொன்னார்கள்.”பத்மா,மாப்பிள்ளைக்கு எப்ப ஷஷ்டியப்த பூர்த்தி வரும்”?”அதுக்கு இன்னும் 20 வருஷம் இருக்கே” என்றார் பத்மாவின் கணவர்.ஆனால் அப்படி போட்டோ எடுத்து மாட்டும் வாய்ப்பு வரப்போவதே யில்லை என்று யார் தான் நினைத்தார்கள்?பத்மாவின் கணவர் 55 வயதிலேயே அகால மரணமடைவார்
என்று யார் எதிர்பாத்தார்கள்?

விளையாடப்போன குழந்தைகள் ”அத்தை, பெரியம்மா” என்று ஏக காலத்தில் கத்திக் கொண்டே வந்தார்கள்.அத்தை ஏன் அழுகிறாள் என்று புரியாமல் திகைத்தார்கள்.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.”அத்தை, ஒங்க கல்யாணத்தில போட்டோஎடுக்கலையேன்னு அழறேளா?தாத்தா,பாட்டி போட்டோ மாதிரி ஒங்க ஷஷ்டிபூர்த்தி கல்யாணத்துக்கு அப்பாகிட்டச் சொல்லி போட்டோ
எடுக்கச் சொல்லறேன்” என்றாள் ஸ்ருதி.


vannaijaya@hotmail.com

Series Navigation