பொது நீராதாரத்தில் பாகிஸ்தானின் குயுக்தி

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

ராமசாமி ஆர். ஐயர் – தமிழாக்கம் – எஸ். ஷங்கரநாராயணன்




கொள்கைநிலைப்பாடுகள் ஆய்வு மையத்தில் அங்கம் வகிக்கும் திரு ராமசாமி ஆர். ஐயர் நீர்வளம் பற்றி விரிவாக எழுதி வருகிறார். ‘நீர்சார் போர்கள்‘ என்கிற சிறு விமரிசனக் குறிப்பு இதே கட்டுரையின் கருத்தை ஒட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 23 மார்ச் 2010 அன்று வெளியாயிற்று. இந்தக் கட்டுரை ‘எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி‘ 27 மார்ச் 2010 இதழில் இருந்து தமிழாக்கம் செய்யப்படுகிறது. —
இந்திய பாகிஸ்தான் இடையேயான இனியான பேச்சுவார்த்தைகளில் நீராதாரம் பற்றியும் விவாதங்கள் வேண்டும் என்று பாகிஸ்தான் கோருவதை, ஆர்வமுள்ள பொது வாசகனின் கவனத்துக்கு இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.
ஒரு மேலோட்டமான கண்ணோட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே நீர்வளப் பகிர்வு பற்றி எந்த வில்லங்கமும் எழவில்லை என்றே சொல்லிவிடலாம். சிந்து நதியின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் ‘சிந்துநதி நீர் உடன்படிக்கை 1960‘ முற்ற முழுமையானதாகவே இருக்கிறது. அந்தப் பங்கீட்டின் விளக்கம், சிந்துவின் மேற்கத்திய கிளைநதிகள் பாகிஸ்தானுக்கு, கீழை நதிகள் இந்தியாவுக்கு, என்கிற அதன் ஷரத்துப் படி இரு நாட்டுக்கும் இடையே பிரச்னை எழ வகையேயில்லைதான். என்றாலும் நதிநீர்ப் பங்கீடாக அல்லாமல், நதிகளில் இந்தியக் கட்டுமானங்கள் சார்ந்து, உடனபடிக்கையில் கேள்விகள் எழலாம். உடன்படிக்கை இப்படி விஷயங்களுக்கு தீர்வு காண குழுக்களை அமைத்துக் கொள்ள வகை செய்திருக்கிறது. (சிந்து கமிஷன், விசாரணைக் குழுக்கள், என அவை பலதரத்தவை.) இவை புழக்கத்தில் இருக்கவே செய்கின்றன. இத்தகைய பின்புலத்தில், தற்போது பாகிஸ்தான் ஒரு சங்கேத அறிக்கையை (நான்-பேப்பர்)*1 தாக்கல் செய்திருக்கிறது. அதன் உட்கிடக்கை என்னவானாலுமே, அது கடுமையான கேள்விக்குரியதுதான். பொதுவிவகாரங்கள் சார்ந்த இருதரப்புப் பேச்சுவார்த்தை துவங்கினால், அடுத்தமுறை நீராதாரத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என திடீரென்று பாகிஸ்தான் கோருகிற காரணம் என்ன? விடை மிகத் தெளிவானது. தமது பாகிஸ்தானிய பிரஜைகளுக்கும், உலகத்துக்கும், இந்தியா பாகிஸ்தான் இடையே நதிநீர்ப் பங்கீடும் ஒரு விவகாரம் என்று காட்ட பாகிஸ்தான் முனைகிறது, என்பதே அது.
பாகிஸ்தானிய அரசின் பார்வையில், இந்தச் செயலால் அதற்கு நிறைய ஆதாயங்கள். தமது மக்களுக்கு பேச்சுவார்த்தைக்கு என தண்ணீரும் ஒரு விவகாரம் எனச் சொல்லிக் கொள்கிறது. இந்த விவகாரத்தை உருவாக்கி அதை காஷ்மீர் பிரச்னையோடு சேர்த்து விவாதம் செய்கிற பாவனையில் ஊதிப் பெரிசாக்கி, தமது மக்களை தம்பின்னே ஆதரவான நிலை எடுக்க அது மறைமுகமாக வழிசெய்து கொள்கிறது. இன்னொன்று, இப்படி இந்தியாவுடன் தண்ணீர் சார்ந்து பிரச்னை என்று விஷயத்தை மடைதிருப்பி, தன் மாநிலங்களுக்கு இடையே உக்கிரப்பட்டுள்ள உள்நாட்டுத் தண்ணீர்த் தட்டுப்பாடு பிரச்னையை மழுங்கடிக்க அது முயற்சி செய்கிறது. இதற்கெல்லாம் காரணம் நீயே என்று சுட்டுவிரலால் இந்தியாவை அது குற்றம் சாட்டுகிறது.*2 சுதேசிக் கொந்தளிப்பையும், இந்தியாவுக்கு எதிரான மூர்க்கத்தையும் அது எழுப்ப முனைகிறது. எங்ஙனமாயினும் மிக முக்கியமான அதன் நோக்கம், இந்தியா தீவிரவாரம் சார்ந்து கவனம் குவிந்து செயல்படும் இந்த நேரம் நம் கவனத்தை திசைதிருப்பி சிதறடிக்கிறதுதான்.
நீர், அது இந்த இரு நாடுகளுக்கிடையேயான விவாதப்பொருள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒரு வெளிப்படையான உண்மை இருக்கிறது. அதாவது இந்த நதிகள் இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் சென்றடைகின்றன. நதியில் முதல் கை நம்முடையது. அதை மறுத்து அல்லது கீழ்ப் பகுதிகளுக்கு நதியை விடாமல் தடுத்து, நாம்தான் முதலில் விவகாரத்தை உருவாக்கியிருக்க வேண்டும். சிந்துநதி உடன்படிக்கையை நாம்தான் மீறிச் செயல்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து பாகிஸ்தானிய அரசு பேச எதுவும் இல்லை. அடுத்த கட்ட பேசுசுவார்த்தைக்கான விவாத விஷயங்களில் ’நீர்’ என ஒரு வார்த்தையையும் அது இழுத்துவிட்டு விட்டது. அவ்வளவுதான். உலக அரங்கில் பேச்சுவார்த்தைக்கு என ‘நீர்‘ ஒரு விஷயமாக்கப் பட்டுவிட்டாலே நதியின் மேடான பகுதி, பள்ளமான பகுதி என்று அதை உலகம் சரிபார்க்க ஆரம்பித்து விடும்! அது பாகிஸ்தானுக்கு சாதகம் அல்லவா?
இந்த நதிநீர்ப் பிரச்னை ஏற்கனவே பாகிஸ்தானின் சில தீவிரவாதம் செறிந்த பகுதிகளில் பிரஸ்தாபிக்கப்படுகிற விவகாரம்தான். அந்தத் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவிடம் ‘நீரைப் பகிர்ந்து கொள், அல்லது யுத்தத்துக்குத் தயாராயிரு‘ என்று பேசிவருகிறார்கள். மேற்கத்திய நதிகளில் சட்டவிரோதமாய் வரிசை வரிசையாய் கட்டுமானப் பணிகள் செய்கிறதாய் அவர்கள் இந்தியாவைப் பற்றி குறை கூறிவருகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கெல்லாம் ஆதாரமே இல்லை, என்ற நமது குரல் எடுபடவில்லை. இதுதொடர்பான விளம்பரத் தட்டிகளை பொது இடங்களில் பாகிஸ்தானிய பிரஜைகள் பார்க்கிறார்கள். நெருப்பு இல்லாமல் புகையுமா, என்கிறாப் போல அவர்கள் முழுசாக இல்லாவிட்டாலும் ஓரளவு நம்புகிறார்கள். இந்தியா சார்ந்து அவர்கள் முகம் கருக்கிறார்கள். அதனால் இந்த்த் தீவிரவாதிகளின் அமைப்பு கொஞ்சம் பலம் பெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான ஜிகாத்துகளை காஷ்மீர் சார்ந்தோ இசுலாம் சார்ந்தோ அவர்கள் அறிவிக்கும் போது, பாகிஸ்தானின் சிறு பகுதியாவது அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுக்கும். ஆனால் நதீநீர்ப் பங்கீடு, என்று மொத்த நாட்டுக்கும் சாதகமான ஒரு நிலைப்பாட்டை தீவிரவாதிகள் கையில் எடுத்துக்கொண்டால், மொத்த பாகிஸ்தானிய சனங்களின் இதயத்திலும் ஒரு கசிவை எதிர்பார்க்கலாம் அல்லவா?
இந்த விஷயத்தில் பாகிஸ்தானிய பாமர சமூகம் எஙகே அணிசேரும்? துரதிர்ஷ்டவசமாக, இந்திய பாகிஸ்தானிய உறவுகள் மேம்பட வேண்டும் என வலியுறுத்திவருகிறவர்கள் கூட இதையிட்டு கருத்துத் தெளிவுடன் பேச முன்வருகிறார்கள் இல்லை. அவர்களுக்குமே இது பிரதான விஷயம்போல பூதாகரமாய் உணர்ச்சிமயமான பிரச்னையாக இருக்கிறது.
இதுகாறும் இந்த விஷயத்தை அடுத்த பேச்சுவார்த்தையில் இடம்பெறுவதான கோடிகாட்டுதலின் அடிப்படையில் பார்த்தோம். அந்த நான்-பேப்பர் சமிக்ஞை, ஆதாரங்கள் இல்லாமல் பிடிவாதம் செய்வது, ஆனால் அந்த வலியுறுத்தலில் அடிப்படையாய் எழுப்பப்பட்ட கேள்விகள் என்ன? அவற்றை இனி பார்க்க வேண்டும்.செய்தித்தாள் குறிப்புகள் துல்லியமானயைவ என்கிற நம்பிக்கையுடன் இதை நாம் எடுத்துக்கொள்வோம்.

சாதுர்யமான வார்த்தையாடல்கள்

அந்த அறிக்கை சாதுர்யமாக வரையப்பட்டிருக்கிறது. உடன்படிக்கை பற்றி மதிப்புடனேயே அது குறிப்பிடுகிறது. அதற்கு எதிராக எதையும் முன்வைக்கவில்லை. வாஸ்தவத்தில் அது அந்த உடன்படிக்கையின் படி பாகிஸ்தானின் கடப்பாட்டை மீளவும் உறுதி செய்கிறது. உடன்படிக்கை அடிப்படையில் எல்லா அம்சங்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறது அது. (விவரங்கள் முழுமையாகப் பரிமாறிக்கொள்ளப் படவேண்டும். பரிமாறிக் கொள்வதில் தாமத்த்தைத் தவிர்க்க வேண்டும்.,, இப்படியாக.) இதையெல்லாம் ஒருசாராருக்கு சாதகமானவை, எவ்வளவு அனுகூலமானவை என்று யார் யாரைப் பார்த்துச் சொல்லிக் கொள்ள முடியும்? ஆனால் இவைதான் இந்தியா மீதான அதிருப்தியாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. (விவரங்கள் முழுமையாக அளிக்கப்படவில்லை. உடனுக்குடன் அளிக்கப்படவில்லை… இத்தியாதி.) இந்தியா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும், அதில் ஐயமில்லை. என்றாலும் அந்த மறுப்பு முழு நியாயமானதாக இருந்தாலும், வெளிப்பார்வைக்கு சமாளிப்பு போலவே தெரியும். பாகிஸ்தானுக்கு அதுதானே வேண்டும்.
இப்படி அடக்கி வாசிக்கிறதையும் மீறி இந்தியாயிவன் கட்டுமானத் திட்டங்கள் குறித்து பாகிஸ்தான் ஆதரவாகப் பேசியதே இல்லை என்று சுட்டிக்காட்டலாம். எங்கள் கருத்துகளை அவர்கள் அக்கறையுடனும் முன்னேற்ற அணுகுமுறையுடனும், பரிசீலிக்கவே முன்வரவில்லை என்று எடுத்துச் சொல்ல்லாம். எங்களது ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை முடக்கவே அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டலாம். அதாவது உடன்படிக்கையின் படி ஆகக்குறைந்த அளவே மேற்கு நதிகளின் தண்ணீர் இந்தியாவுக்கு அனுமதித்தால் போதும், என்று பாகிஸ்தான் நினைக்கிறது. வாஸ்தவத்தில் இது அந்த உடன்படிக்கையின் நல்நோக்கத்திற்கே ஊறு விளைவிப்பது. ஆனால் இந்த வாதங்கள், எத்தனை நியாயமானவை ஆனாலும் நிறுவ சிரமமானவை. ஒரு பொது கவனகனை இது உடனே தலையாட்டி ஆமோதிக்க வைத்துவிட முடியாது. உற்பத்தி கேந்திரத்தில் நதியை அனுபவிக்கிறவன் பள்ளத்துக்கு அதை வரவிடாமல் தடுத்துக்கொள்கிறான் என்கிற விஷயமே இரக்க அடிப்படையில் முன்நிற்கும்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், இந்த நதிநீரில் எழும்பும் மின்சாரம் தயாரிப்புப் பணிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குத்தான் பலன் அளிக்கப் போகிறதாக இருக்கின்றன. அந்த மாநில மக்கள்தான் இதனால் பயன்பெறப் போகிறார்கள். அந்த மாநிலமோ சிந்துநதி உடன்படிக்கைக்கே கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கிறது. ஏனென்றால் அந்த மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு ஊறானது இந்த உடன்படிக்கை என அவர்கள் இதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மாநிலத்தின் நீர்சார் செயல்திட்டங்களை ஏன் பாகிஸ்தான் முடக்க வேண்டும்? காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும்மட்டும் அதன் முன்னேற்றத்துக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போடும் என்று ஏன் கொள்ளக் கூடாது? அதில் என்ன தவறு? இதன் பதில், இந்தியாவில் இருந்து காஷ்மீர் துண்டித்துக்கொண்டு வரட்டும், வந்து எங்களோடு இணைந்து கொள்ளட்டும், என்கிறதுதான்?

தந்திரமான முன்வைப்பு

இந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பில் ஒரு விஷயம் தெளிவு. எந்த ஒரு நதிநீர்த் திட்டத்தையும் அது பேச்சுவார்த்தை என்று முடக்கிவிட முயற்சிசெய்யும். எங்களது எல்லா முறையீடுகளும் முற்ற முழுமையாக சரிசெய்யப்படும்வரை எந்தப் பணியும் ஆரம்பிக்கக் கூடாது, என அது வலியுறுத்தும். என்ன தந்திரமான புறக்கணிப்பு. உடன்படிக்கையின் படி செயல்திட்டங்களின் முழு தொழில்நுட்ப விவரங்களையும் இந்தியா பாகிஸ்தானுக்கு முன்னதாகவே அளிக்க வேண்டும். அவற்றைப் பரிசீலித்து பாகிஸ்தான் தனக்கு பாதகமில்லை என்று திருப்தி சொல்கிறவரை இந்தியா எந்த கட்டுமானத் திட்டமும் மேற்கொள்ளலாகாது என்பது நியாயம் என்றே படும். இதன் உட்கிடக்கை, பாகிஸ்தானின் கேள்விகள் நிஜமான அக்கறையின் பாற்பட்டவை, என்கிறதாகவும் அமைகிறது. ஆனால் இந்தியாவைப் பொருத்தமட்டில் இந்த ‘திருப்தி‘ என்கிற நிலை சாத்தியப்படவே போவதில்லை. பாகிஸ்தான் தலையாட்டவோ சம்மதிக்கவோ போவதேயில்லை. எல்லாவற்றையும் கிடப்பில் போடவே அது விரும்பும். ஒரு கொத்து கேள்விகள் வரும், அவற்றுக்கு பதில் அளிக்கப்படும். என்றால் மேலும் கேள்விகள் அதில் இருந்து புற்றீசலாய்க் கிளம்பும்… அல்லது அளித்த பதில்கள் திருப்தி இல்லை என்று மறுதலிக்கப்படும். இதற்கு முடிவே இல்லாமல் கதை நீளும். நமது வேலைகள் ஆரம்பிக்கவே செய்யாது. உடன்படிக்கையின் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் எதுவுமே செயல்வடிவம் பெறாது.
ஊலார் அணைத்திட்டம் என்று சொல்லப்படுகிற, துல்புல் நீர்வழித் திட்டம், இம்மாதிரி 20 வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. இதன் கதை இப்படி ஆகிவிட்டாப் போல பாக்லிகர் திட்டத்தை காலகாலமாக முடங்க விடக்கூடாது என்று இந்திய அரசு தீர்மானமாகச் செயல்பட்டு வருகிறது. ஆகவேதான் பாகிஸ்தானின் கேள்விகள் எல்லாவற்றையும் திருப்தியுடன் தீர்க்கும் வரை காத்திருக்காமல் பாக்லிகர் திட்ட கட்டுமானப் பணிகளை இந்தியா துவக்கி விட்டது. உடன்படிக்கையின் ஷரத்துகளை வைத்தே இந்த வாத விளையாட்டு நீட்டிக்கப்படும். கலந்து பேசி சில விஷயங்களைத் தீர்த்துக் கொள்ளலாம். சலால் திட்டம் இப்படி வெற்றிகரமாகச் செயல்பட்டு விட்டது. பாக்லிகார் திட்டப் பிரச்னைகளை கேள்விகளை, விசாரணைகள் மூலம் விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அணைகட்டும் திட்டம் மீண்டும் முடங்கிவிடும் துல்புல் திட்டம் போல. எப்படியாயினும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் இதற்கு வேலை இல்லை. இந்த சிக்கலான ஆட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த விஷயத்தை இருதரப்பு பேச்சுவார்த்தையில் இடம்பெறச் செய்வது.
சிந்து நதியின் மேடுகளில் நாம் இருக்கிறோம், அது சென்றடையும் பள்ளத்தில் பாகிஸ்தான் இருப்பதால் அவர்களின் கவலை, தனது பாத்யாதையைக் குறைத்துவிடுகிற கவலை நியாயமானது என்று வாதம் செய்யலாம். நீர்வரத்தைத் தடுப்பதாகவோ, அல்லது வேண்டுமென்றே தண்ணீரைத் திறந்துவிட்டு சேதம் விளைவிப்பதாகவோ அவர்கள் கவலைப்படலாம்.*4 இந்தியாவுக்கான சிக்கல்களைத் தளர்த்துமுகமாக உடன்படிக்கை சில கட்டுப்பாடுகளை முன்வைக்கிறது.

(1) உடன்படிக்கையின் படி, இந்தியா மேற்கு நதிகளின் நீர் பாகிஸ்தானுக்குப் போக அனுமதிக்க வேண்டும். மின்சார உற்பத்தி என்று இந்தியாவுக்கு அந்த நீர் தேவைப்பட்டால் நீரை தாற்காலிகமாய்ச் சேமித்து வைத்துக்கொண்டு பிறகு திரும்ப விடுவிக்கலாம். ஐம்ப்து முதல் நூற்றுமுப்பது சதம் வரையில் இதில் முன்னே பின்னே அமைய ஏழு நாள் மட்டுமான கெடுவுடன், உடன்படிக்கை அனுமதியளிக்கிறது. தேவைக்கேற்ற சீரமைப்புகளை அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும். (எல்லைக்கு அருகில் செயலாக்கப்படும் திட்டங்களுக்கு ஒரேயொரு நாள்தான் கெடு.)
(2) நீரோட்டத்தின் வழியான செயல்திட்டங்களை மின்சாரம் தயாரிக்க என்று உடன்படிக்கை அனுமதித்தபோதிலும், மேற்கத்திய நதிகளில் நீரைத் தேக்கி வைக்க என்று உடன்படிக்கையின் பிற்சேர்க்கைப்படி சிறிய அளவில் அணைகட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவை தவிர வேறு புதிய அணைகள் கட்ட இயலாது.
(3) அணைகள் கட்ட அனுமதி மறுக்கப்பட்ட போதிலும் இடையே குளங்களை அமைத்துக் கொள்ள வழி வகை இருக்கிறது. அணையில் தேக்கி வைக்கிறதைத் தவிர ஓரளவு நீரை புழக்கத்துக்காக என்று கையிருப்பில் வைத்துக் கொள்வது இம்முறையின் பலன். குளத்தின் கொள்ளளவுக்கு வரையறை இருக்கிறது.
(4) அணைத்தடுப்புக் கட்டுமானங்கள் மூலம் நீர்மட்டத்தை எந்த உயரம் வரை நீரைத் தேக்கி வைத்துக் கொள்ளலாம் என்பதற்கும் வரையறை உண்டு.
(5) கட்டுமான இடத்தின் தேவையின் போது மதகுகள் வைத்துக்கொள்ள வேண்டியிருந்தால், எளிய பலமான மதகுகளாக அவை வடிவமைக்கப்பட்டு ஆக உயரத்தில்அதன் கீழ்ப்பகுதி நிற்கிறதாக அமைதல் வேண்டும். செயல்பாடும் கட்டுமானத் தரமும் உள்ளதாக மதகுகள் அமைய வேண்டும்.
(6) அதைப்போலவே, மின்சாரம் எடுக்கிற கட்டுமானப் பணிகளிலும் ஆக உயரத்திலேயே தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் கட்டுமானங்கள் எளியவையாகவும் பாவிக்க சுலபமானதாகவும் அமைதல் வேண்டும்.
(7) நீர் தேங்கும் குறைந்தபட்ச தரைக்கும் கீழே நீரை மடைபாய்ச்ச என்று கட்டுமானங்கள், வாயக்கால்கள் அமைக்கக் கூடாது. படிவுகள் என்றோ வேறு சீரமைப்பு வேலைகளுக்கோ மட்டுமே தோண்டுதலுக்கு அனுமதி உள்ளது.

பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு

பாகிஸ்தானுக்கான நீர்ப் போக்கு பாதுகாக்கப் பட்டிக்கிறதை அறியமுடிகிறது. இந்தியா மேற்கு நதிகளில் நீரைச் சேமிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. குளம் அமைக்கலாம், சில நிபந்தனைகளுடன். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் நீரை இந்தியா சேமித்து வைத்துக் கொள்ள முடியாத அளவிலேயே செயல்திட்டங்கள் இங்கே நிகழ முடியும். நீர் வெளியேறும் பகுதிகளை ஆக உயரத்தில் வைத்துக் கொள்வதால் நீர் பெருக்கெடுத்து வெள்ளமாகப் பாய்ந்து சேதப்படுத்த முடியாது. அவ்வளவில் பாகிஸ்தான் நன்றாக காபந்து பண்ணப் படுகிறது. அது செய்ய வேண்டியதெல்லாம் இந்தியா சரியாக நடந்து கொள்கிறதா என்று ஒரு பார்வை பார்த்துக் கொள்வதுதான். சிந்து கமிஷன் மூலமே அது இந்த கண்காணிப்பு வேலைகளை நடத்திக் கொண்டிருக்கலாம். கருத்து மாறுபாடுகளோடு, விதிமீறல்களோ இருந்தால், உடன்படிக்கையின் விசாரணைக்கான ஷரத்தை கையில் எடுத்துக் கொள்ளலாம். பாக்லிகர் திட்டத்தில் அப்படித்தான் பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொண்டது. இருதரப்புப் பேச்சுவார்த்தை என்று இந்த விவகாரம் ஊதிப் பெரிசாக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன என்றால், இந்த ‘நான்-பேப்பர்‘ அறிக்கை என்ன சொல்கிறது? நீர்விநியோகத்தைக் கூட்டாக நிர்வகிப்பது, கூட்டாக சுற்றுச் சூழல் அவதானத்தில் ஈடுபடுவது, நீர்வரத்து குறைகிறபோது இந்தக் கூட்டு கவனம் கலந்தாய்வு செய்கிற அளவில் சுமுகமாய் அமையும். ஆனால் இருதரப்பும் ஒன்றுகூடி ஒன்றாகச் செயல்படுவது என்று ஆகிவிட்டால், உடன்படிக்கைதான் எதற்கு, அல்லவா? தவிர, நீர் விநியோக நிர்வாகமும், சூழல் அக்கறை சார்ந்த அவதானிப்பும் ஒரு நீர்வரத்து குறைந்த பிரச்னைக்காலத்தில் தேவைப்படுகிற விஷயங்கள். இந்த பிரச்னைகாலம் என்பது இனி வரப்போகிற உத்தேச அளவிலானது. இப்போது இல்லை என்பது தெளிவு. சீதோஷ்ணநிலை மாற்றமோ, புவி வெப்பமயமாதலோ எதோ காரணம் என்று அமையக்கூடும். எப்படியாயினும், ‘நீரோட்டக் குறைவு‘ என்கிற வாசகம், பரவலாக மனசில் வாங்கிக் கொள்ளப்படும். (அதற்காகவேதான் அவ்வாசகம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதும் சரிதான்.) இந்தியாவின் செயல்திட்டங்களால் இந்த நீர்க்குறைவு என்கிறதாக அது பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்படும். நாம் அறிவோம், மேற்கு நதிகளில் நீரோட்டத்தைக் குறைக்க நம்மால் ஆகாது. இவ்விஷயத்தில் பாகிஸ்தானுக்கு அனுசரணையாக திட்டவட்டமான ஷரத்துகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன இந்த உடன்படிக்கையில். எந்த கட்டத்திலாவது பாகிஸ்தானி அசூயைப்பட்டால் உடனே சிந்து கமிஷனிடம் முறைவிட முடியும். அத்தோடு அரசு நடவடிக்கைகள் மூலமோ, விசாரணைக்கு உத்தரவிடவோ நிர்ப்பந்திக்கலாம். இந்தப் பத்தியின் முதல் வாக்கியம் ஆபத்தற்ற எளிய வாக்கியமாகத் தென்பட்டாலும், உண்மையில் புதிர் நிறைந்தது. ‘நீரோட்டக் குறைவு‘ என்ற பதமும் கனமானது. தெளிவாக இந்தியாவை நோக்கி குற்றவிரல் சாட்டுகிறது அது. *5
இறுதியாக ஒன்று. இந்த அறிக்கையைத் தாக்கல் செய்ததும், பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சரின் உரைவீச்சும், ஜமாத் உத் தவா. எல் ஈடியின் தலைவன் ஹஃபீஸ் சயீத்தின் பற்ற வைக்கிற பேச்சும்… எல்லாம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தன, என்பதை தற்செயல் என்பதா?
இதை வாசிக்கும் பாகிஸ்தானிய வாசகருக்கு ஒரு வார்த்தை. இந்தக் கட்டுரை விசனத்தில் எழுதப்பட்டது. கோபத்தில் அல்ல. என் பார்வையில், பாகிஸ்தானிய அரசு நம் இரு நாடுகளுக்கிடையேயான இணக்கமான சூழல் உருவாகும் வாய்ப்புகளை அதுவே குழிதோண்டி ஆழப் புதைக்கிறது. சனங்களிடையே தேவையற்ற பதட்டங்களை நிர்ப்பந்திக்கிறது. இந்திய எதிர்ப்பு மூர்க்கத்தை ஊட்டி வளர்க்கிறது. தீவிரவாதிகள் தங்களின் எதிர்ப்புணர்வைக் காட்ட புதிய முகாந்திரங்களை ஏற்படுத்தி தூபம் போடுகிறது. இப்படியாக இந்திய பாகிஸ்தான் உறவுகளை சீர்ப்படுத்துகிற கதவுகளை மூடி வைக்கிறது. இலக்கைத் தகர்த்து விடுகிறது. நாளை ஓர் அதிசயம் போல, காஷ்மீர்ப் பிரச்னை முடிவுக்கு வந்தால் கூட, இன்னும் தீராத பிரச்னைகள் இருக்கும் என்கிற பாவனையை அது உருவாக்கி வருகிறது. உள்நாட்டில் தீவிரவாதிகளால் வந்த தலைவலிக்கு மாற்றாக பொது மக்களின் கவனத்தை திசை திருப்புகிற சாமர்த்தியமான செயல்களாக பாகிஸ்தான் இவற்றை நினைக்கிறது. அல்லது நீர் சார்ந்த உள்நாட்டுச் சிக்கல்களில் இருந்து தப்பித்துக் கொள்ள போக்கை மாற்றிக்காட்டப் பார்க்கிறது.இச்செயலின் தாக்கங்களையும், பக்க விளைவுகளையும் பாகிஸ்தானிய அரசோ, அவர்களின் ராணுவமோ கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. இப்போது கூட காலம் இருக்கிறது. அவர்கள் ஒரு மீள்பார்வை பார்த்துக் கொள்ளலாம்.

1 நான்-பேப்பர் என்கிற சொல் ராஜாங்கப் பேச்சுவார்த்தையில் வழங்கப்படுகிறது. அவை வழமையான அறிக்கைகள் அல்ல. என்றாலும் பேச்சுவார்த்தைக்கு அமருமுன் அளிக்கப்படும் முன்மாதிரிகள் என்று சொல்லலாம்.

2 நீர் வரத்து குறைகிறதற்கும், அது போன்று எழுப்பப்படும் கருத்து முரண்களுக்கும் பாகிஸ்தானிய அரசுக்கு இந்தியா பதில் – உள்நாட்டு நீர்பகிர்வே உங்கள் பிரச்னை என்றோ, அதற்கான தீர்வு உங்களிடமே என்கிற மாதிரியோ, கொடுத்துவிட முடியும், ஆனால் அப்படி இந்தியா செய்வதைத் தவிர்க்க வேண்டும். இக்கட்டுரையாசிரியரின் கருத்து, சிந்து உடன்படிக்கையின்படி இந்தியா சரியாக நடந்து கொள்கிறது என்கிற நிலைப்பாட்டை உறுதி செய்கிறது மாத்திரமே செய்ய வேண்டும்.

3 இந்த விவாதங்கள் சிந்து உடன்படிக்கையின் உள்ளீடாகவே எழுப்பப்படுகின்றன. அணைக்கட்டுகள் பற்றிய தனி நபரின், பொது மக்களின், அரசாங்கங்களின் கருத்தை இது பிரதிபலிக்கவில்லை.

4 சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பாகிஸ்தானிய மாநாடு. ஒரு மதிப்புக்குரிய பாகிஸ்தானிய பத்திரிகையாளர் வந்திருந்தார். இரு நாட்டுத் தரப்பிலும் அவருக்கு மதிப்பு உண்டு. என்னிடம் கூறினார். “உங்கள் கவனஈரப்பு சரியானது, குறிக்கோளும் சரியானதே. ஆனால் உங்களுக்கு நதிப்படுகையின் கீழ்ப்பகுதியில் வாழ்கிறவர்களைப் பற்றிய பரிவு இருக்கிறதாகத் தெரியவில்லை. ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையே இருக்கிறது.“ இந்த பரிவுக்கான பதில், இந்தியாவுக்கான நீர்க் கட்டுப்பாட்டுத் திட்டங்கள். சிந்து உடன்படிக்கையே அதுதான்…. என்றேன். அது அவருக்கு திருப்தி தரவில்லை. (இந்தியாவில் மேற்கத்திய நதிகள் சார்ந்து எந்த செயல்திட்டமுமே இல்லாமல் இருந்தால்தான் பாகிஸ்தான் திருப்தியுறும் போலிருக்கிறது! அப்படியானால் சிந்து உடன்படிக்கையையே மாற்றி எழுதி விடலாமா!)

5 இந்த மாதிரி விவகாரங்களில் பாகிஸ்தானிய அணுகுமுறை எப்படி என்பதற்கு ஓர் உதாரணம். அக்டோபர் 2008ல் எழுந்த ஒரு வாக்குவாதம். புதிதாய் எழுப்பப்பட்ட பாக்லிகர் திட்டம். அதையிட்டு பாகிஸ்தான் வினாக்கள் தொடுத்து, விசாரணைக்கும் கோரியது. அதில் ஒரேதடவையாக முதல்கட்ட நீர் நிரப்புதலை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான் இந்தியாவைக் குற்றம் சாட்டியது. பாகிஸ்தானுக்கான நீர் வரத்து திடுமென்று குறைந்து விட்டது. இது உடன்படிக்கைக்கு விரோதமான நடவடிக்கை என்று குரல் எழுப்பியது. நடந்த நிகழ்வுகளை எளிதாக நாம் விளக்கி விடலாம். உடன்படிக்கை என்ன சொல்கிறது? அது உயரமான மட்டங்களில் இருந்து நீர் எடுத்துக்கொள்வதைத்தான் ஆட்சேபிக்கிறது. இந்த பாக்லிகர் மதகுகள் அத்தனை உயரமானவை அல்ல. நடுநிலை அறிஞர்கள் அந்த மதகுகளின் உயரம் பற்றி விளக்கம் அளித்தனர். புதிய நீர்த்தேக்கம் நிரம்புகிறது என்றால், அது நிரம்பும்வரை மதகுஉயரத்துக்கு அதில் நீர் சேமிக்கப்படும்வரை அதிலிருந்து நீர் அதைத் தாண்டி வழியாது. இந்த செயல் நடைபெற ஒன்று அல்லது இரண்டு தினங்களே பிடிக்கும். அதற்கும் தடை என்றால், நிர்த்தேக்கத்தில் சேமிப்பே நிகழாது. இந்த கமுக்கமான பாதகம்போல் தோன்றாத கணக்கு பாகிஸ்தானிய அரசுக்கு உண்டு. அவர்களது பொறியியல் வலிலுநர்கள் இந்த உண்மைகளை பொதுமக்களோடு பகிர்ந்து கொள்ள முன்வர மாட்டார்கள். அதன் காரணமாக ஒரு மோதல் உணர்வு முகிழ்ப்பதை அவர்கள் வழிமொழிகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை அதிகரிக்க அவர்கள் வழிசெய்கிறார்கள். அக்டோபர் 2008லிருந்து செனாப் நீரோட்டத்தை இந்தியா தடுத்து நிறுத்திவிட்டது, அதை பாகிஸ்தான் எதிர்த்துப் போராடி வென்றதாகப் பரவலாக எல்லாரிடமும் பதித்தாகிவிட்டது. பாகிஸ்தானிய பத்திரிகையாளர்கள் திரும்பத் திரும்ப இப்படி எழுதிக் குவிக்கிறார்கள். பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் அறிஞர்கள் இதை வழிமொழிய வாய்கிழியப் பேசியாகிறது.

நன்றி – உன்னதம் மே இதழ்

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>