This entry is in the series 20091211_Issue

முத்துசாமி பழனியப்பன்


ஓடும் நீருக்கும் தேயும் பாறைக்கும்
பிறந்த நுரை தன் வெண்பற் காட்டிச்
சிரிக்கிறது – காற்றில் பறக்கிறது!

கண்களுக்குப் புலப்படும்
அவ்வெண்ணிறப் பந்து
கைகள் தீண்டியதும்
காட்சிப்பிழை ஆகிறது!

சிறகுகளின்றியும் பறக்கும் கலையை
அது எங்ஙனம் பயின்றது?
காற்றிலது செய்யுஞ் சிருங்காரம்
என்னையும் பறக்க உந்துகிறது!

உயிர் கரையும் வரை காற்றோடு
ஊடல் கொள்வது மட்டுமே
இந்நுரையின் பிறவி நோக்கம்!

வெயிலால் முகம் சுருங்கக் கொள்கிறது
சில தருணங்களில் மரக்கிளையிடமோ
மனிதனிடமோ, மண் சாலையிடமோ
தன்னை மரித்துக் கொள்கிறது
பெரும்பாலுமவை காற்றின் வேகத்திற்கு
ஈடு கொடுக்க முடியாமற் தன்னுடல்
சிதறிப் போகிறது சிரித்தவாறே!

Series Navigation