(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா

This entry is part [part not set] of 35 in the series 20070705_Issue

சி. ஜெயபாரதன், கனடா


(கிளியோபாத்ரா இறந்த செய்தி கேட்டு)

என் உடைவாளை அகற்று ஈராஸ் !
இன்றைய நீள் பொழுதின் வேலை முடிந்தது !
தூங்கும் நேரம் வந்து விட்டது ! ……..
ஏழடுக்குக் கவச அணியும்
என்னுள்ளத் துடிப்பை அடக்க முடியாது !
ஒரு காலத்தில் உடம்பை விட
உறுதியாய் இருந்தது என்னிதயம் !
மிருதுவான உடற் கூண்டை
நொறுக்கி விடு ! போதும் போர் புரிந்தது !
உன்னுடன் இணைவேன் கிளியோபாத்ரா !
மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் விடுகிறேன்.
என் நீண்ட ஆயுள் முடிந்தது
எரித்தீபம் அணைந்து போனதால் !
தணிந்து போ ! நடமாட்டம் போதும் !
இனிமெய் வருந்திச் செய்யும் எனது
பணிகளால் விளைவது மனச் சிதைவே !
என்னினிய ராணி ! உன்னிடம் வருகிறேன் !
எனக்காக நீ காத்திரு ! ….. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

கிளியோபாத்ரா மரித்துப் போயினள்,
அவமானப் பட்டு வாழ்ந்து வருகிறேன்.
தெய்வங்கள் அறவே வெறுக்கும் என்னை !
மாதரின் மனவலு வில்லா மனிதனாய்
தாழ்த்திக் கொள்கிறேன் என்னை ! ….
என் ஆணைக்குப் பணிந்து நீ
என்னைக் குத்திட வேண்டும்
இப்போதே முடித்திடு (ஈராஸ்) ! ….. (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ரோமாபுரி இல்லத்தின் பலகணியில் நீ நின்று
உன் பிரபு தலை கவிழ மண்டி யிட்டு
கைகள் கட்டப் பட்டு வெளுத்துப் போய்
கழுத்தொடிந்து சோக முகத்துடன்
அவமானம் நெஞ்சத்தை ஊடுருவ,
இரு சக்கர வாகனத்தில் அக்டேவியஸ்
செருக்குடன் அவன்முன் கடந்து செல்லும்
சீரழிவுக் கோலத்தை நேராய்ப் பார்க்கிறாயா ? (ஈராஸிடம் ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 8

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். போரில் தோல்வியுற்று அவமானப் பட்டு வேதனையில் உள்ள போது, கிளியோபாத்ரா அவன் கவனத்தைக் கவரத் தான் செத்து விட்டதாகச் செய்தி அனுப்புகிறாள். ஆண்டனி மரணத் தகவல் கேட்டு மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முனைகிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 8

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: ஆண்டனி, படைத்தளபதி ஈராஸ், டையமீடிஸ் (கிளியோபாத்ராவின் தூதன்], காவலளர்கள்.

காட்சி அமைப்பு: மர்டியான் கிளியோபாத்ரா அனுப்பிய பொய் மரணச் செய்தியைக் கேட்டு மெய்யெனக் கருதி, ஆண்டனி மனமுடைந்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிகிறான். அதற்கு ஈராஸ் உதவியை நாடுகிறான் ஆண்டனி.

ஆண்டனி: [மனமுடைந்து, கண்ணீருடன்] ஈராஸ் ! என் கண்மணி கிளியோபாத்ரா தன்னுயிர் நீத்தபின் எனக்கினி எகிப்தில் வேலை இல்லை ! என் போருடையை அகற்று ! அதற்கும் இனி ஓய்வுதான் ! என் உடைவாளை உறைக்குள் போட்டு என்னோடு புதைத்து விடு. எனக்கும் விடுதலை ! என் உடைவாளுக்கும் விடுதலை ! நான் உறங்கச் செல்ல வேண்டும் ! மீண்டெழாத நீண்ட தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். அதுவே நிம்மதி அளிக்கும் எனக்கு ! கிளியோபாத்ராவுடன் இணைந்து கொள்ள வேண்டும் நான் ! திசை தெரியாமல் போய்க் கொண்டிருந்த எனக்கு, போகும் திசையைக் காட்டியவள் கிளியோபாத்ரா ! சொல்லிக் கொள்ளாமல் போன கிளியோபாத்ராவின் திடீர் மரணம் என் இதயத்தில் துடிப்பு அலைகளை உண்டாக்கி விட்டது. ஏழடுக்குக் கவச உடுப்பு கூட அந்த துடிப்பை அடக்க முடியாது ! ஒரு காலத்தில் என்னிதயம் உடலை விட ஊக்கமோடும், உறுதியோடும் இருந்தது. இப்போது என் உடலில் கீறல் விழுந்து விட்டது. கிளியோபாத்ரா எனக்காகக் காத்திருப்பாள் ! அவளுடன் நான் சேர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு நீ உதவுவாயா ஈராஸ் ?

ஈராஸ்: [கவலையோடு] தளபதி ! என்ன சொல்கிறீர் ? எனக்குப் பயமாக இருக்கிறது. என்ன உதவி செய்ய வேண்டும் நான். பிரமிடுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா ? கிளியோபாத்ரா மரித்துக் கிடக்கும் இடத்துக்கு உம்மை அழைத்துச் செல்வதில் எனக்குச் சிரமம் இல்லை ! அது ஒன்றும் பெரிய உதவி இல்லை.

ஆண்டனி: ஈராஸ் ! அந்த உதவியை நான் உன்னிடம் கேட்க வில்லை. கிளியோபாத்ரா மரணத்துக்கு நான்தான் காரண கர்த்தா ! அக்டேவியஸிடம் நான் தோற்றுப் போனதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! அவளைக் காப்பாற்ற வந்த அதி வீரன் நான் தோற்றுப் போய் என்னுயிரைக் காப்பாற்ற வேண்டிய அவமான நிலை எனக்கு ! எப்படிப் பொறுத்துக் கொள்வாள் அத்தோல்வியை ? என் ஆண்மை வீரம் அழிந்துபோய், பெண்ணுக்குள்ள நெஞ்சுறுதி கூட இல்லை என்னும் கேவல நிலைக்கு வீழ்ந்து விட்டேன். நான் அக்டேவியஸின் சிறையில் அவமானப் படுவதை விட உயிரை மாய்த்துக் கொள்வதே முறையானது என்னும் முடிவுக்கு வந்து விட்டேன். எனக்கு முன்பே நீ வாக்களிதிருக்கிறாய். அந்த ஒப்பந்தப்படி நான் ஆணையிட்டால் அதை நிறைவேற்றுவாயா ?

ஈராஸ்: [நடுங்கிக் கொண்டே] என்ன ஆணை என்று தெரியாமல் நான் எதுவும் ஒப்புக் கொள்ள முடியாது, தளபதி.

ஆண்டனி: ஈதோ என் உடைவாள் ! அதை என் உடலில் பாய்ச்ச வேண்டும் ! ஆம் அதுதான் என் ஆணை ! உடனே செய் ஈராஸ் ! தருணம் வந்து விட்டது ஈராஸ், என் மரணத்தை நானே முடித்துக் கொள்ள ! நீ எனக்கு மரண வாசலைத் திறந்திடுவாயா ?

ஈராஸ்: [கண்களில் விழி பிதுங்க] தளபதி ! என்னால் முடியாது ! நான் வாக்களித்தது இதுவன்று. இந்த பயங்கரக் கொலையை நான் செய்ய முடியாது ! நான் பணிபுரியும் ரோமாபுரிப் பிரபுவின் உடல் மீது இந்தக் கை எப்படி உடைவாளை உள்ளே செலுத்தும் ? வலுமிக்க என் கைகள் வலுவிழந்து தொங்குகின்றன ! எப்படிச் செய்வேன் இந்த மரண வேதனையை ? மன்னிக்க வேண்டும் தளபதி ! உங்கள் உயிரைக் காப்பது என் பணியே தவிர, உயிரைப் பிரிப்பதில்லை ! என் வாக்கை நான் மீறத் தயார் ! ஆனால் உங்கள் உயிரைப் போக்க நான் தயாரில்லை ! அழகிய மாது அக்டேவியா விதவை ஆவதை நான் தாங்கிக் கொள்ள முடியாது ! தெய்வங்கள் என்னைத் தண்டிக்கும் ! தீராத மன நோயில் வெந்து சாவேன் !

ஆண்டனி: ஈராஸ் ! ரோமாபுரி இல்லத்தின் பலகணியில் நீ நின்று கொண்டு, தெரு வழியே உன் பிரபு சிரம் கவிழ்ந்து, மண்டியிட்டுக் கைகள் கட்டப்பட்டு வெளுத்துப் போய் சோக முகத்துடன் அவமானம் நெஞ்சத்தை உள்ளே அரித்து வர, இரு சக்கிரத் தேரில் அக்டேவியஸ் இறுமாப்புடன் கடந்து செல்லும் சீரழிவுக் கோரத்தைக் காண விரும்புகிறாயா ?

ஈராஸ்: [முகத்தைத் திருப்பிக் கொண்டு] வேண்டாம் அந்த அவமானம் உங்களுக்கு தளபதி ! என்னால் அதையும் தாங்கிக் கொள்ள முடியாது பிரபு !

ஆண்டனி: அப்படியானால் என் வேண்டுகோளை நிறைவேற்று ! இக்கணமே நிறைவேற்று ! என் வாளைத் தொட அஞ்சினால் உன் வாளால் என்னைக் குத்திவிடு ! ஒரே ஒரு முறைதான் ! அது என் இறுதி ஆணை. நாட்டுக்கு உதவிய உன் போர்வாளால் ஓர் உன்னத பணியை எனக்குச் செய் !

ஈராஸ்: மன்னித்திடுவீர் ! மறுக்கிறேன் உங்கள் கட்டளையை !

ஆண்டனி: சொன்னதைச் செய் ! உருவிடு உன் வாளை ஈராஸ் ! என் வேளை நெருங்கி விட்டது ! உன் கடமை என் கட்டளைக்குப் பணிவது ! ஒருமுறை மட்டும் பணிந்திடு ! உனக்கினி ஆணை என்னிடமிருந்து வராது !

ஈராஸ்: [மனம் ஒப்பிக் கண்ணீருடன்] நானிதைச் செய்ய வேண்டு மென்றால் நீங்கள் அப்புறம் திரும்பிக் கொள்ள வேண்டும். உங்கள் உன்னத முகம் நான் செய்வதைக் காணக் கூடாது !

ஆண்டனி : சரி, உன் ஆணைக்கு நான் அடி பணிகிறேன். [ஆண்டனி அப்புறம் திரும்பிக் கொள்கிறான். ஈராஸ் தன் வாளை உருவுகிறான்]

ஈராஸ்: [மனம் வெதும்பி அழுகையுடன்] உருவி விட்டேன் என் வாளை, உங்கள் கட்டளைப்படி ! கட்டளை நிறைவேற வேண்டுமா ?

ஆண்டனி: நன்றி ஈராஸ் ! ஓங்கிக் குத்து ! ஒரே குத்திலே என் வாழ்வு முடிய வேண்டும் ! செய், சீக்கிரம் செய். என்ன சிந்தனை செய்கிறாய் ?

ஈராஸ்: என்னரிய பிரபு ! என்னினிய தலைவா ! என்னுயர்ச் சக்கரவர்த்தி ! என்னிறுதி வணக்கம் ! ஓங்கிக் குத்துவதற்கு முன் உம்மிட மிருந்து விடை பெறுகிறேன் ! விடை பெறுகிறேன் ! விடை அளிப்பீர் என் வேந்தே ! [கத்தியைத் தன் வயிற்றிக் குத்திக் கொண்டு அலறிய வண்ணம் வலியுடன் கீழே துடித்து வீழ்கிறான். குருதியில் புரள்கிறான்.]

ஆண்டனி: [திரும்பிக் கொண்டு கீழே குனிந்து ஈராஸைத் தாங்கிக் கொண்டு] ஈராஸ் ! ஈராஸ் ! என்ன காரியம் செய்தாய் ? என்னைக் கொல்லக் கட்டளை இட்டால், உன்னைக் கொன்று விட்டாயே ! உன் மரணத்துக் காரண கர்த்தாவாக என்னைத் திருப்பி விட்டாயே ! [கோவென தலையில் கைவைத்து அழுகிறான்]

ஈராஸ்: மகாவீரரே ! உம்மைக் கொல்வதிலிருந்து தப்பி விட்டேன் ….. விடை பெறுகிறேன். [ஈராஸ் கண்மூடி மரிக்கிறான்]

ஆண்டனி: [மிக்க கவலையுடன்] முதலில் என் இதய ராணி போனாள், இப்போது என் படைத் தலைவனா ? தனிப்பட்டுப் போகிறேன் அனுதினமும் நான் ! எப்படிச் சாவது என்று தெரியாமல் போன எனக்கோர் வழி காட்டினாய் ஈராஸ் ! நீ கற்றுக் கொடுத்த பயிற்சியை நான் முயற்சி செய்கிறேன். நானொரு மணமகன் இப்போது ! காதலர் படுக்கையான கத்தியின் மீது நான் விழப் போகிறேன் ! [கீழே கிடந்த தன்வாளைத் தளத்தில் நட்டு அதன் மீது விழுகிறான், அலறுகிறான், புரள்கிறான், துடிக்கிறான். குருதி பொங்கி ஓடுகிறது.] [காவலரை நோக்கி] என்னுடலை அப்புறப் படுத்துங்கள். ஒரு வேண்டுகோள். என்னுயிர் குடித்த இந்த வாளை, என்னிறுதிக் கொடையாய் அக்டேவியஸ¥க்கு அளித்திடுவீர்.

முதல் காவலன்: அப்படியே செய்கிறோம் தளபதி. தெய்வமே ! நமது பெரும் தளபதியும் மாய்ந்தார். [யரோ வரும் அரவம் கேட்கிறது] யாரங்கே ?

[கிளியோபாத்ராவின் தூதுவன் டையோமீடிஸ் வருகிறான்]

டையோமீடிஸ்: நான்தான் டையோமீடிஸ் ! கிளியோபாத்ரா அனுப்பிய தூதன் ! தளபதி ஆண்டனிக்குத் தகவல் தர வந்திருக்கிறேன். எங்கே தளபதி ஆண்டனி ?

ஆண்டனி: [தழுதழுத்த குரலில்] டையோமீடிஸ், ஈதோ கிடக்கிறேன் தரையில் ! உன்னை எப்போ அனுப்பினாள் கிளியோபாத்ரா ? எங்கே உள்ளாள் கிளியோபாத்ரா ? வானுலகத்திலா அல்லது வையகத்திலா ? செத்தவளா உன்னைத் தூது அனுப்பினாள் ?

டையோமீடிஸ்: மகாராணி சாகவில்லை ! தளபதி, மகாராணி சாகவில்லை ! அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார். செத்ததாகச் செய்தி அனுப்பி உங்கள் கவனத்தைக் கவரச் செய்தார் ! அடடா என்ன தவறு நேர்ந்து விட்டது ? விளையாட்டு வினையாகி விட்டதே ! இப்போது மெய்யாக நீங்கள் மரணமாகி மகாராணி கவனத்தைக் கவர்ந்து விட்டீர் ! உண்மை பொய்யாகி விட்டது ! பொய் மெய்யாகி விட்டது ! உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் மூன்று தரம் உலகைச் சுற்றி விட்டதே !

ஆண்டனி: டையோமீடிஸ் ! காவலர் உதவியுடன் என்னை மாளிக்கைக்கு எடுத்துச் செல் ! கிளியோபாதராவிடம் விடை பெற வேண்டும். என்னைத் தூக்கிச் செல்வீர்.

[காவலர் உதவியுடன் டையோமீடிஸ் ஆண்டனியைத் தூக்கிச் செல்கிறான்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 4, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 7 ஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம்

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஈதோ இங்குள நான்தான் ஆண்டனி !
சின்னவனே,
எனது இந்த கோலத்தை
இனிக் காட்ட இயலாது ! நான்
போர்கள் புரிந்தது எகிப்துக் காக !
எகிப்த் ராணிக்காக ! அவள்
இதயம் கவர்ந்தாய் எண்ணினேன், !
ஏனெனில் அவள்
என்னுளத்தைப் பிடித்துக் கொண்டவள் !
என்னுடைய தாயினும்
அவள் நெஞ்சமதை இழந்தேன்,
அத்துடன் ஆயிரம் ஆயிரம்
நெஞ்சங்களும் இழந்து போயின !
அக்டேவிய ஸோடு உடன்படிக்கை செய்து,
ஆண்டனிக்குப் போலிப் புகழ்ச்சி,
எதிராளி வெற்றி சூட !
அழாதே கனிவுள்ள ஈராஸ் !
நமது முடிவுகளை நாமே முடித்திட
நாமெல்லாம் விடப் பட்டிருக்கிறோம் ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

புள்ளினம் கூடுகட்டி யுள்ளன
கிளியோ பாத்ராவின் படகுகளில் !
போர் எப்படி முடியும் என்று
உண்மை சொல்லத் தயங்குவர் ஜோதிடர் !
உம்மென முகத்தைக் காட்டித்
தம்மறிவை மறைத்துக் கொள்கிறார் !
வீரரே ஆண்டனி, ஆயினும்
வெறுப்படைந் துள்ளார்.
துருப் பிடித்துப் போன அவரது
துரதிர்ஷ் டத்தால்
பயமும், நம்பிக்கையும் மாறிமாறி வரும்,
அவரிடம் அதிர்ஷ்டம் உள்ளதா இல்லையா
எவரதை அறிவார் ? (ஸ்காரஸ், ஆண்டனியின் படைத் தளபதி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

போவது நல்லது நீ, வாழ்வதில் பலனிருந்தால் !
கோபத்திற்கு ஆளானாய் (கிளியோ பாத்ரா) !
ஒரு மரணம் பல சாவுகளைத் தவிர்க்கும் ! ……
மாயக்காரி மரித்து போக வேண்டும் !
வீழ்ந்து விட்டேன் சதித் திட்டத் துள்ளே ! (ஆண்டனி)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

எனக்குதவி செய்ய வாரீர் என் தோழியரே !
மனநோய் பற்றி விட்டது ஆண்டனிக்கு ! …..
பிரமிட் புதையகத்தில் மறைந்து வாளால்
மரணம் அடைந்தேன் என்று அறிவிப்பாய் !
அலறினேன் முடிவில் “ஆண்டனி” யென்று
பரிவாய் உரைத்திடு ! பாசம் என்மேல்
வருகுதா எனப் பார் என்
மரணச் செய்தி கேட்டு ! (கிளியோபாத்ரா)

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா)

ஆண்டனி & கிளியோபாத்ரா
மூன்றாம் பாகம்

நாடகப் பாத்திரங்கள்:
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில்:
கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி
ஆண்டனி: ரோமாபுரியின் மூன்று தளபதிகளில் ஒருவர்
டையோமீடிஸ்: கிளியோபாத்ராவின் பணியாள்
ஸெலியூகஸ்: கிளியோபாத்ராவின் கணக்காளி
பெல்லோடோரஸ்: கிளியோபாத்ராவின் பாதுகாப்புக் காவலன்.
பிதாதீதா: கிளியோபாத்ராவின் ஆயா
சிஸேரியன்: கிளியோபாத்ராவின் மகன்

ரோமாபுரியில்:
ரோமின் தளபதி: மார்க் ஆண்டனி,
அக்டேவியஸ் சீஸர்: ரோமின் இரண்டாம் தளபதி, ஜூலியஸ் சீஸரின் சகோதரன் மகன்
லெப்பிடஸ்: ரோமின் மூன்றாம் தளபதி
எனோபர்பாஸ்: ஆண்டனியின் ஆலோசகன், பாதுகாவலன்
கானிடியஸ்: ஆண்டனியின் போர்த் தளபதி
டெமிட்ரியஸ்: ஆண்டனியின் நண்பன்
•பிலோ: ஆண்டனியின் நண்பன்
ஸெக்டஸ் பாம்ப்பி (கொல்லப்பட்ட போர்த் தளபதி பாம்ப்பியின் வாலிப மகன், இளைய பாம்ப்பி)
அக்டேவியா (ஆண்டனியின் இரண்டாம் மனைவி, அக்டேவியஸின் சகோதரி)

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 7

ரோமா புரியின் நிலைமை: •பிலிப்பிப் போரில் புரூட்டஸ், காஸ்ஸியஸ் மற்ற சதிகாரர் யாவருமிறந்த பிறகு, ஆண்டனி, அக்டேவியஸ், லெப்பிடஸ் மூவர்களின் கூட்டு மேற்பாட்டில் ரோமாபுரி இயங்கி வருகிறது. ஜூலியஸ் சீஸர் கொலையாகி இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஆண்டனி கிளியோபாத்ராவைக் காண எகிப்த் வருகிறான். மனைவி •புல்வியா மரணம் அடைந்த பிறகு, ஆண்டனி தனிமையாகிக் கிளியோபாத்ரா மீது நாட்டம் உண்டாகுகிறது. அதே சமயத்தில் நிதிக் களஞ்சியம் காலியாகிப் போர்வீரர்களுக்குக் கூலி கொடுக்க நிதியின்றிப் பணம் திரட்ட வேண்டி, ஆண்டனி எகிப்து செல்லத் திட்டமிடுகிறான். எகிப்த் அரசியிடம் நேராகக் கையேந்திப் பிச்சை கேட்கத் துணிவின்றி, கிளியோபாத்ரா தன்னைக் காண வரவேண்டும் என்று காவலர் மூலம் உத்தரவு அனுப்புகிறான். ஆனால் கிளியோபாத்ரா எகிப்த் தளத்தில் தானிருப்பதாகவும், ஆண்டனிதான் அவளைக் காண வரவேண்டும் என்று மறுமொழி அனுப்புகிறாள்.

எகிப்துக்கு வந்த ஆண்டனி தன் மனைவி புல்வியா போர்க்களத்தில் தனித்துப் போய் நோயில் மரணமடைந்த தகவல் கேட்டு மனம் நோகிறான். ரோமுக்கு மீளவும் விரும்பாது, கிளியோபாத்ராவின் கவர்ச்சியிலிருந்து மீளவும் முடியாது திண்டாடுகிறான் ஆண்டனி. இளைய பாம்ப்பி ரோமாபுரியைத் தன்வசமாக்க முயற்சிக்கிறான். கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்த ஆண்டனி ரோமுக்கு மீளத் தயங்குகிறான். அக்டேவியஸ் தன் தங்கையை மணக்க வழி செய்து ஆண்டனியை மைத்துனன் ஆக்கிக் கொள்கிறான். திருமணத்தைக் கேள்விப்பட்ட கிளியோபாத்ரா வெகுண்டெழுகிறாள். ஆண்டனி எகிப்துக்கு மீண்டு மனைவியை மறந்து கிளியோபாத்ராவிடம் மனதைப் பறிகொடுத்து மயங்கிக் கிடக்கிறான். ஆண்டனியைத் தண்டிக்க அக்டேவியஸ் ரோமானியப் படையுடன் ஆக்டியக் கடற் பகுதியில் போரிட்டு வெற்றி அடைகிறான். தோற்றுப் போன ஆண்டனி ஆக்டேவியஸ் தூதரை விட்டு அனுப்பிய நிபந்தனைகளில் கையொப்பமிடுகிறான். ஆயினும் இருவருக்குள்ளும் நிரந்தரப் பகை உண்டாகி, ஆண்டனி எகிப்தில் அடைபட்டுப் போகிறான். அவனைக் கைது செய்ய அக்டேவியஸ் எகிப்துக்குத் துரத்திச் செல்கிறான்.

++++++++++++++++++

கிளியோபாத்ரா
அங்கம்: 8 காட்சி: 7

நேரம், இடம்: அலெக்ஸாண்டிரியா அரண்மனையில் கிளியோபாத்ராவின் மாளிகை. பகல் வேளை.

நாடகப் பாத்திரங்கள்: கிளியோபாத்ரா, தோழியர் சார்மியான், ஐரிஸ், மர்டியான், ஆண்டனி, புதிய படைத்தளபதி ஸ்காரஸ், ஈராஸ்,

காட்சி அமைப்பு: கிளியோபாத்ரா படுக்கையில் கவலையுடன் படுத்திருக்கிறாள். அருகில் சார்மியான், ஐரிஸ், மர்டியான் ஆகியோர் நிற்கிறார்.

கிளியோபாத்ரா: [மனம் நொந்துபோய்] சார்மியான், மனக்கவலை தீர்க்க எனக்கு உதவி செய். ஆண்டனி வெறியுடன் என்னை வெறுத்து ஒதுக்குகிறார். ஏனென்று தெரிய வில்லை ? கடற்போரில்
மீண்டும் தோற்றுப் போய் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார். எனக்கொரு யுக்தியைச் சொல்லிக் கொடு. மறுபடியும் ஆண்டனியைக் கவருவது எப்படி என்று ஆலோசனை சொல். என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. நேற்று எனக்குத் தூக்க மில்லை ! ஏக்கம், ஏக்கம், வெறும் ஏக்கம்தான் ! சொல் எனக்கொரு வழி ! தனிமை என்னைக் கொல்கிறது ! மனத் தவிப்பு என்னை எரிக்கிறது !

சார்மியான்: மகாராணி ! எனக்கோர் ஆலோசனை தோன்றுகிறது. பிரமிடுக்கு நீங்கள் போக வேண்டும். உங்களுக்காகக் கட்டப் பட்டிருக்கும் புதைப் பெட்டகத்தில் ஒளிந்து கொண்டு அரணைப் பூட்டிக் கொள்ளுங்கள். பிறகு செத்து விட்டதாக ஆண்டனிக்குச் செய்தியை அனுப்புங்கள். உடலும் ஆத்மாவும் பிரிவினால் பிளக்கப் படாது. மரணம் ஒன்றே பிளக்கும் வலு உடையது மகாராணி !

கிளியோபாத்ரா: நல்ல ஆலோசனை சார்மியான். அப்படியே செய்கிறேன். பிரமிட் புதையகத்தில் நான் குத்திக் கொண்டு செத்து விட்டதாய் ஆண்டனிக்குச் செய்தி அனுப்பு ! சாகும் போது இறுதியாக நான் அலறிச் சொல்லியது, “ஆண்டனி” என்று கூற வேண்டும் ! அதைப் பரிவாகப் பணிவாகக் கண்ணீருடன் ஆண்டனி நம்பும்படிச் சொல்ல வேண்டும் தெரியுமா ? என் மரணச் செய்தியைக் கேட்டு ஆண்டனி எப்படி நடந்து கொண்டார் என்பதைச் சொல்ல என்னிடம் வா ! போ, சீக்கிரம் போ ! சார்மியான் ! பிரமிட் வாயிலைத் திறக்கக் காவலரை அனுப்பு ! நான் போவதற்கு வாகனத்தைத் தயார் செய்.

[கிளியோபாத்ரா தன் தோழியரோடு போகிறாள். வேறு திசையிலிருந்து ஆண்டனியும், ஈராஸம் நுழைகிறார்கள்]

ஈராஸ்: ஏதோ சிந்தையில் மூழ்கி இருப்பதுபோல் தெரிகிறது ?

ஆண்டனி: ஆம் ஈராஸ் ! உன் கண்களுக்கு என் தோற்றம் இன்னும் தெரிகிறதா ? தீயணைந்து போய், நெருப்பு மறைந்து நான் புகை வடிவத்தில்தான் உலவி வருகிறேன். சில நாட்களில் புகையும் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும் ! வான மண்டலத்தில் மேகங்கள் சில சமயம் டிராகனைப் [தீயினைக் கக்கும் விலங்கு] போல் நமக்குத் தெரியும். சில சமயம் புகை ஆவி சிங்கம் போல் அல்லது கரடி போல் தெரிந்து நம்மை பயமுறுத்தும். அப்படி ஆனது என் தோற்றம் ! என் வீரமும், தீரமும் வரலாறாய்ப் போயின ! என் பேரும் புகழும் இதிகாசக் கதையாய்ப் போனது.

ஈராஸ்: பேராற்றல் படைத்த அலெக்ஸாண்டர் நோய்வாய்ப்பட்டுச் செத்தார் ! ஜூலியஸ் சீஸர் சதிகாரர் வாளுக்கு இரையானார் ! ஆனால் உயிரோடிருக்கும் ஆண்டனிக்கு அருகில் எந்தப் பகைவனும் நெருங்க முடியாதே !

ஆண்டனி: எனக்குப் பகை இப்போது என் ஆத்மாவிலே வேரூன்றி யுள்ளது ! நான் போரிட்டது எகிப்துக்கு ! எகிப்தின் எழில் ராணிக்கு ! கிளியோபாத்ராவின் மனதைக் கவர்ந்து விட்டதாக எண்ணினேன் ! காரணம் அவள் என் மனதைக் கவர்ந்தவள் ! என்னுள்ளம் அவள் நெஞ்சுக்குள் இருந்தாலும், வேறொருவர் இதயமும் அதனுள்ளே இடம் பெற்று விட்டது ! என்னால் என்ன செய்ய முடியும் ? என் நெஞ்சம் ஒடுங்கியது ! குறுகியது ! ஆழமானது ! கிளியோபாத்ராவின் இதயம் அகண்டது ! ஆழமற்றது ! அவளது கவர்ச்சியை நான் இழந்துவிட்டேன். தோற்ற பிறகு எனது கவர்ச்சி போய்விட்டது ! அவள் கவனம் வேறொருவர் மீது செல்கிறது. அவளுக்காக ரோமானியரை நிரந்தரமாகப் பகைத்துக் கொண்டேன். ரோமானியரை என் வாளால் கொன்றேன். இப்போது நான் ரோமானியனுமில்லை ! எகிப்தியனுமில்லை ! நாடற்ற, நாதியற்ற அகதியாகப் போனேன் ! (ஈராஸ் கண்ணீர் வடிக்கிறான்) அழாதே ஈராஸ் ! நம் முடிவை நாமே முடித்துக் கொள்ள நமக்குத் தருணம் வந்து விட்டது !

[அப்போது மர்டியான் கிளியோபாத்ராவின் செய்தியைக் கொண்டு வருகிறாள்]

மர்டியான்: [ஆண்டனிக்கு வணக்கம் செலுத்தி] வந்தனம் மேன்மைமிகு தளபதியாரே ! மகாராணியின் தகவலைக் கொண்டு வந்திருக்கிறேன்.

ஆண்டனி: கெட்ட செய்தியாகத்தான் இருக்க வேண்டும் ! நல்ல தகவல் என் காதில் விழுந்து பல நாட்கள் ஆகிவிட்டன ! என் உடைவாளைப் பறித்துக் கொண்டாள் உன் மகாராணி ! நானொரு வீரன் அல்லன். போலி வீரன் ! என்னைப் போலி ஆண்டனி ஆக்கியவள் உங்கள் ராணி.

மர்டியான்: இல்லை தளபதியாரே. எங்கள் மகாராணி உங்களை மிகவும் நேசித்தார். உண்மை அதுதான் ! யாரோ உங்களை மாற்றி விட்டார் ! அவரது ஊழ்விதி உங்கள் கையில் உள்ளது. அவரது நல்லது, கெட்டதில் உங்கள் பங்கு நிரம்ப உள்ளது. அவரது அதிர்ஷ்ட தேவதை உங்கள் தோள்மீதுதான் சவாரி செய்கிறாள்.

ஆண்டனி: அலி தேவதையே ! உங்கள் ராணியின் அதிர்ஷ்ட தேவதை என்தோள் மீதிருந்து குதித்தோடி விட்டாள். என்னை வஞ்சித்து விட்டவள் உங்கள் மகா, மகாராணி ! அவளுக்கு மரண தண்டனை விதிக்கிறேன். கிளியோபாத்ரா ஒரு நயவஞ்சகி !

மர்டியான்: [குழப்பம் அடைந்து தடுமாறி] என்ன சொல்கிறீர் தளபதி ? மரண தண்டனையா ? எனக்கொன்றும் புரியவில்லை ! மரணம் வருவது ஒருவருக்கு ஒரு முறைதான் ! மரணத்துக்குச் சரணம் ஒரே முறைதான் ! உங்கள் கையிக்கு அந்த வேலையை அளிக்காது, தானே செய்து கொண்டார் எங்கள் உத்தம ராணி ! நீங்கள் மகாராணிக்கு ஏன் மரண தண்டனை விதிக்க வேண்டும் ? மரித்துப் போன எங்கள் மகாராணிக்கா மறுபடி ஓர் மரணம் ! பிரமிடின் புதைக்குழியில் மீளா உறக்கத்தில் பள்ளி கொண்டார் எமது ராணி ! இறப்பதற்கு முன் எங்கள் ராணியின் உதடுகள் உரைத்தவை: “ஆண்டனி ! என்னினிய ஆண்டனி.” மகாராணி தன்னினிய உயிரைப் போக்கிக் கொண்டாள். இறுதியில் உயிர் போகும் போது அலறிய குரலில் “ஆண்டனி” என்னும் பெயர் இதயத்துக்கும் உதடுகளுக்கும் இடையே ஊஞ்சல் ஆடியது. உங்கள் பெயரும் அவரது உள்ளத்தில் புதைக்கப் பட்டிருக்கிறது.

ஆண்டனி: [மன வேதனையுடன்] ஆ! கண்ணே ! கிளியோபாத்ரா ! நீ மரித்து விட்டாயா ?

மர்டியான்: [கண்ணீர் சொரிய] ஆம் ராணி மரித்து விட்டார். எங்கள் மகாராணி மரித்து விட்டார் ! [அழுகிறாள்]

ஆண்டனி: என் கண்மணி கிளியோபாத்ரா போய்விட்டாளா ? போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்ளாமலே என்னை விட்டுப் போய்விட்டாள் ! என்னை ஏங்க வைக்கத் தான் முந்திக் கொண்டுவிட்டாள்! என் கண்ணீரைக் கொட்டி உலகின் முன் நான் அலற விட்டுவிட்டுத் தான் முந்திக் கொண்டு விட்டாள்! அக்டேவியஸின் உதடுகள் அடுத்து அவளை முத்தமிடப் போவதாய் கற்பனை செய்தேன். ஆனால் அவள் மரணத்தை முத்தமிட்டு அதைத் தழுவ முந்திக் கொண்டாள் ! எனது உடைவாள் அவளது குருதியைச் சுவைக்க வேண்டும் என்று நான் தீட்டிக் கொண்டிருந்தேன். இனி எதற்கு எனக்கு உடைவாள் ? தேவையில்லை [வாளைத் தரையில் விட்டெறிகிறான்]. போ மர்டியான் போ ! உன் பணியைத் திறம்படச் செய்தாய் ! பிரமிடில் உறங்கும் உன் ராணியிடம் சொல் ! என மனது விண்டு போனது என்று சொல் ! என் நெஞ்சம் துடியாய்த் துடிக்குது எனச் சொல் ! என் மூளை மரத்துப் போனதெனச் சொல் ! என் கண்கள் மங்கிப் போயின என்று சொல் ! என் செவிகள் அடைத்துப் போயின என்று சொல் ! என் வாய் ஊமையானது என்று சொல் ! போ மர்டியான் போ, பிரமிட வாயிலைத் திறந்து வைக்கச் சொல் ! கிளியோபாத்ராவின் உயிர்த் துணைவன் ஆண்டனி கண்ணீரைக் கொட்ட வருகிறான் என்று சொல் ! அவளது ஈமக்கிரியையில் நான் கலந்து கொள்ள வேண்டும்.

[மர்டியான் அழுது கொண்டே போகிறாள்]

(தொடரும்)

*********************

Based on The Plays:

1. Bernard Shaw’s Caesar & Cleopatra [Play-1]

2. William Shakespeare’s Julius Caesar [Play-2]

3. William Shakespeare’s Antony & Cleopatra [Play-3]

4. Britannica Concise Encyclopedia [2003]

5. Encyclopedia Britannica [1978 & 1981]

6. Life of Antony By: Plutarch

7. Elizabeth Taylor As Cleopatra, Movie & Images.

8. Life of Pompey the Great Wikipedia Encyclopedia

9. Shakespeare’s Antony & Cleopatra Edited By: David Bevington [1988]

10 Shakespeare’s Antony & Cleopatra Edited By: M.R. Ridly [1993]

11 Life of Antony & Fulvia Wikipedia the Free Encyclopedia [http://en.wikipedia.org/wiki/Fulvia]

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (June 26, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா