பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )

This entry is part [part not set] of 31 in the series 20030406_Issue

பாவண்ணன்


ஒரு பக்கத்தில் மதிப்பீடுகளின் பாரமில்லாத குழந்தைப் பருவம். மறுபக்கத்தில் மதிப்பீடுகளைச் சுமந்து சுமந்து கூன்விழும் முதுமைப்பருவம். இரண்டு விளிம்புகளுக்குமிடையே ஊசலாடுகிறது மனித வாழ்க்கை. எந்தக் குழந்தையும் மதிப்பீடுகளின் சுமைகளைத் தானே துாக்கித் தலையில் வைத்துக்கொள்வதில்லை. வளர்ச்சியினுாடே தானே மெல்லமெல்லப் பாதை மாறுகிறது. சில சமயங்களில் போதனைப் பயிற்சிகளின் வழியாகவும் அப்பாதைமாற்றம் நிகழ்கிறது. பாரமற்ற வாழ்வின் மிருதுத்தன்மையை நிதானமாக அகற்றி அந்த இடத்தில் மதிப்பீடுகளின் சுமையை வைத்தபிறகுதான் முதுமைக்கு நிம்மதி ஏற்படுகிறது. மதிப்பீடுகளின் அறிதலின்றி வாழ்க்கையில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த மதிப்பீடுகளுக்காக வாழ்வையே பலிகொடுப்பதுதான் அவலம். இத்தகு அவலங்கள் ஒரு குழந்தைமையின் நோக்கிலிருந்து எடைபோடப்படும் போது அத்துக்கத்தின் வலியை முழு அளவில் புரிந்துகொள்ள முடிகிறது.

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது நடந்துகொண்டிருந்த சமயம். தையல் தொழிலாளியாக இருந்த அப்பாவிடமிருந்து வீட்டுச்செலவுக்கென்று சாயங்காலமாகப் பணம் கிடைக்கும். கிடைத்தபிறகுதான் அரிசி,புளி, உப்பு, பருப்பு, காய்கறிகள் எல்லாம் வாங்க முடியும். இதுதான் வீட்டு நிலைமை. ஒருநாள் வீட்டுக்கு எங்கள் மாமா தம் நண்பருடன் வந்திருந்தார். எங்கள் அம்மாவின் சகோதரர். ஒரு பக்கம் அம்மாவுக்குச் சந்தோஷம். மறுபக்கம் விருந்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலையும் படபடப்பும். என்னை அறைக்குள் அழைத்துச் சென்று கடைக்குப் போய் கடன்சொல்லி ஒரு கலர் வாங்கி வரும்படி ரகசியமாகச் சொன்னாள். வாங்கிவரும் கலரில் எப்படியும் ஒரு வாயாவது எனக்குக் கிடைக்கும் என்கிற ஆசையில் உடனடியாக கடைக்கு ஓடினேன். அப்போதே கலரின் தித்திப்புச்சுவை நாக்கில் புரளத் தொடங்கியது. வெறும்கையுடன் கடைமுன்னால் நின்ற என்னைப் பார்த்து ‘என்னடா ? ‘ என்று அதட்டினார் கடைக்காரர். ‘அம்மா ரெண்டு கலர் வாங்கிவரச் சொன்னாங்க. அப்பறமா காசு கொடுப்பாங்களாம் ‘ என்றேன். ‘ஒங்க அம்மா என்ன பெரிய விக்டோரியா மகாராணியா, கேட்டதும் இங்கேருந்து எடுத்துக் கொடுக்க ? பழைய பாக்கியே பத்து ரூபாய்க்கு மேல நிக்குது. மொதல்ல அத கொடுக்கச் சொல்லு. கலரு, கிலருல்லாம் அப்பறம்தான், போடா ‘ என்று அதட்டினார் கடைக்காரர்.

எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவர் குரலில் பொதிந்திருந்த சீற்றமும் கையைக் காட்டி விரட்டிய வேகமும் கழுத்தில் கைவைத்துத் தள்ளுகிறமாதிரி இருந்தது. ஒரு கணம் தயக்கத்துடன் அங்கேயே நின்றிருந்தேன் நான். சும்மா மேலுக்குக் கோபப்படுவதைப்போலக் காட்டிக்கொண்டாலும் மறுபடியும் கூப்பிட்டு அவரே தரக்கூடும் என்கிற நம்பிக்கை சிறிதளவு இருந்தது. இதைப்போல இதற்கு முன்னால் சில சமயங்களில் நடந்திருக்கிறது. ஆனால் ‘ஒருதரம் சொன்னா புரியாதா ஒனக்கு ? காதுல என்ன பஞ்சா வச்சிருக்கே ? போடா, போயி பழைய பாக்கிய வாங்கியா ‘ என்று மறுபடியும் அதட்டியதும் கடையிலிருந்து தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு வெளியேறினேன்.

கூடத்தில் மாமாவுடன் அம்மா பேசிக்கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் ‘என்னடா வெறும்கையோட வரே, ஏழு வயசுப்பையன் நீ, கலர் பாட்டில துாக்கிவர முடியலையா ? ‘ என்று கேட்டுச் சிரித்தார். உடைபடாமல் இருப்பதற்காக எனக்குப் பின்னால் யாரோ பாட்டில்களைக் கொண்டுவருவதாக அம்மாவுக்கு எண்ணம் போலும். அந்தக் கடைக்காரர் சொன்னதை அப்படியே நான் திரும்பச்சொன்னேன். ஒருகணத்தில் எல்லாருடைய முகங்களிலும் சங்கடம் படர்ந்துவிட்டது. அம்மாவின் கண்கள் கலங்கின. நிலைமையைப் புரிந்துகொண்டு சிரித்துப் பேசி மழுப்பியபடி மாமா கிளம்பினார். வந்த வேகத்தில் கிளம்பிப்போகிற மாமாவை நான் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சின்ன வயதில் பல சம்பவங்கள் இப்படி நிகழ்ந்துள்ளன. சொல்லத் தேவையற்றவை, சொல்லத்தக்கவை, மறைவாகச் சொல்ல வேண்டியவை, நேராகச் சொல்ல வேண்டியவை என எந்தப் பேதங்களும் தெரியாத சந்தர்ப்பங்களில் நிகழ்ந்தவை அவை. மற்றவர்களைச் சங்கடப்படுத்தும் என்று தெரியாத வயதில் இப்படி நடந்துகொள்வதற்குக் குழந்தைமையே காரணம்.

ஒரு படைப்பில் குழந்தைமையின் பார்வை வழியாக ஒரு சமூகக்கொடுமை அல்லது சமூக அவலம் அல்லது குடும்ப அவலங்கள் விவரிக்கப்படும்போது கூடுதலான அழுத்தத்தோடு அவை மனத்தில் பதிகின்றன. கம்ச வதமும் பூதணையின் வதமும் காளிங்க நடனமும் அபிமன்யு மரணமும் இரணிய வத விவரிப்பும் காலம் காலமாக நம் மனத்தில் பதிந்து கிடப்பதற்குக் காரணம், அவ்விவரிப்புகளின் ஒரு விளிம்பில் குழந்தைகள் இடம்பெறுவதுதான். பல படைப்புகள் மனத்தில் ஆழப் பதிந்திருந்தாலும் மறக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு கதை இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘.

உலகம் தெரியாத ஒரு சிறுவனும் திருமணத்துக்குக் காத்திருக்கும் அவன் அக்காவும்தான் கதையின் பிரதான பாத்திரங்கள். சிறுவனுக்கு அக்காவின் மீது அளவற்ற அன்பு. அம்மா நிழ்த்தும் எண்ணெய்க்குளி அவனுக்குப் பிடிப்பதில்லை. அதே எண்ணெயை அக்கா தேய்த்துக் குளிக்க வைத்தால் அளவற்ற ஆனந்தத்துக்குள்ளாவான். அறுநாக்கொடியைப் பிடித்துத் தரதரவென்று அக்கா இழுத்துக்கொண்டு போனாலும் அவன் அழமாட்டான். அக்காவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது விளையாட்டுத் தோழன் கிட்ணன் வந்து கூப்பிட்டால் கூடச் செல்ல மாட்டான். ‘நீ போடா ‘ என்று தைரியமாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுவான். அந்த அளவுக்கு அக்கா மீது அவனுக்கு விருப்பம். ஆனால் அவனுக்கு ஒரு விஷயம் மட்டும் புரிவதில்லை. எல்லா நேரங்களிலும் தன்னுடன் நெருங்கியிருக்கும் அக்கா கிட்ணனுயை அக்கா பேசுவதற்கு வந்துவிட்டால் வெளியே விளையாடச் சொல்லி அனுப்பி விடுவாள். ஒருகணம் கூடத் தன்னுடன் தங்க விடமாட்டாள். தன்னையும் அக்காவையும் பிரிக்கிற எவரையும் அப்பிள்ளை மனம் கோபத்துடன் பார்க்கும்.

அந்த அக்காவை ஒருநாள் சிலர் பெண்பார்க்க வருகிறார்கள். குசினியில் வேலை செய்யும் குஞ்சியாச்சியிடமிருந்து அந்த விஷயத்தைத் தெரிந்து கொள்கிறான் அவன். ஆனால் அச்சிறுவனுடைய மனத்துக்கு இதெல்லாம் ஏன் என்று தெரியவில்லை. கிட்ணனுடைய அக்காவின் நகைகளையெல்லாம் வாங்கி அக்கா போட்டுக்கொள்கிறாள். அம்மாவின் புடவையை அலமாரியிருந்து எடுத்து உடுத்துக்கொள்கிறாள்.

ஒரு பென்னம்பெரிய காரிலே நிறைய ஆட்கள் வந்து இறங்குகிறார்கள். அக்கா அவனைத் தன்னுடன் இழுத்து வைத்துக்கொள்கிறாள். அக்கா போட்டிருக்கிற புதிய நகைகளையெல்லாம் பார்த்தபிறகு சிறுவன் அவையெல்லாம் யாருடைய நகைகள் என்று கேட்கிறான். அக்கா சங்கடத்துடன் ‘சீ பேசாமல் இருடா ‘ என்று வாயைப் பொத்துகிறாள். காரில் வந்த மாமி அவனை உற்றுப் பார்க்கிறாள். வந்திருந்த எல்லாருடனும் சிறுவனுடைய தந்தை பேசுகிறார். ஏதோ ஒன்று இரு அணிகளிடையே சரியாகப் படியவில்லை. அவன் அப்பா கோபப்படுகிறார். அக்கா அழுவது போலச் சோர்வுடன் காணப்படுகிறாள். வந்திருந்தவர்கள் எல்லாரும் சென்று விடுகிறார்கள். சிறுவன் பள்ளிக்குப் புறப்பட்டுச் செல்கிறான்.

பள்ளி முடிந்து திரும்பும் போது வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே வாய்ச்சண்டை நடக்கிறது. சிறுவனுக்கு அச்சமாக இருந்தது. அக்காவும் கூடத்தில் நின்று அழுதுகொண்டிருக்கிறாள். பேச நெருங்கும் சிறுவனை அவள் கவனிக்கவில்லை. தன் இருப்பு உணரப்படாமையால் மனம் நொந்து போகிறான் சிறுவன். அதே சமயத்தில் தெருவில் மண்ணெண்ணெய் விற்பனையாளனுடைய குரல் கேட்கிறது. அவனைப் பார்ப்பதற்கு ஓடி வருகிறான் சிறுவன். வந்த இடத்தில் கொணமாமாவைப் பார்க்கிறான். அந்த மாமா தன் வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறார்.

கொணமாமாவின் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. எந்தப் புத்தகத்திலும் ஒரு படம் கூட இல்லை. ‘ஒரு படம் கூட இல்லையா மாமா ? ‘ என்று கேட்கிறான் சிறுவன். வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் மாமா பெட்டிக்குள் வைத்திருக்கிற படங்களையெல்லாம் அவனுக்குக் காட்டுகிறார். அவர் வரைந்து வைத்திருக்கிற படங்களில் உள்ள மாடு, குதிரைகள், விமானம் ஆகியவற்றையெல்லாம் சந்தோஷத்துடன் பார்க்கிறான் சிறுவன். அக்குவியலில் அச்சிறுவனுடைய படமும் அக்காவின் படமும் கூட இருக்கின்றன. அக்காவின் படத்தைப் பார்த்ததும் அவனுக்குப் பெருமையாக இருக்கிறது. உடனே அப்படத்தை அக்காவிடம் எடுத்துச் சென்று காட்ட வேண்டும் போல உள்ளது. தன் ஆசையை அந்த மாமவிடம் சொல்கிறான் சிறுவன். ‘அதையும் காட்டு, ஒரு கடிதம் கொடுக்கிறேன், அதையும் காட்டு ‘ என்று சொல்கிறார் மாமா.

உற்சாகத்துடன் சிறுவன் செய்த வேலை வீட்டுக்குள் பிரச்சனையைப் பெரியதாக்கிவிடுகிறது. ஏற்கனவே தோல்வியுணர்வுடன் கொதிப்பேறிய அப்பாவிடம் அடிபடுகிறான் அவன். ‘இனிமேல் மாமா வீட்டுக்குப் போவியாடா போவியாடா ‘ என்று கேட்டுக்கேட்டு உதைக்கிறார் அப்பா. உதைபடுவதற்கான காரணம் புரியவே இல்லை சிறுவனுக்கு.

இரவில் உறங்கும் போதும் அப்பா அடிப்பதைப்போலவே அவனுக்குக் கனவு வருகிறது. பயத்தில் நடுச்சாமத்தில் விழிப்பு வந்துவிடுகிறது. எழுந்து பார்க்கிறபோது அக்காவும் விழித்திருப்பதைக் காண்கிறான். அவள் தேம்பித் தேம்பி அழும் சத்தம் கேட்கிறது. அக்கா அழுவதை அச்சிறுவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எதையாவது சொல்லி அக்காவின் அழுகையை உடனடியாக நிறுத்த வேண்டும் போல இருக்கிறது. சாயங்காலம் அந்த மாமாவைச் சந்தித்தது பிசகோ என்று அப்பிஞ்சு மனம் நினைக்கிறது. அதனால்தான் அக்கா அழுகிறாளோ என்றும் தோன்றுகிறது. உடனே யோசிக்காமல், ஏயாரையும் இனிமேல் பார்க்கமாட்டேன் அக்காஏ என்று உறுதியளிக்கிறான். தொடர்ந்து அழும் அக்காவைக்கண்டு, ‘அந்த மாமாவிடமிருந்து எந்தக் கடிதமும் இனிமேல் வாங்கிவர மாட்டேன் அக்கா ‘ என்று சொல்கிறான். அப்போதும் அக்காவிடமிருந்து எந்தப் பேச்சும் வருவதில்லை. ‘பயமா இருக்குதுக்கா, என்னைக் கட்டிப்புடிச்சிக்கோக்கா ‘ என்ற போதும் திரும்பாமல் கிடக்கிறாள் அவள். முகமெல்லாம் நனைந்துகிடக்கிற அவளிடம் கடைசியாக ‘என்னிடம் கோபமா அக்கா ? ‘ என்று கேட்கிறான். பேச வார்த்தையில்லாத அக்கா திரும்பி அவனைக் கட்டியணைனத்துக் கொஞ்சுகிறாள்.

கதையில் இரு முக்கிய விஷயங்கள் நடைபெறுகின்றன. ஒன்று பெண்பார்க்கும் படலம். மற்றொன்று பெண்ணின் காதல் அம்பலமாகும் படலம். முதல் படலம் வசதி, வசதியின்மையின் முரணால் தோல்வியில் முடிவடைகிறது. அதே வசதி, வசதியின்மை அல்லது ஏற்கத்தக்க சாதி, ஏற்பில்லாத சாதி அல்லது ஒப்புக்கொள்ளத்தக்க காதல் ஒப்புக்கொள்ள இயலாத காதல் என ஏதோ ஒரு முரணால் இரண்டாம் படலமும் தோல்வியில் முடிவடைகிறது. முதல் படலத்தில் தோல்வியைத் தழுவுகிறவர் இரண்டாம் படலத்தில் தோற்கடிப்பவராக மாறுவது அழகான ச்முக முரண். ‘வசதிக் குறைவெல்லாம் ஒரு காரணமா ? ‘ என்று தனக்கு வெற்றி கிட்டாத தருணத்தில் புலம்புகிற ஒரு மனம் மற்றொரு தருணத்தில் தன்னை நோக்கிக் கேட்கப்படுகிற ‘உயர்வு தாழ்வெல்லாம் ஒரு காரணமா ‘ என்கிற கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்வதில்லை. மற்றவர்கள் எடுக்கிற முடிவு தனக்குச் சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற மனம் முடிவெடுக்கும் பொறுப்பு தன்வசம் விடப்படும்போது மற்றவர்கள் பாதிப்புகளைப் பற்றி யோசிப்பதில்லை. மனிதர்களின் சுயநலப்பிம்பம் அம்பலமாகும் இத்தகு தருணங்களை நித்தமும் நாம் பார்த்தபடிதான் உள்ளோம். ஆனால் இத்தருணங்கள் ஒரு குழந்தைமையின் நோக்கில் விவரிக்கப்படும்போது உருவாகும் பதைப்பு நம்மை அதிக அளவில் அசைத்துப் பார்த்துவிடுகிறது.

பேதம் என்பது குழந்தைமையின் உலகத்தில் இல்லாத ஒரு வார்த்தை. கபடற்ற அதன் நெஞ்சம் உலகிலுள்ள எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்க்கிறது. நெருப்புக்கும் மலருக்கும் அதன் உலகில் எந்த வேறுபாடும் இல்லை. இரண்டையும் தொட அதன் மென்மையான கரங்கள் நீண்டபடியே இருக்கின்றன. காலம்தான் பேதம் என்னும் சாரத்தை அதன் நெஞ்சில் மெல்ல மெல்ல ஊற்றிக் கறைப்படுத்துகிறது.

முத்துலிங்கம் சித்தரிக்கும் சிறுவனுடைய மனம் அன்பை மட்டுமே அறிந்து மகிழும் அளவுக்கு மென்மையானது. அக்காவின் இதமான அன்பு மட்டுமே அவன் நெஞ்சில் இடம்பெற்றிருக்கிறது. அவனுக்குச் ச்முகச் சடங்குகளோ, காதலோ, காதல் தோல்வியோ, அவமான உணர்வோ எதுவுமே புரிகிற சங்கதிகளல்ல. வீட்டில் நடந்த சண்டைகளுக்கும் அக்காவின் அழுகைக்கும் காரணங்களும் அவன் மனத்துக்குப் புரிகிற சங்கதிகளல்ல. அச்சிறுவனுக்குத் தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே. அக்காவின் அழுகையைத் தன் அன்பால் மாற்ற முயலும் அவனது இறுதி முயற்சி முக்கியமானது. ஒரளவு குறியீட்டுத்தன்மை கொண்டதாகவும் சொல்லலாம். இந்த உலகின் அழுகையை அன்பால் மட்டுமே மாற்ற முடியும் என்பது உண்மையல்லவா ?

*

இலங்கைத் தமிழிலக்கியத்தில் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் அ.முத்துலிங்கம். தமிழக வாசகர்களிடையேயும் கணிசமான அளவு கவனத்தைப் பெற்றவர். 1964 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அக்கா ‘ என்னும் சிறுகதைத் தொகுதியில் இக்கதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation