பெறுதல்

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

மதியழகன் சுப்பையா


பசுமைகள் அடர்ந்த அந்த நதிக்கரையில் காலையின் இளங்குளிர்காற்று வீசுவதுதெரியாமல் வீசிக்கொண்டிருந்தது. பூமிக்கு நீர்ச் சேலை உடுத்தி விட்டாற்போல் நீண்டு நல்ல மடிப்புகளுடன் காட்சி தந்தது அந்த ஜீவநதி. நதிக்கரையின் மணலில் இரவு பொழிந்த பனியின் ஈரம் இன்னும் காயாமல் இரு ந்தது. குளுமையான அழகை தொந்தரவுசெய்ய வேண்டாமென ஆதவன் தயங்கிக் கொண்டிருந்தான்.
தூரத்தில் மணலில் பதியாமல் தேர் ஒன்று உருண்டு வந்து கொண்டிருந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தேரோட்டி மித்வாவுடன் இந்த நதிக்கரைக்கு வந்து கொண்டிரு தான் சாந்தானு மன்னன். சாந்தனு அஸ்தினாபுரத்தின் மன்னன். அமைதியும் கலைரசனையும் மிக்க அரசன். கடந்த பதினான்கு நாட்களாக அவன் ஒவ்வொரு காலையும் கங்கை நதிக் கரைக்கு தவறாது வந்து கொண்டிருந்தான். இதனை அவன் ஒரு கடமையாக்கிக் கொண்டான்.
அவனது இத்தகைய புதுப் பழக்கத்தால் பிரஜைகள் குழப்பமடைந்தனர். ஆனால் மன்னனின் போக்கு பற்றி கேள்வி கேட்க யாருக்கும் தைரியமில்லை. மேலும் இவரது போக்கின் காரணமாக அரசுப் பணிகளில் எந்த தொய்வும் ஏற்படவில்லை என்பதுதான் எல்லோருக்கும் ஆறுதலான விஷயம்.
’’அரசே, மனதில் குழப்பமிக்கவர்கள்தான் நீர் நிலைகளைத் தேடி வருவார்கள்’’ என்று மித்வா தனது அரசனிடம் அமைதியாகச் சொன்னான். இல்லை கேட்டான் என்று கூட சொல்லலாம். கேள்விகேட்ட அன்று அரசன் பதில் சொல்லவில்லை. ஆனால் மூன்று நாட்களுக்குப் பின் ‘’ நீர் நிலைகளைத் தேடி வந்தால் மனம் தெளிவடைகிறது, ஆனால் விலகிப் போனால் குழப்பமடைகிறது’’ என்றான். மித்வாவுக்கு அரசனின் பதில் புரியவில்லை. காரணம் அவன் கேட்ட கேள்வியை மறந்து விட்டிருந்தான்.
சாரதி மித்வாவுக்கு குழப்பமாக இருந்தது. இத்தனை நாட்களாக அரசர் ஏன் திடீரென இப்படி கங்கை நதிக்கரையைத் தேடி உதயத்தின் போது வருகிறார் என்று தெரியவில்லை. மன்னன் சொன்னது சரியாகவும் இருந்த்து. மன்ன்னை அவன் எத்தனையோ இடங்களுக்குத் தேரோட்டி அழைத்துச் சென்றுள்ளான் ஆனால் இவ்வாறு கேள்வி கேட்டதுமில்லை, அரசரின் செயலால் குழப்பமடைந்ததுமில்லை. ஆனால் இப்பொழுது குழம்புவதற்கான காரணம் தெரியவில்லை. அரசரும் நதிக்கரைக்கு வந்துதானே குழப்பமடைவதாகச் சொல்கிறார், அப்படியானால் இங்கு வருவதைத் தவிர்க்கலாமே…
‘’ சாரதி, எனது மனநிலை என்ன என்று நீ ஆராய முற்படுகிறாய். உனக்கும் எனது இந்த புதிய பழக்கம் குழப்பத்தை உண்டு பண்ணியிருக்கிறது. நான் அரண்மனைக்குப் போன பின் தான் மனக் குழப்பமடைகிறேன்.’’ என்றார் சாந்தனு.
அவன் இன்னும் குழப்பமானான். மன்னர் இன்று பதினைந்தாவது நாளாக இங்கு வருகிறார். அவர் இங்கு ஒரு தவத்தினை மேற்கொள்பவரைப் போல் வருகிறார். இறைவனை வேண்டி நிற்பது போல் சூன்யமாக குழப்பங்களை கங்கையில் இறக்கிவிட்டு தெளிவாகி வரம்பெற்றுப் போகிறவனைப் போல மிகுந்த தெளிவும் ஆன்ந்தத்தையும் அள்ளிக்கொண்டு தேரில் ஏறி அரண்மனை விரைவார்.
இதோ ஆறு வாரங்கள் ஒடி விட்டது. சாரதி மித்வா இன்று காலை தேரோட்ட வரவில்லை. புதிய சாரதி ஒருவன் தேரை தயார் நிலையில் வைத்து நின்று காத்திருந்தான். ‘’ அரசே, எங்கே?’’ என்று கேட்டான். சாந்தனு மன்னனுக்கு அவனது கேள்வி பிடிக்கவில்லை போலும். இரவு முழுக்க அவர் கொண்டிருந்த குழப்பத்தைக் கிண்டி விட்டது போல் இருந்தது.
’’நானே போய்க் கொள்கிறேன். நீ போய் ஓய்வெடு’’ என்று மன்னன் கட்டளையிட்டான். புதிய சாரதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மன்னனின் மனம் புண்படும்படி நடந்து கோண்டோமோ என கலங்கினான். ஆனாலும் மன்னன் விருப்பம் – என்ன செய்ய… வணங்கியபடி நின்று கொண்டிருந்தான்.
இரட்டைக் குதிரைகள் தாமாகவே நதிக்கரையை நோக்கிப் பயணித்தன. சாந்தனு இன்று ஒருவித மாறுபாட்டை உணர்ந்தான். நதிக்கரை வழக்கத்தை விட அன்று அழகாய் இருந்தது. சாந்தனு எதையும் எதிர்பார்த்து நதிக்கரைக்கு வரவில்லை ஆனால் அவனுக்கு இன்று ஏதோ கிடைக்கப் போவதைப் போல் உணர்ந்தான்.
விண்ணிலிருந்து ஒரு தூய பறவையின் சிறகடிப்பு ஓசை காதுகளை நிரப்பியது. ஓசை வந்த திசை நோக்கி சாந்தனு பார்த்தான். ஓசையை காற்றில் விட்டு அந்த ஜீவன் மாயமாகிப் போனது. மேல் நோக்கிய அவனது பார்வை ஆற்றில் ஏதோ தொப்பென விழுவதைப் போல் ஓசை கேட்டு தலையைக் கீழ்நோக்கி இறக்கினான். இப்பொழுதும் ஓசைவந்த திசையில் எதுவும் இல்லை. சாந்தனு இதுநாள் வரை நதிக்கரைக்கு வந்து குழம்பியதே இல்லை. ஆனால் இன்று பெருங்குழப்பமாக இருந்தது.
ஓசைகளால் குழப்ப முடியுமா என்ன? முடியுமே. இதோ நடந்து விட்டிருக்கிறதே. பேச்சு கூட ஓசைதானே. பேச்சால் தானே குழப்பங்கள் வருகிறது. அடர்ந்த காட்டில் எத்தனை செடி கொடிகள். அவைகளுக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. சண்டை இல்லை. போட்டி இல்லை. ஆனால் கொஞ்சம் உருமத் தெரிந்த விலங்குகள் அமைதியான விலங்குகளை மிரட்டி விடுகிறது இல்லையா.
உறவுகளில் கூட அமைதிதான் ஆழத்தை உண்டாக்குகிறது. அமைதிதான் ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது. பேச்சால் நட்பு வளரலாம். உறவு தொடங்கலாம். அனால் அமைதியால் தான் அது தொடரும்.
திடீரென நதிநீரில் ஒருவித பிரகாசம் தெரிந்தது. நீருக்குள்ளிருந்து வைரங்கள் ஜொலித்தது. கங்கை நதியிலிருந்து நீரே உருவமாய் ஒரு பெண் எழுந்தாள். சாந்தனுவுக்கு அவனது கண்களையே நம்ப முடியவில்லை. இத்தனை நாள் அவனை இந்த நதிக்கரைக்கு இழுத்து வந்தது இந்த் சக்தி தானோ என வியந்து கொண்டிருந்தான். நீரிலிருந்து எழுந்த உருவம் சாந்தனுவைத் தேடி வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி முழுவதிலும் ஒருவித அழகு பரவிக் கொண்டிருந்தது.
எங்கெல்லாம் நீர் இருக்கிறதோ அங்கெல்லாம் வளமை இருக்கும். நீர் இருக்கும் இடமெல்லாம் உயிர்கள் இருக்கும், சமூகம் உருவாகும், நாகரீகம் வளரும்.
சாந்தனு மன்னன் அந்த நதிப்பெண்ணைப் பார்த்து வியப்புக்குறியாய் விரைத்து நின்றான். சாந்தனுவை நெருங்கிய அந்த நதிப்பெண். அவனைக் கண்டு புன்னகைத்தாள்.
‘’ அரசே, நலமா?“ என்றாள் புன்னகை மாறாமல்.
’’ நலம் தேவி. தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? ‘’
‘’ நான் யாரென நீங்கள் தான் சொல்ல வேண்டும்’’
‘’ நான் எப்படிச் சொல்வேன்? தங்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்’’
‘’அப்படியா, நான் உங்களை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னைப் பார்க்கத்தான் தினமும் வருவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்…’’
‘’சில வாரங்களாக இங்கு வந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் தேரை விட்டிறங்கி இந்த மணல் பரப்பைத் தொட்டதும் என் நிழலைத் தவிர வேறெதையும் இங்கு கண்டதில்லை.’’
‘’நானும் அப்படித்தான். நீங்கள் குறிப்பிட்ட அந்த காலகட்டத்தில் நானும் உங்களைத் தவிர வேறு யாரையும் இந்தப் பகுதியில் காண்டதில்லை.’’
‘’நீங்கள் தேவதையா?’’
‘‘நீங்கள் அப்படி கேட்க காரணம் என்ன?’’
‘’உங்களின் அழகும், நீங்கள் நீரிலிருந்து உதித்து வந்த விதமும் அப்படிக் கேட்கத் தூண்டியது.’’
‘’ஜீவ ராசிகள் எல்லாமும் நீரிலிருந்து உதித்து வந்தவைகள் தானே’. அப்படியானால் நீங்கள் தேவன் தானே’’
‘’உன் பேச்சு வசிகரமாய் மட்டுமல்ல. அறிவுபூர்வமாயும் உள்ளது.’’
‘’உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி, ராஜனே’’
‘’உன்னைப் போல் ஒரு அழகியை நான் கண்டதில்லை’’
’’அப்படியா ராஜனே, என்னில் எதை அழகு என்கிறீர்கள். எல்லாப் பெண்களையும் போலத்தான் நானும் இருக்கிறேன். என்னில் என்ன சிறப்பு’’
‘’உன்னைப் பார்த்ததும் மனதுக்குள் ஒரு பரவசம் உண்டாகிறது. ஒருவித மகிழ்ச்சி பரவுகிறது. உலகை நான் பார்க்கும் பார்வையே மாறி விடுகிறது. எனக்கு புதிதாகப்பார்க்கும் சக்தி கிடைத்ததைப் போல் உணர்கிறேன். இந்த கற்களிடம் கூட அன்பு காட்ட வேண்டும் போல் இருக்கிறது. இந்த மாற்றமான உணர்வை நான் இறை வழிபாட்டின் போது கூட பெற்றதில்லை.’’
‘’அரசே, உங்களின் பேச்சு எனக்கு புரியவில்லை.’’
’’பெண்கள் தங்களுக்கு பிடித்த விஷயங்களை எப்பொழுதுமே புரியவில்லை என்றுதான் சொல்வார்களாம். அப்படியானால் தான் அந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பாக அமையும் என்பதால்…’’
’’அரசருக்கு பெண்களின் மனம் புரியும் போல…’’
‘’இல்லை, பெண்களைப் பற்றிக் கொஞ்சம் தெரியும். அவ்வளவுதான். பெண்களைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை நான் அடைந்து விட்டதாக எனக்குப் படவில்லை.’’
‘’உங்களைப் பார்த்தால் எல்லாமும் அறிந்தவர் போல் தான் இருக்கிறீர்கள்.’’
‘’ நன்றி. நான்…’’ சாந்தனு எதையோ சொல்ல நினைத்தவன் தயங்கி வார்த்தைகளை விழுங்கினான்.
’’ சொல்லி விடுங்கள்’’ நதிப்பெண் புன்னகைப் பூத்து நின்றாள்.
’’நான் உங்களை மணம் முடிக்க விரும்புகிறேன்’’
‘’மணமா ? என்னையா? ஏன் இந்த திடீர் முடிவு?’’
‘’தெரியவில்லை. உங்களைப் பார்த்த்தும் அப்படியொரு ஆசை’’
‘’ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஒரு ஆணுக்கு மணம் முடிக்கும் எண்ணம் எப்படித் தோன்றுகிறது?’’
‘’தெரியவில்லை. ஆனால் எனக்கு உங்களைப் பார்த்ததும் மணம் முடித்துக் கொள்ளும் ஆசை உண்டாகி விட்டது’’
‘’ஆசை ஆபத்தில் கொண்டு போய் விடலாமில்லையா?’’
‘’ஆபத்துகளுடன் விலையாடுவதுதானே அரச வம்சத்தின் அடையாளம்?’’
‘’ நான் யார் என்ற கேள்விக்குக் கூட இன்னும் பதில் சொல்லவில்லை, அதற்குள் என்னை வாழ்க்கைத்துணையாக்கிக் கொள்ள முடிவுசெய்து வீட்டீர்களே’’
‘’சில முடிவுகளுக்காய் நாம் யோசிக்க முடியாது’’
‘’என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் சில நிபந்தனைகள் இருக்கிறது.’’
‘’உனக்காக எந்தவொரு நிபந்தனையையும் ஏற்கத் தயார், சொல்.’’
‘’எனது பிறப்பிடம் குறித்து நீங்களோ அல்லது உங்கள் ராஜ்யத்தில் யாருமே கேட்கக் கூடாது. நான் செய்யும் எந்தச் செயலுக்கும் காரணம் கேட்கக்கூடாது. என்னைக் கேள்வி கேட்ட அக்கணமே நான் உங்களை விலகிப் போய் விடுவேன். சம்மதமா?’’
‘’உங்களை வாழ்க்கைத்துணையாக அடைய நான் எதையும் செய்யத் தயார்’’
கங்கை தேவி அவருடன் தேரில் ஏறிப் புறப்படுகிறாள். சாந்தானு மன்னன் மிக உற்சாகமாகத் தேரை ஓட்டினான்.
• • •
’’ஆத்த கடந்து போகணுமுன்னா எப்படிப் போறது?’’
’’இந்தா மேக்கால போகுமே சிகப்பு டப்பா காரு, அத புடிச்சீங்கன்னா இந்த மலைய ஒரு சுத்து சுத்தி ஒரு மூணு மணி நேரத்துல ஆத்துக்கு அந்தப்புறம் உட்டுருவான்’’
‘’எஸ்டி பஸ்ல டிக்கெட் எவ்வளவு வாங்குவான்?’’
‘’காருல ஒரு நாப்பது ரூவா வாங்குவான்ப்பா’’
‘’வேற வழி இல்லையா?’’
‘’தோ இருக்குதே, பரிசல்ல போனீங்கன்னா கால் மணி நேரத்துல அந்தாண்ட விட்டுருவாங்க’’
’’அதுக்கு எவ்வளவு கேட்பாங்க?’’
‘’நீ கடைசியா நீச்சல் அடிச்சித்தான் போகப் போறன்னு தோணுது. பரிசல்ல பத்து ரூவா வாங்குவாங்க…’’
‘’ அப்படியா, பராவாயில்லையே? நான் பரிசல்லயே போயிடுறேன். பணம் குறைவா கேக்கிறதனால இல்ல, நேரத்துல போயிடலாமில்லையா அதான்’’
‘’அப்படியா, சரி இங்க மூணு பரிசல் இருக்கு, ஒன்னு குருவியோடது, அவன் அடிவாரத்துல சந்தைக்குப் போயிருக்கான், ரெண்டாவது சாமியண்ணன் அது அக்கரைக்குப் போயிருக்கு மூணவாது இசக்கியம்மாளோடது, அதோ அவ திரும்பிட்டா, நீ வேணுனா அவ பரிசல்ல போ’’
இசக்கியம்மாளின் பரிசல் சுழன்றபடியே கரை வந்து தட்டியது. பரிசலிலிருந்து ஒரு பூவைப் போல குதித்தாள் இசக்கியம்மாள். ரவிக்கையில்லாமல் ஒரு நூல் சேலையை அணிந்திருந்தாள். துடுப்பு பிடித்து இறுகிப் போயிருந்தது அவளது கைகள். இடது பக்கத் தோளை சேலை மறைத்திருந்தது வலது பக்கத் தோள் செதுக்கி வைத்தாற்போல் வடிவாய் இருந்தது. அவளது உடலில் எங்கும் எச்சமாக சதையில்லை. அவளது ஸ்தனங்கள் தளர்வின்றி வளமையாய் இருந்தது. துணிப்பையிலிட்ட மாங்கணிகளைப் போல அவளது அசைவுக்கேற்ப அவைகள் அதிர்ந்து அசைந்து கொண்டிருந்தன. இடுப்பு சரேலென கீழிறங்கி பின்னகம் கொழுத்து உருண்டிருந்தது. தொடைகள் உருண்டும் கால்கள் நீண்டும் இருந்தன. பாதங்கள் நீரில் நனைந்து பூவிதழ்போல் மென்மையாயிருந்தது.
ஆறுமுகம் அவளைப் பார்த்து கண்கள் பூத்து நின்றான். இசக்கியம்மாள் பரிசலைக் கட்டிவிட்டு திண்டின் மேல் ஏறி உட்கார்ந்தாள். மடியில் கட்டியிருந்த பச்சை வேர்க்கடலையை உடைத்து மென்று கொண்டிருந்தாள். பச்சைக் கடலையின் வாசம் காற்றில் பரவியது. பச்சைக் கடலையின் பால் அவளது வாயில் நிறைந்தது.
‘’ஏன்மா மருமவளே, இந்த்த் தம்பி அக்கரைக்குப் போகனுமாம் வுட்டுட்டு வாயேன்.’’
‘’ஹாங்… நான் உனக்கு மருமவளா, எந்த மவன பெத்து வச்சிருக்க கட்டித்தர.. இரு இன்னு ரெண்டு எடை வரட்டும் கூட்டிப் போறேன்.’’
‘’அட, இந்த தம்பி அப்பயே புடிச்சி நிக்குதும்மா. பாவம் பட்டணத்து புள்ளையாட்டும் இருக்கு. அவசரமுன்னு வேற சொன்னாப்பல, கூட்டிப் போயேன்’’
’’அப்படின்னா, டபுள் சார்ஜ் குடுப்பாங்களான்னு கேளு’’ என்ற படி அறுமுகத்தைப் பார்த்தாள்.
அவளது கண்களைக் கண்ட ஆறுமுகத்துக்கு உடலெங்கும் நடுக்கம் உண்டானது. தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டதைப் போல் உணர்ந்தான். உடலெங்கும் உஷ்ணம் படர்ந்தது. வழக்கத்திற்கு மாறாய் மூச்சு வாங்கியது.
’’என்ப்பா தம்பி, ரெட்ட சார்ஜ் குடுப்பியா?’’
‘’ஆங்ங்…. குடுக்கிறேங்க… கண்டிப்பா குடுக்கிறேன்’’ ஆறுமுகம் தடுமாறினான். அவனுக்கு கொஞ்சம் தயக்கமாகவும் இருந்தது. இப்படி அவன் எப்பொழுதுமே உணர்ந்த்து கிடையாது.
இசக்கியம்மாள் பரிசலை அவிழ்த்து ஏறி நின்றபடி துடுப்பால் மணலில் குத்தி பரிசலை சாய்த்துக் கொடுத்தாள். ஆறுமுகம் தனது பையை கையில் பிடித்துக் கொண்டு பரிசலில் வலதுகாலை வைத்து இட்துகாலை எடுக்க முடியாமல் தடுமாறினான். செருப்பு மணலில் மாட்டிக் கொண்டது. பரிசல் அவனை இழுப்பது போல் பட்டது. பின் எப்படியோ பரிசலுக்குள் இறங்கி தடுமாறி உட்கார்ந்தான்.
இசக்கி அவனது படபடப்பைக் கண்டு சிரித்துக் கொண்டாள். ஆறுமுகத்துக்கு அவமானமாய் இருந்தது. ஒழுங்கா சூதாளமாஏறியிருக்கலாம் என்று பட்டது.
’’நல்லா சவுகரியமா உட்காருங்க’’ என்றாள் இசக்கி புன்னகை மாறாமல். அவளுக்கு ஏனோ ஒருவித வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது. அவனைப் பார்த்து பெரிதாய் வரும் சிரிப்பை புன்னகையாய் அடக்கிக் கொண்டாள்.
ஒழுங்காக உட்கார்ந்துகொண்ட ஆறுமுகம் இசக்கி துடுப்பு வலிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். சற்றுத் தொலைவு வரை நின்றுகொண்டே துடுப்பு வலித்தவள் பின் உட்காந்து கொண்டாள். அவள் அங்கே இங்கே பார்த்து கடைசியில் அவனைப் பார்த்து புன்னகைத்து திரும்புவாள்.
ஆறுமுகத்திற்கு இது வினோதமாகப் பட்டது. அவன் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சீராக துடுப்பு வலித்துக் கொண்டிருந்தாள். ஆற்றின் மையப் பகுதிக்கு வந்து விட்டார்கள். நாலா பக்கமும் தண்ணீர்! தண்ணீர்!. அந்த வெயில்பொழுதில் தண்ணீருக்கு நடுவில் இருப்பது மாறுபட்ட அனுபவமாக இருந்தது.
ஆறுமுகம் தண்ணீரின் குளுமையைத் தாண்டி, இயற்கைச் சூழலைத் தாண்டி இசக்கியின் அழகில் லயித்துக் கொண்டிருந்தான். எப்படியாவது அவளுடன் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். ஆற்றில் கால்வாசி தூரத்தை கடந்து விட்டாயிற்று முழுவதுமாய்க் கடக்குமுன் பேசிவிட வேண்டும்.
‘’இந்த ஆறு எவ்வளவு ஆழம் இருக்கும்?’’ ஆறுமுகம் ஆரம்பித்தான்.
‘’எந்த இடத்துல?“ அவள் பேச்சு அந்த சூழலை விடவும் குளுமையாகவும் அழகாகவும் இருந்தது.
‘’இங்க …?’’
‘’இங்க ரெண்டு ஆளு ஆழம் இருக்கும்?
’’அப்படின்னா அங்க?’’
“அங்க மூணு ஆளு ஆழம்..’’
‘’அதிக ஆழம் எங்க இருக்கும்?’’
‘’இங்க ஒரு மூணு ஆளு ஆழம்தான், ஆணா அந்தப் பக்கமா போனா ஆறு ஆளு ஆழம் இருக்குமுன்னு அப்பா சொல்லியிருக்கு.’’
‘’அப்படியா? உங்க அப்பா எங்க?’’
’’செத்துப் போச்சு.’’
‘’அய்யோ, உங்கம்மா இருக்காங்களா?’’
‘’அது இருக்கு. அதோ அந்தக் காட்டுல விறகு வெட்டப் போயிருக்கு’’
‘’உன் பேரு என்ன?’’
‘’இசக்கி, இசக்கியம்மா, உங்க பேரு?’’
‘’என் பேரு ஆறுமுகம்’’
‘’எங்க ஒரு முகம் தான் இருக்கு’’ அவள் சிரித்தாள்.
அவளைச் சிரிக்க வைக்க எதையாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது.
‘’நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?’’
‘’தெரியும். அதுவும் இப்பத்தான் தெரியும்’’
‘எப்படி? இப்ப எப்படித் தெரிஞ்சுச்சு?’’
‘’உங்க கண் இமைக்காம நீங்க வாயப் பொளந்து பார்க்கிறத வைச்சு தெரிஞ்சுக்கிட்டேன்’’
’அப்படின்னா நானும் அழகா இருக்கேன்னு வச்சுக்கலாமா?’’
‘ம்ம்’’ என்று அவள் புன்னகைத்தான். அவளுடைய ஒவ்வொரு புன்னகையும் இது சிறப்பா, இது சிறப்பா என்று போட்டிபோட்டுக் கொண்டிருந்தது.
அவர்களின் பரிசல் பயணம் தொடர்ந்தது.
‘’என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?’’
‘’ எனக்கு பரிசல் ஓட்டவும், வெறகு பொறுக்கறதை விடவும் வேறு எதுவும் தெரியாது.’’
‘’ பரவாயில்லை. கல்யாணத்துக்கப்புறம் நீ பரிசல் ஓட்ட வேண்டாம். வெறகு வெட்ட வேண்டாம்.’’
‘’அப்புறம் என்ன பண்றதாம்?’’
‘’ஒண்ணும் பண்ண வேண்டாம். நானே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.’’
‘’அப்புறம் காசு பணம் எப்படி கிடைக்கும்?’’
‘’அதான் நான் கார் ஓட்டுறேன்ல.’’
‘’பெரிய காரா இல்ல சின்ன காரா?’’
‘’சின்ன காருதான்.’’
’’எனக்கு கத்துத் தருவீங்களா?’’
’சரி’’
‘’அப்படின்னா நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கிறேன். வேற ஒண்ணு கேட்பேன், சம்மதிப்பீங்களா?’’
‘’கேளு. எதுவேணூனாலும் கேளு.‘’
‘’என்னைக் கல்யாணம் கட்டிக்கிட்ட பின்ன ஏன் அம்மாகாரியும் நம்மளோட வச்சுக்கலாமா, பாவம் அவளுக்கு என்னவிட்டா நாதி கிடையாது. அவ நல்ல சமைப்பா.’’
‘’அய்யோ சரிம்மா சரி’’
முதல் முறையாக ஆறுமுகம் இசக்கியின் விரல்களைத் தொட்டான். அவள் தோட்டஞ்சிணுங்கி தன் இலைகளை மடக்கிக் கொள்வது போல் மடங்கிக் கொண்டிருந்தாள்.

• • •
சாந்தனு படகில் ஏறி அமர்ந்தான். செந்தாமரைக்கு வெள்ளைச் சேலை கட்டி விட்டாரற்போல் சத்தியவதி படகின் மறுமுனையில் அமர்ந்து துடுப்பு வலித்துக் கொண்டிருந்தாள். அவள் தனது அழகால் சாந்தனுவை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
படகை அக்கரைக்கும் இக்கரைக்குமாக திரும்பத் திரும்ப ஓட்டச் சொல்லிக் கொண்டிருந்தான் சாந்தனு. சத்யவதியும் அயராது செய்து கொண்டிருந்தாள்.
‘’சத்யவதி உன்னை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’’
‘’எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அப்பாவின் அனுமதி கேளுங்கள்’’
சாந்தனு சத்தியவதியின் தந்தை தஸ்ரத்தைக் கண்டு தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறான். ’‘உங்கள் விருப்பம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, அரசே. ஆனால்…‘’ என்றார் தந்தை.
—-
நன்றி உன்னதம் மே இதழ்
வெளியாகவிருக்கிற ‘வழிப்போக்கனுடன் உரையாடல்‘ சிறுகதைத் தொகுதியிலிருந்து

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

மதியழகன் சுப்பையா

மதியழகன் சுப்பையா