பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

பா.சத்தியமோகன்2703.

“வைகை ஆற்றில் ஏடுகளை இட வந்தார்கள்” என்பார்

“ஓடுகின்ற நீரில் ஓடாது நிற்குமோ ஓலை?” என்பார்

“பெரிய நீண்ட ஞானம் பெற்றவரால் நிறுத்தமுடியும்” என்பார்

“நாடெல்லாம் கண்டு வியக்கும்படி

இவர்கள் வருகிறார்கள் பாருங்கள்” என்பார்.

2704.

“தோற்றவர்கள் கழுவில் ஏறச் சமணர்கள் ஒப்பலாமோ?” என உரைப்பார்

“அருளாற்றல் செய்கிற

மேன்மையுடைய பிள்ளையாருக்கு

இ·து அழகே ஆகும்” என்பார்

“திருநீற்றால் தென்னவன் தீங்கு நீங்கியதைக் கண்டவர் யாவரும்

சைவத்திறத்தைப் போற்றுவர்” என்பார்.

2705.

இவ்விதமாக இருபக்கங்களிலும்

இருபாலரும் எடுத்துச் சொல்ல

மின்போன்ற ஒளியுடைய

அழகான பொற்காம்பை உடைய

வெண்குடை நிழல்தர

பலமணிகள் பதித்த சிவிகை மீது

பாண்டிய நாட்டில் உள்ளோர்க்கு

ஞானசம்பந்தர் நன்னெறி காட்ட வந்தார்

நான்மறை வாழ வந்தார்.

2706.

“அழகிய தமிழ் விளங்க அவதரித்த

திருக்கழுமல சம்பந்தன் வந்தான்

அம்பலவாணர் அளித்த

சிவஞானப் பாலையுடைய வட்டில் பெற்ற கையை உடையவன் வந்தான்

சுரவாதத்திலும் அனல்வாதத்திலும் மீட்சி பெற்று

வைகைப்புனல் வாதத்திலும்

வெல்லக்கூடியவன் வந்தான்” எனப்பலவிதமாக

அழகிய முத்துச் சின்னங்கள் எட்டுத்திசைகளிலும் ஒலிக்க

(திருக்கழுமலம்-சீகாழி; வட்டில்- கிண்ணம்)

2707.

அழகிய பல முரசங்கள் சூழ்ந்து

பலவகை வாத்தியங்கள் ஒலிக்க

பின்னே

தென்னவனும் பாண்டிமாதேவியாரும் கூட்டமாகத் திரண்டு செல்ல

புல்லிய நெறியில் நின்ற சமணர்கள் வேறு ஓர் பக்கம் வர

புகலி வேந்தர் சம்பந்தர்

நிலைபெற்ற வைகையாற்றின் கரை மீது பொருந்தும்படி வந்தார்.

2708.

கார்காலம் வந்ததும் மிக்க காதலுறும் மகளிர் உள்ளம்

சிறப்புடைய தம் கணவரிடம் விரைவுறச் செல்வதைப் போல்

புகழால் மிக்க பண்புடைய வைகை ஆறு

நீர் மிக்க கடலை நோக்கி

வரிசையான அலைகளால்

ஆரவாரம் செய்து செல்லும்

2709.

வைகை ஆற்றின் நீர்

வேகமாகச் செல்லும் பக்கத்தை அரசன் நோக்கி

“திருநீற்றின் அழகு விளங்கிய நிறைமதி போன்ற பிள்ளையாரும்

அதற்கு வேறான உருவு கொண்ட அருகர்களாகிய நீங்களும்

வாதித்து ஒப்புக் கொண்டபடி

உங்கள் ஏடுகளை இடுங்கள்” என்றான்

தோற்றவர்கள் தோற்கமாட்டார்கள் என எண்ணி

முதலாவதாக

ஏட்டை ஆற்றில் இடத் துணிந்தார்கள்.

2710.

உள்ளே பொருளில்லாமல்

நெல்லில் பதர் போல உள் இலாத சமணர்

மெய்ப்பொருளை பொய்பொருள் எனக்கூறுகின்ற

(ஆருகத நூலில் கூறும் பொருள் தொகுதியை)

“அத்தி – நாத்தி” என்று எழுதினர்

விரைந்தோடும் நீரைக்கண்டும்

பேராசையால் ஏட்டை ஆற்றில் இட்டனர்

அது விரைந்து

அப்போதே அதைக் கொண்டு

கடலினை நோக்கி விரைந்து சென்றது.

(அத்தி – நாத்தி என்பது சமணர்களின் மந்திரம் ]

[ அத்தி-உண்டு’/ நாத்தி- இல்லை /

இது உண்டு என்பதை தாமே மறுத்துக் கூறுவதாகும்]

2711.

இழுத்துக் கொண்டோடும் ஏட்டைத் தொடர்ந்து சென்று

எதிர்திசையில் ஓடாமல்

உண்மை அறிவிலாத சமணர்

ஆற்றுக்கரையின் மேல் ஓடிச் சென்றார்

ஏடு கிட்டாமல்

கீழ்நோக்கி அழியும் தன்மையுடன்

நூறு விறல்கடை அளவு தொலைவுக்கு மேல் போய்விட்டது

கண்ணால் அதனைப் பார்க்கவும் முடியவில்லை

2712.

காணவும் முடியா வண்ணமாக

கடலின் முகமாக சென்றது ஏடு

நாணம் என்பது இல்லாத சமணரை

நட்டாற்றில் விட்டுச் சென்றது

தொலைவில் சென்றவர்களும் பலவாறு சிதறுண்டவர்களும்

திகைப்பில் நின்றார்கள்

ம்ன்னனின் ஆணையில் தப்பமுடியாமல்

அஞ்சி அவன் அருகில் மறுபடிவந்தார்கள்.

2713.

வேறு ஒரு செயலுமில்லாதவர்கள் ஆகி

அச்சம் கொண்டு நடுங்கி

“நமக்கு இறுதிக்காலம் எய்திவிட்டது” என்றே எண்ணி

மன்னன் முன் வந்து எய்தி

புண்பட்ட நெஞ்சில் அச்சம் வெளிப்பட

அதனை மறைப்பவர் போல

“எங்களோடு மாறுபட்ட சம்பந்தரும்

ஏட்டினை ஆற்றில் இடட்டும்

அதன்பின் வருகின்ற

முடிவைக் காணுங்கள்” என்று கூறினர்.

2714.

அழுக்கு சேர்ந்த சமணர்கள் எல்லோரும்

இவ்விதமாக அறிவு மயங்கிக் கூறினர்

குற்றத்தை நீக்கும் நெறியில் சேர்ந்த பாண்டிய மன்னன்

அந்த சமணர்களை தவிர்த்துவிட்டு

“ஒளியுடைய பிள்ளையாரின் திருக்குறிப்பு யாதோ?” என

அறிந்து கொள்ளுமாறு நோக்கினன்

அவர் பரசமயங்களால் நேர்ந்த மயக்கம் அழியுமாறு

திருப்பதிகங்கள் பாடி அருளினார்.

2715.

தென்னவனான பாண்டியன்

ஞானசம்பந்தர் தொட்டதால்

பொன் போன்ற கொன்றையைச் சூடிய

சிவபெருமானின் திருநீறு பூசப்பெற்றதால்

முன்னைய கொடிய வினைகளும்நீங்கினான்

முதல்வனான இறைவனை

அறிந்து கொள்ளும் இயல்பைப் பெற்றவன் ஆனான்.

2716.

“உலகியல் நடைமுறை என்பது

வேதநூல் விதித்த ஒழுக்கமே” என்பதையும்

நிலவுகின்ற மெய்யான நெறி சிவநெறியே என்பதையும்

அழிவு பெறும் சமணர்கள் அதனை அறியமாட்டார்கள்

ஆயினும்

பலரால் புகழப்படுகின்ற பாண்டியன் அறிந்திருந்தான்

ஆதலால் —

2717.

மலர்கள் மலர்தலால் வீசும் மணம் சூழ்ந்த

சீகாழிப் பதியில் அவதரித்து

சிவஞானம் மலரும் திருவாக்கினையுடைய

வள்ளலார் ஞானசம்பந்தர்

பலரும் உணர்ந்து உய்யுமாறு

அருளிச் செய்து

எழுதுவித்து

என்றும் அழியாத மெய்ப்பொருளை உடைய

அத்திரு ஏட்டினை

வைகை ஆற்றினில்

தன் திருக்கையால் இட்டார் ! விட்டார்!

(வைகையில் விடப்பட்ட ஏட்டில் எழுதப்பட்ட பாடல்

“வாழ்க அந்தணர்” எனத் தொடங்கும் பதிகம். இப்பதிகம் மட்டுமே,

12 பாக்களை கொண்டது. காரணம், சிவஞானபோதம்

எனும் நூலின் 12 சூத்திரங்களின் பொருளை உட்கொண்டது ஆகும்)

2718.

“அந்தணர்களும் தேவர்களும் பசுக்களும் வாழ்க”

என்று சொன்ன இந்த மெய்மொழியின் பயனாவது:-

உலக உயிர்கள் இன்புற வேண்டி

சந்தத்துடன் கூடிய மந்திரங்கள் உடைய

சிவவேள்விகள் முதலாக

சிவபெருமானுக்கு முதன்மை சொல்லப்பட்ட

அர்ச்சனைகளும் வழிபாடுகளும் நிலைபெறுதல் ஆகும்.

2719.

நல்ல வேள்விகளின் பயன்

மழை தவறாமல் பெய்தலாகும் என்று அருளிச் செய்தார்

ஏனெனில்

இறைவரின் அருச்சனைக்கு

மழை பிரதான உறுப்பு என்பதால் ஆகும்.

உலகை ஆளும் மன்னனை வாழ்த்தியதன் காரணம்

அர்ச்சனை முதலாக வரும் இவற்றைக் காக்கின்ற முறையால் ஆகும்.

2720.

“ஆழ்க தீயது” என அருளியதன் பொருள்

வேத ஆகமகங்களுக்குப் புறம்பான அயல் நெறிகள் வீழ்க என்பதாகும்

“வேறெல்லாம் அரன் நாமமே சூழ்க” என்றதன் பொருள்

தொன்மையான காலம் தொட்டு வரும் உயிர்கள் எல்லாமும்

திருஐந்தெழுத்தை ஓதி வளர்க என்பதாகும்.

2721.

வையகமும் துயர் தீர்கவே என்று

ஞானசம்பந்தர் உரைத்ததின் கருத்து

இம்மையிலும் மறுமையிலும்

நிலைத்து வாழும் உலக உயிர்கள்

துன்பம் நீங்குதலாகும்.

2722.

சம்பந்தர்

ஆற்றில் விட்ட பதிகத்தில்-

அரன் என உரைத்தது ஆதியை.

பாசஞான

பசு ஞானங்களால் அறியப்படாநிலையை

அன்பின் திறத்தால் காண்பவர்க்கோ –

அங்கை, எரி,ஏறு, கரியகண்டம், காடுறை வாழ்வு

முதலிய நல் அடையாளங்களுடன் காட்சி அளிப்பார் இறைவர்.

2723.

மேற்சொன்ன அடையாள நிலை கொண்டிருப்பினும்

அக்காட்சியுள் அடங்காத பெரியவர் அவர் என்பது

விண் முதலான பரந்த ஐம்பூதங்களும்

பல் உயிர்களும் அண்டங்களும்

இவரது பெருவடிவில் அமைவன என்று கூறியதாகும்.

2724.

“மேலும் அவரது இயல்பை அவர் அறிவார்?” என்று கூறக்காரணம்

எவரது உணர்வினாலும்

சென்று எட்ட முடியாநிலை உடையுடைய

மிகப்பெரும் தன்மையுடையவர் அவர்” என்று

அன்புடைய

சண்பை என்ற சீகாழி ஆண்தகையார் என்று உரைத்தருளினார்.

2725.

“வெந்த சாம்பல்விரை எனப் பூசியே” என்ற பதிகத்தின்

மூன்றாம்பாடலில் முதல் அடியில்

தனது அழிவற்ற நித்தியமான சிவஒலி அல்லாத

மற்ற ஒளியெல்லம்

படைப்புக் கிரமத்தில் தோன்றி

வெந்து நீராகி அழிய

வேறான அந்தச் சாம்பலை இறைவர்

அழகிய சந்தனமாய்க் கொண்ட இயல்பினையும் சொன்னார்.

2726.

தமக்குத் தந்தையுமில்லை தாயுமில்லை என்று

அப்பாட்டின் இரண்டாம் அடியில் அருளியதன் காரணம்

தம் ஒளி ஒளியல்ல

ஒளிப்பொருள்கள் எல்லாமும் அடக்கிக்கொண்டபின்

புனர் உற்பவத்தில்

மறுபடியும் அளிக்கப்பட்டதால்

எம் இறைவர் பிறப்பில்லாதவர் என்று கூறினார்.

2727.

தம்மையே

“சிந்தியா எழுவார் வினைதீர்ப்பரால்” எனக் கூறும்

பதிகப் பகுதியில் கூறியதன் தன்மை எதுவெனில்

உண்மையாகி விளங்கும் பொருள்

தாம் மட்டுமே என்று கண்டு

நினைப்பவர்களின்

இருவினைகளுக்கு காரணமான

பொய்மையை விளைவிக்கும் மல இருளை

இம்மையிலேயே நீக்குவார் என்பதாகும்.

2728.

“எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ” என்று

பதிகப்பாட்டின் இறுதியில் கூறியதன் தன்மை என்னவெனில்

வேறு எந்தப் பொருளைப் பற்றிய சொற்பகுதியுள்ளும்

அநாதி மூத்த சித்த உருவாகிய

இறைவரை

எவ்வகை மொழியால்தான் இயம்ப முடியும் என

அழகிய குளிர்ந்த

பூந்தராய் என்ற சீகாழி வேந்தர் அருளிச் செய்தார்.

2729.

ஆளாகிய தொண்டர்களுக்கு

அப்பெருமான் அருள்கின்ற திறங்களையும்

இறைவரின் மாண்பையும் பற்றிக் கேட்டால்

அதன் விடை அளவிலாது விரியும் அதலால்

அவ்வகையாலும்

அது ஆராய்ச்சித் தன்மை கொண்டவை அல்ல என்று பொருள்.

2730.

இப்படிப்பட்ட தன்மையுடைய

ஆதியான இறைவரின்

திருவடிகளைடைந்து

இவ்வுண்மைகளைக் கேட்டால்

அடியவர்களின் முந்தைய வினை வலிகளும் வாதனைகளும்

முடிவு பெறும் என்று

சண்பை தலைவர் சம்பந்தர் கூறி அருளினார்.

2731.

நிலை பெற்ற எவையினாலும்

எடுத்த மொழியாலும்

தனக்கு ஒப்புமை சொல்ல வேறு ஏதுமற்றவன் சங்கரன்

ஆதலால்

இவ்விதமான தன்மையை

எந்த ஒன்றினாலும்

எடுத்துக் காட்டும் அளவைகளாலும்

அளக்கப்பட முடியாதவன் என்று விளக்கியதாகும்.

2732.

“தோன்று காட்சி சுடர் விட்டுளன்” என்ற பதிகத்தில்

விளக்கியதன் பொருள் எதுவெனில்

அமைந்த அக்னியில்

புற ஒளியாய்க் காணப்பட்டு

அன்பின் உறைப்பில் அதில் அழுந்திப் பார்த்தால்

உள்ளே எழும் ஜோதியாய் இறைவன் நின்றான்.

அவனது ஒளிவழி நின்று காண்பவர்க்கு

இது விளங்கும் என்று விளக்கியதாகும்.

2733.

“மாதுக்கம் நீங்கலுறுவீர் மனப்பற்றும்” என்ற

பதிகத் தொடரின் பொருள் மூலமான ஆதிச்சுடர் சோதியை

அன்பால் அகத்துள் கண்டு

ஐந்தெழுத்தால் அகப்பூசை செய்து

ஞானாசிரியர் போதித்தவாறு

உள்நோக்கில் கண்டு கூடிய சிவயோகத்தால்

இடையறாமல் சிவஞான வாழ்வில் பொருந்தி வாழ்ந்து

அறிவை மறைக்கின்ற ஆணவப்பிறம்பின் நெறியிலிருந்து

நீங்குவீர் என்று விளக்கியதாம்.

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்