பெரியபுராணம் – 93 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

பா.சத்தியமோகன்


2610.

இவ்விதமாக

வன்மையான அந்நோய் நிகழும்போது

அமணர்கள் எல்லோரும்

மன்னனின் நிலைமை கேட்டதும்

பெருமூச்சுவிட்டு

“கடந்துபோன இரவில்

புகுந்து செய்த செயலின் விளைவுதானே இது” என ஐயம் கொண்டு

அரசனிடம் அதைக் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர்.

2611.

மயக்கத்தைப் பெருக்கும் சமணரான வஞ்சகர்

பக்கத்தில் வந்தனர்

பாண்டியனின் நிலைகண்டு உள்ளம் அழிந்து

நோயின் மூலத்தை அறியமுடியாமல்

தங்கள் தெய்வத்தின் மொழி நவிலும் மந்திரம்கூறினர்

மயில் இறகால் முன்னும் பின்னும்

தடவுவதற்கு எடுத்தபோது —

கையில் பிடித்த பீலிகள்

அதன் பிரம்போடு தீப்பற்றி எரிந்தன

தீப்பொறிகள் சிதறி வீழ்ந்தன

வெப்பத்தின் அதிசயம் கண்டு

அவர்கள் மிகவும் சினந்தனர்.

2612.

கருகிய அழுக்குடைய ஆக்கை உடைய தீயவர்கள்

தங்கள் கையில் தொங்குகின்ற

குண்டிகையின் நீரை மேலே தெளித்து

“அருகனே!காப்பாய்! காப்பாய்” எனக்கூறி

பாண்டியன் மேல் தெளித்தனர்

அந்த நீர்-

பொங்கிப் பெருகும் தீயின் மேல்

நெய் போல் ஆகி

மேலும் ஒரு நெருப்பினை வாரித் தூவியது போல் ஆனது.

“ஒருவரும் இங்கே நில்லாது அகன்று செல்லுங்கள்” என

சமணரைப் பார்த்து உரைத்தான் அரசன்

உணர்வு தளர்ந்து மயக்கமானான்.

(ஆக்கை- உடல்)

2613.

பாண்டிமாதேவியார் பயம் எய்தி

அமைச்சர் பொறுப்பை ஏற்ற குலச்சிறையாரை நோக்கி

“புகலியில் தோன்றிய

நமது ஆண்ட சம்பந்தரிடத்து

இரவில் சமணர்கள் செய்த தீங்குதான்

இவ்வாறு முடிந்ததோ” என்று சொல்ல-

(புகலி-சீகாழி)

2614.

மன்னவனின் அமைச்சராகிய குலச்சிறையாரும் பணிந்து

“இந்தக் கொடுமை

இந்த சமண் வஞ்சகர்களல் ஏற்பட்டது

மதில்கள் மூன்றையும் எரித்து அழித்த

இறைவரின் அன்பராகிய ஞானசம்பந்தரிடம் செய்ததுதான்

இங்கு அரசனிடம் வந்து நிரம்பி விட்டது

இவர்கள் தீர்க்க முயன்றால்

மேலும் பெருகி முதிரும்” என்றார்.

2615.

திறமையானவர்கள்

மன்னன் எதிரில் பணிந்து

“இந்த வெப்பு நோய் வரக் காரணம்

சீகாழி என்ற பதியில் அவதரித்த வள்ளலாரான சம்பந்தர்

மதுரையில் வந்து தங்கியதைப் பொறுக்க முடியாமல்

சமணர்கள் செய்த தீங்குதான் இவ்வாறு பெருகியிருக்கிறது

இதற்குத் தீர்வு

சம்பந்தரின் அருளே ஆகும்”என்று எடுத்துச் சொல்லி-

2616.

“உடலிலும் மனதிலும் அழுக்கு கழுவாதவர்கள்

செய்கின்ற மாயங்கள் இந்த நோயை வளர்க்கவே செய்யும்

வளரும் வெண்சந்திரன் அணிந்த

சடையுடைய இறைவனிடம் ஞானம் பெற்ற

சம்பந்தப் பிள்ளையார் விரும்பிப் பார்த்தால்

தீய இப்பிணியோடு

பிறவிப் பிணியும் தீரும்” என்று வழி கூறினர்.

2617.

பாண்டிய மன்னன் செவியிலே –

மெய்யுணர்வு அளிப்போரான

மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் கூறினர்

அதனுள் ஞானசம்பந்தர் எனும் திருப்பெயர் மந்திரமும் சொல்லியதும்

அப்போது அயர்வு நீங்கிற்று

உடனே சமணர்கள் எனும் மானமில்லாதவரைப் பார்த்து

ஒரு செய்தியைச் சொல்லத் தொடங்கினான்.

2618.

மன்னவன்

அச்சமணர்களை நோக்கி

“இவர்களுடைய செய்கை எல்லாம் இத்தகைய நோய்க்கே

காரணமாயின” என மனதில் எண்ணிக்கொண்டான்

நிலை பெற்ற சைவநெறியின் பெருமறைச் சிறுவர்

இங்கு வந்தால்

அவரது அரு:ளால் இந்நோய் அகன்றால்

தெளிவு பெறுவேன்” என இயம்பினான்.

2619.

என்று முதலில் கூறினான்

பிறகு —

“யான் உற்ற பிணியைத் தீர்த்து

வென்றவர் பக்கம் சேர்வேன்

வழியுண்டானால் அவரை அழையுங்கள்” என

தேவியாரையும் அமைச்சரையும் நோக்கிச் சொல்ல

அவர்கள்அணையை உடைத்துச் சென்ற வெள்ளம்போல

பேரன்பு வெள்ளத்தில் செல்பவராகினர் –

2620.

பாயை உடையாகக் கொண்ட பாதகர்

திருமடத்தில் செய்த தீவினைத் தொழிலை நோக்கி

உள் அழித்து

திருவுள்ளத்தில் மேவிய அத்துயரம் நீங்குமாறு

விருப்பம் மிக்க விரைவுடன்

நாயகரான பிள்ளையார் பாதம் பணிந்தவர்களாகினர் –

2621.

மன்னவனின் துன்பம் தீர

அவனது பணியை தன் பணியாகக்கருதி

அன்னம் போன்ற மென் நடை உடைய அரசி

அழகிய மணிகள் பதித்த சிவிகை மீது ஏறி

மின் போன்ற இடையுடைய பெண்கள் சூழ்ந்துவர

வேல்படை உடைய அமைச்சருடன்

சைவ முதல்வனார் தங்கியிருக்கும்

திருமடத்தை அடைந்தார்

2622.

அனைவரும் திருமடத்தைச் சேர நெருங்கிச் சென்றனர்

சிவந்த வரிகள் படர்ந்த கண்களுடைய

அம்மையார் முன் குதிரையிலிருந்து இறங்கிய அமைச்சர்

“நாங்கள் இங்கு வந்ததை சிரபுர பிள்ளையார்ருக்கு தெரிவியுங்கள்!”

எனக்கூற-

பரிவாரங்க:ளும் உள்ளே போய் விண்ணப்பிக்க

தக்க சமயம் அறிந்து கூறுபவர் ஆயினர்.

2623.

“பாண்டிமாதேவியாராகிய மங்கையர்க்கரசியும்

அன்புடைய அமைச்சர் குலச்சிறையாரும்

இங்கு வந்துள்ளனர்” என விண்ணப்பித்ததும் —

சண்பை ஆண்ட பிள்ளையாரும்

“அவர்களை இங்கு அழையுங்கள்” என அருள

மீண்டும் சென்று அழைக்க

விரைவுடனும் விருப்பத்துடனும்

அவர்கள் இருவரும் உள்ளே வந்தனர்.

2624.

சிவஞானத்தின் திருவுருவை –

நான்கு மறைகளின் ஒப்பற்ற தனித்துணையை –

வானில் அல்லாமல் மண்ணில் வளரும் பிறைக்கொழுந்தை –

தேன் ஊறி வழியும் கொன்றை மலரை அணிந்த –

சிவந்த சடையுடைய சிவபெருமானது –

புகழ் தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பை –

பிள்ளையாரை

அவர்கள் கண்களிப்படையக் கண்டார்கள்.

2625.

அவ்விதம் கண்டபோது-

கொடியவரான சமணர் செய்த கொடும் தொழில் எண்ணி

மண்டிய கண் அருவி நீர் பாய்ந்தது

மலர் போன்ற கைகள் கூப்பினர்

தாமரை மலர் போன்ற திருவடிகளின் கீழ் பொருந்த

நிலத்தில் வீழ்ந்து வணங்கினர்

உட்கொண்ட குறிப்புடன் பெருமூச்செறிந்து

உள்ளம் அழிந்த நிலைமையினராகினர்

2626.

சொல் குழறியது

உடல் நடுங்கியது

உள்ளம் கலங்கியதால் ஒன்றும் அறியாதவர்களாகினர்

நிலத்தின் மீது புரண்டு தளர்ச்சி கொண்டனர்

பிள்ளையாரின் திருவடித் தாமரைகளைப் பற்றி

கரையிலாத கவலைக்கடலில் வீழ்ந்தார்கள்

அதற்கொரு கரையைப் பற்றியவர் போல –

பாயும் மெய் அன்பினால் விடாமல் பற்றியபடியே

கிடந்தவர்களைப் பார்த்து-

2627.

அரிய வேதங்கள் வாழ

பூம்புகலியில் அவதரித்த அண்ணலார் சம்பந்தர்

தம் திருவடிகளைப் பற்றிய இருவரையும்

திருக்கையினால் எடுத்து அருளித் தேற்றினார்

உள்ளம் அழன்று

தெளிவடையாமல் கலங்கிய அவர்களைப் பார்த்து

சிறப்பு செய்து

“திருவுடையவர்களே

உங்களுக்கு ஏதேனும் தீங்கு வந்துளதோ?” எனக் கனிவாய் வினவினார்.

2628.

“கொடிய சமணர்

முன்பு செய்த வஞ்சனைக்கு மிகவும் கலங்கி

அஞ்சினோம் அச்சம் கொண்டோம்

தங்கள் திருமேனியிடம்

அவை ஒன்றும் செய்யாது எனக்கண்டோம்

அச்சம் தீர்ந்தோம்

வஞ்சகர்கள் செய்த தீயதொழில் இப்போது

மன்னரிடம் அளவிலாத கொடிய வெப்பு நோயாய் நின்றது”

எனத் தொழுது நின்றனர்

2629.

பிறகு

“கொடிய செயல் செய்யும் அமணர்களான குண்டர்கள்

செய்த தவறால்

அவர்கள் செய்யும் மாயைகளால் தீயநோய் தீரவில்லை

அக்காரணத்தால்

மயக்கமும் குழப்பமும் அடைந்தான் மன்னவன்

அமணர்களை வென்று அருளிச் செய்தால்

எம் உயிரும் மன்னவர் உயிரும் தப்பும்” என உரைத்தார்கள்.

2630.

அவர்கள் உரைத்த பொழுதில்

அழகுடைய பூப் போன்ற புகலி வேந்தர்

“ஒன்றும் நீங்கள் அஞ்சவேண்டா

உணர்வில்லா அமணர் தம்மை

இன்று நீங்கள் உவகை அடையுமாறு

எல்லோரும் காணும்படி வென்று

இறைவன் ஆணையினால்

மன்னவன் பாண்டியனை

திருநீறு அணியச் செய்வேன்” என மொழிந்தார்

2631.

ஞானசம்பந்தர் மொழிந்து அருள அதைக் கேட்டு

அவர் திரு முன்பு வணங்கி முகம் மலர்ந்தனர்

“அழுத்துகின்ற துன்பமான கடலிலிருந்து

அடிமையாகிய எங்களை மேலே எடுத்தருள்வதற்காக

செழுமையான முத்துச்சிவிகை மீது

தென்னாடு செய்த தவத்தால்

தவப்பயனால்

எழுந்தருளும் பெரும்பேறு பெற்றோம்

இனி என்ன பேறுதான் பெறமாட்டோம் !”

எனச் சொல்லி தொழுதனர்

2632.

“ஆக்கம் அழிவு ஆகிய எல்லாம் அவர் என

வேதங்கள் சுட்டிடும் இறைவரின் செயலினால்

சமணர் என்ற

பாவம் செய்தவர்க¨ª

பார்க்கவும் பேசவும்

மற்ற செயல் செய்யுவும் நேர்வதால்

வரப்போகும் குற்றங்கள்

அந்தச் செயலுடன் நீங்க வேண்டும்

அவர்களை வெல்லவும் வேண்டும்

காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானின்

திருவுள்ளம் அறிவேன்” என்றார்

மலர்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த

சீகாழித் தலைவரான பிள்ளையார்

புரவலர் பாண்டியனிடம் சென்றிட —

2633.

வையகம் உய்வதற்காக வந்த வள்ளலார்

தாம் இருந்த மடத்திலிருந்து

உடலில் திருநீறு அணிந்த தொண்டர் வெள்ளத்துடன்

தாமும் புறப்பட்டுச்சென்று

இருகைகளும் தலை மீது குவிய

கண்கள் மலர்ச்சியைக் காட்ட

சிவந்த சடையுடைய இறைவர்

நிலைபெற எழுந்தருளியுள்ள

திருவாலவாய் கோவிலுள் பூகுந்தனர்.

2634.

“நோக்குவதற்கு விதியிலாத சமணரைநோக்கி

யான் வாதம் செய்யத் தங்களுக்கு திருவுள்ளமோ?” என

எண்ணிலாத பாக்கியங்களின் பயனாக உள்ள

பாலறாவாயரான சம்பந்தர்

உண்மையை எண்ணி நோக்கி

வளமை பொருந்திய தமிழால் ஆகிய மாலையான

திருப்பதிகம் பாடினார்.

2635.

சுடுகாட்டில் நடனம் செய்பவரான இறைவரை

“காட்டு மாவுரி” எனத் தொடங்கிப் பாடினார்

தேன் சிந்துகின்ற

கொன்றைமலர் சூடிய

இறைவரின் திருவுள்ளம் நோக்கி

ஊனத்தை இல்லையெனச் செய்கின்ற

“வேத வேள்வி” எனத் தொடங்கும்

சொல்பதிகத்தையும் பாடினார் —

மானமிலாத சமணர்களை வாதத்தில் வென்றழிக்க.

2636.

“நஞ்சையே அமுதமாகப்பருகி உண்டு

வானவர்க்கு அருள் செய்தீர்

மார்க்கண்டேயருக்காக காலனைச் சாய்த்தீர்

இன்று

அடியேனுக்காக

இந்த நிலவுலகம் முழுதும்

தங்களது புகழே ஆக வேண்டும் பெருமானே

நான்கு வேதங்களும் போற்றும் சீலமே”

என்று வேண்டிக் கொண்டார்.

2637.

இறைவரின் திருவருளை

முன்னரே பெற்று

அவர்

நாடி அருளியதால்

மகிழ்ச்சி பொங்கச் சென்றார்

பணிந்து போற்றினார்

தூய திருநீற்றின் திருக்கோலப் பொலிவுடன்

விருப்பமுடைய தொண்டர்கள் சூழ்ந்து வர

பழமையான மதில்வாயில் பொருந்திய

முதல் திருவாயில் அடைந்தார்.

2638.

அழகிய மலர்கள் சூடிய மங்கையர்க்கரசியாருக்கும்

அமைச்சர் குலச்சிறையாருக்கும்

அருள் செய்வதற்காக

சிவந்த மணிகள் பொருந்திய

பலகை உடைய

முத்துச் சிவிகை மீது சம்பந்தர் ஏறியருளிய போது

எல்லாப்பக்கங்களிலும்

தொண்டர்கள் எழுப்பிய ஆரவார ஒலி

எல்லையின்றி மூன்று உலகங்களிலும் முழுதாய் நிறைந்தது.

2639.

பலவகையான வாத்தியங்களின் நாதம் பொங்க

திருநீற்றின் நல்ல ஒளி

வட்டமாகிப் பொருந்தி வருவதுபோல

ஒளிபெருகும் முத்துக் கோவைகள் உடைய வெண்குடையானது

நிழலைக் செய்தது

வெவ்வேறு விதமாய்

அளவிலாத

முத்துக்காளமும் தாரையும் சங்குகளும்

எங்கும் ஒலித்தன.

2640.

பார்க்கும் கண்ணுக்கு அணியாக விளங்கும் சம்பந்தர் கண்டு

அவரைக் கண்டதும் எழுச்சி பெற்றனர் நகரமக்கள்

“சார்ந்த சமயம் சமணமாக இருப்பினும்

பாண்டிய மன்னனின் அடைக்கலம் புகும் பொருளாய்

புண்ணிய வடிவினரான இவர்

மதுரை வருவதற்கு

பாண்டியன் முன்னே செய்த தவங்கள் எதுவோ” என உரைத்தனர்.

–இறையருளால் தொடரும்

Series Navigation