பெரியபுராணம்- 57 – ( திருநாவுக்கரசர் நாயனார் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 26 in the series 20050923_Issue

பா. சத்தியமோகன்


1545.

மாளிகைகள் நிரம்பிய சீகாழி என்கிற திருப்புகலியின்

மன்னரான ஞானசம்பந்தர்

திருமாலும் நான்முகனும் தேடி இன்னமும் கண இயலாத

சிவபெருமான் நேரே காட்சி கொடுத்தருள

சிவனாரின் ஆடல்கண்டார்

பணிந்தேத்தி திருநாவுக்கரசரும் காணுமாறு காட்டி அருள

பரமர் பற்றி நாவுக்கரசர் பாடினார்

“பாட அடியார்” எனத் தொடங்கும் திருத்தாண்டகம்.

1546.

அவர் பாடிய தமிழ்ப்பதிகங்களாகிய மாலைகள் ஏற்றுக் கொண்டு

பரமராகிய சிவபெருமான் மறைய

பிறையைச் சூடும் சிவபெருமானின் தொண்டரான நாவரசர்

நீடும் திருவாய்மூரை அடைந்து

நிலைபெற்ற கோயிலை வலம் வந்து தொழுதார் போற்றினார் துதிசெய்தார்

நாடும் காதல் வளர்ந்தோங்க

அன்பு பெருக அந்நகரில் தங்கியிருந்தார்.

1547.

நாவுக்கரசரும் ஞானசம்பந்தருடனே அவ்விதம் இனிதாக வீற்றிருந்து

பூண்ட காதல் மென்மேலும் பொங்கி எழ

திருவாய்மூர் பெருமானின் பொற்பாதங்கள் போற்றி

மிக்க அன்பால் திருப்பதிக மொழி மாலைகள் சாத்தி

ஞானமுனிவரான சம்பந்தரோடு மீண்டும் வந்து

திருமறைக்காடு அடைந்து

குற்றமற்ற இறைவரின் தாள் பணிந்தார்.

1548.

ஆதிமுதல்வரான வேதாரண்யத்து இறையவரை வணங்கித்

திருப்பணிகள் செய்து வரும் நாளில்

குளிர்சந்திரன் மேலே கவிழ்ந்தது போன்ற

வெண்கொற்றக் குடையுடைய சோழர்க்கு மகளாரும்

பாண்டிய மன்னர்க்கு மனைவியாருமான பாண்டிமாதேவியார்முன்

குலச்சிறையாரால் அனுப்பப்பட்ட சிலர்

சீகாழி வேந்தரைக்காண ஞானசம்பந்தரைக் காண வந்தனர்.

1549.

சிவபெருமானின் மறைக்காட்டில்

ஞானசம்பந்தரின் மடத்தைச் சேர்ந்து

நிலைபெற்ற சீகாழி மறையவர் பெருமானான சம்பந்தருக்குத்

தாம் வந்த செய்தி தெரிவித்து விடுவிக்கப்பட்டனர்

அவர்முன்பு சேர்ந்து அவரது அடிகளை வணங்கி

அவர் திருவுள்ளம் மகிழ்ந்து

“தீமையில்லாமை விரும்பி

இந்த உலகம் உய்யத் திருஅவதாரம் செய்த

தங்கள் திருவடி நினைப்பார்க்குத் தீமையும் உண்டோ” எனத் தொடங்கி-

1550.

சைவநெறி விளங்கி நிற்பதற்காகவும்

குற்றநெறியைத் தவநெறி எனக்கூறும்

பொய்யில்வல்ல சமணர்களின் கொடியசெயல்களைப்

பொறுக்க இயலாதவர் ஆனோம்” எனக் கூறக் கேட்டார்

அந்த வன்தொழிலுடைய கொடியசெயல்கள் மாற்றி

ஆதி சைவநெறி விளங்க வேண்டும் என்று

தெய்வ நீற்றின் துணையை நினைந்துகொண்டு

செல்லத் தயாரானார்

சிறப்புடைய சீகாழித்தலைவரான ஞானசம்பந்தர்

1551.

அச்சமயத்தில் நாவுக்கரசர்

சீகாழி ஆண் தகையரான ஞானசம்பந்தரிடம்

உடலின் அழுக்கைப் பெருக்கி உழல்கின்ற சமணர்கள்

கொடுமை செய்யும் வஞ்சனைகளில் மிக வல்லவர்கள்

அவர்கள் எனக்கு முன் செய்த தீய கொடுமைகளும் பல

“கெட்டேன் பிள்ளாய் !

அங்கு தாங்கள் செல்ல இசையேன் யான்” என்றார்.

1552.

என்று திருநாவுக்கரசர் கூறியதும் – ஞானசம்பந்தர்

“எல்லையிலாத திருநீற்றைப் போற்றும் அவ்விருவரையும்

அங்கு சென்று காண வேண்டும்

அங்கு தீங்கு புரியும் சமணர் நிலைமையை அழிவித்து

சைவநெறி வளர்ப்பதன்றி ஒன்றும் செய்யமாட்டேன்

உம்மீது ஆணை” என்றார்.

1553.

பாண்டிய நாட்டுக்கு சென்று

அச்சமணர் தீய மாயையினை யானே போய்

சிதைத்து வருகிறேன் என்று உரைத்து

நீவிரும் அங்கு வருதல் வேண்டா எனும்

அந்தப் பிள்ளையை மறுக்கமாட்டாமல்

நாவுக்கரசர் அங்கேயே தங்கினார்

அவரைப் பிரிந்து பாண்டிய நாட்டுக்கு வந்தார்

சிவஞான தலைவரான சம்பந்தர்.

1554.

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் விடை பெற்றார்

வாகீசரான நாவுக்கரசர் பூணும் அன்பினால்

திருமறைக்காட்டில்

புனிதர் ஆன இறைவரைப் போற்றி இசைத்துப் பேணி

அங்கு உறைந்திருந்த நாளில்

திருவீழிமலை இறைவரின் கழலடிகள்

மீண்டும் அடைந்து வணங்க நினைக்கின்றார்.

1555

சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் அமர்ந்து

அருளும் சோதியான சிவபெருமானின் அருள் பெற்று அகன்றுபோய்

கடலில் உண்டான நஞ்சினை உண்ட சிவனாரின்

திருவிழிமலையை மீண்டும் அடைவேன் என

உலகில் விளங்கிய திருநாகைக்காரோணமும்

பிறதலங்களும் தாம் பணிந்து

சால்புடைய மொழி வன்மை உடைய

திருப்பதிகம் பாடி

தலைவரான இறைவரின் மிழிலை வந்தடைந்தார்.

1556.

திருவீழிமலை தனைப் பணிந்தார்

வேத முதல்வரான சிவபெருமான் தாம் இருப்பதற்காக

ஆழி சூழ் உலகில் ஆகாசத்தின் கீழ் கொணரப்பட்ட

வாழ மலர்ந்த கோவில்தனில்

நிலைத்த பொருளான இறைவரைப் போற்றி இசைத்தார்

சில நாட்கள் கழித்து

பிற பதிகளும் பணிந்து காணும் காதலில் நின்றார் நாவுக்கரசர்.

1557.

பூக்களால் பொலியும் நீரையுடைய பொன்னி(காவிரி) ஆற்றின்

கரை வழியாகப் போய் பல பதிகளும் பணிவார்

அழகாக அமைந்த பசு வடிவத்துடன் அமைந்த உமைக்கு

அருள் செய்த திருவாடுதுறை இறைவர் பாதம் அணைந்து இறைஞ்சினார்

ஞான அமுது உண்ட சம்பந்தர் பெருமானுக்கு

அவரது பாடலுக்காக ஆயிரம் செம்பொன்னை

இறைவர் அளித்த திறத்தைப் போற்றினார் நாவுக்கரசர்

புறப்பட்டு மற்ற பதிகளும் பணிகின்றார்.

1558.

அங்ஙனம் நாவுக்கரசர் சிவந்த சடையுடைய சிவனாரின்

பழையாறை எய்த அதனில் செல்லும்போது

மயக்கம் உடைய சமணர்கள் மறைத்த

வடதளிக் கோவிலில் வீற்றிருக்கும் சிவனாரை

கைக்கூப்பித் தொழுத அளவில்

திருவுள்ளத்தில் கண்டு வினவியபோது தெரிந்து கொண்டார்

அது –

சமணர்கள் வஞ்சனையாய் செய்த விமானமென

அங்குள்ளவர்கள் கூறக்கேட்டு

பொறுக்க இயலாத உள்ளத்தில் புழுக்கம் அடைந்து-

1559.

அந்த விமானத்தின் அண்மையில்

ஆங்கொரு இடத்தின் பக்கமாக சேர்ந்து

கந்தம் கொண்ட இதழ்கள் அலரும்

கொன்றை முடியாரின் திருவடிகள் நினைத்தார்

மந்தபுத்தி கொண்ட சமணர்களின் வஞ்சனையால்

சைவத்திறம் மறைத்த வஞ்சம் ஒழிய அருள்க

சமணர்களின் திறம் அழிப்பீராக என வேண்டிப் பணிந்திருந்தார்.

1560.

இறைவா நான் உன் திருமேனி வண்ணம் கண்டு

நான் உம்மை வணங்காமல் போகமாட்டேன் என்று

எண்ணியபடி முடிக்கும் நாவுக்கரசரான வாகீசர் இருந்தார்

உணவு ஏதும் கொள்ளாமல்

அண்ணலான இறைவரும் அது உணர்ந்தார்

திருநாவுக்கரசர் தம்மை வணங்க விரும்பி

திண்ணமாக இறைவன் எழுந்து அருளினான்

மன்னனின் கனவில்.

1561.

அறிவிலாத சமணர்கள் நம்மை மறைக்க

அதனுள் இருந்தோம் என இறைவர் உரைத்தார்

அந்த இடத்தின் அடையாளக் குறிகளையும் அறியச் செய்தார்

“நம்மை நாவரசர் கும்பிடுவதற்காக நெறியிலாத சமணர்கள் தம்மை

அங்கிருந்து நீக்கிப் போக்குவாயாக” என்று அருள் புரிய

துயில் நீங்கி எழுந்து

அதனை அறிவுற்று எழுந்தான் மன்னன்

தலை மீது தன் செங்கை குவித்து இறைஞ்சி-

1562.

கனவில் கண்ட வியப்பினை மந்திரிகட்கு இயம்பினான் மன்னன்

அவர்களுடன் தானும் விரைவாய் அந்த இடம் சென்றான்

அண்ட நாயகன் அருள் செய்த அடையாளத்தின் வழி கண்டான்

அங்கு சிவ வடிவம் கண்டான்

கீழானவர்கள் செய்த வஞ்சனை குறித்து

அதனை வெளிப்படச் செய்த நாவரசர் திருவடி வணங்கி

அங்கிருந்த சமணர்களான புதர்களை அழித்தான்.

1563.

யானையினால் துகைத்து அழிக்கப்பட்ட புதர்போல

மாய்ந்தனர் அங்கிருந்த சமணர்கள் ஆயிரம் பேரும்

அதன்பின் மேன்மை அரசன்

ஈசர்க்கு உரிய விமானமாக அதனை ஆக்கி விளங்கச் செய்தபின்

சிவாகம விதிப்படி வழிபாடான அர்ச்சனைக்கு

வேண்டிய நிபந்தம் எல்லாம் அமைக்கச் செய்தான் மன்னன்

ஞான அரசரான நாவரசும் அக்கோவிலுள் புகுந்து இறைஞ்சி

நாதர் முன்பு நின்று போற்றுவார்.

1564.

தம் தலையின் மயிரைப் பறித்து உண்ணும் இயல்பு கொண்ட

கூட்டத்தவரான சமணர் மறைத்தாலும்

உண்மை நிலையிலாத அவர்கள்

சிற்றறிவின் நிலைமையினால் மறைக்க இயலுமோ என்கின்ற

விலைமதிப்பற்ற வாய்மை கொண்ட

திருக்குறுந்தொகைகள் விளம்பினார் வெளியே வந்தார்

அங்கு தங்கி பிறகு

மூன்று இலை வடிவான சூலப்படை ஏந்திய சிவனாரின்

பிற பதிகளும் தொழுவதற்குச் செல்லலானார்.

(தலை எலாம் எனும் திருக்குறுந்தொகை நாவரசர் இங்கு பாடினார்)

1565.

பொங்கி வரும் காவிரியின் இருகரைகளிலும்

போர் செய்ய வல்ல

காளையூர்தி கொண்ட சிவனார்

நிலைத்துத் தங்கி விளங்கி வீற்றிருக்கும் இடங்கள் புகுந்து வணங்கினார்
இறைஞ்சினார் தமிழ்மாலைகளும் சாத்தினார்

எங்கும் நிறைந்த புகழாளர் ஆகிய நாவரசர்

முடிவிலாத தொண்டர்கள் பலரும் வந்து எதிர்கொள்ளக்

செங்கண் விடையுடைய

திருவானைக்காலின் அருகில் சென்று அணைந்தார்.

1566.

சிலந்திக்கு அருளிய திருவானைக்கா இறைவரின் கழல் வணங்கி

செஞ்சொல் மாலை பல பாடினார்

விளங்கும் சடையுடைய சிவபெருமான் எழுந்தருளிய

திருவெறும்பியூர் மலையையும் இறைஞ்சி

மலர்ந்த சோதியுடைய திருச்சிராப்பள்ளி மலையையும்

திருக்கற்குடி மலையையும்

நன்மையுடைய செல்வத் திருப்பராய்த்துறையையும்

வணங்கும் பொருட்டாகச் செல்லலானார்.

1567.

மற்ற தலங்கள் முதலான அருகில் உள்ளனவும் கைதொழுது

அழகு பொருந்த அமைந்த திருப்பணிகள் செய்து

பதிகங்கள் பாடித் துதித்துப் போற்றி பொருந்திய திருவருளால்

காவிரி ஆற்றைக் கடந்து ஏறி

முப்புரங்கள் அழியும்படி எரித்த

இறைவர் வீற்றிருக்கும் திருப்பைஞ்ஞீலி சென்று

சேர்கின்றார் நாவுக்கரசு நாயனார்.

1568.

வழியில் போகும் பொழுது மிகவும் இளைப்பை அடைந்து வருத்தமுற

நீர் வேட்கையுடன் அழிவு செய்யும் பசியும் வந்து சேர

அதற்கு

சித்தம் அலையாமல் சென்றார் மொழி வேந்தர்

அவர் முன் எழுந்தருள

மணமுடைய சோலை உடைய திருப்பைஞ்ஞீலி என்ற பதியுள் வீற்றிருக்கும்

விழியேந்திய நெற்றியினார் சிவபெருமான்

தம்தொண்டர் வருத்தம் நீக்குவதற்காக-

1569.

சோலையும் குளமும் நாவுக்கரசர் முன்பாக உண்டாக்கி

அவருக்குக் காட்டிச் செல்லும் எண்ணத்தினால்

திருநீறு அணிந்த அந்தணராகி

விரும்பும் கட்டு சோறும் எடுத்துக் கொண்டு

நாவின் தனி மன்னவர்க்கு எதிரே வரும் வழியில் காத்திருந்தார்

விண்ணின் மேல் தாவும் அன்னமாகிய நான்முகனும்

மண் கிழிக்கும் தனி ஏனமுமாகிய திருமாலுக்கும்

காண அரியவரான சிவபெருமான்.

1570.

அவ்வாறு வழியில் இருந்த அந்தணரிடம் (இறையிடம்)

ஆளுடைய அரசு எழுந்தருள

கொடிய கண் உடைய காளை ஊர்தி உடைய இறைவர் நோக்கி

மிகவும் கடந்து வந்த வருத்தத்தால் இளைப்பு அடைந்தீர்

இங்கு என்னிடத்தில் கட்டு சோறுண்டு

இதனை உண்டு பொங்கு குளத்தில் தண்ணீர் உண்டு

இளைப்யைப் போக்கிப் போவீர் எனப் புகன்றார்.

1571.

அங்கு வந்த திருநாவுக்கரசர்

இது இறைவரின் அருள் எனக் கொண்டு

முன்பே அறிமுகமானவர் போலக்காட்டி “ உண்பீராக “ என்று

திருமறையோரான இறைவர் உரைத்து

பொதி சோறு அளித்தவுடனே

எண்ணுவதற்கு ஏதும் இடமில்லாமல் ஏற்றுக் கொண்டு

இனிமையாய் அமுது செய்து இனிய தண்ணீர் அமுது செய்தருளி

தூய்மை செய்து கொண்டார் தளர்வொழிந்தார்.

1572.

இளைப்பு நீங்கி நின்றவரை இறைவர் பார்த்து

இனிமேல் எங்கு நீர் போகின்றீர் என்றதும்

நாவரசர் அவருக்கு எதிரே

யான் திருப்பைஞ்ஞீலிக்குப் போகிறேன் என செப்புவார்

ஒப்பிலாரான இறைவன்

யானும் அங்குதான் போகின்றேன் என்று உடன் சென்றார்.

1573.

உடன் வந்த மறையவனார் திருப்பைஞ்ஞீலி நெருங்கும் போது

வேடத்தை அவர் முன் மறைத்ததும்

மெய்த்தவம் விளங்கும் மேன்மையுடைய நாவரசர்தாம்

கூத்த அடியேனையும் பொருளாக வைத்து

அளித்த பெருங்கருணை எனப் பாடல் புரிந்து விழுந்தெழுந்து

கண்ணீர் மழை பொழிந்தார்.

1574.

பைஞ்ஞீலினில் அமர்ந்து அருளும் பரமன் கோவில் சென்றடைந்து

கரிய மையுடைய நீலகண்டரான இறைவரை வணங்கி மிகமகிழ்வடைந்து

உண்மைப் பண்பின் நீடிய அன்புருக

விரும்பும் தமிழ் மாலைகள் பாடி

சிறப்புடைய கைத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்.

1575.

நாதனாகிய இறைவர் வாழும் திருமலைகளும், நாடும், மிகப் பல பதிகளும்

மிக்க காதலுடன் சென்று இறைஞ்சி

இசை கலந்த தமிழ்ப் பதிகம் பாடி

மாதொரு பாகர் அருளாலே

வடதிக்கு நோக்கி வாகீசர்

ஆதிதேவரான சிவனார் அமர்ந்த

திருவண்ணாமலை அடைந்தார்.

( திருவருளால் தொடரும் )

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்