பெரியபுராணம்- 50 – (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

பா.சத்தியமோகன்


1328.

வந்தணைந்து திலகவதியார் திருவடி மேலுற வணங்கினார்

நம் குலம் செய்த நல்தவத்தின் பயன் போன்றவரே

இந்த உடல் கொடிய சூலை நோய் அடையப்பெற்று வருந்துகிறேன்

இனி மயங்காமல் உய்ந்து

கரையேறும் நெறி உரைத்தருள்க எனக் கூறினார்.

1329.

இணையான தம் கால்களில் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி

ஆளுடைய நம்பெருமான் சிவனாரின் அருளை நினைந்து கைதொழுதார்

“நல் குறிக்கோளில்லாத பிற சமயநெறி குழியில் விழுந்து

மூளும் கொடிய துன்பத்தில் உழந்தீர் இனி எழுக” என மொழிந்தார்.

1330.

அவர் உரைத்த அவ்வுரை கேட்டதுமே

மருணீக்கியாரும் உற்ற பிணியுடன்

உடல் நடுங்கி எழுந்து தொழுததும்

உயர் தவத்தவரான திலகவதியார்-

இது கற்றை சடையுடையவரின் திரு அருளே ஆகும்

தம் திருவடி அடைந்தோர் பற்றறுக்கும் அவரைப் பணிக எனப் பணித்தார்.

1331.

எனத் திலகவதியார் அருளிச் செய்தபோது

அவரதுபணி ஏற்று மருணீக்கியார் வணங்கி இறைஞ்சினார்

அவர் திருவீரட்டானம் புகுவதற்குத் தகுதியென ஆக்க

திருக்கயிலை குன்றுடைய நிர்மலனாகிய இறைவரது

அஞ்செழுத்தை ஓதித் திருநீறு கொடுத்தார் திலகவதியார்.

1332.

திருவாளனாகிய சிவபெருமான் திருநீறு திலகவதியார் அளித்ததும்

பெருவாழ்வு வந்தது என பெருந்தகையாரான மருணீக்கியார்

பணிந்து ஏற்றுக்கொண்டார்.

அதைத் தம் திருமேனி முழுதும் அணிந்து

தமக்குத் தீமை உற்ற இடத்தில் உய்யும் வழிதர தம் முன் வந்த

திலகவதியாரின் பின்பு அவரும் வந்தார்.

1333.

திருநீறணிந்த மருணீக்கியாரின் அகத்திருளும்

வெளியே உள்ள இருளும் மாறுமாறு

திருப்பள்ளி எழுச்சிக் காலத்தில் மாதவம் செய்யும் திலகவதியார்

திருவலகும் – திருமெழுகும் – தோண்டியும் – எடுத்துக் கொண்டு

கங்கை ஆறு அணிந்தவரின் கோயிலினுள்

அழைத்துச் சென்றார்

வந்து அடைந்த நாயனாரை.

(திரு அலகு –துடைப்பம், திருமெழுகு – சாணம்)

1334.

அலைகள் வீசும் கெடில ஆற்றின் கரையில் உள்ள

வீரட்டானத்தில் இருந்து

செம்பொன்மலையை வில்லென ஏந்தியவராகிய

சிவபெருமான் பெருங்கோயில் தொழுது வலம் வந்தார் இறைஞ்சினார்

நிலத்தின் மீது வீழ்ந்து வணங்கி தம்பெருமான் திருவருளால்

உரை தமிழ் மாலைகள் சாத்தும் உணர்வு பெற

உணர்ந்து உரைக்கலானார்:-

(வீரட்டானம் : பண்ருட்டி அருகே உள்ள சிவத்தலம்)

1335.

திருநீற்றால் நிறைவாகிய மேனியுடன்

நிறைந்த அன்புறு சிந்தையுடன் நேசம்மிகுந்தார்

பகைவரின் புரங்களை எரித்த வேதியரான வீரட்டான இறைவரை

மருளும் சூலைநோயும் மாயையும் அறுத்திடுக என்று

குற்றமிலாத திருப்பதிகம் ஒன்றைப் பாடினார்

அதனைப் போற்றுவதால் உலகின் எழுபிறப்பிலும்

வரும் துயரமும் போகும்படி பாடினார்

அப்பதிகம் தான் –

“கூற்றாயினவாறு விலக்ககிலீர்”

1336.

நிலை பெறும் அப்பதிகம் அவர் பாடியபின்

வயிறு உற்று வருந்திய சூலை நோயும் அப்போதே அகன்றது அந்நிலையில்.

அடியேன் உயிரோடு இருக்க அருள் புரிந்த

செம்மை நிலையில் நின்ற பரம்பொருளான சிவனாரின்

திருவருளைப் பெற்ற சிறப்புடைய நாயனார்

மூண்டு நின்ற ஞான மயக்கத்தால்

இறைவரின் அருளாகிய கருணைக் கடலில் மூழ்கி நின்றார்.

1337.

திருமேனியில் உள்ள உரோமங்கள் ஒருங்கே

மகிழ்ச்சியினால் சிலிர்த்து நிற்க

கண்களிலிருந்து பொங்கும் ஆனந்தக் கண்ணீர் பொழிய

தரை மீது புரண்டு அழுதார் ஆனந்தப் பரவசமுற்றார்.

இங்கு என் செய்கையால் உண்டான பிழை காரணமாக

ஏறாத பெரிய மேட்டிலும் ஏறும்படி

நிலை பெற்ற அருளான பெருவெள்ளத்தை

பெருக்குதலும் தகுதியாமோ எனப்பலவும் மொழியலானார்.

1338.

பொய்யை வாய்மையெனப் பெருக்கிய புல்லிய சமயப்பொறியில்

சமணர்களின் புறச்சமயமான ஆழ் குழியினுள் விழுந்து

எழுவதற்கு அறியாது மயங்கி அவத்தொழில் செய்யும் நான்

மயிர்ச்சாந்து மணம் கமழும் நறும் கூந்தலுடைய உமையின் கணவரான

சிவபெருமானின் மலர்ப்பாதங்களை வந்தடையும்

இவ்வாழ்வு பெறுமாறு உதவிய சூலைநோய்க்கு

கைம்மாறு செய்ய என்ன உதவி இருக்கிறது!

என அச்சூலை நோயைச் சுட்டி வணங்கினார்.

1339.

பொருந்திய இச்சமயத்தில்

நீடிய சிறப்புமிகு வீரட்டானம் அமர்ந்த பிரான் திருவருளால்

பாட்டுக்கு இசைந்து அலர்ந்த செந்தமிழின்

இனிய சொல்வளம் மிக்க மாலையைப் பாடிய முறையினால்

திருநாவுக்கரசு என்று உலகு ஏழிலும் நினது நற்பெயர் நிலைப்பதாகுக

என யாவர்க்கும் வியப்புற

மேகம் உறையும் வானிடை

ஒரு அசரீரி எழுந்ததுவே.

1340.

இத்தன்மையானவை நிகழ்ந்ததால்

நாவின் மொழிக்கு அரசரான அன்பரும்

இத்தனை நீண்டகாலமும்

சித்தத்தினுள் விளங்கிய தீவினை உடைய நான்

அடையத்தக்க பெறும்பேறு இதுவோ என நினைத்து

தெளிந்தறியாத இயல்புடைய இராவணனுக்கும்

அருளும் அருளின் மெய்த்தன்மை அறிந்து

அத்திறம் துதிப்பதையே மேற்கொண்டு

மெய்யுற வீழ்ந்து வணங்கினார்.

1341.

வணங்கத்தக்க கருணைப் பெரியோரான சிவபெருமான் அருளியதால்

மயிர் பறித்தபுண் தலையுடைய சமணர் நெறி பாழ்பட

திருநாவுக்கரசர் இங்கு வந்து அருள் பெற்றதால்

உலகம் உய்ந்தது” என

சிவனடியார்கள் எப்புறமும் சூழ்ந்த திருவதிகை நகரமானது

முரசும் தம்பட்டமும் உடுக்கையும் மத்தளமும்

யாழும் – முழவும் – கிளையும் – துந்துபியும்- மணியும் கொண்ட முழக்கத்துடன்

வரிசைப்பட ஒலிக்கும் சங்கங்களும் ஒலித்தலால்

நெடிய பெருங்கடல் போல் நிறைந்ததே.

1342.

மயக்கம் தரும் சமண சமயம் விட்டு ஏறி

மகிழும் சிறப்புடைய வாகீசரான நாவுக்கரசர்

மனதோடும் வாய்மையோடும் பொருந்திய திருப்பணி செய்ய

அதற்கேற்ற சிவசின்னமான திருநீறும் உருத்திராக்க கண்டிகையும் விளங்க

இடையீடு இல்லாமல் தியானமும்

தடையிலாமல் அறுகாமல் பெருகிய தியான உணர்வும் கொண்டு

திருப்பதிகம் பொருந்திய திருவாக்கு படைத்தார்

கையில் திகழும் உழவாரப் படைகொண்டு மனம் கலந்து கசிந்தார்.

1343.

விண்ணோர்க்குத் தனி நாயகனார் சிவனாரின் திருவடிகளில்

மெய்யான பணியும் விருப்பமும் கொண்டதால்

தம் இச்சை நிரம்புமாறு வரம் பெற்ற

அந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த திருவதிகையில் மேவிய திலகவதியார்

“பொய்மையான சமணசமயப் பிணியை விட்டு மீள

சூலைநோய் எனும் பிணியைப் பணித்து அவர் கருணை பூண்டாரே

அந்தத் திறம் இங்கு வேறு யார் பெற்றனர்” எனத் துதித்தார்.

1344.

இன்ன தன்மையில் இவர் சிவநெறி அடைந்து

உன் நிலைத்த பேரரருள் பெற்று இடர் நீங்கிய விதத்தை

பழைமை பொருந்திய பாடலிபுத்திரம் எனும் நகரிலிருந்த

கீழ்மை புரியும் சமணர்கள் கேள்வியுற்று பொறுக்கமுடியாமல்-

1345.

தருமசேனருக்கு வந்த அந்த தடுக்க அரிதான சூலைநோய்

இங்கு ஒருவராலும் ஒழியவில்லை ஆதலால் அவர் சென்று

சிறந்த சைவரகிப் பிணியொழிந்து உய்ந்தார்

இதனால் பொருந்திய நம் சமண சமயம் வீழ்ந்தது என மயங்கினர்.

1346.

மாறுபடுகின்ற பல சமயங்களும் வென்று

அவரால் நிலையும் பெற்ற இந்த சமணநெறி

இனி அழிந்தது என வருந்தினர்!

“கொலையும் பொய்மையும் இல்லோம்” எனக்கூறி

கொடுமையே புரிவோர்-

மயிர் பறித்த தலையும் பீலியும் தாழ ஒரு பக்கம் அடைந்தனர்.

1347.

இவ்வகையில் பல சமணர்கள் துயருடன் கூடினர்

உண்மை அறிந்தால் வேந்தனும் வெகுண்டு சைவனாவான்

நமது தொழிலையும் போக்குவான்

இப்போது இனி நாம் என்ன செய்வோம் என வஞ்சனையுடன் ஆராய்வார்.

1348.

தம் தமக்கை சைவத்தில் நிற்றலால் தருமசேனர்

தாம் பொய்யாய் வகுத்துக் கொண்ட சூலைநோய் தீர்ந்ததாகக் கூறி

அங்கு சென்று –

இச்சமண சமயத்தை நிந்தை செய்து

தெய்வ நிந்தையும் செய்ததாக மன்னனிடம் சொல்வோம் எனத்

தெளிந்து கொண்டனர்.

1349.

சொல்லிய வண்ணமே செய்வோம் எனத் துணிந்த

தீயமதியினராக அச்சமணர்கள்

முன்னே நாம் சென்று மன்னனிடம் கூறுவோம் என முயன்று

இன்ன தன்மையில் இருள் கூட்டம் செல்வது போல

மன்னனாகிய பல்லவனின் நகரத்தில் வந்து சேர்ந்தனர்.

1350.

உடை இல்லாதவராயும்

உண்கின்றபோது ஒன்றும் பேசாமல் நின்று உண்பவராயும் உள்ள

அந்த சமண குருமார்-

மன்னனின் வாயில் காவலருக்கு சொல்லினர்:-

“யாம் வந்ததை அரசனுக்கு அறிவி “

தக்க சமயம் அறிந்து அரசருக்குச் சொல்ல-

1351.

அடிகள்மார் எல்லோரும் ஒன்றுகூடி மிக அழிவுபட்டு

துன்புற்று திருவாயிலின் புறத்தே அணைந்துள்ளனர் எனக்கூறினர்

கூர்வேல் மன்னவன் அவர்கள் சார்புடையவன் ஆதலால் விரைந்தார்

அவர்களுக்கு என்ன நேர்ந்தது எனக் கவலையுடன் உரைத்தார்.

1352.

வாயில் காவலர்கள் உள்ளே செல்லவிட்டதும்

உயிருடன் நடமாடும் தொழில் மட்டுமே உடைய அவர்கள்

தலைவரான தருமசேனர் சூலைநோய் உற்றதாகக் கூறி

சிவபெருமானுக்கு ஆளாகி –

உன் சமயத்தை ஒழித்தார் என்று

தாம் எண்ணி வந்ததைச் சொல்லினார் மன்னனிடம்.

1353.

மணம் கமழும் மாலை கொண்ட பல்லவனும்

அது கேட்டு சினமாகி எழுந்து

“குற்றமுடைய மனத்தினராய்ப் போவதற்கு

பொய்யாப்பிணி என்று மேற்கொண்டு

புகழ்கொண்ட சமணசமயத்தை அழித்து நீங்குவதோ

எல்லையிலாத் தவத்தீர் ..

இதற்கு என்ன செய்வது” எனச் சினந்தான்.

1354.

கொலை புரியா நிலை கொண்டு

பொய்த்து ஒழுகும் பாவிகளான சமணர்கள் –

மேலான நெறியாகிய உன் சமயத்தை அழித்து

உன் நிலை நின்ற ஒழுக்க நெறியும் அழித்த

அந்த அறிவிலியை வருத்துவாயாக என

வாயால் சிறிதும் அஞ்சாமல் உரைத்தனர்.

1355.

அருள் உணர்வு இல்லாமல்

அறிவென என எண்ணி மருள் கொண்ட மன்னவன்

மந்திரிகள் தமை நோக்கி

அறிவுடையோர்களான இவர்கள் சொன்ன தீயோனை தண்டிக்கப்

பொருள் பெற்றுக் கொண்டு விட்டுவிடாமல்

என்னிடம் கொண்டுவாரும் எனப் புகன்றான்.

1356.

அரசனது ஏவலை மேற்கொண்டு

அமைச்சர்களும் அங்ஙனமே முழவு ஒலிக்கும் படைகளோடு முன் சென்று

முகில் சூழ்ந்த மணம் செறியும் சோலை சூழ் திருவதிகை அடைந்து

புறச்சமயப் பற்று அறுத்த இயல்பு கொண்ட நாவுக்கரசரிடம் சென்றார்.

1357.

சென்று சேர்ந்த அமைச்சருடன் சேனை வீரரும் சூழ்ந்து

மின் போல ஒளியும் சடை கங்கை வேதியரின் அடியவரை

இன்று மன்னன் உம்மை தன்னிடம் அழைத்துவர ஏவினான்

வாருங்கள் போகலாம் என்று கூறியவர்களை நோக்கி –

நிறைந்த தவமுடைய திருநாவுக்கரசர் சொல்லியதாவது:-

1358.

நாம் யார்க்கும் குடியல்லோம் எனததொடங்கி –

நான்மறையில் தலைவரை

குளிர் மதி வாழும் சடையுடை சிவபெருமானை

செந்தமிழ்த்தேன் மாலையான

செழுமையான திருத்தாண்டகத் திருப்பதிகம் பாடினார்.

பொருந்துமாறு நீவிர் அழைக்கும் தன்மையில் நாம் இல்லை

என அருள் செய்தார்.

( இறையருளால் தொடரும்)
—-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation