பெரியபுராணம்-37

This entry is part [part not set] of 29 in the series 20050422_Issue

பா. சத்தியமோகன்


992.
இவ்வாறு உலகில் அடியவர்க்குத் தொண்டு செய்து
மிக்க உயர்வுடைய நல்லோர்கள் சிவனது உலகில் சார்வது போல
சிவனாரின் அடியவரைத் துன்புறுத்திய தீயவன்
கொடிய நரகத்தில் விரைவாய் வீழ்ந்தான்.
993.
முழுதும் பழுதே புரிந்த மூர்க்கன் இறந்து விட்டதால்
எழுதும் கொடி போன்ற மனைவி உட்பட
ஏங்கும் சுற்றம் முழுதும் வாட்டம் உற்றது
அக்கொடியவன் போன்ற மாலைபொழுதும் புலர்ந்தது செங்கதிர் போது தோன்றியது.
994.
அச்சமயத்தில் உரிய அமைச்சர்கள் கூடினர்
தங்கள் கடமையாய் செய்யவேண்டிய அரூம் ஈமக்கடனை காலையில் முடித்தார்
கூர்மையான வேலையுடைய அந்த மன்னனுக்கு மைந்தரும் இல்லை ஆதலால்
வேறு செயல் செய்யும் திறத்தை சிந்தனை செய்து ஆராய்ந்தனர்.
995.
தாழ்வான செயலின்றி இந்நாட்டை ஒரு மன்னவன் தாங்க வேண்டும்
கூழும் குடியும் முதலான மற்ற உறுப்புகளும் கொண்டதே நாடு
சூழ்கின்ற படை மன்னவனது தோள் இணைக்காவல் இல்லாமல்
நாடு காவல் பெற்று வாழ இயலாது என்று சொன்னார்.
996.
பல விதத்தாலும் உயிர்கள் எல்லாமும் பாலித்து
உலகம் காப்பான் அரசன் தச்னது நெடிய குடையின் கீழ் தத்தமது நெறிகளில்
வாழச் செய்வான் அரசன்
அத்தகு அரசன் இல்லாத மண்ணுலகத்தை எண்ணினால்
அது இனிய உயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.
997.
இவ்வகையாக பலவும் எண்ணி
இங்கு இனி அரசர் இல்லை செய்ய வேண்டியது
இதுதான் எனத் தெளிந்தார் இவ்விதமாக :
?சிறப்புமிக்க கரிய மலை போன்ற வேழத்தைக் கண் கட்டி விட்டால்
அந்த யானையால் கைக்கொள்ளப்பட்டவரே
நாட்டைக்காக்கும் காவல் கொள்ளட்டும் ?
(வேழம் : யானை)
998.
நூல்களின் விதிப்படி மிகச்சிறந்த பெருமையுடைய சடங்குகளுடன் வழிபட்டு
பெருமுகில் போல் மதநீர் பாயும் நெற்றியுடைய யானையை
நறுமணம்மிக்க துகிலால் கண்ணைக் கட்டி
?இம்மாநிலம் ஏந்த ஓர் ஏந்தலை நீ ஏந்தி வருக ? என அனுப்பினர்.
999.
கண் கட்டி விடப்பட்ட களிப்புடைய யானை
அக்காவலிடைய மூதூரின் தலம் எங்கும்
மண் சுழன்று எழ வீதிகளின் பக்கம் திரிந்து சென்று
திண்ணிய அழகிய பெரிய மதில் சூழ்ந்த திரு ஆலவாயின்
வானம் தழ ஓங்கி உயர்ந்த கோபுரம் முன்பு நின்றது.
1000.
கழிந்து விட்ட இரவில் நிகழ்ந்த செய்தி தொண்டர் மூர்த்தியார்
இங்கு எம் இறைவன் அருள் இதுவெனில்
இந்த வையகம் தாங்கும் செயல் பூணுவேன் என உள்ளத் தளர்வு நீக்கி
கொன்றை மலர் சூடிய சிவபெருமானின் கோவில் புறத்தில் வந்து நிற்க –
1001.
பட்டத்து யானை அங்கு விரைந்து நடந்து சென்று
உலகம் வாழ்வுற்று செய்கின்ற தவப்பயனான வள்ளலாரைச்
சூழ்ந்த பொன்கூர் மாமணி நிலத்தில் தோயும்படி வணங்கித் தாழ்ந்து
தன் பிடரி மீது வைத்தது.
1002.
நாட்டுக்கு வந்த தீமை கெட நினைத்த
திண்மையுடைய அமைச்சர் எல்லாம்
தாம் விடுத்த யானையால் எடுத்து பிடரியில் வைத்துக்கொள்ளப்பட்ட மூர்த்தியாரை
அடிகளில் வீழ்ந்து வணங்கின நேரத்தில் அவ்வூர்
நீர் நிறைந்த கடல் போல் ஒலித்தது.
1003.
மூர்த்தியாரின் பக்கம் எங்கும்-
சங்குகள் முழங்கின, தாரைகள் பேரிகைகளோடு
எங்கெங்கும் இயம்பின பலவகை வாத்தியங்கள் எல்லையிலாமல்
அங்கங்கு வாழ்த்தொலி மலிந்தன
அழகிய பொற்கொடி போன்ற உமையை ஒரு பாகம் கொண்ட
சிவனாரின் திருவருளால்-
1004.
கொடிய கண் உடைய பட்டத்து யானையினின்றும்
மூர்த்தியாரை இறங்கச் செய்து
தேன்மிக்க மலர் சுடர் மாலைகளும்
ஒளியுடைய மணிமாலைகளும் சூழ்ந்த முடிசூடும் மண்டபத்தில் சேர்த்து
அரியணையில் அமரச் செய்து
ஒப்பிலாத சந்திர வட்டக்குடையின் கீழ்
அரசுரிமை ஏற்கும் சடங்கினை
அவருக்கு சூழ்ந்து செய்பவராகி –
1005.
நிலைபெறும் திசையில் இடப்பட்ட வேதிகையில்
மங்கலங்களால் ஆகிய ஆகுதிக் கண்டத்தில்
சுடருடன் பொருந்தி வளரும் தீ வளர்த்து
முப்புரிநூல் சூழ்ந்த பொன் கலசங்கள்,
குடங்களில் பூரித்த தூய கங்கை நீர் நிறைத்து
மந்திரத்தில் வல்லவர்கள் நிறுத்தினார்கள்.
1006.
வந்து தம்மை வணங்கி எழும் மங்கல மாந்தர்களை நோக்கி
சிந்தையில் சிவமே தெளியும் திருமூர்த்தியார் கூறினார்
?முந்தைய செயலான சமணம் போய் முழுமுதல் சைவம் ஓங்குவதால்
இந்தப்புவி தாங்கி இந்த இனிய அரசாட்சி இவன் செய்வான் ? என்றார்.
1007.
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சர்களும்
மெய் வாழ்வு தரும் நூலறிவில் மிகுந்த மாந்தர்களும்
?பெரியோய்! எவ்வாறு நீ கூறினாயோ அவ்வாறின்றி
யாவர் செய்வார் ? என அவரது அடிகளில் தாழ்ந்து செப்பிட –
1008.
வையத்தை நான் ஆட்சி செய்வேனாகில்
சிவன் அணியும் திருநீறே முடி சூட்டாகவும்
உருத்திராக்கம் அணிகலன்களாகவும்
இறைவனின் மொய்த்த சடையே அரசமுடியாகவும் ஆகட்டும் என்றார்.
1009.
என்ற மூர்த்தியாரின் இவ்வுரை கேட்டதும்
எல்லையிலாத கல்வியோரும்
வலிய திண்ணிய மதியும் நூலறிவும் பெற்ற வாய்மையுடைய அமைச்சர்களும்
?நன்று இங்கு தாங்கள் அருளியது ? என நல்தவவேந்தர் சிந்தைக்கு
அரசு ஆளும் உரிமைக்கான செயலை செய்தார்.
1010.
பக்கங்கள் எங்கும் நெருங்கிய மங்கல ஓசை குவிய
சூடும் சடையையே அரசமுடியாக அணிந்த மூர்த்தியார்
பன்றி வடிவம் கொண்டு திருமால் தேடும் திருவடியுடைய ஆலவாய் சென்று
தாழ்ந்து தலை வணங்கி
நீடும் யானை மீது ஏறி நீண்ட வீதி வழி வீதி உலாப் போந்தார்.
1011.
மின்னும் மணி மாளிகை
யானை மேலிருந்து இறங்கி
விளங்கும் ஒளி மண்டபத்தில் பொன்னால் ஆன அரியணை மீது
சாமரைகள் மென்காற்று வீசும்
நிலைத்த குடை நிழலில் உலகம் காக்க அரசு நடத்தினார்.
1012.
பொருந்திய பலதுறையிலும்
நீதி நடத்தும் அமைச்சர்களின் குறிப்பின்படி
கலகம் செய்த சமணர் செயல்களான கட்டு நீங்கி
நிலவும் திருநீற்று நெறியும் துறையும் நீடு வாழ
உலகெங்கும் சைவம் நிரம்பியது நிலை உயர்ந்து வாழ.
1013.
நெற்றிக்கண்ணர் சிவனது வாய்மை விளங்கும் நூலின் பொருள்
எங்கும் நிறைந்து விளங்க
பாவங்கள் மாற உதவும் திருநீறு,
உருத்திராக்கமெனும் கண்டிகை – கொண்ட சடை எனும்
முதன்மை பெற்ற மூன்றினால்
உலகாண்டார் மூர்த்தியார்.
1014.
நறுமணம் கமழ்கின்ற கூந்தலுடைய பெண்களின் தொடர்பு
என்றும் நீங்கிய சீலத்துடன்
கொடிய ஐம்புலன் இன்பங்களை வென்று நீக்கி
உலகைத் தனி ஆணையால் ஆட்சி செலுத்தி நடத்தி
ஊழிக்காலம் உயிர்களுக்கு துன்பம் வராமல் கடிந்து காத்து –
1015.
தம் அடிகளை மாற்றரசர்கள் சூழ்ந்து பணிந்து
துன்பங்கள் உண்டாகாத வகையிலே இவ்வுலகு ஆண்டு
தொண்டின் பேதம் தோன்றா வகையிலே
அருட் பேரரசு ஆளப் பெற்று
நாதன் இறைவன் கழல் சேவடி அடைந்தார்
அண்ணலார் மூர்த்தியார்.
1016.
அன்று அகன்ற பாறையில் வைத்து முழங்கையைத் தேய்த்த
யானை மீது அமர்ந்த அன்பரை ஏத்தி முருகனாராம்
மேகம் சூழ்ந்த நறுஞ்சோலைகள் நெருங்கிய
ஒளிமிக்க மாட வீதியுடைய
திருப்புகலூரில் தோன்றிய அந்தணரின் இயல்பைப் போற்றத் தொடங்குகிறேன்.
(மூர்த்தி நாயனார் புராணம் முற்றிற்று )
– திருவருளால் தொடரும்.
cdl_lavi@sancharnet.in

Series Navigation