பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

க. லெனின் குமார்


கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் இரயில் நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவம் இது.

சேலம் செல்வதற்காக அந்த சனிக்கிழமை காலை சற்று சீக்கிரமே எழுந்து விட்டேன். கொஞ்சம் பணம் எடுத்துக்கொண்டு போகலாம் என ATM சென்று ரூ.5000/- எடுத்தேன். எல்லாமே 500 ரூபாய் நோட்டுகள். காலையில் 500-ஆக எங்கு கொடுத்தாலும் திட்டுவார்களே என்று நண்பர்களிடம் 100 ரூபாயாக மாற்று கேட்டேன். எவரிடமும் இல்லை. சரி இரயில் நிலையத்தில் சமாளித்துக்கொள்ளலாம் என எண்ணி ஆட்டோ பிடித்து இரயில் நிலையம் சென்றேன். எனக்கு இரயில் 6:20-க்கு. மெஜஸ்டிக் இரயில் நிலையத்தை அடைந்தபோது

நேரம் 6:00.

நல்ல வேளையாக டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகம் இல்லை. கவுண்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தவர்கள் மிகவும் சுவாரஸமாக பேசிக்கொண்டிருந்தார்கள். மொத்தம் ஆறு பேர் மட்டுமே நின்று கொண்டிருந்த கவுண்டரின் வரிசையில் நின்றேன். அப்போது டிக்கெட் வாங்கியவர் டிக்கெட் கொடுத்தவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்தார். எனக்கு கன்னடம் அவ்வளவாக பேச வராதே தவிர ஓரளவு புரிந்து கொள்வேன். சில்லறை பாக்கிகாக அந்த சண்டை என்று புரிந்தது. ஐந்து ரூபாய் தானே போனால் போகிறது என்று டிக்கெட்

வாங்கியவரிடம் அவரது நண்பர் சமாதானம் செய்ய, அவரும் சென்று விட்டார். இதற்கு பின்பும் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்தவர்களின் பேச்சு சுவாரஸம் குறையவில்லை.

அடுத்து டிக்கெட் வாங்க சென்றவர் டிக்கெட்-க்கான தொகையை குறைவாக கொடுத்திருப்பார் போலும். நமது டிக்கெட் கொடுக்கும் அன்பரும் பேச்சு சுவாரஸத்தில் எதையும் கவனிக்கவில்லை. டிக்கெட் வாங்கியவர் டிக்கெட்டில் எழுதியிருந்த தொகையை பார்த்துவிட்டு எஞ்சிய பணத்தை கொடுத்துவிட்டு சென்றார். இப்போதும் அவர்களுள் பேச்சு குறையவில்லை. அடுத்த சிலருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

இப்போது என் முறை. அவசரமாக பர்ஸில் இருந்து 500 ரூபாயை எடுத்து கொடுத்து சேலத்த்திற்கு டிக்கெட் கேட்டேன். அவர் மீதி 35 ரூபாய் கொடுத்துவிட்டு (அதிலும் இரண்டு ரூபாய் குறைவு) பேச்சை தொடர்ந்தார். நாம் மீதி 400 ரூபாயை கேட்க, அவர் நான் 100

ரூபாய்தான் கொடுத்ததாக சொல்ல, வாக்குவாதம் தொடங்கியது. ஜன்னலின் கம்பி வழியாக பார்த்த போது திறந்திருந்த மேஜையில் நான் கொடுத்த 500 ரூபாய் தெரிந்தது. நான் அந்த 500 ரூபாயை காட்டி அது நான் கொடுத்தது என்று கூற, அவரோ இது ஏற்கனவே இருந்தது, நீ கொடுத்தது 100 ரூபாய் என்று கூறி ஒரு 100 ரூபாயை காட்டினார். வாக்குவாதம் தொடர, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் ‘காத்திரு, கணக்கு பார்த்துவிட்டு மீதம் இருந்தால் தருகிறேன் ‘ என்று சொல்லிவிட்டு அவர் வேலையை

தொடர்ந்தார். அவர் எப்போது கணக்கு பார்ப்பது, எனக்கு எப்போது பணம் கிடைப்பது. நேரமோ 6:15. இரயில் புறப்படும் நேரம் 6:20.

சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து அதில் இருந்த எண்ணை படிக்கச்சொன்னேன்.

என்னிடம் மீதி இருந்த ரூபாய் நோட்டுக்களின் எண்ணின் முன், பின் எண்களுடன் அது ஒத்து போனது. (என்னிடம் இருந்த 10

நோட்டுகளில் தோரயமாக கைக்கு அகப்பட்ட நடுவில் இருந்த நோட்டை எடுத்துக்கொடுத்தது எவ்வளவு உதவியாக இருந்தது என்று எனக்கு அப்போதுதான் புரிந்தது). இப்போது நமது டிக்கெட் கொடுக்கும் அன்பர் மறு பேச்சில்லாமல் 400 ரூபாயை திருப்பிக்கொடுத்தார். பணத்தை வாங்கிகொண்டு, ஓடிச்சென்று இரயில் ஏறினேன்.

இந்த சம்பவத்திற்கு பிறகு எப்போதெல்லாம் 500 ரூபாயை கொடுக்கிறேனோ அப்போதெல்லாம் நான் கூறுவது ‘பார்த்துங்க, இது 500 ரூபாய்… ‘

***

leninkumar@hotmail.com

Series Navigation